Thottal Thodarum

Feb 15, 2017

கொத்து பரோட்டா 2.0-13

கொத்து பரோட்டா 2.0-13
நீர் – நாவல் விநாயக முருகன்
சென்ற வருட டிசம்பர் வெள்ளத்தை சென்னை வாசிகள் யாரும் மறந்திருக்க முடியாது. மறக்கக்கூடிய விஷயமா அது?. அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பல பேர் தங்களுடய அனுபவங்களை முகநூலிலும், இணைய தளங்களிலும் எழுதி வந்தார்கள். செயற்கையாய் ஏற்படுத்தப்பட்ட இயற்கை  பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அச்சமயத்தில் உயிர்மையில் ஒரு கட்டுரை கூட எழுதினேன்.  இந்த வெள்ளம் பல பேரின் உள்ளக் குமுறலை, ஆதங்கத்தை, தவிப்பை, பல வழிகளில் வெளிக் கொண்டு வந்திருக்க, இதோ இப்போது எழுத்தாளர் விநாயக முருகன் ‘நீர்” என்கிற நாவல் மூலமாய் தன் எண்ணங்களை வடித்திருக்கிறார். மழை ஆரம்பித்ததிலிருந்து, சின்னச் சின்ன விஷயங்களாய் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதில் ஆரம்பித்து, மெயின் ரோட்டின் வழியாய் சாக்கடை தண்ணீரில் போக முடியாமல் பின் பக்கத்து வீட்டு சந்திராவின் வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாய் எகிறி குதித்து போவதும், சந்திராவின் கேரக்டர், ஜே.கே, ஆர்.வி, குயில், போன்ற கேரக்டர்கள். தனிமை கொடுக்கும் காமம்.  வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிர் பயம். அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள். நீ எக்கேடு கெட்டாவது போ.. என்று தன்னை விட்டுவிட்டு ஊருக்கு போன மனைவியின் மேலான கோபம். கழிவிரக்கம். சந்திராவின் மீதான காமம், என சுவாரஸ்யமான நடையில் வெள்ளத்தின் பார்க்காதவன் மனதில் பயத்தையும், பதைப்பையும் உருவாக்கும் எழுத்து. என்னை போன்ற பாதிப்படைந்தவர்களுக்கு கிட்டத்தட்ட ரீப் ப்ளே மாதிரியான விஷயம்தான் என்றாலும், சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது. என்ன வெள்ளம் வடிய ஆரம்பித்ததும், கதை (அ) நிகழ்வின்  போக்கில் உள்ள சுவாரஸ்யமும் வடிந்து, அடிக்கடி கதை நாயகன் என்ன செய்வது என்று தெரியாமல், மொட்டை மாடியில் தம்மடிக்க போவது போல கதையின் முடிவும் ஆனது  வருத்தமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
3%- ப்ரேசில் சீரீஸ்
சிட்டி ஆப் காட் படத்தின் ஒளிப்பதிவாளர்  சீசன் கார்லோன் இயக்கியுள்ள புதிய எட்டு எபிசோட் ப்ரேசில் நெட்ப்ளிக்ஸ் சீரிஸ்.  கதை என்று பார்த்தால் நம் சுஜாதா பல வருடங்களுக்கு முன் எழுதிய சொர்க்கத்தீவு நாவலின் ஹைஃபை வர்ஷன் தான். எதிர்காலத்தில் உள்நாட்டில் பசியும் வறுமையுமாய் இருக்க, சுபிட்ச வாழ்வுக்காக ஆஃஷோர் எனும் வேறு இடத்திற்கு சென்றால் சுக வாழ்க்கை வாழ வழியிருக்க, அந்த இண்டர்வியூ போன்ற நிகழ்வுகளில்  கலந்து கொள்ளும் மக்களில் 3 சதவிகித பேர் மட்டுமே தெரிவு செய்யப் படுவார்கள் என்கிற அளவுக்கு கடினமான
