Thottal Thodarum

May 17, 2017

கொத்து பரோட்டா -2.0-25

கொத்து பரோட்டா 2.0-25
ஒவ்வொரு பெரிய படம் வரும் போதும், படம் வெளியான அடுத்த நாளே 40 கோடி, 60 கோடி கலக்‌ஷன் என்று வீறிட்டு அலறும் வழக்கங்கள் எல்லாமே சோசியல் மீடியாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு பிறகே. அதிலும் ரசிகர்களும், காசு வாங்கிக் கொண்டு ப்ரோமோட் பண்ணும் ஆட்களும், கைக்கு வந்த தொகையை போட்டு குறிப்பிட்ட நடிகர், தயாரிப்பாளரின் பெயரோடு டேக் செய்து விட்டுவிடுவார். தயாரிப்பாளருக்கு நிஜமான கலக்‌ஷன் தெரியும் என்றாலும் வேறு வழியில்லை. பப்ளிக்கில் அதெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது. ஓசியில கிடைக்கிற பப்ளிசிட்டியை எதுக்கு கெடுத்துக்கணும்னு விட்டுவிடுவார். சமீபத்தில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேசிய ஆடியோ தமிழ் சினிமாவில் சும்மாவாச்சும் நூறு கோடி, நானூறு கோடி என்று சொல்லிக் கொண்டு, நடிகர்களின் மனதை குளிர்விப்பதைவிட நிஜத்தை சொல்லி, சம்பளத்தை குறைத்து நாலு காசு நிஜமாகவே பாருங்க என்று சொன்னதற்கு மொக்கையாய் என்ன நீ கையப்பிடிச்சி இழுத்தியா என்கிற ரேஞ்சுக்கு, தியேட்டர் விளம்பரங்களில் பங்கு தந்தாயா?, பாப்கார்ன் விற்றதில் பாதி கொடுத்தாயா? என்று குற்றம் சாட்டுகிறார். தியேட்டரில் வரும் விளம்பரங்களிலோ, பார்க்கிங் மற்றும் ஸ்டால் வருமானத்திலோ தயாரிப்பாளர் பங்கு என்று உலகளவில் எங்குமே கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த ஆண்டு முதல்வரின் உடல்நிலை மோசமான நேரத்தில் ஆரம்பித்து, வர்தா புயல், முதல்வர் மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம், ஆட்சி திரிசங்கு நிலை, என தொடர்ந்து சினிமாவை விட நிஜத்தில் மக்களை புரட்டிப் போடும் நிகழ்வுகளும், செய்திகளுமாய் வந்து கொண்டிருக்க, சினிமா மீதான ஆர்வம் குறைந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை அள்ளி வீச, நாங்கள் எல்லாம் அப்படியில்லை என்று விநியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்கள் ஒருபுறம் தயாரிப்பாளர்கள் மேல் குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டிருந்தாலும், திரைப்பட வசூலைப் பொறுத்தவரை இன்றளவிலும் வெளிப்படை தன்மையில்லாத ஒர் நிலை தான் தமிழ் சினிமாவில். சென்னையில் உள்ள மல்டிப்ளக்ஸைப் பொறுத்தவரை வாரம் தவறாமல் வசூலை பிரித்து செக்காய் கொடுத்துவிடும் நிறுவனங்களும் உண்டு. ஆறு மாதம் வரை வசூலை பிரித்துக் கொடுக்காத மல்டிப்ளெக்ஸுகளும் உண்டு. என்ன மல்ட்டி ப்ளெக்ஸுகளை பொறுத்தவரை 120 ரூபாய் என்பது இன்றைய அளவில் நிலையான தொகை. அதனால் ஒப்புக் கொண்ட சதவிகித விகிதாசாரப்படி சரியாய் பிரித்து கொடுத்துவிடுவார்கள். வெளி மாவட்டங்களில் அப்படியல்ல. பெரும்பாலும், அரசு நிர்ணையித்த விலையை விட அதிகமாய்த்தான் விற்பார்கள். தயாரிப்பாளர்களிடமிருந்து விநியோகஸ்தர் ஒரு விலைக்கு வாங்கி அதை பிரித்து தியேட்டருக்கு இவ்வளவு என்று மினிமம் கியாரண்டி முறையில் தான் போட்ட முதலை படத்தின் வெற்றி தோல்விக்கு முன்னமே பார்க்க அதிக விலைக்கு விற்க, போட்ட அதிக முதல்லை எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் எடுக்க சாதாரண அதிகரிக்கப்பட்ட விலையை விட, கூடுதலாய் தொகை வைத்து விற்று போட்ட காசை எடுக்க முயல்கிறார். அதனால் கணக்கு காட்டப்படுவதில்லை. பெரிய படங்களுக்கான இந்த பழக்கம் சிறு முதலீட்டு படங்களுக்கும் தொடர்வது தான் பரிதாபம். வெளிப்படையாய் தயாரிப்பாளர் தன் படத்திற்கு எந்தெந்த தியேட்டர்கள், எத்தனை டிக்கெட் விற்றது? என்ற கணக்கை இன்றைய