Thottal Thodarum

Nov 30, 2016

கொத்து பரோட்டா -2.0-8

கேட்டால் கிடைக்கும்
மால்களுக்கு போனால் அங்கேயிருக்கும் புட்கோர்ட்டுகளில் சாப்பிட வேண்டுமென்றால் அவர்களிடம் 20 ரூபாய் கொடுத்து கார்டு வாங்கி அதில் நம் பணத்தை கொடுத்து சார்ஜ் செய்து  கொள்ள வேண்டும். உள்ளே சாப்பிட பணத்திற்கு பதிலாய் கார்டை ஸ்வைப் செய்தால் போதும். ஆரம்ப காலத்தில் இது என்னவோ அவர்கள் நமக்காக செய்யும் வசதியாக தெரிந்தாலும், நிஜத்தில் மகா கொள்ளை. ஒருவர் ஆரம்பித்த பழக்கம் எல்லா மால்களிலும் தொடர, மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். இந்த கார்டு வாங்குவதால் வாடிக்கையாளர்களான நமக்கு என்ன உபயோகம்? இந்த கார்ட்டை நாம் ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும்?. இந்த கார்டு கொடுப்பதினால் ஏதேனும் டிஸ்கவுண்ட் கிடைக்குமா? கார்டு வேண்டாம் என்று திரும்பக் கொடுத்தால் ஏன் நம் பணத்தை திரும்பக் கொடுப்பதில்லை? அது எப்படி சரியான வியாபார முறையாகும்? என்கிற கேள்விகளை யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலும்  அப்பன் காசில் செலவு செய்கிறவர்கள். அதையும் மீறி தன் தோழிகளுடன் வரும் போது ஐந்துக்கும் பத்துக்கும் சண்டை போடுகிறவனாய் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. குடும்பங்களுடன் வருகிறவர்களோ.. என்னைக்கோ ஒரு நாள் வர்றோம் எதுக்கு சண்டை சத்தமில்லாம போயிருவோம் யாராச்சும் ஒருத்தன் கேள்வி கேட்பான் என்றோ, அல்லது கேள்வி கேட்டால் கிடைக்கவா போவுது என்றோ போய்விடுகிறார்கள். நிஜத்தில் இந்த மால்களில் நடக்கும் வியாபாரத்தில் புட் கோர்ட் நடத்துகிறவர்களுக்கு முப்பது சதவிகிதம் தான் வாடகை. எனவே இவர்களின் சேல்ஸ் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், கணக்கு செய்யவும் தான் இந்த கார்டு. இந்த கார்டினால் அவர்களுக்குத்தான் உபயோகமே தவிர மக்களுக்கு ஒரு ..ரும் இல்லை. ஒரு நாளைக்கு நாலாயிரம் பேர் இம்மாதிரி கார்டுகளில் பத்து ரூபாய் விட்டுச் சென்றால் 40 ஆயிரம் ரூபாய். மாதத்திற்கு 12 லட்ச ரூபாய்.  நம்மிடம் பத்து ரூபாய் கூட குறைவாய் இருந்தா கார்டு தராதவர்களுக்கு நம் காசை வட்டியில்லாம உபயோகிக்க கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக பல வருடங்களாய் எங்கள் கேட்டால் கிடைக்கும் குழு மூலமாய்  சண்டையிட ஆரம்பித்திருந்தோம் அதற்கான பலன் இன்றைக்கு ஈ.ஏ போன்ற மால்களில் கார்டுக்கு காசு வாங்குவதில்லை. போரம் போன்ற மால்களில் கார்டுக்கு காசு கிடையாது. கார்டு வேண்டாம் என்று திரும்பக் கொடுத்தால் உங்களது பணம் வாபஸ். போனிக்ஸ் மாலில் இந்த கந்தாயமே கிடையாது. புட்கோர்ட்டில் கையில காசு வாயில தோசை சிஸ்டம் தான்.  ஈ.ஏ போன்ற மால்களில் நான் இன்னமும் தொடர்ந்து காசை திரும்பக் கொடுக்க சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் கேட்டால் கிடைக்கும். என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. https://www.facebook.com/groups/kettaalkidaikkum/
