Thottal Thodarum

Aug 17, 2017

கொத்து பரோட்டா 2.0-39

கொத்து பரோட்டா 2.0-40
Play test – Black Mirror
கூப்பர் ஒரு அமெரிக்கன். உலகம் சுற்றும் வாலிபன்.  லண்டனில் சுற்றி வரும் போது சோஞ்சா எனும் டெக் ஜர்னலிஸ்டை சந்திக்கிறான். இருவரும் நெருக்கமாகிறார்கள். அன்றிரவை அவளுடன் கழிக்கிறான். அடுத்த நாள் தன் டூரை தொடர நினைக்கும் போது அவனுடய க்ரெடிட் கார்ட் நம்பர் திருடப்பட்டு, பயணத்திற்கு பணமில்லாமல் போகிறது. வேறு வழியில்லாமல் மீண்டும் சோஞ்சாவிடம் போய் உதவி கேட்க, “ஆட் ஜாப்” எனும் ஆப் மூலம் ஒரு பிரபல கேம் கம்பெனியின் விளையாட்டை டெஸ்ட் செய்யும் ஆளாய் போகிறான். அங்கே அவனுடய கழுத்துக்கு பின் ஒர் பட்டன் போன்ற ஒன்றை வைத்துவிட்டு, கிட்டத்தட்ட விர்சுவல் ரியாலிட்டி போன்ற ஒரு விளையாட்டை விளையாட சொல்கிறார்கள். அதில் அவன் தன் முடிவுகளை சொல்ல, இதனிடையில் அவனை அங்கே கூட்டிச் செல்லும் பெண் போனவுடன் அவனுடய செல் போனை அணைக்கச் சொல்கிறாள். விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன் அக்ரிமெண்ட் காப்பி எடுத்து வர அவள் போகின்ற நேரத்தில் கூப்பர் போனை ஆன் செய்து அந்த மெஷினின் படத்தை சோஞ்சாவுக்கு அனுப்புகிறான்.

முதல் ஆட்டத்தை முடித்தவுடன் அந்த கேம் கம்பெனியின் ஓனர் தங்களிடம் இன்னும் வெளியிடப்படாத பீட்டா கேம் ஒன்று உள்ளதாகவும். கொஞ்சம் அபாயகரமானதாக இருக்கும் எனவும். உயிருக்கு ஆபத்து இல்லை ஆனால் மனதிற்கு ஆபத்து. நீங்கள் டெஸ்ட் செய்ய விரும்பினால் நீங்கள் எதிர்பார்காத அளவுக்கான பணம் தருவதாகவும் சொல்ல, என்ன பெரிதாய் ஆட்டம் ஆடிவிடப் போகிறார்கள் என்று கூப்பர் ஓகே என்கிறான். அதன் பின்பு நடக்கும் விஷயங்கள் திடுக், திடுக் சமாச்சாரம். செம்ம சுவாரஸ்யம். க்ளைமேக்ஸ் அதை விட பெரிய ட்விஸ்ட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமாவிற்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க கோரிக்கை விடுத்திருந்த தமிழ் சினிமா குழுவினருக்கு 100 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு 18 சதவிகிதம் வரி என்றும் அதற்கு மேல் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகிதம் வரி என்ற அறிவிப்பு அஹா.. சூப்பர் என்று கொண்டாட முடியவில்லை. கிட்டத்தட்ட “செக்” வைத்த நிலை. அதிக வரி தமிழ் சினிமாவை அழித்துவிடும், ஹிந்தி படத்துக்கும் தமிழ் படத்துக்கும் ஒரே விதமான வரியா? என்றும் கேட்டுக் கொண்டிருந்தவர்களின் பிரச்சனைதான் என்ன? தமிழ் சினிமாவிற்கு ஏற்கனவே 30-15 சதவீத வரி இருக்கத்தானே செய்கிறது? என்ன தமிழக அரசு கொடுக்கும் வரி விலக்கு இனி இல்லை. அவ்வளவுதானே? அதற்காக கொடுக்கப்படும் மாமுல் தொகையை கணக்கிடப்படும் போது வாங்காமல் வரி கட்டுவதே உசிதமென பல சிறு, குறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் எண்ணம்.  காசு கொடுத்து வரிவிலக்கு வாங்கியாகிவிட்டதே என்ற ப்ரெஷரில் ஜூன் மாதம் ரிலீசாகும் சிறு முதலீட்டு படங்கள் வரிசைக் கட்டி நிற்கிறது. 

