Thottal Thodarum

May 31, 2017

கொத்து பரோட்டா -2.0-28

கொத்து பரோட்டா -2.0-28
எஸ்.பி.பி  v/s இளையராஜா
எஸ்.பி.பியின் வெளிநாட்டு கச்சேரியில் தன்னுடய பாடல்களை அனுமதியில்லாமல் பாடக்கூடாது என்று இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் என்றதும் இணையமெங்கும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கோஷங்கள் முழங்க ஆரம்பித்துவிட்டது.  சொல்லப் போனால் காப்பிரைட் சட்டப்படி அவர் கேட்டதில் ஏதும் தப்பேயில்லை. ஒரு இசையமைப்பாளராய் அதன் உரிமை முழுவதும் அவர் வைத்திருக்கும் பட்சத்தில் அது சரியே. ஆனால் நெடுநாள் நண்பர்களான எஸ்.பி.பிக்கே வக்கீல் நோட்டீஸ் அனுப்பும் அளவிற்கு என்ன பிரச்சனை என்ற கேள்வி ஒரு புறம் எழுந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு இந்த காப்பிரைட் பற்றிய அறிவு கிடையாது என்பதே உண்மை. 

முன்பெல்லாம் தயாரிப்பாளருக்குத்தான் எல்லா உரிமையும் இருந்தது. என்றைக்கு பெயருக்குப் பின்னால் தயாரிப்பாளர்கள் ஓட ஆர்மபித்தார்களோ அன்றைக்கு வந்தது அவர்களுக்கு ஆப்பு. இளையராஜா உட்பட பல பெரும் ஜாம்பவான்கள் தங்களது வேலைப் பார்க்கும் படங்களுக்கு சம்பளத்தில் தான் வேலை பார்த்து வந்தார்கள். பின்னாளில் ராயல்டி, டிஜிட்டல் உரிமை என பல விஷயங்கள் வளர, வளர சம்பளம் படத்திற்கு  வேலை  செய்ய மட்டுமே மற்றபடி பாடல்களுக்கான அத்தனை உரிமையையும் எனக்கே என்கிற ஒப்பந்தமிட்டால் தான் இசை என்றாகிப் போய் பெரிய இசையமப்பாளார்கள் அம்மாதிரியான ஒப்பந்தங்களையே இடுகின்றனர்.

அதன் படி, திரைப்பட பாடல்களை விற்கும் உரிமையை தயாரிப்பாளர் இசை வெளியீட்டு கம்பெனிக்கு விற்றவுடன் அவருக்கும் பாடல்களுக்குமான உறவு முடிந்துவிடுகிறது. அதன் பிறகு உரிமை பெற்ற நிறுவனம் ரேடியோ, டிவி, ஹோட்டல், மீயூச் ஷோ, மெல்லிசை கச்சேரி என அத்தனைக்கு உரிமை பணம் பெற்று, அதன் மூலம் வரும் வருமானத்தில் இசையமைப்பாளர்களுக்கு, பாடலாசிரியர்களுக்கு, என ஒர் தொகையை பிரித்துக் கொடுக்கிறது. வருமானத்தில் 50 சதவிகிதம் தயாரிப்பாளர் அல்லது உரிமை பெற்ற நிறுவனம், 25 சதவிகிதம் இசையமைப்பாளர், 25 சதவிகிதம் பாடலாசிரியர்களுக்கு என பிரித்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் என்றைக்கு கணக்கு கொடுத்து என்னைக்கு வாங்குவது என்று யோசித்த இசையமைப்பாளர்கள்   தங்களது இசையமைப்பு வேலைக்கென சம்பளமாய் இல்லாமல், பேக்கேஜாய் ஒர் தொகை பேசி, பின்னணியிசையில் ஆரம்பித்து, பாடகர்கள், பாடலாசிரியர்கள் முதற்கொண்டு  அத்துனை பேரையும் அதனுள் கொண்டு வந்து இசையமைக்க  ஆரம்பித்தார்கள். அப்படத்தின் இசை உரிமையை தாங்களது பினாமி கம்பெனிக்கோ, அல்லது தங்களது பெயரிலேயே இசை நிறுவனம் ஒன்றை நிறுவி அதன் உரிமையை வாங்கிக் கொள்வது. அப்படி வாங்கிக் கொள்ளும் பட்சத்தில் காப்புரிமை சட்டத்தின் படியான அத்தனை வருமானமும் இசையமைப்பாளருக்கு வந்துவிடும். உரிமை பெற்ற நிறுவனமானது இசையமைப்பளர், பாடலாசிரியர், ஒர் குறிப்பிட்ட சதவிகித தொகை பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அல்லது பட வேண்டும்.  பாடலாசிரியர்கள் தங்களுக்கும் சதவிகிதம் வேண்டுமென ஜாவித் அக்தர், குல்சார் எல்லாம் சேர்ந்து சில வருடங்களுக்கு முன் போராட்டம் எல்லாம் நடத்தி, சட்டமே இயற்றி வெற்றி பெற்றார்கள். பாடகர்களும் தற்போது அதற்காக போராடி வருகின்ற நிலையில் வெற்றி கிடைத்தால் எனக்கும் எதிர்காலத்தில் ஒரே ஒரு படத்தில் பாட்டு பாடிய எனக்கும் ராயல்டி வர வாய்ப்பிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹோட்டல்களில் நடக்கும்  விழாக்களில் ஒலிபரப்பப்படும் பாடல்களுக்கு, மேடை கச்சேரிகளுக்கு, லிப்ட்டில் ஒலிக்கவிடும் இசைக்கு என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடத்திற்கும், ஏற்றார்ப் போல வருடாந்திர தொகை ஒன்றை The Indian Performing Rights Society Limited எனும் நிறுவனம் http://www.iprs.org/cms/  இந்த இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது. அதன் படி வசூலிக்கப்படும் தொகை யாருக்கு காப்புரிமை இருக்கிறதோ அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. உரிமை வேறு நிறுவனங்களிடம் இருக்கும் பட்சத்தில் அவர்களிடமிருந்து தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என அனைவருக்கும் பிரித்தளிக்கப்படும். ஆனால் பெரும்பாலான இசையமைப்பாளர்கள் தங்களது பெயரிலேயே ஒப்பந்தம் போட்டப்ப்ட்டு விடுவதால் அனைத்து தொகையையும் பிரித்துக் கொடுப்பதெல்லாம் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை பெரும்பாலான பெரிய இசையமைப்பளர்கள் அனைவரும் தெரிந்தே செய்கிறார்கள். 

