டாஸ்மாக் சந்திப்புகள்
இரவு
எட்டு மணியிருக்கும். எதிரே வரும் ஆள் தெரியக்கூடிய வெளிச்சம் ரோட்டில் இருந்தது. கால்
டாக்ஸிக்காக காத்திருந்தேன். தாகமாய் இருக்க, எதிர்பக்கம் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று
மோர் ஒன்றை குடித்துவிட்டு, மீண்டும் என் இடத்துக்கு வந்து கொண்டிருந்தேன். எனக்கு
நேர் எதிரே கரு கும்மென்ற ஒருவர். என் மேல் மோதி விடுவது போல வந்து நான் போகவா.. நீ
போறியா என்பது போல கீழ் பார்வை பார்த்தார். மூச்சில் டாஸ்மாக் மணத்தது. நான் கொஞ்சம்
வழி விட்டு, ”போங்கண்ணே..” என்றேன். ”என்ன போங்கண்ணே… ஒழுங்கா ரோட்டுல நடக்கக்கூட தெரியாதா?’
என்றவர் கொஞ்சம் தூரம் நடந்து திரும்பிப் பார்த்து, ”ஒழுங்கு மரியாதையா போ.” என்றார்.
காண்டாகிப் போன நான் “எல்லாம் எனக்கு தெரியும் போய்யா” என்றேன். வேகமாய் வருவதாய் நினைத்து,
இரண்டடியை இடதும் வலதுமாய் நடந்து தேவர் மகன் நாசர் போல என் முகத்துக்கு அருகில் அவர்
முகத்தை வைத்து “யாரைப் பார்த்து போய்யாண்ணே?’.த்தா.. கொன்ருவேன்”. எனக்கு அவரின் மூச்சும் பேச்சும் அசூசையை வரவழைக்க,
முகத்தை அந்த பக்கமாய் திருப்பிவிட்டு, “ரொம்ப நாறுதுன்ணே கிளம்புங்க” என்றேன். விருட்டென
திரும்பவும் என் முகத்துக்கருகே வர நினைத்து ஓவராய் திரும்பி விட, போர்ஸ் அதிகமாகி,
இடப்புறமாய் ஒரு திருகு திருகி, மீண்டும் ஒர் நிலைக்கு வருவதற்குள் நான் பத்தடி நடந்துவிட்டேன். “என்னைப் பார்த்தா
போய்யாண்ணே.. நான் யாருன்னு தெரியாது.” “சரிண்ணே போண்ணே..” என்றதும் ஏதுவும் பதில்
சொல்ல முடியாமல வார்த்தைகளுக்கு போராடி, “போடா கண்ணாடி” என்றார் தன் கண்ணாடியை சரிப்
படுத்திக் கொண்டே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Black Mirror –
NoseDive
லைக்ஸும்,
ரீட்வீட்டும் தான் அங்கீகாரமாக கருதும் இளைஞர்களின் காலமிது. இந்த அங்கீகாரத்துக்காக,
அபாயகரமான இடத்தில் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதிலிருந்து பல வேலைகள் செய்து, லைக்
வாங்கி வாழ்ந்தவரும் உண்டு, லைக்குக்காக செத்தவரும் உண்டு. இந்த மேனியா தொடரும் பட்சத்தில்
எதிர்காலத்தில் இந்த ”நோஸ் டைவ்” படத்தில் வருவது போல் தான் ஆகும். மற்றவர்கள் உங்களை
எப்படி மதிக்கிறார்கள் என்பதை தங்களது மொபைல் போனிலிருந்து உங்களுக்கு ஸ்டார் கொடுப்பார்கள்.
நான்குக்கு மேல் ஸ்டார் வாங்கியவர்கள் தங்களது ஸ்டார் ஸ்டேடஸை தக்க வைத்துக் கொள்ள
போராட வேண்டும். மற்றவர் உங்களுக்கு கொடுக்கும்
ஸ்டார் ரேட்டிங் தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் எனும் போது
அதை பெறுவதற்கான பிரயத்தனங்களுக்காக நாம் நாமாக இல்லாமல் நடிக்க ஆரம்பிக்கிறோம். இந்த
கதையின் நாயகி லையிஸ் தான் எப்படியாவது ஐந்து ஸ்டார் வாங்கி எலைட் ஆனவாளாய் ஆகிவிட
வேண்டுமென்று அலைபவள். அவளுடய சிறு வயது தோழியின் திருமணத்திற்கு அவளை தோழியாய் அழைக்கிறாள்.