இனி வரும் காலங்கள் மல்ட்டிப்ளெக்ஸை விட சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களுக்கு நல்லது என்ற ஒரு “டாக்”  தற்போது சினிமா ஆட்களிடம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏன் மல்ட்டிப்ளெக்ஸின் டிக்கெட் ரேட்டையும் நூறு ரூபாய்க்கு  கொண்டு வரக் கூடாது என்றும் ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி நூறு ரூபாய் ஆக்கும் பட்சத்தில் முன்பிருக்கும் 120 ரூபாய்க்கு பதிலாய் 118 தான் வரும். ரெண்டு ரூபாய் குறைவு என்கிறார்கள். போன வாரம் வரைக்கும் வார இறுதியில் எங்களுக்கு கட்டுப்படியாகிற விலையில் டிக்கெட் விலையை நிர்ணையிக்கும் உரிமையை தர வேண்டுமென்றவர்கள் இன்றைக்கு நூறு ரூபாய்க்குள் டிக்கெட் விலையை வைத்துக் கொள்ள வேண்டுமென்று விழைகிறார்கள் என்று புரியவில்லை. ஒரு பக்கம் டிக்கெட் விலையை ஏற்ற கோரிக்கை. அதே நேரத்தில் இன்னொரு பக்கம், தியேட்டர்காரர்கள் டிக்கெட் விலையை கொஞ்சம் அதிகப்படுத்தி தர மட்டுமே கோரிக்கை. காரணம் அரசு நிர்ணையித்துள்ள தொகைக்கு மேலே தான் ஆல்ரெடி வசூல் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் அரசு ஒரிஜினல் விலையில் இருந்து 50 சதவிகிதம் ஏற்றினால் கூட இன்றைக்கு வாங்கு ரேட் தான் வரும். எனவே கேட்டு பிரயோசனமில்லை என்பது புரிந்ததினால் தான்.

உதாரணமாய் மாநகராட்சி ஏரியாவில், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் 50 ரூபாய் தான் அதிக பட்ச விலை. சென்னையில் கேசினோ, ஏவிஎம்.ராஜேஸ்வரியை தவிர யார் இந்த தொகைக்கு டிக்கெட் விற்கிறார்கள்? என்பது அனைவரும் அறிந்ததே. அரசு விலை ஏற்றம் என்று அறிவிக்கும் பட்சத்தில் இனி 50 ரூபாய் இல்லை. 80-100 ரூபாய் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யும் பட்சத்தில் தியேட்டர்காரர்களுக்கோ, விநியோகஸ்தருக்கோ, தயாரிப்பாளருக்கோ எந்தவிதமான வசூல் உயர்வும் வரப் போவதில்லை. அதனால் தான் மெல்லிய கீச்சை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.

100 ரூபாய்க்குள் டிக்கெட் என்றால் 18 சதவிகிதம் வரி என்பது நிச்சயம் ஒரு நல்ல மூவ். மாநில அரசும் அஃபீஷியலாக டிக்கெட் விலையை 100க்கு கீழ் சிங்கிள் ஸ்கிரீனுக்கு உயர்த்திக் கொடுத்துவிட்டால் நிச்சயம் அதற்குரிய வரியோடு வசூல் செய்ய ஏதுவாக இருக்கும். அதே நேரத்தில் நிச்சயம் மல்ட்டிப்ளெக்ஸுக்கு கட்டுப்படியாகுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் தரும் வசதி அப்படி. ஜி.எஸ்.டி அமல் படுத்தப்படும் போது தற்போது உள்ளது போல, வரியுடன் டிக்கெட் விலை வசூலிக்கப்படுமா? அல்லது டிக்கெட் விலை மற்றும் வரியாய் வசூலிக்கப் போகிறார்களா? என்ற குழப்பமும் இந்த 100 ரூபாய்க்கு  18 சதவிகிதம் வரி எழுப்பியுள்ளது.  மந்திய மாநில அரசுகளின் உடனடி முடிவும், அறிவிப்பும் தான் நிறைய குழப்பங்களை தெளிய வைக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சன் நெக்ஸ்ட் என்ற ஒர் புதிய அறிவிப்பு தமிழ் இணையம் பயன்படுத்தும் பலரிடம் என்னது அது என்ற கேள்வியை எழுப்புயுள்ளது. சாதாரண டிவி பார்க்கும் மக்களுக்கு சன்னின் இன்னொரு சேனல் போல என்ன இன்னும் டிவியில வரவேயில்லையே? என்று குழப்பமும் ஏற்படுத்தியிருக்க, இண்டர்நெட் மூலம் மொபைலில், இணைய சப்போர்ட் இருக்கும் டிவிக்களின் மூலமாக, மாதம் ஐம்பது ரூபாய்க்கு சன் குழும சேனல்கள் மற்றும் அவர்களுடய படங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தையும் லைவாகவோ, அல்லது விரும்பிய நேரத்திலோ எப்போது வேண்டுமானாலும், பார்க்கலாம் என்று புரிய ஆர்மபிக்கும் போது அட என்று தோன்றினாலும், இவர்களின் எண்ட்ரி மிகவும் லேட் .  ஓ.டி.டி. ப்ளாட்பார்ம் எனும் இந்த ஓவர் த டாப் டெக்னாலஜிக்கு நம்மூர் விஜய் டிவி ஸ்டார் க்ரூப்பின் ஹாட் ஸ்டார் மூலமாய் வலம் வந்து அங்கே ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கு தனியே விளம்பரம் வாங்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பதைப் பார்த்தபின் தான் அவனே இவ்வளவு செய்யும் போது நம்ம கிட்ட எம்பூட்டு இருக்கு என இறங்கியிருக்கிறார்கள். நெட்பிளிக்ஸ், ஹூலு, அமேசான் ப்ரைம், யுப்பி டிவி  என ஏற்கனவே இந்த ஓ.டி.டி. டெக்னாலஜியில் கால் பதித்து கலக்கிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் சன்னின் இந்த முடிவு பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறது.

