கொத்து பரோட்டா -2.0-8
கேட்டால் கிடைக்கும் மால்களுக்கு போனால் அங்கேயிருக்கும் புட்கோர்ட்டுகளில் சாப்பிட வேண்டுமென்றால் அவர்களிடம் 20 ரூபாய் கொடுத்து கார்டு வாங்கி அதில் நம் பணத்தை கொடுத்து சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். உள்ளே சாப்பிட பணத்திற்கு பதிலாய் கார்டை ஸ்வைப் செய்தால் போதும். ஆரம்ப காலத்தில் இது என்னவோ அவர்கள் நமக்காக செய்யும் வசதியாக தெரிந்தாலும், நிஜத்தில் மகா கொள்ளை. ஒருவர் ஆரம்பித்த பழக்கம் எல்லா மால்களிலும் தொடர, மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். இந்த கார்டு வாங்குவதால் வாடிக்கையாளர்களான நமக்கு என்ன உபயோகம்? இந்த கார்ட்டை நாம் ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும்?. இந்த கார்டு கொடுப்பதினால் ஏதேனும் டிஸ்கவுண்ட் கிடைக்குமா? கார்டு வேண்டாம் என்று திரும்பக் கொடுத்தால் ஏன் நம் பணத்தை திரும்பக் கொடுப்பதில்லை? அது எப்படி சரியான வியாபார முறையாகும்? என்கிற கேள்விகளை யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலும் அப்பன் காசில் செலவு செய்கிறவர்கள். அதையும் மீறி தன் தோழிகளுடன் வரும் போது ஐந்துக்கும் பத்துக்கும் சண்டை போடுகிறவனாய் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. குடும்பங்களுடன் வருகிறவர்களோ.. ...