Thottal Thodarum

Jun 29, 2017

கொத்து பரோட்டா -2.0-31

கொத்து பரோட்டா 2.0-31
காற்றில்லாமல் புழுங்கியபடி இருக்கும் தமிழ் சினிமா உலகிற்கு புத்துணர்ச்சி கொண்டு வருவதாய் உறுதியிட்டு பதவியேற்றிருக்கும் புதிய தலைவர்களுக்கு ஒர் வேண்டுகோள், பைரஸி, அதிக படங்கள், திரையரங்கு கட்டணம், என ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கிடையே முக்கியமாய் பார்க்க வேண்டிய ஒன்று டிஜிட்டல் சினிமா. இனிமேல் நெகட்டிவ் வேண்டாம் டிஜிட்டலில் படமெடுத்தால் படப்பிடிப்பின் செலவில் பாதி குறைந்துவிடும் என்று அதை ப்ரொமோட் செய்தார்கள். படமெடுக்க மட்டுமல்ல இனி படத்தை ஒளிபரப்ப டிஜிட்டல் முறை ஒரு ப்ரிண்டுக்கு அன்றைய தொகை சுமார் அறுபதாயிரம். டி.டிஎஸ் ராயல்டியோடு. அதற்கு பதிலாய் திரையரங்கில் டிஜிட்டல் ப்ரொஜக்டரை வைத்துவிட்டு, டிஜிட்டல் மூலம் ஒளிபரப்பினால் வெறும் ஏழாயிரம் ரூபாய் தான் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் க்யூப் நிறுவனம். அட பரவாயில்லையே ஒரு பிரிண்ட் அறுபதாயிரத்துக்கு பதிலாய் ஏழாயிரத்து சில்லறையில் புத்தம் புதிய ப்ரிண்டாய் நூறு நாட்கள் ஓடுமே என்று தயாரிப்பாளர்களும் ஆதரிக்க, டிஜிட்டல் படப்பிடிப்பும், ப்ரொஜக்‌ஷனுக்கும் டிமாண்ட் வர, அதை திரையரங்குகளில் விதவிதமான வகைகளில் சுலப தவணை, விளம்ப்ர வருவாயில் எடுத்துக் கொள்கிறோம் என்று மார்கெட் செய்யப்பட்டு இன்றைக்கு பிலிமில் படம் காட்டும் ப்ரொஜெக்டர் காட்சிப் பொருளாய் வைக்கப்பட்டிருக்கிற நிலையில்.

ஆனால் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஆரம்பிக்கப்பட்ட க்யூபின் கட்டணம் இன்று பல மடங்கு பெருகி விட்டது. அன்றைய நிலையில் தமிழ் நாட்டில் இருந்த பத்து சதவிகித திரையரங்கு கூட இல்லாத நிலைக்கான விலை. ஆனால் இன்றோ சுமார் எழுபது சதவிகிதம் திரையரங்குகளை தங்கள் வசம் வைத்திருக்கும் அந்த நிறுவனம் வாங்கும் தொகை மிக அதிகம். நெட்வொர்க்குகளை பொறுத்தவரை அதிக வாடிக்கையாளர் வர, வர, தொகை குறைய ஆர்மபிக்கும். ஆனால் இங்கே அப்படியே தலை கீழ். ஒரு வாரத்துக்கு இப்போது ஒரு படம் ஒரு ஷோ ஓடினாலும், சரி வாரம் ஓடினாலும் சரி.. ஒன் கே ப்ரொஜக்‌ஷனுக்கு பத்தாயிரம் சில்லரை. அதிலும் மல்டிப்ளெக்ஸ் போன்ற அரங்குகளில் 2கே அதற்கு இருபதாயிரத்து சில்லரை. 4 கே என்றால் அதன் விலை அதிகம். க்யூப்பிற்க்கு போட்டியாய் யூ.எப்.ஓ, பி.எக்ஸ்.டி, ஸ்கிராம்பிள், சோனி, போன்ற நிறுவனங்கள் வந்தாலும் விலை என்னவோ க்யூபைப் போலத்தான்.
கணக்குப் போட்டு பார்த்தால் நூறு திரையரங்குக்கு பத்தாயிரம் வீதம் ப்ரிண்டுக்கு வாரம் பத்தாயிரம் என்று கணக்கு வைத்துக் கொண்டால் பத்து லட்சம் ஆகிறது. இதில் 2கே, 4 கே எல்லாம் தனி. பல சிறு முதலீட்டு படங்களுக்கு க்யூப்பிற்க்கு கட்டிய பணம் கூட வசூலாவதில்லை என்பது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் அதே படம் அடுத்த வாரம் அத்தனை திரையரன்க்குகளில் ஓட வேண்டுமென்றால் கிட்டதட்ட அதே பத்து லட்சம் அவிழ்க்க வேண்டும். மூன்றாவது நான்காவது வாரம் முதல் வாடகை குறைவு தான் என்றாலும் இப்போதெல்லாம் நான்காவது வாரம் படம் ஓடுவது என்பதெல்லாம் பெரும் கொண்ட கனவாகிவிட்ட நிலையில் இருக்கிறது தமிழ் சினிமா.