ஹிந்தியில் பிரபல டிவி மற்றும் மோஷன் பிக்க்சர் தயாரிப்பாளர்களான பாலாஜி டெலி பிலிம்ஸ் அவர்களுக்கென தனி ஓ.டி.டி ப்ளாட்பார்மாக ஆல்ட் பாலாஜி என ஒன்றை ஆரம்பித்து, தடாலடியாய் பல ஒரிஜினல் கண்டெண்டுகளாய், சீரீஸ், மற்றும் படங்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சோனி லிவ்,  என ஏகப்பட்ட டிஜிட்டல் ப்ளாட்பார்ம் வளர்ந்து கொண்டிருக்கிறது.  டிவியை ஆப்பின் மூலமாய் பார்க்கும் வசதி, அது மட்டுமில்லாமல் டிவி மார்க்கெட்டை மட்டுமே வைத்துக் கொண்டு ஜல்லியடிக்காமல், வித்யாசமான, போல்டான கண்டெண்டுகளை கொண்டு, மக்களை ஈர்பது ஒரு புறம் என்றாலும், இனி வரும் இண்டெர்நெட் காலங்களில் டிவி நிகழ்சிச்களை என்பது வெறும் சாட்டிலைட் கேபிள் ஒளிபரப்பு என்றில்லாமல் ஒர் புதிய பரிணாமத்தை இந்த ஓ.டி.டி டெக்னாலஜி மூலம் அடையப் போகிறது. ஓ.டி.டி. பிங்கி வாட்சிங், ஒரிஜினல் கண்டெண்ட், க்ரோம் காஸ்ட், ஆண்ட்ராய்ட் டிவி, ஸ்மார்ட் டிவி என்பதை பற்றியெல்லாம் இனி வரும் வாரங்களில் பார்ப்போம்.  ஒரு விதத்தில் தமிழ் சினிமா உலகிற்கு ஒர் நல்ல விஷயம். இனி சாட்டிலைட் சேனல்களின் ரைட்சுகளை மட்டுமே நம்பியில்லாமல், இம்மாதிரியான இணைய வழி ப்ளாட்பார்ம்களுக்கு தனித்தனியே விற்க வாய்ப்பும், புதிய புதிய கண்டெண்டுகளுக்கான டிமாண்டும் ஏற்படப் போகிறது. லைட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Aug 13, 2017

கொத்து பரோட்டா -2.0-38

கொத்து பரோட்டா -2.0-38
Socio Sexuals எனும் டெர்ம் சமீபகாலமாய் இணையத்தில் வளைய வர ஆரம்பித்திருக்கிறது.  இது என்ன புது கலாட்டா? என்றால் புதுசு எல்லாம் ஒன்றுமில்லை. பழசுதான் புதுசாய் பெயர் வைத்திருக்கிறார்கள். காதல், டேட்டிங், மீட்டிங் எல்லாம் இன்றைக்கு இணையம் மூலமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்க, நான் ஒரு “கே” “லெஸ்பியன்” பை- செக்‌ஷுவல்” “ஸ்ட்ரெயிட்” என்பது போல “இந்த சோபியா செக்‌ஷுவல். சரி சோபியா செக்‌ஷுவல் என்றால் என்ன? இனக்கவர்ச்சி, அழகு, வயது எல்லாவற்றையும் மீறி அறிவு சார்ந்த, புத்திசாலித்தனமான விஷயங்களை பேசி அதன் மூலமாய் ஒருவருக்கு ஒருவர் இன்ஸ்பயர் ஆகி, செக்‌ஷுவல் தேடலை தொடர்வது.  டாரன்  ஸ்டான்லர் தான்  1998ல் இந்த சோஷியோ செக்‌ஷுவல் என்ற வார்த்தையை  தன்னுடய செக்‌ஷுவாலிட்டியாய்  அறிவித்தாராம். .

காதல், செக்ஸ், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, கதை, கட்டுரை, மதம், இசை, என இரண்டு பேரின் ஒருமித்த கருத்துக்களை அறிவுப் பூர்வமாய் முதல் டேட்டிங்கில் பேச ஆர்மபித்து, மெல்ல அந்த பேச்சு பேசுகிறவர்கள் மீது காதலாய் மாறி, செக்சுவல் உறவு வரை போவது தான் இந்த சோசியோ செக்‌ஷுவல். இவர்களுக்கு, இருபாலரின் உடலோ, அல்லது அழகோ, பணம், ஆகியவற்றைப் பார்த்து செக்ஸுவல் உணர்வு ஏற்படுவதில்லையாம். அறிவு சார்ந்த விஷயங்கள் தான் அவர்களுடய செக்ஸ்ஷுவல் உணர்வைக் கிளப்பி விடுகிறதாம்.