இளையராஜாவுக்கும் எஸ்.பிபிக்குமான பிரச்சனை ஏன் பெரிதாகப் பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் அவர்களது நட்பு. அவ்வளவு நெருக்கமானவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் என்பது, அதுவும் அவரது நிகழ்ச்சி கடந்த வருடத்திலிருந்தே உலகலவில் நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில் ஆரம்பத்திலேயே பேசித் தீர்த்திருக்க வேண்டிய விஷயத்தை இப்படி சந்திக்கு கொண்டு வந்ததன் பின்னணி என்னவாக இருக்கும் என்பதுதான் காரணம்.

பைரஸி உச்சத்தில் தாண்டவமாடும் இந்நாட்களில் ஆடியோ உரிமை என்று பெரிய பணம் ஏதும் கிடைக்காத பட்சத்தில் எதற்கு சல்லீசு விலையில் ஆடியோவை விற்க வேண்டும் என்று முடிவு செய்த பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது  நிறுவனங்கள் பெயரிலேயே ஆடியோ கம்பெனி ஒன்றை ஆரம்பித்து காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் ஒரு படத்திற்கு மோஷன் பிக்சர்  டீசரில் ஆரம்பித்து ட்ரைலர், லிரிக் வீடியோ, பாடல்களின் வீடியோ வரை யூ ட்யூப்பில் கிடைக்கும் வருமானம், ரேடியோ, போன் காலர் ட்யூன் மற்றும் மற்ற காப்புரிமை உரிமைகள் மூலமாய் கிடைக்கும் பணம் என இப்படி செலவு செய்கிற பணத்தை திரும்ப எடுக்கவும்  மீண்டும் தயாரிப்பாளருக்கே உரிமை எனும் பவர் கிடைத்திருக்கிறது. என்ன இவையனைத்து கொஞ்சம் வியாபாரம் தெரிந்த, ப்ராண்டட் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே  கிடைத்திருக்கிறது.   காப்புரிமை சட்டப்படி அவரவர்களுக்கான உரிமை மற்றும் வருமானத்தை பேணுவதற்காக  போராடுவது சரியே. இந்தியாவை பொறுத்த வரை ஆச்சர்யமாக இருக்கலாம் ஆனால் உலக அளவில் இவைதான் சரியான முறை. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Vaangavetti
தடால் புடால் டிவிட்டர் ஸ்டேட்மெட்டுகள் போல தட,தட, விறு விறு, கேங்ஸ்டர் படங்களுக்கும் பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. ஷிவா, சத்யா, கம்பெனி, டி, சர்கார், என கேங்ஸ்டர் கதைகளை ரத்தமும், சதையுமாய், பொங்கி வழியும் வயலென்ஸோடு இவர் சொல்லும் விதமே அலாதி. சமீபகாலமாய் பெரிதாய் ஹிட் ஏதுமில்லாவிட்டாலும் வீரப்பன், அது இது என படமெடுத்து கொண்டுதானிருக்கிறார். சமீபத்தில் இதுதான் என் கடைசி தெலுங்கு படம் என்ற தடாலடி ஸ்டேட்மெண்டோடு வெளியான படம் தான் இது.

1970களில் விஜயவாடா நகரையே கிடுகிடுக்க வைத்த பஸ்ஸ்டாண்ட் ராதா எனும் வங்கவீதி ராதா, ரங்கா சகோதரர்களைப் பற்றிய கதை.  கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான வெங்கட ரத்னத்தின் அடியாளாய் பெரிய அளவிற்கு வளர்ந்து பின்னொரு நாளில் பிரச்சனை காரணமாய் வெங்கட ரத்னத்தை ராதாவே கொல்கிறான். க்ரூப் பிரச்சனையில் ராதா கொல்லப்பட, அவனது தம்பியான ரங்கா தலைமை பொறுப்புக்கு வருகிறான்.  அண்ணனைவிட பவர்புல்லான ரவுடியாய் வலம் வரும் நேரத்தில் இரண்டு ஸ்டூடண்ட் யூனியன் மாணவர்கள் மூலம்  காலேஜ் பாலிடிக்ஸில் நுழைந்து, மெல்ல அரசியல் கட்சி தலைவனாகிறான். தலைமை பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் தலைவராகவும், ரங்காவில் ரைட், லெப்டாக வலம் வந்த காந்தி, நேரு இருவரில் காந்தி கொல்லப்பட, மீண்டும் ரங்காவின்  பவர் ஆட்டம் கொடுக்கிறது. 

தெலுங்கு தேசம் என்.டி.ஆர் கட்சியில் சேர்ந்து காந்தியின் தம்பி நேரு  எம்.எல்.ஏ ஆகிறான். ரங்கா காங்கிரஸில்  பவர் பாலிடிக்ஸும், ஜாதி பாலிடிக்ஸும் வெறி கொண்டு இருபக்கத்திலும் ஆட, ரங்காவை கொல்ல நினைக்கும் காந்தி, நேருவின் கடைசி தம்பியும் ரங்காவால் கொல்லப்படுகிறான். ரங்காவை எப்படி கொல்லப்படுகிறான் என்பதும், அதை ப்ளான் செய்யும் காட்சிகளும் திக் திக் நிமிடங்கள். 

படம் நெடுக, ரத்தம் ஆறாய் ஓடுகிறது, நிஜமாகவே நடந்த கதை என்பதால் இம்மாதிரியான படங்களில் கற்பனை சம்பவங்களுக்கு இடமளிக்காததால் கொஞ்சம் சவசவவென காட்சிகள் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.   அது மட்டுமில்லாமல்  இம்மாதிரியான படங்கள் அதிகமாய் பார்த்து பழகி போனதால் படத்தில் வரும் ட்விஸ்ட் எல்லாம் அதிரடியாய் இல்லாமல் இருப்பதும்  ஒர் காரணம்.

இப்படம் வெளியான போது ரங்கா குடும்பத்தினர் வர்மாவிடம் பஞ்சாயத்து செய்த்தாக சொன்னார்கள். கம்மா நாயுடு பார்டியான என்.டி.ஆரின் தெலுங்கு தேசத்திற்கும் கப்பு பிரிவினரான ரங்காவிற்குமிடையே ஆன ஜாதி சார்ந்த அரசியல் மிக அழகாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற லாவகம், ஆக்‌ஷன் காட்சிகளில் இருக்கும் வன்மம். அரசியலை நேரிடையாய் சொல்லக்கூடிய தைரியமும் வாய்ப்பும் தெலுங்கு படங்களில் மட்டுமே உள்ள சுதந்திரம். அதை மிக அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராம்கோபால் வர்மா.  என்னதான் சிறப்பாக கையாண்டு இருந்தாலும், இதற்கு முன் வந்த இவரது படங்களில் இருக்கும் பதைபதைப்பும் விறுவிறுப்பும் ஒரு மாற்று கம்மிதான்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் – அந்தரங்கம்
ரொம்பவும் சிம்பிளான மாமியார் மருமகள் பிரச்சனைக் கதைதான். அதை சொன்ன விதத்தில்தான் இக்குறும்படம் தனித்து இருக்கிறது. வழக்கம் போல புது மருமகளை தன் கால் கட்டைவிரலுக்கடியில் வைக்க ஆசைப்படும் மாமியார். வேறு வழியேயில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மருமகள். இருவருக்கும் சுத்தமாய் ஒத்தே வருவதில்லை. டிவி சிரீயல் உட்பட. மருமகளுக்கு ஹிந்தி டப்பிங் என்றால் மாமியாருக்கு சன் டிவி. வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் லீக்கேஜ் இருக்கிறதா என்று பார்க்க ஒருவன் வருகிறான் அவன் திருடன். மாமியாரை அடித்துவிட்டு நகைகளை கொள்ளையடிக்கிறான். ஏற்கனவே ஆறு கொலை செய்தவன் நீங்கள் ஒத்துவராவிட்டல் இருவரையும் கொன்றுவிடுவேன் என்று மருமகள மிரட்டுகிறான். அப்போது மருமகள் தன் மாமியாரை கொன்றுவிட்டால் உனக்கு மேலும் நகைகளை தருகிறேன் என்று கோரிக்கை வைக்கிறாள். க்ளைமேக்ஸ் படு சுவாரஸ்யம். மருமகளாய் மிஷா கோஷல், மாமியாராய் ஸ்ரீபிரியா. இருவரின் நடிப்பும் அட்டகாசம்.மிகச் சின்ன கருவை வைத்து சுவாரஸ்யமான குறும்படத்தை அளித்தவர் மணிகண்டன். பி. https://www.youtube.com/watch?v=8vSvWjhjnso



Post a Comment

1 comment:

ராஜி said...

கொத்து பரோட்டோ ருசித்ததுண்ணே