ஒரு திரைப்படத்திற்கு போடப்பட்ட ஒரு ப்ரிண்டை வைத்து மூன்று தியேட்டர்கள் படம் ஓட்டிய காலமெல்லாம் உண்டு. உதாரணமாய் உதயத்தில் 11 மணிக் காட்சி என்றால், முதல் ரீல் முடிந்தவுடன் ரூட்டிங் வண்டியில் பக்கத்து சாலிகிராமம் தியேட்டருக்கு 11.30 பின்பு அதே ப்ரிண்ட் 12 நேஷனலில் திரையிடப்பட்ட காலமெல்லாம் உண்டு. ப்ரிண்ட் செலவு அதிக பட்சம் 60 ஆயிரம் ரூபாய். ரூட்டிங் அடிப்பவருக்கான போக்குவரத்து சம்பளம் என்பது அன்றைய கால சம்பளம் குறைவு தான்.  இந்த மூன்று தியேட்டருக்கும் அவர் அவர் பிரிண்டுக்காக செலவு செய்யும் தொகை அறுபதாயிரமும் வேலையாள் சம்பளமும் தான். பின்பு படம் ஓடிய பின் மற்ற சின்ன ஊர்களுக்கு பிரிண்ட் கொண்டு போகப்படும். ஆனால் அதே டிஜிட்டல் திரை என்றாகும் போது மூன்று தியேட்டருக்கும் வாரம் பத்தாயிரம் வீதம் முப்பதாயிரம். ரெண்டாவது வாரம் மீண்டும் அதே தொகை. பின்பு நமக்கான ப்ரிண்ட் என்பது கிடையாது அப்படி நமக்கே நமக்கென வேண்டுமானால் இருபதாயிரம் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும்.  இன்றைக்கு ஒரே மாலில் ஒரு ஸ்கிரினிலிருந்து இன்னொரு ஸ்கிரீனுக்கு மாற்றுவதற்கு கூட தனி கூலி. இந்த செலவையெல்லாம் பார்க்கும் போது ஒரு பெட்டிய வைத்து மூன்று தியேட்டர்களுக்கு ரூட் அடிக்கும் செலவை விட, அதிக திரையரங்களில் வெளியிட்டு, அதிக பணம் செலவு செய்து ப்ரிண்ட் செலவு கூட எடுக்க முடியாத நிலையில் இன்றைய தயாரிப்பாளர்கள் தள்ளிவிடப் பட்டிருக்கிறார்கள்.