இன்றைக்கும் இணைய வெளியில் கவிதை, கட்டுரை, என ஒருவரை ஒருவர் பாராட்டி, சீராட்டி, தனியே இன்பாக்ஸில் தனியே பேச ஆரம்பித்து, பேஸ்புக்காலில் தொடர்ந்து, பின் நேரடியாய் சந்தித்து, தங்களுடய இண்டெலிக்சுவல் தேடலை உடலால் ஒன்று சேர்ந்து முடிப்பவர்கள் பல பேருக்கு தாங்கள் ஒரு சோஷியோ செக்ஸ்ஷுவல் என்று தெரியாது. நம்மூர் நாவல்கள், சிறுகதைகளில் , கதாநாயகி, சாலிஞ்சரோ, ல.சா.ராவோ, புளியமரத்தின் கதை பற்றி பேசும் இளைஞனிடம் மெல்ல, மெல்ல ஈர்ப்பு ஏற்படுவதாய் எழுதப்படுவதும்,  அதே வைஸ் வர்ஸா பேசும் இளைஞி ஆங்கில கவிதைகளை கோட் பண்ணி பேசுவதாய் எழுதப்படுவதும், ஹா என்று அவளின் அறிவை, ஆச்சர்யமாய் பார்த்து, இருவரும் புத்தகம் கொடுத்து, காதல் செய்வதாய் எழுதப்படுவதும், சோஷியோ செக்ஸுவாலிட்டியில் வரும் என்று அன்றைக்கு யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அப்படிப் பார்த்தால் பாலசந்தரின் பெரும்பாலான நாயக, நாயகிகள் சோஷியோ செக்ஸ்ஷுவாலிட்டி வகைதான். என்ன இப்பத்தான் பேர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Wonder Woman
காமிக்ஸை படமாக்கி காசு பண்ணுவது ஹாலிவுட்காரர்களுக்கு பழகிப் போன ஒன்று. சிஜி என்ற டெக்னாலஜி வளர்ந்த பிறகு இவர்களது விஷுவல் விஸ்வரூபம் கட்டுக்கடங்காமல் போய், ப்ளாஸ்டிக்காய் உலகை காப்பாற்றிக் கொண்டிருந்த சூப்பர் ஹீரோக்களை, சிஜியோடு, கொஞ்சம் எமோஷனையும் கலந்தடித்து கிட்டத்தட்ட அந்தக்கால தமிழ் பட ரேஞ்சில், சாதாரண மனிதனின் உணர்வுகள், தடுமாற்றங்கள், செண்டிமெண்ட்  எல்லாவற்றையும் கலந்த சூப்பர் ஹீரோவை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் ஹாலிவுட்காரர்கள். சூப்பர் ஹீரோவாக ஆண்களை பார்த்த கண்களுக்கு  சூப்பர் வுமன்களை அவ்வளவாக பிடிப்பதில்லை.  அதையெல்லாம் மீறி பேட்மேன் v/s சூப்பர் மேன் படத்தில் வொண்டர் உமனை சேர்த்திருந்தார்கள். அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து டி.சி காமிக்ஸ் முழு படமாகவே தயாரித்து வெளியிட்டுவிட்டார்கள்.
டயானா அமேசானில் உள்ள ஒர் தீவில். கடவுளால் உருவாக்கப்பட்ட வீரப் பெண்களால் வளர்க்கப்பட்டவள். அவளது தீவில் ஸ்டீவ் எனும் அமெரிக்க விமானி அடிபட்டு விழ, அவனை காப்பாற்றுகிறாள். அவனைத் தேடி ஜெர்மானிய வீரர்கள் வருகிறார்கள். போரில் ஜெர்மனிய சயிண்டிஸ்ட்  டாக்டர் மரோ புதிய வகை மஸ்டர்ட் கேஸ் எனும் வாயு ஒன்றை கண்டுபிடித்து போரில் பயன்படுத்தி, உலகை, போரை வெல்ல நினைக்க,  எப்படி ஒண்டர் வுமனும், ஸ்டீவும் சேர்ந்து தன் பவரையெல்லாம் வைத்து காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. காமிக்ஸ் வெறியர்கள் நான் இப்படி சர்வ சாதரணமாய் அவர்களது சூப்பர் ஹீரோ கேரக்டரின் பின்புலம், பின் கதை என எதையும் சொல்லாமல் சொல்லியிருப்பதை பார்த்து காண்டாவதை என்னால் உணர முடிந்தாலும் என்னைப் பொறுத்தவரை உலகை அதிலும் அமெரிக்காவையோ, பிரிட்டனையோ, ஜெர்மானியர்களிடமிருந்தோ, அல்லது ரஷ்யர்களிடமிருந்தோ காப்பது ஒன்றுதான் இந்த சூப்பர் ஹீரோக்களின் பிரதான வேலையாய் இருப்பதால் வேறேதும் சொல்ல தோன்றவில்லை.

வொண்டர் உமன்  கால் கடோடுக்கு 32 வயதாம்.. ம்ஹும்.. என்னாமா இருக்கு பொண்ணு. அந்த ஷார்ப் மூக்கும், ஓங்கு தாங்கான சிக் உடலும், தன் தீவிலிருந்து நகருக்கு வந்து மக்களின் நடவடிக்கைகளைப் பார்த்து, ஒன்றும் புரியாமல் வெகுளியாய் கேள்வி கேட்கும் போது அவ்வளவு க்யூட். ஆனால் அதே நேரத்தில் வொண்டர் உமன் காஸ்ட்யூமில் உயரமான கால்களை, தன் இறுக்கமான ஸ்லீக் தொடைகளை காட்டிக் கொண்டு, சாதாரண துப்பாக்கியிலிருந்து, பீரங்கி குண்டு வரை சர்வ சாதாரணமாய் ஒரு சில மொக்கை சிஜி ஷாட்களோடு, தடுத்தாளும் பாங்கு இருக்கிறதே.. ஆகா.. அகா..அககா..  சால பாக உந்தி. நான் நம்பிட்டேன் அம்மணி வொண்டர் உமன் தான்.  என்ன ஆளாளுக்கு கலர் கலராய் லைட் அனுப்பி வெடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். டிசி காமிக்ஸ் காரர்களிடம் ஒர் வேண்டுகோள். கொஞ்சமாச்சும் வெளிச்சத்தில் படமெடுக்கவும் எல்லா ஷாட்களும் விடியற்காலை மூணு மணிக்கு எடுத்தார்போலவே இருப்பதாலும், 3டி கண்ணாடி வேறு கருப்பாய் இருப்பதாலும் கருகும்மென இருக்கிறது. என் தலைவியை கண் குளிர காண முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