அந்த திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் அனைவரும் நான்கு அல்லது அதற்கு மேல் ஸ்டார்
ரேட்டிங் எடுத்தவர்கள் தான் என்கிறாள். தன் தோழியின் திருமணத்திற்கு தோழியாய் சென்று
மேலும் ஸ்டார்களை பெற்று புகழ் பெற நினைக்கிறால் லையிஸ். ஆனால் அவள் திருமணத்திற்கு
கிளம்ப ஆரம்பித்த்திலிருந்து பல பிரச்சனைகள். ஒன்றன்பின் ஒன்றாய். அந்த ப்ரஷரை தாங்க
முடியாமல் அவளின் ஒரிஜினல் குணம் வெளிவர, அவளது ஸ்டார் ரேட்டிங் குறைகிறது. பல போராட்டங்களுக்கு
பிறகு தோழியின் திருமணத்தை அடைகிறாள். ஆனால் அவளின் ரேட்டிங் ஒன்று வந்துவிட, தோழி
தயவு செய்து வராதே.. என் மானம் மரியாதை போய்விடுமென சொல்ல, சுவர் ஏறி குதிட்து செல்கிறாள் பின் என்ன ஆனது என்பதுதான் கதை. படம்
நெடுக ப்ளாக் ஹூயுமரும், சர்காஸமுமாய் கலந்து
கட்டி அடித்து ஆடியிருக்கிறார்கள். செம்ம வீஷுவல்ஸ். ஸ்டார் என்பது வாழ்க்கையல்ல
என்று சொல்லும் பெண் ட்ரக் ட்ரைவர் பாத்திரம் ஆசம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மே30
ஆம் தேதி முதல் தமிழ் சினிமா வழக்கம் போல்
இயங்குமா? என்கிற கேள்வி சினிமா சம்பந்தப்பட்டவர்கள்
முதல் சாதாரண ரசிகன் வரை எழுந்து கொண்டேயிருக்கிறது. மே கடைசி வாரத்தில் படம் ரிலீஸ் செய்தால் அடுத்த வாரம்
தியேட்டர்கள் இல்லாத பட்சத்தில் நஷ்டமடைவோமே? நல்ல காலத்திலேயே தியேட்டர் கிடைக்காமல்
அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரிலீஸே செய்யாவிட்டால் வட்டி யார் கட்டுவது என்பது
போன்ற கேள்விகள் தயாரிப்பாளர்கள் மத்தியில் என்றால், ஓடுகிற படங்களை என்ன செய்ய? தியேட்டருக்கான
இன்வெஸ்ட்மெண்ட், சம்பளம், வேலை வாய்ப்புகள், மற்ற மொழி படங்களின் நிலை என இன்னொரு
பக்கமிருக்க, ரிலீஸுக்கு தயாராய் இருக்கும் படங்கள் என்றில்லாமல் படப்பிடிப்பு நடந்து
கொண்டிருக்கும் பெரிய படத்திலிருந்து சின்ன படம் நிறுத்தப்பட வேண்டியிருந்தால் அதனால்
ஆகப் போகும் களேபரங்கள் என இன்னொரு பக்கம், இந்த பாகுபலியின் பேய் ஓட்டத்தினால் மற்ற பெரிய படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிப் போட்டிருக்கிறார்கள்..
எல்லாவற்றிக்கும் காரணம் பைரஸி, டிக்கெட் விலை, ஜி.எஸ்.டி டாக்ஸ் விலக்கு என பல்வேறு
கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் முன் வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்
பட்டிருக்கிறது. கோடை விடுமுறையை முன் வைத்து தங்கள் பெரிய படங்களை வெளியிட தயாராக
இருந்த பல படங்கள் காலவரையற்று தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் இந்த வேலை நிறுத்தம் சரிதானா? என்ற கேள்வியும் பல
தயாரிப்பாளர்களிடம் எழுந்திருக்கிறது. டிக்கெட் விலையேற்றம் குறித்த ஹைகோர்ட் தீர்ப்பை
விரைவில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருப்பதால் நிச்சயம் திரையரங்கு உரிமையாளர்களில்
பெரும்பாலானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்களா என்று சந்தேகமே. வரிவிலக்கு
என்ற ஒன்று ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படும் போது இல்லாது போகும். அப்படியிருக்க, பைரஸிக்காக
தனி உயர் அதிகாரி தலைமையில் தமிழகம் முழுவதும் ஒர் குழு அமைக்க வேண்டுமெனில் அதற்குரிய செலவு என்று ஒன்றிருக்கிறது. இத்தனை நாட்களாய் கொடுக்கப்படாத
திரைப்பட மானியங்கள் கொடுக்கப்பட அரசின் நிதி நிலை எப்படி இருக்கிறதோ? தமிழில் பெயர் வைத்தால், யு சர்டிபிகேட் வாங்கி
அரசின் வரி விலக்கு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டால் வரியே இல்லாமல் வருமானம் தமிழ்
சினிமா தயாரிப்பாளர்களுக்கு போகும் என்கிற நிலையில் ஜி.எஸ்.டி அமலாகும் போது, அது வருமானமாக மாறும். பெரும்பாலான படங்களின் தோல்வி, தியேட்டர் வருமானம்
போதவில்லை எனும் போதே எங்கே பார்த்தாலும் நூறு கோடி, இருநூறு கோடி என அறிவித்துக் கொண்டிருப்பதை
பார்த்து “காசே வரல எல்லாமே தோல்வி எனும் போது
இந்த குறைந்த அனுமதித் தொகையில் இத்தனை கோடி எப்படி வசூல் ஆனது என்று சொல்கிறார்கள்?
