ஃபுட் வாக்
மாலை நேரம்.
ஸ்நேக்ஸ் டைம். உதவி இயக்குனர்களுடன் பேசி கொண்டிருந்தேன். என் அலுவலகத்தின் அருகில்
இருக்கு ஒரு தள்ளுவண்டிக் கடையில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜியையும், அதற்கு பக்கத்து
டாஸ்மாக் ஒயின் ஷாப்பில் கிடைக்கும் மசால் வடையையும் வாங்கி வரச் சொன்னேன். உதவியாளர்
புதியதாய் சேர்ந்தவர் ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு, கிளம்பினார். சூடான ஒரு டீயுடன்,
லேசான சுளீர் மிளகாய் பஜ்ஜியும், மொறு மொறு மசால் வடையும் கொடுத்த சந்தோஷம் அவர்கள்
முகத்தில் தெரிய ஆரம்பித்தது. வாங்கி வந்த உதவியாளர் “எப்படி சார் இப்படி தேடித் தேடி
கண்டுபிடிச்சி வச்சிருக்கீங்க. அட்டகாசம்” என்று சிலாகித்தபடி இன்னொரு வடையையும், பஜ்ஜியையும்
கையில் எடுத்துக் கொண்டார். ”நாம சீன் பிடிக்கிறதுக்காக தேடியலையறோமில்லை அது போலத்தான்”
என்றேன். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நாலு பேராவது ஏரியா பேர் சொல்லி அங்க நல்ல சாப்பாட்டுக்கடை
எதுனாச்சும் சொல்லுங்க என போன் பண்ணாத நாளே இல்லையென்று சொல்ல முடியும்.
உயிர் வாழ்வதற்காக
உண்பது தான் சரி உண்பதற்காக உயிர் வாழக்கூடாது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வாழும் நாட்களை கொண்டாட்டமாய், ரசனையாய் வாழ,
விரும்புகிறவர்களின் சந்தோஷ வெளிப்பாடு பெரும்பாலும் அவர்கள் விரும்பி அடையும் உணவாகவே
இருக்கிறது. மற்ற தேடல்களில் எல்லாம் அடையும் போது கிடைக்காத திருப்தி, நல்ல உணவை அடையும்
போது கிடைத்து விடும். நண்பர் ஒருவர் வீட்டிலோ,
வெளியிலோ பிரச்சனை என்றால் நேராய் ஒரு பிரியாணிக் கடைக்குப் போய், ஒரே நேரத்தில் ரெண்டு
பிரியாணியை பொறுமையாய் சாப்பிடுவார். அவர் ரிலாக்ஸ் ஆவது அங்கே தான். நல்ல சாப்பாட்டை தேடுவது என்பது எனக்கு ஜீனில் உள்ள
இம்சை. என் தாத்தாவில் ஆரம்பித்து, என் மகன் வரையில் அது தொடர்கிறது.அப்பாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். என்னில் இருக்கும்
பல ரசனைகளுக்கு காரணமானவர்
ஸ்கூல் படிக்கும்
காலத்தில் சைதாப்பேட்டையில் சேட்டுக்கடை பூரி மசால், பொரித்த மாத்திரத்தில் எண்ணெய்
வடிகட்டி அதன் மேல் ஒரு கரண்டி சூடான மசாலை போட்டு தருவாரக்ள். மசாலா பூரியின் மேல்
போட்ட மாத்திரத்தில் லேசாக ஊற ஆரம்பிக்க, இன்னொரு பூரியை பிய்த்தெடுத்து தொட்டுக் கொண்டு
சாப்பிட ஆரம்பிக்கும் சுகமிருக்கிறதே அட அட.. அட.. அதே போல இப்போது சப்வே இருக்குமிடத்தில் சின்ன தள்ளூ வண்டிக்கடையில்
போடப்படும், சூடான சென்னா சுண்டல், சமோசா, கச்சோரி. அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை.
சைதாப்பேட்டை வடகறியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கெளரி நிவாஸ் சாம்பார் இட்லி, என
குண்டு சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருந்தவனுக்கு சுதந்திரமாய் சுற்ற ஆரம்பித்து
கையில் நாலு காசு புழங்க ஆரம்பித்தவுடன் எனக்கென தனி ரசனை சிறகடிக்க ஆரம்பித்தது.
கையேந்தி பவனுக்கு
பிரபலம் அன்றைய என்.எஸ்.சி போஸ் ரோடு பட்டர் தோசை கடை. தோசையை ஊற்றி அதன் தலை மேல் தோசை திருப்பியில் பாதி
அளவுக்கு பட்டரை கட் செய்து தோசை மீது போட்டு
அதே கரண்டியில் ஒரு புரட்டு புரட்டி விடுவதற்குள் கல்லின் சூட்டில் வெண்ணெய்
உருகி, படர ஆரம்பிக்கும் போது பொடி தோசையாய் கேட்டால் அதன் மீதே தூவினார்ப் போல பொடி
போடப்பட்டு சட்டென மடித்து அதன் மேல் சட்னியும், சாம்பாரையும் ஊற்றித் தருவார்கள்.