படம் நெடுக மிக இயல்பான வசனங்கள். டயானா ஆண்களாய் பேசிக் கொண்டிருக்கும் மீட்டிங்கில் நுழைந்துவிட, ”இங்கே ஒரு பெண் இருக்கிறாள் என்று மற்றவர்கள் சொல்ல, அவளை வெளியே கூட்டி வருகிறான் ஸ்டீவ். “ஏன் பெண்களை பேச அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள்? என்று டயானா கேட்க, அப்போது அங்கு வரும் பேட்ரிக்கிடம் மன்னிப்பு கேட்கிறான் ஸ்டீவ். அதற்கு அவர் சொல்லும் பதில். “பரவாயில்லை. ஒரு பெண் உள்ளே வந்ததினால் கிடைத்த அமைதியை வைத்து என் பேச்சை சுலபமாய் கேட்க வைக்க முடிந்தது” என்பார். இன்னொரு காட்சியில் ஹீரோ குளித்துக் கொண்டிருக்க, டயானா எதிர்பாராமல் உள்ளே போய் விட, பப்பி ஷேமாய் இருக்கும் ஹீரோவை வைத்த கண் வாங்காமல் மேலிருந்து கீழ் பார்த்து நிலைத்த பார்வையோடு, டயானா ஸ்டீவிடம் கேட்கும் கேள்வி “அது என்ன?” என்பதுதான். என்ன என்பதை வெள்ளித்திரையில் 3டியில் கண்டு கொள்ளுங்கள். இயக்குனர் பேட்டி ஜென்கின்ஸ் ஒரு பெண் என்பதால் குட்டிக் குட்டி ரொமான்ஸ், எக்ஸ்பிரசன்ஸில், மிக நுணுக்கமான நகைச்சுவை வசனங்களில்  பளிச்சென்று தெரிகிறார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது நடிகர் சத்யேந்திரனை பார்த்தேன். என்ன படமென்றார். சொன்னேன். ஹீரோயினை பற்றி நாலு வரி புளங்காகிதமாய் சொன்னேன். என்ன இருந்தாலும் ராக்வெல் வெல்ச் போல வரலை என்றார். ம்ஹும்.. ஒவ்வொருத்தருக்குள்ளேயும்.. ஒவ்வொரு..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நண்பர் மணிஜியின் அழைப்பின் பேரில் திடீர் மாயவரப் பயணம். டோல்களின் கொள்ளை காரணத்தினாலும், ரொம்ப நாள் ஆயிருச்சு ஈ.சி.ஆர்ல போய் என்பதாலும் ஈ.சி.ஆர் பயணம். முன்பு போல அவ்வளவு சுகமாய் இல்லை. பல இடங்களில் டபுள் ரோடும், திடீர் திடீரென சிங்கிள் ரோடுமாய் பாண்டிவரை போய்க் கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து பாண்டிக்கு வாங்கு ஒரே ஒரு டோல்தான். ஹைவே எங்கும் இருந்த டாஸ்மாக்குகளும், பாண்டி ஓயின்ஸ்களும் கண்களுக்கு தட்டுப்படவேயில்லை. பாண்டி ஊர் எல்லையில் இருக்கும் கென்னடி மட்டும் ட்ரைவின் ரெஸ்டாரண்டாய் 500 மீட்டர் தள்ளி வழி காட்டியது. முன்பை விட பிரம்மாண்டமாய் மிக பிரம்மாண்டமாய் வயல்வெளிகளை வழித்தெடுத்து புதிய கடை அமைத்திருந்தார்கள். எதிரே இன்னொரு பெரிய ஒயின்ஸ் காரர் ரெடியாகிக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல புத்தூர் ஜெயராமன் கடையில் வேர்வையும், அன்பும் ஒழுக, கெட்டித்தயிரோடு அட்டகாச சாப்பாடு. மாயவரத்தில் வேலை முடித்துவிட்டு சனீஸ்வரரை சந்திக்க ப்ளான் செய்து திருநள்ளாரில் அறை எடுத்தோம். டபுள் பெட் 1200 என்றார். ஏறெடுத்து பார்த்த போது இன்னைக்கு வியாழன் அதனால இந்த ரேட்டு, நாளைக்கு 2500 என்றார். ராத்திரி டிபன் எங்க நல்லாருக்கும் என்று ஒரு மளிகைக்கடையில் கேட்டோம். இங்க எங்கேயும் சாப்பாடு வெளங்காது. அநியாயமா ஏமாத்திருவாங்க. ஒரு ரெண்டுகிலோமீட்டர் போனீங்கன்னா காரைக்கால் டவுன் வந்திரும். அங்கன போய் சாப்பிட்டிருங்க.. என்றார். சோம்பேறித்தனப்பட்டு பக்கத்திலிருந்த ஒர் சின்ன கடையில் சாப்பிட்டோம் நல்ல காரச்சட்னி, தேங்காய் சட்னியோடு, தோசை, இட்லி என வெறும் 80 ரூபாய் சிறப்பான உணவைக் கொடுத்தார்கள். மளிகைக்கடைக்காரருக்கு என்ன கோபமோ இந்த ஊர் கடைக்காரர்கள் மேல்? என்று தெரியவில்லை.
நடையே காலியாயிருக்க, உற்சவரை சந்தித்துவிட்டு, சனீஸ்வரரை கண்டு கொண்டு வ்ந்தோம். சிறப்பான தரிசனம். சில வாரங்களுக்கு முன் தான் தீவிபத்து ஏற்பட்டிருந்த ஆலயம் அதன் சுவடு தெரியாமல் இருந்தது. வழக்கம் போல அன்ன தானம் அளிக்க போர்டு வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். விளக்கு ஏற்ற கோயிலினுள் காண்ட்ரேக்ட் ஆளிருக்க, வெளியே விளக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். இருந்ந குட்டியூண்டு கூட்டத்தைக் கூட ஓவர் டேக் செய்து ஒருகிராதி தாண்டி சனீஸ்வரனை அருகே நின்று பார்க்க, வாட்ச்மேனுக்கு இரு நூறு ரூபாய் கட்டிங் கொடுத்த ஆந்திராவாடு குடும்பம். காசு வாங்கிக் கொண்டு ஆசீர்வாதம் கொடுக்கும் யானை. “போட்டோவெல்லா  எடுக்காதீங்க சார்”. உள்ளே இன்னொரு யானைக்கு காலை ப்ரேக் பாஸ்ட் சாதத்தோடு எத்தையோ கலந்து உருண்டையாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். யானைக்கு சுகர் ஏன் வருகிறது என்று நியாண்டர் பேலியோவில் கேட்ட கேள்வி நியாபகம் வந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு அதே யானையோடு ஊர்வலமாய் சாமி வர, நல்ல வேளை சாப்பிட்ட பிறகு யானைக்கு வாங்கி இருப்பதால் சுகர் கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்குமென்று நினைத்துக் கொண்டேன்.  
போன முறை சாப்பாடு வாங்கி கொடுத்தேன். பொட்டலம் வாங்கினவன் எந்த கடையில வாங்கினீங்கனு கேட்டேன். கடைய சொன்னேன் அது பழசாயிருக்கும் வேற கடையில வாங்கினதா இருந்தா கொடுங்கன்னான். வாங்கிக் கொடுத்தபின் தன் பையிலிருந்த நிறைய பொட்டலங்களோடு பரபரவென கிளம்பிப் போய் அதே கடையில் நின்னத பார்த்ததிலேர்ந்து சாப்பாடு வாங்கி கொடுக்கிறத நிறுத்திட்டேன் என்றார் மணிஜி. லாஜிக்காய் பார்த்தால் பசிக்கு தான் சாப்பிட முடியும். சனிப்ரீதிக்காக எப்படி சாப்பிட முடியும்?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 3, 2017