என்று கேட்கின்றனர். வரி விலக்குக்காக தயாரிப்பாளர்களிடமிருந்து
தனியே வருமானம் பார்த்ததும் இந்த ஜி/எஸ்.டியால் காலியாகும் பட்சத்தில், தமிழ் சினிமாவினால்
நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ வருமானம் இல்லை எனும் போது அரசு எப்படி இவர்களின் பெரும்பாலான
கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
C.I.A (Commraade In
America)
இந்தியாவெங்கும்
பாகுபலியின் வெறி கொண்ட ஓட்டம் அத்தனை மொழிகளீலும் தம் தம் படங்களை வெளியிட யோசித்துக்
கொண்டிருக்கும் நேரத்தில் மலையாளத்தில் துல்கர் சல்மானின் இந்த சி.ஐ.ஏவின் வெளியீடு
ஒர் புரட்சிதான். பலேவில் ஒர் தீவிர கம்யூனிஸ்ட் தொண்டர் துல்கர். அவருடய அப்பா மலையாள
பட வழக்கம் போல கேரள காங்கிரஸ் ஆள். துல்கருக்கும் கார்த்திகாவுக்கும் காதல் அரும்ப,
ஒர் கட்டத்தில் கார்த்திகாவின் விட்டிற்கு தெரிந்து அவரை அமெரிக்காவுக்கு திரும்ப அனுப்பிவிடுகிறார்.
அவளது மாமா. எப்படியாவது வந்து என்னை அழைத்துக்
கொண்டு போ என்று கார்திகா அங்கிருந்து அழ, பாஸ்போர்ட் கூட இல்லாத துல்கர் என்ன செய்கிறார்
என்பதுதான் கதை. பாஸ்போர்ட் வாங்குவதில் ஆரம்பித்து, காதலுக்காக, மெக்ஸிக்கோ வழியாய்
இல்லீகலாய் அமெரிக்காவில் நுழைய முற்படுகிறார். அவர் அமெரிக்கா நுழைந்தாரா? காதலை வென்றாரா?
என்பது மீதிக் கதை. முதல் பாதி முழுவதும், உள்ளூரிலேயே காங்கிரஸையும், கம்யூனிஸ்டையும்
கிண்டலடித்து விளையாடுகிறார்கள். இம்மாதிரியான விஷயங்கள் ஆரம்ப காலத்தில் மலையாள படங்கள்
பார்க்கும் போது அட என ஆச்சர்யபடுத்தியவைகள். தற்போது க்ளீஷேவாகிக் கொண்டிருக்கிறது.கொஞ்சம்
ஆயாசமாகக்கூட இருக்கிறது. இரண்டாம் பாதியில் தமிழ் பேசும் டாக்சி ட்ரைவர். அதுவும்
இலங்கை தமிழர். வீட்டில் பிரபாகரனின் போட்டோவுக்கு குங்குமப் பொட்டு வைத்து வழிபட்டுக்
கொண்டிருப்பவர். போன்ற சில விஷயங்கள் அட போட வைத்தாலும், “நீங்க புலியா?” என்று துல்கர்
அவரைப் பார்த்து கேட்பதும், இலங்கை தமிழும் இல்லாமல், சாதா தமிழும் இல்லாமல் அவர் பேசும்
தமிழும் அவர் வாழ்க்கையை பற்றி பேசும் பல இடங்களில் அமெச்சூர் தனம். சீனன், மெக்ஸிக்கன் குடும்பம், சம்பந்தமேயில்லாம
ஒர் மலையாளிப் பெண், பாகிஸ்தான் முஸ்ஸிமுடன் மெக்ஸிகோவுக்கு பயணப்படும் இடத்திலிருந்து
படம் நொண்ட ஆரம்பிக்கிறது. கொஞ்சமும் நம்பகத்தன்மையில்லாத காட்சிகள். அமெச்சூர் தனமான
அமெரிக்க போலீஸ் காட்சிகள் என க்ளைமேக்ஸ் நெருங்கும் போது அட போங்கடா.. துல்கரின் நடிப்பும், கோபி சுந்தரின்
பின்னணியிசையும் மட்டுமே அறுதல்.. கம்யூனிசம் தோற்றது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Post a Comment
No comments:
Post a Comment