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தீபாவளிக்கு வெடிகளை விட, மத்தாப்பூ, புஸ்வாண வகையராக்களின் சேல்ஸ்தான் அதிகமென்று தெரிகிறது. ஒரு காலத்தில் புஸ்வாணம் சங்கு சக்கர விஷயமெல்லாம் பெண் பிள்ளை பட்டாசுகள் என்றிருந்த காலமெல்லாம் போய் பெண் பிள்ளைகள் ஆட்டாபாமை கையில் பிடித்து தூக்கி போட்டுக் கொண்டிருக்க, மிக இளைஞர்கள் எல்லாம் புஸ்வாணமும், ராக்கெட்டும் விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் தீபாவளி புது ட்ரெஸ், யாருக்கும் சந்தோஷமோ இல்லையோ.. பதின்மவயது பெண்களுக்கு அதீத சந்தோஷத்தை தருகிற விஷயமாகவே படுகிறது. சாதாரண கவுன், பாவாடை சட்டையிலிருந்து, ஜீன்ஸ், டீ சர்ட்,, காக்ரா, சிம்பிள் சுரிதார் என பல விதங்களில் தங்களை அழகுப்படுத்திக் கொண்டு, அதற்கான ரிசல்ட்டை பெறுவதற்காக ரெவ்விரண்டு பேராய், கை கோர்த்துக் கொண்டு, கண்கள் பூராவும் பெருமையும், சந்தோஷமுமாய் நடை  பழகும் அழகிருக்கிறதே  அட..அட.அட..  பாவம் பையனுங்க தான் திரும்பத் திரும்ப ஜீன்ஸ், டீ சர்ட், என இருக்கும் நாலு பத்து கலருக்குள் இருப்பதை தெரிந்தெடுத்து, காலை பட்டாசு வெடித்து வியர்த்து வழிய நின்றிருக்கும் போது இவர்களின் வருகை 10,000 வாலா சரவெடியாய் வெடிக்கும். ஆயிரம் சொல்லுங்க கடவுள் ஓரவஞ்சனைக்காரன் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கிட்டத்தட்ட பத்து வருஷமாய் தமிழ்நாட்டில் திரையரங்குகளின் அனுமதி கட்டணம் உயர்த்தப்படவேயில்லை என்று அரசிடம் போராடிப் பார்த்துவிட்டு, கோர்ட்டை நாடியிருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். அரசும் தன் புதிய கட்டணத்தை தாக்கல் செய்தது. அதாவது 120 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கு. கட்டுமா? கட்டாதா என்று பதில் சொல்ல வேண்டிய திரையரங்கு உரிமையாளர்களுக்கு பதிலாய், ஐகோர்ட் இதெல்லாம் கட்டாது என்று சொல்லி ரிஜெக்ட் செய்து, வேறொரு கட்டணத்தை தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறது. இதில் காமெடி என்னவென்றால் தமிழ் நாட்டில் மல்ட்டிப்ளெக்ஸ் அதுவும் நான்கு திரை, புட்கோர்ட் இருக்கும் அரங்கிற்க்கு மட்டுமே 120 ரூபாய் வாங்க வேண்டும். அனால் தேவி போன்ற திரையரங்குகள் எல்லாம் புட்கோர்ட் என்று ஒரு போர்டை வைத்துவிட்டு, 120 ரூபாய் வாங்குகிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் 10 முதல் அதிகபட்சமாய் 50 ரூபாய் தான் ஆனால் இன்றைக்கு எந்த அரங்கிலாவது 50 ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்து பார்த்திருக்கிறீர்களா? சென்னையில் கேஸினோ, மற்றும் ஏ.வி.