கொத்து பரோட்டா 2.0-37

கொத்து பரோட்டா 2.0-38
Rarandoi Veduka Chudham
அப்பா நாகார்ஜுனாவை வைத்து குஜாலான சின்னி நைனா படத்தை எடுத்து ஹிட் கொடுத்தவர்,  பையன் நாக சைத்தன்யாவை வைத்து டிபிக்கல், தெலுங்கு டெம்ப்ளேட் காதல் குடும்பக் கதை எடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண்.  ஆஸ்யூஸ்வல் கல்யாணத்தில் ஹீரோயின் சந்திப்பு. பார்த்தவுடன் பிடித்துப் போதல். சைத்தன்யாவின் ‘மச்சித்தனம்” பார்த்து ஹீரோயின் குடும்பமே இம்ப்ரஸ் ஆவது. ட்விஸ்ட் என்னவென்றால் ஹீரோயின் அப்பாவும், ஹீரோ அப்பாவும் முன்னாள் நண்பர்கள் இன்னாள் விரோதிகள். காரணம் ஆஸ்யூஸ்வலான நட்பு துரோகம். தங்கையுடன் திருட்டுக் கல்யாணம் செய்ய முனையும் போது தங்கையின் சாவு. ஆனால் பின்னணியில் ஒர் மொக்கை குடும்ப வில்லன். குடும்பத்தையும், காதலையும் சேர்க்க ஹீரோவின் முயற்சி என சகலவிதமான தெலுங்கு பட டெம்ப்ளேட்டுகளுடனான கதை. ரசிக்கக்கூடிய ஒர் விஷயம் குளுகுளு ராகுல் ப்ரீதி சிங். தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஒரிரு பாடல்கள். கலர்புல் ஒளிப்பதிவு மட்டுமே. ரொமான்ஸில் தம்பி இன்னும் ப்ரீகேஜியே தாண்டவில்லை. அப்பாவை வைத்து இந்த கதையை எடுத்திருந்தால் மிண்டும் ஹிட்டடித்திருப்பார் இயக்குனர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Wild Tales
Damian sifron இயக்கத்தில் வெளியான  குறும்படங்களின் தொகுப்பு இந்த அர்ஜெண்டேனிய படம்.  இப்படத்தின் சுவாரஸ்யம் என்னவெறால் இப்படங்களின் அடிநாதமான கண்டெண்ட். எல்லா படங்களின் அடிப்படை பழிவாங்கும் உணர்வும் அதை சார்ந்த செயல்களும் தான். மொத்தம் ஆறு படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான பழிவாங்கும் உணர்வை வெளிப்படுத்தும் படங்கள்.
முதல் படத்தில் விமானத்தில்  இருபது பேர்களுக்கு மேல் இருக்க, அங்கிருக்கும் ரெண்டு பேர்கள் பேஸ்தர்நாக் பற்றி பேசுகிறார்கள். இரண்டு பேரில் ஒருத்தி பெண். பேஸ்தர்நாக்கின் முன்னாள் காதலி. இன்னொருவருர் அவனின் இசை விமர்சகர். அவனின் இசைத் தொகுப்பை கிழித்து தொங்கவிட்டவர். கொஞ்சம் கொஞ்சமாய் விமானத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிய வருகிற விஷயம் அனைவருமே பேஸ்தர்நாக்கை அறிந்தவர்கள், ஏதோ ஒரு விதத்தில் அவனின் மேல் அதிருப்தியை வெளியிட்டவர்கள். அப்போது விமான பணிப் பெண் பதற்றத்துடன் ஓடி வருகிறாள். என்னவென்று எல்லோரும் கேட்க, விமான பைலட் தன்னுடய கேபினை உள்பக்கமாய் பூட்டிக் கொண்டு திறக்க மறுக்கிறார் என்று சொல்ல, அவரின் பேரை கேட்கிறார்கள் அனைவரும்  அவள் பதற்றத்துடன் “பேஸ்தர்நாக்” என்று சொல்ல, விமானம் பேஸ்தர்நாக்கின் பெற்றோர்கள் மீது க்ராஷ் ஆகிறது.