அதே சூட்டோடு, முதல் விள்ளல் சாப்பிடுவது டிவைனின்
உச்சம். அதே போல பக்கத்து தள்ளூ வண்டியில் கிடைக்கும் நல்ல காரமான சீஸ் அதிகம் வைத்து
கொடுக்கப்படும் சாண்ட்விச். நெய்யில் குளிப்பாட்டிய சீனா பாய் இட்லியும், ஆனியன் ஊத்தப்பம்.
பீச் லேன் பர்மீஸ் உணவு. அங்கப்ப நாயக்கன் தெரு பிஸ்மி, பரோட்டா, நெய் சோறு, நாக்கில்
எச்சிலூற வைக்கும் டிங்டாங். மாலை நேரங்களில் முன்பெல்லாம் தங்க சாலையில் இருந்த ஆரிய பவன் பூரி சாகு, ரொட்டி
மற்றும் சைட் டிஷ்கள். அந்நாளிலேயே நான்கைந்து பேருக்கு முன்னூறு ரூபாய் ஆகும். உணவு
முடிந்ததும் கிட்டத்தட்ட, கடித்து உண்ணக் கூடிய அளவிற்கு எதிர் கடையில் கிடைக்கும்
கெட்டியான பாதாம் பால். பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பே கிட்டதட்ட 25 ரூபாய்.
உணவைப் பற்றி பேசும் போதோ, அல்லது அதற்காக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கிளம்பும்
போதே புதியாய் குழுவில் வந்து சேர்ந்த நண்பருக்கு ஆச்சர்யமாய் இருக்கும் டி.நகரிலிருந்து
பாரிஸ் கார்னருக்கு சாப்பிடுவதற்காக போகிறார்களே என. அதுவும் ஒரு நாளைக்கு ஒரு கடை
என லிஸ்ட் வைத்துக் கொண்டு போவோம். தங்கசாலையில்
நன்கு வறுக்கப்பட்ட வேர்கடலையின் மேல் கொஞ்சம் காரப் பொடி தூவி, அதன் மேல், ஒரு துண்டு
எலுமிச்சையை பிழிந்து, மேலும் அதன் மேல் வெங்காயமும், கொத்த மல்லியும் போட்டுத் தருவார்கள்.
அதை சாப்பிடுவதற்காக தனியாய் ஒரு நாள் கிளம்பிப் போவோம். முதல் நாள் இவ்வளவு தூரம்
போயெல்லாம் சாப்புடுவாங்களா என கேட்ட நண்பர் அடுத்த நாள் கூப்பிடாமலேயே ஆஜராகிவிடுவார்.
வெளியூர் பயணங்கள் ப்ளான் செய்ய ஆரம்பிக்கும் போதே
என்னை போன்ற சக நண்பர்களிடம் அங்கேயிருக்கும் சிறப்பான கடைகளைப் பற்றி கேட்டுக் கொண்டு,
லிஸ்ட் போட்டு விடுவேன். மதுரைக்கு போனால் நிச்சயம் சிம்மக்கல் கோனார் கடை கறி தோசை,
அந்த காலத்திலேயே ஸ்டார் ஓட்டல் ரேட் விற்பார்கள். அதே சிம்மக்கல் போளி ஸ்டால். மெஸ்கள்,
ரோட்டுக்கடை இட்லி, பரோட்டா, சால்னா ஆஃப்பாயில்கள். திண்டுக்கலென்றால் சீரக சம்பா பிரியாணி,
கொடைக்கானல் காமராஜ், வெல்கம் மெஸ்ஸின் சூடான கிரேவிக்களும் சாப்ஸும். பாண்டி என்றால்
நெய்யூரும் சத்குருவின் வெண் பொங்கல், நல்ல குவாலிட்டி பியர்கள். சிதம்பரம் மூர்த்தி
கபே பரோட்டா, எச்சிலூற வைக்கும் பட்டர் சிக்கன், முட்டை சட்னி. சீர்காழி ஜெயராமன் கடை
சாப்பாடும், எரா தொக்கும், அணைக்கரை டேப் தங்கராஜின்
மீன் குழம்பு. தேனி நாகர் கடை பரோட்டா, மேகமலையில் ஒரு தகர டப்பா டீக்கடையில் நாம்
வாங்கிக் கொடுக்கும் அயிட்டங்களை வைத்து அட்டகாசமான குழம்பு வைத்துத் தரும் டீக்கடைக்காரம்மா.
தர்மபுரி வள்ளி மெஸ்ஸும் அவர்களின் ஹோம் மேட் மீல்ஸும். பெங்களூர் போகும் போது எவ்வளவு
அவசரமென்றாலும், ஆற்காடுக்குள் வண்டியை விட்டு, ஸ்டார் பிரியாணியில் எக்ஸ்ட்ரா மசாலாவோடு
பார்சல் கட்டாமல் கிளம்பியதேயில்லை.