போட்டிகள் கொண்ட தேர்வு முறை கொண்டது. அப்படி தெரிவு செய்யப்பட்டு ஆஃப்ஷோர் போகிறவர்கள் எக்காரணம் கொண்டும் திரும்ப வர இயலாது. அப்படிப்பட்ட தேர்வில்  கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று சேர்கிறார்கள். ஒவ்வொரு லெவலிலும் ஆட்கள் எலிமினேட் செய்யப்பட்டு,  குழு குழுவாய் சேர்க்கப்பட்டு,  அவர்களின் பின் புலம், எதற்காக ஆஃப்ஷோருக்கு ஆசைப்படுகிறார்கள்?. ஆசைப்பட்டு வந்தவர்களில் இரண்டு கேரக்டர்கள் இந்த ஆஃப் ஷோர் சிஸ்டத்தை உடைக்க அனுப்பப்படும் தீவிரவாதிகள். அவர்கள் எப்படி உருவாகிறார்கள். மிக இளைஞர்களான அவர்களுக்குள் நடக்கும் மனப் போராட்டங்கள், துரோகம், காதல், . இந்த தேர்வுகளை நடத்தும் தலைமைப் பொறுப்பில் உள்ள எசேக்யூயலின் கோபம், அவன் வாழ்வின் பின்னணியில் உள்ள ரகசியம். சுபிட்ச வாழ்வு எனும் மாய வார்த்தைக்கு பின் உள்ள வாழ்வியல் இழப்பு. உறவுகள் இல்லா உலகத்தினால் ஏற்படும் மனச்சிதைவு. என பல விஷயங்களை பேசியுள்ள சீரிஸ். கதையில் வரும் பெர்னாண்டோ போன்ற மனதில் அழுக்கில்லாத ஊனமுற்ற கேரக்டர் போல பல சுவாரஸ்ய கேரக்டர்கள் அவர்களின் முரண்கள், தேர்வு முறையில் ஏற்படும் மரணங்கள். என படு சுவாரஸ்யம். மேக்கிங், நடிப்பு, வசனங்கள் என எல்லாமே மிகத்தரம்.  க்ளைமேக்ஸில் தெரிவு செய்யப்படுகிறவர்களை சுத்தீகரிக்கும் லெவல் என்ன?என்பதை அறியும் போதும். ஏன் அப்படி என்று அவர்கள் சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ளதக்கதாய் இருந்தாலும் இழப்பு அதிகம் என்பதால் மனம் கனக்கத்தான் செய்கிறது. பார்க்க வேண்டிய சீரிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Arrival
Story of your life -Ted Chiang என்பவர் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட, ஏலியன் பற்றிய படம். உலகெங்கும் பன்னிரெண்டு ஏலியன் களங்கள் பூமியிறங்கியிருக்க, உலகமே அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என்று புரியாமல்.  கதாநாயகி டாக்டர் லூயீஸ்  ஒரு மொழி வல்லுனர். அவரை அழைத்து வந்து ஏலியன்களுடன் பேச வைத்தால் என்ன என்று முயற்சிக்கிறது அமெரிக்க அரசு. 18 மணி நேரத்துக்கு ஒரு முறை திறக்கும் அந்த ஸ்பேஸ்ஷிப்பின் கதவுகள் மூலம் உள்ளே செல்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாய் ஏலியன்களுக்கும் மனிதர்களுக்கும் புரிதல் ஏற்பட்டு, இவர்களது பேச்சுக்களுக்கு பதில் சொல்ல ஆரம்பிக்கிறது. ஆனால் எதுவும் புரியவில்லை. காரணம் அவர்களது பதில்கள் மொழியாய் இல்லாமல் படங்கள் போல சைன்களாய் இருக்க, அதற்கான அர்த்தத்தை தேட ஆரம்பிக்கிறார்கள். மொழிவல்லுனரான லூயி அவர்களின் ஒவ்வொரு பதில் படங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை நுணுக்கமாய் ஆராய்ந்து அவர்களது மொழியிலேயே பதில் படங்களை உருவாக்குகிறார்கள். இப்படியாகப் போகிறது கதை. ஏலியன்களின் ஸ்பேஸ்ஷிப் பூமியில் வந்து நிற்கும் காட்சி. முதல் முறையாய் அதனுள் டாக்டர் லூயிஸும் அவர்தம் சகாக்களும் போகுமிடம் ப்ரீத் டேக்கிங்.. அட்டகாசம். கிட்டத்தட்ட ஆல்மோஸ்ட் நாமும் அவர்களுடனே செல்வது போன்ற விஷுவல் அட்டகாசம். மெல்ல கதை அன்போல்ட் ஆக, ஆக, கொஞ்சம் நம்மூர் மாரியாத்தா ஃபீல், பெண், அவளுள் உள்ள மெல்லிய உணர்வுகளால் அவளுக்கும் ஏலியனுக்குமான புரிதல், அடிக்கடி அவளுடன் பேசும் பெண், அதன் மூலமாய் லூயிஸுக்கு கிடைக்கும் விளக்கங்கள் என கொஞ்சம் விஞ்ஞானத்திலிருந்து விலகி ஸூப்பர் நேச்சுரல், செண்டிமெண்டல், ஃப்யூச்சர் என போனாலும் க்ளைமேக்ஸ் ட்விஸ் ஆஸம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்து அரசியலில் ஒர் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது.  