எம் ராஜேஸ்வரி அரங்ககுளில் மட்டுமே இது நடைமுறை படுத்தப்படுகிறது. அதனால் தான் எப்போதும் ஏவிஎம். ராஜேஸ்வரி திரையரங்கில் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும். சென்னை, செங்கல்பட்டு, ஏரியாக்களில் மல்ட்டி ப்ளெக்ஸ் தவிர மற்ற திரையரங்குகளில், புதிய படமென்றால்150 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இதை தட்டிக் கேட்க வேண்டிய அரசு அதிகாரிகள் வாரா வாரம் கட்டிங் வாங்கிக் கொண்டு போவதைத் தவிர வேறேதும் செய்ததாய் சரித்திரமில்லை. அப்படியே அதிக விலைக்கு டிக்கெட் விற்றதை எதிர்த்து கோர்ட்டுக்கு போனால் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்பதை போன்று பதில் சொல்லி, கோர்ட்டையும் சரிகட்டுகிறது அரசு. மற்ற ஊர்களில் உள்ள சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் எல்லாவற்றிலும், புதிய படமென்றால் 200-300 வரை விற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். ஒரு சினிமா போவதற்கு ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்க, அதனால் தான் பைரஸிக்காகவும், திருட்டு டிவிடிக்காகவும், கேபிள் டிவி பைரஸி ஒளிபரப்புக்காகவும், மக்கள் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இங்கே பெரிய படங்களைத் தவிர சிறு முதலீட்டு படங்களுக்கு நல்லாயிருக்குன்னு தெரிந்தால் கூட ஆட்கள் வருவதில்லை. 120 ரூபாய்க்கே வார நாட்களில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், டிக்கெட் விலையில் எங்களுக்கு லாபமில்லை அதனால் தான் பாப்கார்ன் வகையராவை 200க்கு விற்று பிழைப்பு நடத்துகிறோம் என்று சொல்லும் மல்ட்டிப்ளெக்ஸ் ஓனர்கள் எல்லாம் டிக்கெட் விலையை அதிகப்படுத்திவிட்டால், 20 ரூபாய்க்கு தர ஆரம்பிப்பார்களா?. விலைவாசி எறுவதற்கு ஏற்ப விலையை ஏற்ற வேண்டியதுதான். ஆனால் இவர்கள் ஆசைப்படுவது பகல் கொள்ளை. பெங்களூரைப் பார் அங்கே தமிழ் படத்திற்கு 800-900 என்றெல்லாம் டிக்கெட் விற்கிறார்கள் என்று உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் அங்கே கன்னட படத்திற்கு 120க்குள் தான் டிக்கெட் விலையே. ஆந்திராவில் 80 ரூபாய்க்கு நல்ல ஒளி,ஒலி தரத்துடன் ஏசியில படம் பார்த்துவிட முடியும். அதனால் தான் சினிமா இன்னமும் அங்கே கொண்டாட்டமாய் வாழ்கிறது. டிக்கெட் விலையை 300-350க்கு உயர்த்த ஆசைபடுகிற தியேட்டர் அதிபர்கள், பெரிய பட்ஜெட் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் எல்லோரும் சேர்ந்து சினிமா எனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க தயார் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@
Train To Bhusan
2016ல் கொரியாவில் கிட்டத்தட்ட 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்ற படம். சூப்பர் டூப்பர் ஹிட். ஆகச்சிறந்த கதையென்றால் ஒன்றுமில்லை. வழக்கமான ஹாலிவுட் ஜோம்பி கதைதான். ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் நம்மை கட்டிப் போடுகிறார்கள். கதாநாயகன் ஒரு ஃபண்ட் மேனேஜர். அவனுக்கு ஒரு குட்டிப் பெண். நாயகனும் மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள். மகள் தன் அம்மாவை பார்க்க வேண்டுமென்று அழ, அவளைப் பார்க்க பூஷனுக்கு புறப்படுகிறார்கள். அந்த ரயிலில் ஜோம்பியாய் மாறிய பெண்ணொருத்தி ஏறியதை கவனிக்காத கண்டக்டர் ட்ரையினை கிளப்ப்பிவிடுகிறார். ரயில் மொத்தமும் கொஞ்சம் கொஞ்சமாய் ஜோம்பிக்களாய் மாறிக் கொண்டிருக்க, இருக்கும் பத்திருபது பேருக்குள் கர்பிணி மனைவியோடு பயணிப்பவன். நான்கைந்து மாணவர்கள். அவர்களுடய தோழி ஒருத்தி, வயதான அக்கா தங்கை, ஒரு செல்ஃப் செண்டர் ஆன ரயில் அதிகாரி, நம்ம ஹீரோவும், குழந்தையும். இவர்களுக்குள் நடக்கும் போராட்டம், சுயநலம். தியாகங்களுக்கு இடையே ஜோம்பிக்கள் என போகிறது கதை. பாராட்டப்பட வேண்டியவர்களில் முக்கியமானவர்கள் ஜோம்பிக்களாய் நடித்த துணை நடிகர்கள். மேக்கப், நடிப்பு எல்லாமே ஸ்கீரினின் அருகே அவர்கள் வரும் போது காலை தூக்கி எட்டி உதைக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுத்த யாருமே தவறவில்லை. எல்லா தியாகங்களுக்கு பிறகும் மிகுந்திருக்கும் கர்பிணிப் பெண்ணும், ஹீரோவின் மகள் மட்டுமே மிஞ்சியிருக்க.. வரும் க்ளைமேக்ஸ் எமோஷனல் அத்யாச்சார். கொரிய படங்கள் எப்பவுமே இப்படித்தான் கொஞ்சம் வெஸ்டர்ன், கொஞ்சம் பாரம்பரியம், கொஞ்சம் செண்டிமெண்ட், நல்ல குவாலிட்டி டெக்னிக்கல் மற்றும் நடிப்பு என எல்லாவற்றையும் சரி விகிதத்தில் கலந்து கொடுப்பதில் விற்பன்னர்கள் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@ 
Girl In The City-

ஹிந்தியில் சமீபத்தில் பார்த்து இம்ப்ரஸான புது வெப் சீரீஸ். ஹிந்தி என்று கூட சொல்ல முடியாது. ஹிந்திங்கிலிஷ் சீரீஸ். மீரா டெஹ்ராடூனிலிருந்து மும்பையில் எப்படியாவது பேஷன் டிசைனராகி விட வேண்டுமென்ற நோக்கத்தோடு, தன் மிலிட்டரி அப்பாவிடம் மூன்று மாதம் டைம் வாங்கிக் கொண்டு மும்பைக்கு வந்து சேருகிறாள். எம் 9 எனும் பேஷன் டிசைனிங் கம்பெனியில் விலையில்லா இண்டர்னாக சேருகிறாள். தோழி சமீராவின் அறையில் வாசம்.  அவளோ எந்த ஒரு வேலையும் இல்லாத செலவாளி. ஷோக்காளி. பர்மெனெட்டாக ஆண் சகவாசம் வைத்துக் கொண்டும், சிகரெட் பிடித்துக் கொண்டலையும் டெஹ்ராடூனிலிருந்து வந்து மும்பை விழுங்கிய மான். அதே ப்ளாட்டில் ஸ்டார்டப் கம்பெனி ஆரம்பிக்க போராடும் மிடில் க்ளாஸ் கார்த்திக். இவர்களுடய கனவு, காதல், வாழ்க்கை என்பதை மிக அழகாக, ஸ்டைலாக, ஒரு ஃபீல் குட் இந்தி படத்தை பார்த்த மகிழ்ச்சியை இந்த வெப் சீரிஸ் தருகிறது. பெண் சுதந்திரம், ஆண் பெண் பாகுபாடு, ஃபீரி செக்ஸ். கொண்டாட்டம் அத்தோடு வாழ்க்கையின் இலக்கு இவைகளையெல்லாம் மீராவின் பார்வையில் சொல்கிறார்கள். சமீர் இக்பாலின் இயக்கம், சன்யுக்தா சாவ்லா ஷேக்கின் எழுத்தில் மீராவாக வரும் மிதிலா பால்கரின் நடிப்பு. அவரின் இன்னொசென்ஸ், அந்த கருகரு சுருள் முடி  எல்லாம் மயக்குகிறது. இதிலும் இந்த சீரீஸின் ஸ்பான்ஸர்களைப் பற்றி ஒவ்வொரு எபிசோடிலும் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து சொல்வதைத் தவிர வெரி ப்ரொபஷனல் மேக்கிங். அண்ட் பர்பாமென்ஸ். மொத்தம் 13 எபிசோட்கள். எல்லாமே 15 நிமிட நேரம். க்விக் அண்ட் க்யூட் எண்டர்டெயின்மெண்ட். https://goo.gl/yShgfP

Post a Comment

No comments: