Thottal Thodarum

Jan 22, 2016

நிவாரணத்துக்குரியவன்

நிவாரணத்துக்குரியவன்
வெள்ளம் எனக்கொன்றும் புதியதில்லை. என்பதுகளில் ஒரு முறை என் வீட்டின் தரைத்தளம் முழுவதும், மெல்ல கசிவாய் ஆரம்பித்து, சடசடவென வீடு முழுதும் ஈர வாசனையோடு பரவி, எங்கும், எங்கும் தண்ணீராய் ஆக்கிரமித்தை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். வெள்ள ஆக்கிரமிப்பால் என் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேனாம். ஜுரம் வந்து ”தண்ணி வருது.. தண்ணி வருது”என புலம்பியிருக்கிறேன்.  பின்பு தண்ணீர் வடித்த வீட்டின் கதவை திறந்து உள்ளே போன மாத்திரத்தில் அத்துனை சேற்றின் நடுவே “ஓ’வென அலறி உட்கார்ந்தபடி அழுத அம்மாவைப் பார்த்து அழுதிருக்கிறேன். அப்பா.. ஏதும் சொல்லாமல் ஒரு கணம் நிறுத்தி நிதானமாய் சுற்றி பார்த்துவிட்டு, கலைந்து சிதைந்திருந்த பொருட்களையெல்லாம்  கவனித்தபடி “சரி வா.. போனா போகட்டும் வாங்கிக்கலாம்.. வேலைப் பாப்போம்” என்று சொல்லி அம்மாவை எழுப்பினதை பார்த்திருக்கிறேன். டிவி,  விளையாட்டுப் பொருட்கள் போனது எல்லாம் பெரும் விஷயமாய் இருந்திருக்கிறது.


வெள்ளம் வடிந்த வீடு என்பது ஊர் சாக்கடையை வீட்டினுள் விட்டு, அதில் நூறு பேர் நடமாட விட்ட இடம் போலிருக்கும்.  கொழ, கொழவென வழுக்கும் சேறு. வீடெங்கிலிருந்து வரும் வீச்ச நாற்றம். அருமையான வுட்னு சொல்லி வாங்கிய கட்டிலெல்லாம் தூக்கி வைக்கலாமென்று கை வைத்தவுடன் பொல, பொலவென உதிருவதை பார்த்தால் ரத்தக் கண்ணீர் வரும். ”என் கல்யாணதப்ப வீட்டுல கொடுத்த பண்ட பாத்திரம் அத்தனையும் போயிருச்சு” என அம்மா அப்பாவை மீண்டும் இழந்து அழும் இளம் பெண் போல அழும் பேரன் பேத்தி எடுத்த வயதான அம்மாக்களின் நிலை தான் பெரும்பாலானவர்களுக்கு.

இம்முறை வெள்ளம் வரலாறு காணாத வகையில் சென்னையை ஆக்கிரமித்ததுவிட்டது. சென்ற வாரம் வெள்ளத்திலிருந்து மீண்டவர்கள் மீண்டும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கோரம். எப்போதும் ஆற்றோர குடியிருப்போர் மட்டுமே வழக்கமாய் படும் அத்துனை கஷ்டங்களையும் மிடில் க்ளாஸ், உயர் தர குடும்பங்களும் பட்டனர்.
இயற்கையா அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சீரழிவா? என்று ஆளாளுக்கு வெளியே அரசியல் ஆதாயத்துக்காகவும், தங்கள் கருத்துக்களை நிலை நாட்டுவதற்காகவும் டீக்கடையிலும், தொலைக்காட்சி பேச்சரங்கங்களிலும்,  உரக்கப் பேசிக் கொண்டிருக்க, யார் செஞ்ச வேலைடா? இது என்று பேஸ்புக்கில் மீமீ போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறவர்களை எல்லாவற்றையும் பார்த்து, சிரிப்பதா அழுவதா எனத் தெரியாமல் சிவாஜி ரேஞ்சுக்கு ரியாக்‌ஷன் காட்டிக் கொண்டிக்கும் என்னைப் போன்றவர்களின் நிலையைப் பற்றி யாரும் கவலைப் படவும் இல்லை, போவதுமில்லை.