திமுக தன் சரிசமமான எதிரியை இழந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் ஒர் பெரோஷியஸ் முதல்வரை இழந்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் தைரியத்தை இழந்திருக்கிறார்கள். பத்திரிக்கை மீடியா ஒர் வகையில் சுதந்திரம் அடைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் சசிகலா குடும்பத்தை எந்தவிதத்திலும் விமர்சிக்காத பத்திரிக்கைகள் எல்லாம் ஜெ இறந்த  அடுத்த நாள் சசிகலா அண்ட் கோவை மன்னார்குடி மாஃபியா என்று எழுதுகிறார்கள் என்றால் வேறென்ன சொல்ல?. சிறுவயதிலேயே சினிமாவில் அடியெடித்து அதில் குறுகிய காலத்தில் புகழ் பெற்று தன்னுடய முப்பதுகளிலேயே அதிலிருந்து விலகி, அரசியலில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவரின் அரசியல் வளர்ச்சி, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. விடாக்கண்டன்களையும், உட்கட்சி கொடாக்கண்டன்களையும் சமாளித்து “யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாத தைரியசாலி” என்ற பிம்பத்தை, ஏற்படுத்தி, தன் கட்சியினரை மட்டுமில்லாமல் மக்களையும் நம்ப வைத்தவர். சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம், அதனால் அடைந்த வீழ்ச்சி, வளர்ப்பு மகன், திருமணம், வீழ்ச்சி, சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி ஊழல், ஜெயில், சென்னை வெள்ளத்திற்கான காரணகர்த்தா, எம்.ஜி.ஆருக்கு பிறகான தொடர் வெற்றி என வளைய வந்தவர். வேறொரு அரசியல்வாதிக்கு இத்தனை ப்ரச்சனைகள் வந்திருந்தால் இவ்வளவு அழுத்தமாய், வலிமையாய் கடந்து வந்திருப்பாரா? என்பது சந்தேகமே. தான் ஒரு இரும்பு மனுஷி என்பதை ஒவ்வொரு பிரச்சனையின் போதும் கடந்து தன் பிம்பத்தை நிஜமென நிருபித்தவர். கடைசிக் காலங்களில் தனக்கென்று குடும்பம் இல்லாததால் மக்களால் நான் மக்களுகாகவே நான் என்கிற தாரக மந்திரத்தை முன்னெடுத்தவர். எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். சிறந்த நடிகை, உழைப்பாளி, படிப்பாளி, அறிவாளி, தைரியசாலி, இரும்புமனுஷி என பெயர் பெற்றவரின் கடைசி 75 நாட்கள் குழப்பத்தின் உச்சமாகவே கடந்தது.  புலனாய்வு பத்திரிக்கைகள் ஏழெட்டு வரும் நாட்டில் ஒரு பத்திரிக்கை கூட அப்பல்லோ எனும் இரும்புக் கதவுகளை திறக்க முடியாத நாட்கள் அவை. ஏன். அவரது இறப்பு பற்றிய அறிவிப்பில் கூட அத்தனை குழப்பங்கள். தந்திடிவி மாலையிலேயே அவரின் மறைவைப் பற்றி அறிவித்துவிட, அதை தொடர்ந்து எல்லா டிவிக்களும், ஜெயா டிவி உட்பட அறிவித்து, அதிமுக அலுவலகத்தில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட,  அப்பல்லோ அப்படியெல்லாம் இல்லை என்று அறிக்கை விட, இன்னொரு பக்கம் ரெட்டியின் மகள் படு சீரியஸ் என்று போட்ட ட்விட்டை திரும்ப எடுத்துவிட, என ஏகப்பட்ட குழப்பங்கள். இரவு பதினொரு மணி முப்பது நிமிடத்துக்கு தான் அவர் இறந்தார் என்றால் இத்தனை நாளாக கூடாத எம்.