ஃபுட் வாக் மாலை நேரம். ஸ்நேக்ஸ் டைம். உதவி இயக்குனர்களுடன் பேசி கொண்டிருந்தேன். என் அலுவலகத்தின் அருகில் இருக்கு ஒரு தள்ளுவண்டிக் கடையில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜியையும், அதற்கு பக்கத்து டாஸ்மாக் ஒயின் ஷாப்பில் கிடைக்கும் மசால் வடையையும் வாங்கி வரச் சொன்னேன். உதவியாளர் புதியதாய் சேர்ந்தவர் ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு, கிளம்பினார். சூடான ஒரு டீயுடன், லேசான சுளீர் மிளகாய் பஜ்ஜியும், மொறு மொறு மசால் வடையும் கொடுத்த சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெரிய ஆரம்பித்தது. வாங்கி வந்த உதவியாளர் “எப்படி சார் இப்படி தேடித் தேடி கண்டுபிடிச்சி வச்சிருக்கீங்க. அட்டகாசம்” என்று சிலாகித்தபடி இன்னொரு வடையையும், பஜ்ஜியையும் கையில் எடுத்துக் கொண்டார். ”நாம சீன் பிடிக்கிறதுக்காக தேடியலையறோமில்லை அது போலத்தான்” என்றேன். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நாலு பேராவது ஏரியா பேர் சொல்லி அங்க நல்ல சாப்பாட்டுக்கடை எதுனாச்சும் சொல்லுங்க என போன் பண்ணாத நாளே இல்லையென்று சொல்ல முடியும்.