இணையத்தின் வளர்ச்சியின் மூலமாய் நேரடியாய் பார்க்க முடியும். ஆனால் அதற்கான ஏற்பாட்டை தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, திரையரங்கு உரிமையாளர் சங்கமோ  முன்னெடுத்து செயல்பட இன்று வரை  இன்னும் விழையாமல் இருப்பதன் பின்னணி சுயநலம். எனக்கென்ன நான் நல்ல விலைக்கு விநியோகஸ்தருக்கு விற்றாகி விட்டது என்று தயாரிப்பாளரும், விநியோகஸ்தர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மினிமம் கேரண்டியில் தலையில் கட்டியாகிவிட்டது நாம எஸ்கேப் என்று எஸ்ஸாகி விடுவதால் என்ன டேஷுக்கு நான் உனக்கு கணக்கு காட்ட வேண்டும் என்று அவர்கள் ஒரு புறமிருக்க, நீ பொய் கணக்கு சொல்லுற என்று இன்னொரு பக்கம் கூட்டம் சேர்ந்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  நல்ல திரையங்கில் படம் பார்க்க 120 கொடுக்க தயங்காத, மக்கள், கொஞ்சம் கூட தரமேயில்லாத அரங்கிலும் அதே 120 ரூபாயை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் தான் பைரஸியை சுவீகரிக்க ஆரம்பித்துவிடுகிறான். வெளிப்படையான வியாபாரம் மட்டுமே தமிழ் சினிமாவை பொய் நூறு கோடி க்ளப்புகளிடமிருந்தும், வீண் விளம்பரங்களிலிருந்தும், சக்ஸஸ் பார்டியிலிருந்து காப்பாற்றும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Better Call Saul
படங்களுக்கு பார்ட் ஒன், டூ என சீக்யூல் வந்த காலம் போய் ஃப்ரீக்யூல், அதாவது வந்த பாகங்களுக்கு எல்லாம் முன்னம் நடந்த கதை என்று படங்கள் வந்து கொண்டிருந்த வழக்கம் தற்போது சீரியல்களுக்கும் எக்ஸ்டெண்ட் ஆகியிருக்கிறது. ப்ரேக்கிங் பேட் சீரியலில் வரும் பிரபல கேரக்டரான “சால் குட்மேன்” கேரக்டரை வைத்து எடுக்கப்பட்ட ஃப்ரீக்யூல் தான் இந்த பெட்டர் கால் சால். ஜிம்மி ”மெக்கில்” லாக பாப் ஓடன்கிரிக்.  ப்ரேக்கிங் பேடில் வரும் உட்டாலக்கடி க்ரிமினலான கிரிமினல் லாயராய் வந்து எல்லார் மனதையும் கவர்ந்த  கேரக்டரின்  முன் கதை தான். ப்ரேகிங் பேடில் வரும்  சால் குட்மேனாய் இல்லாமல் ஜிம்மி மெக்கிலாய் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற வெறியுடன், கரஸில் வக்கீலுக்கு படித்துவிட்டு, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற ரீதியில் வளையவரும் தொண, தொண, வளவள, எதையும் குறுக்கு வழியிலேயே யோசிக்கும், ஸ்மார்ட் வக்கீலான இவருக்கும், ஒரு பெரிய லா ஃபர்மிற்கு பார்ட்னராய் இருக்கும் அவரது அண்ணனுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டி, பாசப் போராட்டம். அண்ணன் மெக்கில் தன் தம்பியின் வளர்ச்சிக்காக தன் ஈகோவை விட்டுக் கொடுக்காதவர். தீடீரென வெய்யில், எலக்ட்ரானிக், மற்றும் எலக்ட்ரிக்கல் உபகரணங்களால் ஏற்படும் அலைவரிசைகளினால் உடல் பாதிப்பு அடையும் வியாதி அவருக்கு. இருட்டிலேயே பெரும்பாலும் வாழும் அவர் தனக்கு உபத்திரவமாய் இருந்தாலும், அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனிருந்து உதவும் பாசக்கார தம்பியாகவும் இருக்கிறான் மெக்கில். தன் முயற்சியில் ஒர் பெரும் கேஸை மெக்கில் கொண்டு வர, அதன் பின் நடக்கும் விஷயங்கள், அண்ணன் தம்பியினிடையே நடக்கும் துரோகங்கள் என கதை போகிறது. ப்ரேக்கிங் பேடில் வரும் முக்கிய கேரக்டரான எர்மேண்ட்டையும், போதை பொருள் தாதா டூடோ, அவருடய மாமா கேரக்டர்கள் மட்டுமே இதுவரை இந்த இரண்டு சீசன்களில் இணைந்திருக்கிறர்கள். ஏப்ரலில் மூன்றாவது சீசன்.  பார்ப்போம் மெக்கில் சால் குட்மேனாகி, நிஜ கிரிமினலாய் மாறி நிற்கும் மூன்றாவது சீசனுக்காக ஐயாம் வெயிட்டிங்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ரங்கபுரவிஹாரா – அகம் பேண்ட்