எல்.ஏக்களின் கூட்டம் ஏன் காலையிலேயே கூட்டப்பட்டது. ஏன் மறுபடியும் மாலையில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது? சரியாய் பதினோரு மணி தருவாயில்  எல்லா முடிவுகளையும் எடுத்துவிட்டு, மீடியாவை கட்சி அலுவலகத்துள் அனுமதித்தது. அங்கே வீடியோ காட்சிகள் வெளி வந்து கொண்டிருக்கும் போதே இங்கே அப்பல்லோவில் ஜெவின் மறைவு குறித்து வெளியான அஃபீஷியல் தகவல். உடனடி அழுகையில்லா பதவியேற்பு. என ஆயிரம் குழப்படிகள் இருந்தாலும், தன் தங்கத்தலைவியின் மேல் வைத்திருக்கும் மாறாத அன்பை கலவரமில்லாமல் வெளிப்படுத்திய மக்களும், அதை கட்டிக்காத்த காவல் துறைக்கும் மிகப் பெரிய சல்யூட். ஒரு பேட்டியில் ஜெ தன் வாழ்வை பற்றி சொல்லும் போது தன் விருப்பமான வாழ்வை நான் வாழவில்லை என்று சொல்லியிருந்தார். அவரது மறையும் போது அதே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செல்வதெல்லாம் உண்மையை கலாய்த்து கலாய்த்தே அதற்கான டி.ஆர்.பியை ஏற்றிவிட்டிருக்க, தமிழ், தெலுங்கு, கன்னடமென எல்லாம் மொழிகளிலும், யாராவது மார்கெட் போன நடிகையை வைத்து இதோ போன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் மதிய நேர டி.ஆர்.பிக்கு செம்ம போட்டி. இதில் பங்கு பெரும் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார நிலையில் கீழ் நிலையில் உள்ளோர். ஆரம்ப காலத்தில் நான் கூட ஆட்களை செட் செய்து எடுக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜீ டிவி அலுவலகத்துக்கு போன போதுதான் தெரிந்தது, மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்களாகவே முன் வந்து ரிஜிஸ்டர் செய்து கொண்டும், சம்பந்தபட்ட இரண்டு தரப்பும் சேனல் வாசலிலேயே சண்டைப் போட்டுக் கொள்வதையும் நேரில் பார்த்தேன். இம்மாதிரி நிகழ்ச்சிகளின் ஆதார விஷயமே அடல்டரி, செக்ஸ், ரெண்டு பொண்டாட்டி, மூணு புருஷன் என்பது போன்ற உறவு சிக்கல்கள் தான் பெரும்பாலும். எனக்கு பயமே இதைப் பார்க்கும் மக்களின் மனநிலையை பற்றித்தான். ஏற்கனவே எல்லாவிதமான நெகட்டிவ் விஷயங்களை டிவி சீரியலே நம் வீட்டு ஆண்/பெண் மனதில் அழுத்தமாய் ஏற்றி விடப்பட்டிருக்க, இன்னும் அழுத்தமாய் ஊர் உலகத்துல நடக்காதது ஒண்ணுமில்லை என்கிற எண்ணம் மேலோங்கி, எப்படி குடிப்பது எல்லா குடும்பங்களிலும் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டதோ அது போல எல்லா சமூக குற்றங்களும் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிடுமே என்கிற பயம் கவ்விக் கொள்கிறது. இதை நடத்தும் நடிகைகளைப் பற்றி பேசிப் பிரயோஜனமில்லை. ஏனென்றால் அது அவர்களின் தொழில். பார்க்கும் மக்களைத்தான் சொல்ல வேண்டும்.  மக்கள் கொண்டாடாத எதுவும் டிவிக்கள் பிரயத்தனப்பட்டு கொடுக்கப் போவதில்லை.

@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

1 comment:

Unknown said...

இது குமுதம் பத்திரிகையில் வருமா
சசி மன்னார்குடி மாபியா
என சங்கர் ஜி