தினமொரு உணவங்கள்
உலகெங்கும் திறக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சென்னையை பொறுத்த வரை காதர் நவாஸ் கான்
ரோடும், அண்ணா நகர் சாந்தி காலனி ஏரியாவும் இதற்கு பிரபல்யம். எவ்வளவு கடைகள் திறக்கப்படுகிறதோ
அந்த அளவை விட மிக வேகமாய் மூடப்படும் கடைகள் அதிகம். இப்படி திடீர்
திடீரென திறக்கப்படும் கடைகளுக்கு சென்று டெஸ்ட் எலி ஆவது என்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை.
அதீத பற்றும் காதலும் இல்லையென்றால் புதிய புதிய கடைகளை தேடியலைந்து கண்டுபிடிக்க முடியாது.
அப்படி பல சிறு கடைகளை கண்டுபிடித்திருக்கிறேன். அதே நேரத்தில் இம்மாதிரியான தேடுதலின்
போது பின்பக்கம் மொக்கை வாங்கிய கதையும் அதிகம். வெளியே சொல்லக் கூட முடியாது. வாயை
கட்டினா இப்படியான பிரச்சனையில் எல்லாம் மாட்டாம இருக்கலாமில்லை என போன் பண்ணி நல்ல
சாப்புடுற கடை இருந்தா சொல்லுன்னு கேக்குறவங்களே அட்வைஸ் பண்ணுவாங்க. அப்பத்தான் புரியும் நாட்டுல சுதந்திரமோ, சந்தோஷமோ
அவ்வளவு ஈஸியா யாருக்கு கிடைக்கிறது இல்லைன்னு.
நண்பர்களிடையே
பகிரப்பட்டு, எழுதப்பட்டு, பின்பு அவர்கள் அங்கே போய் சாப்பிட்டவுடன் அவர்களின் முகத்தில்,
குரலில் தெரியும் திருப்தியும் சந்தோஷமும்,
எனக்கு அதீத எக்ஸ்டசியை கொடுக்கிறது என்றே
சொல்ல வேண்டும். சமீபத்தில் கூட இயக்குனர் சசியும், எஸ்.எஸ்.ஸ்டான்லியும் நான் சொன்ன
பிரியாணிக்கடைக்கு சென்று சாப்பிட்டுவிட்டு, அவர்களின் ரெவ்யூ புத்தகத்தில் நன்றி கேபிள்
என்று எழுதியதாய் சொன்னார் அக்கடைக்காரர். வயிறு நிறைய சாப்பாடு போட்டு கிடைக்கும்
அத்துனை புண்ணியமும், அதை சொன்னவங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அதே நேரத்தில் நானும் சாப்பாட்டை பத்தி எழுதுறேனு சொல்லுறேன்னு ரசனையில்லாதவர்கள் சொல்லும்
ரிகமெண்டேஷன் விஷத்துக்கு சமம். சமைத்துவிட்டு, சாப்பாடு நல்லாருக்கான்னு அம்மாவோ,
தங்கையோ, பெண்டாட்டியோ ஏக்கத்தோடு நம் பதிலுக்காக முகத்தின் ரியாக்ஷனை எதிர்பார்த்து
காத்திருக்கும் நேரம் ”நல்லாருக்கு” என கிடைக்கும் பதில் கொடுக்கும் சந்தோஷம் வேறெதிலும் கிடைக்காது. கொடுப்பதிலும்
பெறுவதிலும் எந்தவிதமான ஈகோ இல்லாமல் மனிதன் ரியாக்ட் செய்யும் விஷயம் உணவு மட்டுமே. ஹேப்பி ஃபுட்டிங்.
குமுதம் 2/11/15- உணவு சிறப்பிதழில் வெளியான கட்டுரை -கேபிள் சங்கர்
Post a Comment
6 comments:
வாழும் நாட்களை கொண்டாட்டமாய், ரசனையாய் வாழ, விரும்புகிறவர்களின் சந்தோஷ வெளிப்பாடு பெரும்பாலும் அவர்கள் விரும்பி அடையும் உணவாகவே இருக்கிறது.
கொடுப்பதிலும் பெறுவதிலும் எந்தவிதமான ஈகோ இல்லாமல் மனிதன் ரியாக்ட் செய்யும் விஷயம் உணவு மட்டுமே.
migavum arumaiyaana varigal ji :-)
Kangal kulamaana kadaisi varigal....Cableji the master....
சுவை மிகுந்த உணவு போல, கட்டுரையும்!
இந்தற்கு நான் நீன்ட நாள் ரசிகன்.
அருமையாக உள்ளது. நான் இந்த பக்கத்திற்கு நீன்ட நாள் ரசிகன்
இப்படி சாப்பிட்டா ஏன் உணவுப் பஞ்சம் வராது?
Post a Comment