மூன்றாவது படத்தில் டியாகோ தன்னுடய ஹை எண்ட் காரில் ஹைவேயில் பயணித்துக் கொண்டிருக்கிறான். அவனின் முன் ஒரு லொடக்கா குட்டியானையை வைத்துக் கொண்டு, வழிவிடாமல் போய்க் கொண்டிருக்கிறான் மரியோ. ஒரு கட்டத்தில் டியாகோ கோபத்தில் அவனை முந்தி ஓட்டி, அவனை அவமானப்படுத்துவிதாமாய் செய்கை ஒன்றை செய்துவிட்டு, முந்திச் செல்கிறார். சில மணிநேரங்களுக்கு பிறகு  டியாகோவின் கார் பஞ்சராகி நிற்க, டயர் மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் மரியோ தன் லொடக்கா வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறான். தன் வழியை மறிக்கும் டியாகோவின் வண்டியின் முன் நிறுத்திவிட்டு, அவனை நோக்கி வருகிறான். டியாகோ பயந்து போய் கதவை மூடிக் கொண்டு, இருக்க, மரியோ வண்டியின் விண்ட்ஷீல்டை அடித்து உடைத்துவிட்டு, வண்டியின் மேல் ஆய் போய் விட்டு கிளம்ப யத்தனிக்க, கோபம் கொண்ட டியாகோ அவனின் வண்டியோடு, இடித்து தள்ளுகிறான். வண்டி பாலத்தின் மீது மோதாமல், பாலத்தின் அடியில் உருண்டோட, சற்று தூரம் வண்டியோட்டிச் சென்ற டியாகோ, எங்கே போலீஸ் பிரச்சனை ஏதாவது வருமோ என்று பயந்து திரும்ப அங்கேயே வருகிறான். வண்டியின் வீல் கழண்டு ஓடிய வேகத்தில் அவனது வண்டியும், அதே பாலத்தின் அடியில் மரியோவின் வண்டியின் மீது வீழ்கிறது. டியோகோ காரின் சீட் பெல்ல்டில் மாட்டிக் கொண்டிருக்க, மரியோ டீசல் டேங்கை உடைத்து, தன் கிழிந்த சட்டையில் டீசலை நினைத்து கொளுத்திவிட முயல்கிறான். டியாகோ அவனை எரித்துவிட்டு வெளியேற முடியாத படி கட்டி அணைத்துக் கொள்ள, வண்டி வெடிக்கிறது. டோ வண்டிக்காரன் இருவரும் கட்டி அணைத்தபடி இறந்திருப்பதைப் பார்த்து காதலர்கள் என்று நினைத்துக் கொள்கிறான்.