இதுவரை எந்தவிதமான் பேரிடர் ப்ரச்சனைகளிலும் சுனாமியைத் தவிர பெரிதாய் அனுபவப்படாத ஊர் நமது சென்னை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என ஐந்தாயிரம் ரூபாயும், புடவையும் வேஷ்டியும், மீஞ்சிப் போனால் அரிசியும் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் இழந்த வாழ்வாதாரத்தை யார் கொடுப்பார்கள். கீழ் நிலை மக்களின் கஷ்டங்கள் கவனிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் இவ்வெள்ளத்தில் நிஜமாய் பாதிக்கப்பட்டவர்கள் மிடில் க்ளாஸ்வாசிகள் தான். வாடகை வீடோ, அல்லது சொந்த வீடோ, வீட்டில் உள்ள அத்துனை பொருட்களையும் இழந்து மீண்டும் புதுக்குடித்தன மோடுக்கு போக வேண்டிய கட்டாயம். இவர்கள் கூட மாத சம்பளக்காரர்கள். ஒரு மாசமில்லையென்றால் அடுத்த மாதம் கொஞ்சம் தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க ஏதுவாக அடுத்த மாத சம்பளம் இருக்கும் இவ்வெள்ளத்தின் நிஜமான பாதிப்பாளன் சிறு தொழில் செய்வர்களும், அதனை சார்ந்தவர்களும் தான்.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வந்த என் அலுவலகம், இணைப்புகள் கொடுக்கும் உபகரணங்கள் என எல்லாமே மூழ்கிப் போய் மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாழ்க்கையை ஆரம்பிகக் வேண்டும். என் போன்ற கம்யூனிகேஷன் தொழில் செய்கிறவர்கள் எல்லோருக்கும் ஒரு ப்ரச்சனை இருக்கிறது. கஸ்டமர் நார்மல் மோடுக்கு வந்த மாத்திரத்தில் எல்லாம் அதது சரியாக நடக்க வேண்டுமென்ற மோடில் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும் மோட். அப்படி நடக்கவில்லையென்றால் நான் கஸ்டமரை இழக்க வேண்டிய கட்டாயம். வெள்ளம் வந்த போது அய்யோ எல்லாம் போய்விட்டதே என யோசித்து வருந்தியதை விட, பல பெரிய அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்ற பயம் தான் என்னைப் போன்ற சிறு தொழில் முனைவோருக்கு இருக்கும் ப்ரச்சனையே.

எட்டு பத்து லட்சம் உடனடியாய் தயார் செய்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. முன்பாவது திரும்பிக் கொடுப்பான் என்ற நம்பிக்கைக்கு தொழில் இருந்தது. இன்று அதுவே இல்லை. அப்படியிருக்க, பத்தாயிரம் கடன் கொடுக்க எத்தனிப்பவன் கூட, இப்போவெல்லாம் அந்த அளவுக்கு பிஸினெஸ் இருக்கா? என பிஸினெஸ் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.  வெள்ளம் போல நண்பர்கள் சம்பாதித்த என்னைப் போன்றோருக்கு அவமானங்கள் ஒரு பெரிய விஷயமில்லை.

நிறைய சிறு மளிகைக் கடைக்காரர்கள் கிட்டத்தட்ட தங்கள் முதலீட்டை மொத்தமாய் இழந்திருக்கிறார்கள். வாசலில் கொட்டப்பட்ட உளூந்தும், அரிசியுமே அதற்கு சாட்சி. வீட்டில் மாவாய் ஆக வேண்டிய உளூந்து ரோட்டில் வண்டிகளினால் கூழாகி மாவாக் கொண்டிருப்பதை கண் கொண்டு காண சகிக்கவில்லை.

எனது பக்கத்து அலுவலகம் முழுக்க, போர்ட்டுக்கு இஞினியரிங் பார்ட்ஸ் செய்து அனுப்பும் ஒரு சிறு தொழில் நிறுவனம். கிட்டத்தட்ட முழு கம்பெனியும் மூழ்கிவிட்டது. அதிலிருந்து அவரக்ள் மேலேற முதலில் செய்த முதலீட்டை போல இன்னும் ஒரு மடங்கு செய்ய வேண்டியிருக்கும் என்ன தான் இன்சூரன்ஸ், இத்யாதிகள் இருந்தாலும், அவர்களை நம்பியிருக்கும் வேலையாட்கள் சம்பளம், வாடகை, அம்மாத வருமானம், என எல்லாமே கேள்விக்குறியாகிப் போகிவிடக்கூடிய அளவிற்குத்தான் அவர்களது எதிர்காலம் இருக்கிறது.

நிறைய சிறு முதலீட்டு நிறுவனங்களில் வேலை பார்த்தவர்களுக்கு சம்பளமே இது வரை க்கொடுக்கப் படவில்லை. அல்லது கொடுக்க முடியா சூழ்நிலை. இன்னும் சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய ஆர்மபித்துவிட்டார்கள். வேறு வழியில்லை. சர்வைவல் த பிட்டஸ்ட். மீண்டும் முதலாளியே தொழிலாளியாய் பயணிக்க வேண்டிய கட்டாயம்.