மியூசிக் மோஜோ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், இண்டிபெண்டண்ட் மீயூசிக், பேண்ட்கள் அனைவருக்குமான டார்கெட் நிகழ்ச்சி. மியூசிக்மோஜோவின் வீடியோக்கள் மூலம் பிரபலமான இசைக்கலைஞர்கள் பலர். சமீபத்தில் உறியடி படத்தில் வரும் “காந்தா” என்கிற பாடல் கூட மசாலா காஃபி எனும் பேண்ட் பாடி மியூசிக் மோஜோ, கப்பாடிவி போன்ற சேனல்களின் மூலம் பிரபலமாகி, தமிழ் வர்ஷன் வரும் அளவிற்கு புகழ் பெற்றார்கள். நம்மூர் ஷான் ரோல்டனின் “மயக்குற பூ வாசம்” பாடலும் அப்படி புகழ் பெற்ற ஒன்று தான். அந்த வகையில் சமீபத்தில் அகம் எனும் பேண்ட் எம்.எஸ்.சுப்புலஷ்மியின் ‘ரங்கபுரவிஹாராவை” பேண்ட் வர்ஷனாக்கி ஹிட்டடித்தார்கள். இந்த இளைஞர்களின் பெரிய பலம் நம் கர்நாடக இசையை மேற்கத்திய இசையோடு ஃப்யூஷனில் அற்புதமாக கொடுக்கும் திறன். பாடும் பாடகர்களின் குரல் வலம். இந்த ரங்கபுரவிஹாராவை பாடும் ஹரிஷ் சிவராமகிருஷ்ணனின் குரலை கேளுங்கள். வாவ்.. ஒர் இனிய அனுபவம். https://www.youtube.com/watch?v=c3O0PhhD6B4

Post a Comment

1 comment:

Unknown said...

"நல்ல திரையங்கில் படம் பார்க்க 120 கொடுக்க தயங்காத, மக்கள், கொஞ்சம் கூட தரமேயில்லாத அரங்கிலும் அதே 120 ரூபாயை கொடுக்க வேண்டிய கட்டாயம்" 100% true i went to kalaiarangam in Trichy, ticket was 150 rs. There I decided not to see any movie in tamil nadu.
In Hydrabad Baghubali ticket cost rd 80 only....