பல சிற்றூர்களில் ஏன் நம் சென்னை போன்ற நகரில் உள்ள சிங்கிள் ஸ்கீரின் அரங்குகளில் என்ன தான் டிஜிட்டல் போட்டாலும் கருகும்மெனதான் படம் தெரியும் காரணம் ப்ரொஜக்‌ஷனுக்கான பல்பை கூட மாற்றாமல் ஒட்ட ஒட்ட ஓட்டும் தியேட்டர் சிகாமணிகள். மல்ட்டிப்ளெக்ஸுகளிலேயே சத்யம் ஒருவிதமாகவும், ஐநாக்ஸ் ஒரு விதமாகவும், பிவி.ஆர் ஒருவிதமாகவும் இருக்கும் இப்படி பல விஷயங்களில் டிஜிட்டலின் தரம் பல விதங்களில் இருக்க, இவர்களின் கட்டணம் ஒரே விதமாய் ஒருமித்த தொகையாய் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் மிக முக்கியமாய் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இந்த டிஜிட்டல் ப்ரொஜெக்‌ஷனுக்கான பணம் அதன் விலை குறைப்பு. இப்போது வாங்கும் விலையில் 50 சதமாவது குறைத்தால் தான் தயாரிப்பாளர்களின் சுமை குறையும். குறைக்கப்பட வேண்டும்.
@@@@@@@@@@@@@@@
தமிழ் சினிமா தன் நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவைப் பற்றிய ஆவணப்பட வெளியீட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இவர்கள் இருவரும் நாற்பது வருடங்களுக்கு மேலாய் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்கள், நடிகர் திலகம் சிவாஜி, சிவகுமார், லஷ்மி, எம்.எம்.ராஜன் என பல பேரை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியவர்கள். ரத்தக்கண்ணீர், பராசக்தி, உயர்ந்த மனிதன் என புகழ் பெற்ற படங்களின் இயக்குனர்கள். நாற்பது வருடங்களுக்கு மேல் 54 படங்களை இணைந்தே இயக்கியவர்க்ள். நான்கைந்து தேசிய விருது படங்களை இயக்கியவர்கள் என இவர்கள் இருவரும் இணைந்து சாதித்திருக்கும் சாதனைகள் ஏராளம்.

ஆவணப்படம் முழுக்க இவர்களால் அறிமுகப்படுத்தப்ட்ட நடிகர்கள், டெக்னீஷியன்கள், இவர்களின் பெரும்பாலான படங்களின் தயாரிப்பாளர்களான ஏவிஎம். குடும்பத்தினர் ஆகியோர இந்த இரட்டையர்களைப் பற்றி வெளிப்படுத்தும் நிகழ்வுகள், எம்.ஜி.ஆர் சரோஜாதேவியுடனான சண்டைக்கு நடுவில் அவர்களிடம் நடிப்பை வாங்கியது எப்படி? உயர்ந்த மனிதன் படத்தில் அசோகன், சிவாஜி இருவருக்கிடையே மன வேறுபாடு இருந்த காலத்தில் எப்படி அவர்களை சமாளித்தார் என்பது போன்ற நிகழ்வுகள் சுவாரஸ்யமென்றால்,  அவர்களின் கேரக்டர்கள் அதை விட சுவாரஸ்யம். எப்படி? எதனால் இவர்கள் இருவரும் இணைந்தார்கள் என்பதும், எப்படி வேலைகளை பிரித்துக் கொண்டார்கள். இவர்களிடையே ஈகோ இல்லாமல் இத்தனை வெற்றிப் படைப்புகளை அளித்து எப்படி என பல தகவல்கள் விரவியிருக்கிறது.


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தை பார்த்து முடித்தபின் வந்திருந்த விருந்தினர்கள் முதல் படம் பார்த்த சினிமா ஆர்வலர்கள் பலரும் எமோஷனலாகி விட்டார்கள். ஒர் இயக்குனராய் இவர்களின் சாதனைகளை கண்டு நானும் எமோஷனலாது தான் உண்மை. எப்பேர்பட்ட படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய ஜாம்பவான்களுடன் பயணித்திருக்கிறார்கள். ஒரு படத்தை இயக்கி எடுத்து முடித்து வெளியிடவே நாக்கு தள்ளிப்போகும் தற்போதைய சூழ்நிலையில், ஹிந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள். இவர்களின் படைப்புகளைப் பற்றி, ஆளுமை, செயல்திறன், அவர்களின் வெற்றி, தோல்வி, வாழ்க்கையைப் பற்றி  இன்றைய  இளைய சமுதாயத்திற்கு எடுத்து சொல்லப்பட, ஆவணப்படுத்தபட வேண்டியது மிக அவசியம். அதை சிறப்பாக செய்திருக்கும் இதன் இயக்குனர் தனஞ்செயனுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். நியாயமாய் இயக்குனர் சங்கமோ அல்லது திரைதுறை சார்ந்த ஏதாவது ஒர் சங்கம்  முன் வந்து  ஆவணப்படுத்த வேண்டியதை கிருஷ்ணன் பஞ்சு குடும்பத்தினர் இணைந்து தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். கொண்டாடப்பட வேண்டியவர்களை கொண்டாடி தீர்ப்பது நம் கடமை.

Post a Comment

1 comment:

ஆரூர் பாஸ்கர் said...

ஆவணப்படம் - சின்னத்திரை வாயிலாக வியாபாரமாக வாய்ப்புள்ளதே ??