ஊரே பற்றியெறியும் போது பிடில் வாசித்தவனைப் பற்றி படித்திருப்போம். இப்போது நேரில் பார்க்கலாம். முழுக்க மூழ்கி போன கார்களை டோ செய்ய, பன்னிரெண்டாயிரம் ரூபாய் எல்லாம் சார்ஜ் செய்த ஆட்கள். அப்படி கஷ்டப்பட்டு டோ செய்யப்பட்ட  ரெண்டு லட்ச ரூபாய் வண்டிக்கு மூனரை லட்ச ரூபாய் சர்வீஸ் சார்ஜ் போட்டு, இன்சூரந்தானே என்று கல்லா கட்டும் சர்வீஸ் மற்றும் கொள்ளையடிக்கும் இன்சூரன்ஸ் கம்பெனிகள்.  சிறு வேலைகள் செய்யும் ஆட்கள் என ஒரு கூட்டம் மனசாட்சியுடனும் இல்லாமலும் உழன்று கொண்டிருக்க, வீடு வீடாய் கணக்கெடுக்க வந்தவர்களிடம், ரேஷன் கார்ட்டை காட்டி, மூன்றாவது ப்ளோரில் இருக்கும் ஆட்கள் கூட நிவாரணம் பெற க்யூவில் நிற்பதை பார்த்து பெருமும் முழுக்க மூழ்கிய தரைத்தளக்காரர்கள். வீடு முழுவதும் மூன்று பாய், நானைந்து பெட்ஷீட், ப்ளாஸ்டிக் குடங்கள், பேஸ்ட், ப்ரஷ் என குவித்திருக்கும் வீடுகள். வெள்ளம் வடிந்து பள்ளத்திலிருக்கும் வீடுகளில் உள்ளேயிருந்து பொங்கி வரும் நீரை கட்டுப்படுத்த முடியாமல், உடனடியாய் வீட்டை காலி செய்ய சொல்லும் வீட்டு ஓனர்கள், வீட்டுக்காக அலையும் வாடகை வாசிகள். ஒரே வீட்டில் நான்கைந்து அக்கவுண்டுகளைக் காட்டி, குளறுபடி லிஸ்ட் எடுத்து போயிருக்கும் அரசாங்க ஆட்கள். இன்னமும் புழுதி பறக்கும் மெயின் ரோடுகளிடையே மூக்கை கூட மூடாமல் பயணிக்கும் பாக்யவான்களான பயணிகள், க்ரெடிட் கார்டுக்கு ஒரு மாத தவணை கட்ட தவறியதால் உடனடியாய் க்ரெடிட் லிமிட்டை குறைத்த பேங்குகள். பணத்தை உடனடியாய் கட்டவிலலியென்றால் சிபிலில் சொல்லிவிடுவோமென்று மிரட்டல் வேறு. மழை நின்று பதினைந்து நாள் ஆகியும், அதற்காக மெத்தனமெடுக்காத அரசாங்கம். இங்கே தண்ணி வந்ததுக்கு நீதான் காரணம் என்று மாற்றி மாற்றி குற்றம் சொல்லும் கட்சிகள். நான் தான் சாக்கடை வாறினேன். நீ வாறினியா? என்பது போல சாக்கடைகளில் நடுவே போஸ் கொடுக்கும் அரசியல் வியாதிகள். என ஆளாளுக்கு தங்கள் தங்கள் நிலைகளை ஸ்கோர் செய்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்க, எதை செய்வது, எப்படி மீண்டும் எழுவது என்ற கவலை மட்டுமே தாங்கிக் கொண்டு ஒவ்வோரு ஏரியாவிலும் ஒரு ஜீவன் கிட்டத்தட்ட காதல் பரத் போல ‘ஞங் ஞங்’ என மண்டையில் குத்திக் கொள்ளாமல் மலங்க, மலங்க விழித்துக் கொண்டே அலையும் ஆட்களை இனங்கண்டால் அவர்களுக்கான நிவாரணம் குறித்து யோசியுங்கள். நாலு பேருக்கு சொல்லுங்கள்  பணம் போன சம்பாதிச்சுக்கலாம் என்ற வார்த்தைகள் வேண்டுமானால் கேட்பதற்கு இதமாய் இருக்கலாம். ஆனால் இழந்த பணம் இழந்ததுதான்.

கேபிள் சங்கர்-நன்றி - உயிர்மை -2016-ஜனவரி

Post a Comment

3 comments:

Anonymous said...

யாரை நோவது ...?? படைத்தவனையா ? ஆண்டவனையா ?? ஆள்பவனையா??? விதியை நொந்து கொள்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது ..

'பரிவை' சே.குமார் said...

நல்ல கட்டுரை...

Itsdifferent said...

ஊரே வெள்ளத்தில் இருந்த போது, ஆயிரம் கட்டுரைகள், இவர் இவ்வளவு நல்லது செய்தார், அவர் இதை செய்தார், என்று, இப்போது பல்லிளிக்கிறது. இது தான், நம் தேசமா? அடி கொள்ளை, எவன் எக்கேடு கேட்டல், எனக்கென்ன. This shows the fundamental character of our country.