நான்காவது படத்தில் பிட்சர் பெரிய பெரிய கட்டிடங்களை சீட்டுக்கட்டுக்களாய் வெடி வைத்து சரிக்கும் டெமாலிஷன் எக்ஸ்பர்ட். ஒரு நாள் தன் மகளின் பிறந்தநாளுக்காக கேக் வாங்க கடையின் முன் காரை பார்க் செய்துவிட்டு போகிறான். அவனின் கார் நோ பார்க்கிங்கில் பார்க் செய்யப்பட்டதற்காக டோ செய்யப்படுகிறது. பைன் கட்டும் இடத்தில் வந்து ”நோ பார்க்கிங்கிற்கான” மஞ்சள் கோடு போடப்படவேயில்லை என்று வாதாடுகிறான். ஆனாலும் பணம் கட்டித்தான் வண்டியை எடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் அவனின் மகளின் பிறந்தநாள் பார்ட்டியை மிஸ் செய்கிறான். இன்னொரு முறையும் அதே போல தவறாய் வண்டியை நோ பார்க்கிங்கிற்காக டோ செய்யப்பட்டுவிட, இம்முறை அவன் சண்டை போட, கைகலப்பாகி, போலீஸாரால் அரஸ்ட் செய்யப்படுகிறான். இதனால் அவனின் வேலை மற்றும் குடும்பம் சிக்கலாகிப் போக, ஒரு நாள் வண்டி முழுவதும் வெடிப்பொருட்களாய் நிரப்பி, நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்க, வழக்கம் போல, வண்டியை போலிஸார் டோ செய்து கொண்டு போக, பார்க்கிங்கில் வைத்த பின் தன் ரிமோட் மூலம் வெடிக்கச் செய்து அந்த பார்க்கிங் லாட்டையே நாசப்ப்டுத்துகிறான். தான் செய்யும் தொழிலைக் காட்டி என் அனுமதியில்லாமல் வண்டியை டோ செய்ததினால் வெடித்தது என்கிறான்.

இப்படியாக மொத்தம் ஆறு கதைகள். ஒவ்வொன்றும் வன்மம், வஞ்சம், பழிவாங்கலை மட்டுமே பேசும் கதைகள். பல விதமான பேக்ரவுண்டுகளில். எல்லாமெ நடிப்பில், மேக்கிங்கில் க்ளாஸ் என்றே சொல்ல வேண்டும். சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷனைப் பெற்ற படம். மிச்சம் இருக்கும் மூன்று கதைகள் உங்களின் ரசனைக்காக விடப்பட்டிருக்கிறது. என் ஜாய்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@  
Black Mirror – White Bear
அம்னீஷியாவிலிருந்து எழுந்தது போல ஒரு பெண் கண் முழிக்கிறாள்.  தான் எங்கேயிருக்கிறோம்? என்று கூட புரியாமல் மலங்க மலங்க முழித்தபடி தேட, ஒரு குட்டிப் பெண்ணின் படம் ஒன்று அங்கே இருக்க, அவள் தன் மகள் என்று முடிவு செய்து கொண்டு அவளை தேடுகிறாள். இன்னொரு டேபிளின் மேல் அவள் ஒர் ஆணுடன் இருக்கும் போட்டோவை பார்க்கிறாள். அவளுக்கு ஏதுவுமே நியாபகம் இல்லை. டிவியில் ஒரு சிம்பள் ஒன்று மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.  தனக்கு உதவ யாராவது இருக்கிறார்களா? என்று எட்டிப் பார்த்தால் எல்லா ஜன்னல்களிலிருந்தும் அவரவர் மொபைல்களில் இவளை ஷூட் செய்து கொண்டிருகிறார்கள். ஒன்றும் புரியாமல் வெளியே வருகிறாள். அப்போது தெருக்களில் கூட்டமாய் யாருமே அவளுக்கு உதவ வராமல், அவளை வீடியோ எடுக்கிறார்களே தவிர உதவிக்கு வரவேயில்லை. ஒன்றும் புரியாமல் அவர்களிடமிருந்து தப்பிக்க முயலும் போது முகமுடி போட்ட வண்டியிலிருந்து ஒரு கூட்டம் இவளை துரத்துகிறது. துப்பாக்கியால் சுட முயல்கிறது.
அப்போது ஒரு பெண் அவளை காப்பாற்றுகிறாள். டிவியிலும், இண்டர்நெட்டிலும் ஒரு விதமான சிம்பல் ஒளிபரப்பாகி, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எதையும், எல்லாவற்றையும் பார்வையாளர்களாக மட்டுமே மாற்றிவிட்டிருக்கிறது என்றும். வாயரிசம் போன்ற ஒரு பாதிப்பு அனைவருக்கும் ஏற்பட்டுவிட்டது என்கிறாள். என்னைப் போல உன்னைப் போலவே இன்னும் சிலர் இந்த சிக்னலினால் பாதிக்கப்படாமல் இருப்பதாகவும், அதில் சிலர் குழுவாய் அமைத்துக் கொண்டு, இன்னொரு குழுவை கொல்ல முயல்வதாகவும், இன்னொரு கூட்டம் காட்டுத்தனமாய் நடந்து கொள்வதாகவும் சொல்கிறாள். வைட் பியர் எனும் இடத்தில் உள்ள ட்ரான்ஸ்மிட்டரை அழித்துவிட்டால் எல்லாருக்கும் இந்த பிரச்சனையிலிருந்து விடுதலை அடைந்துவிட முடியுமென்கிறாள். அந்த ட்ரான்ஸ்மிட்டரை அழிக்க முனையும் பயணத்தின் போதான பிரச்சனைகள், துரோகங்கள் எல்லாம் கடந்து கதை முடியுமிடம் செம்ம ட்விஸ்ட்.
@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் -அரும்பு
கொஞ்சம் பழைய படம் தான் என்றாலும் இன்றைய சாதனையாளர்கள் பலரின் முதல் முயற்சியை இதில் பார்க்க முடியும். சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. தந்தையை இழந்ததினால் வழியேயில்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தி குடும்பத்துக்காக வேலைக்கு போகும் சிறுவனை அரசாங்க சட்டம் வாழவிடாத கதை. இயக்குனர் கேபிபி.நவீனின் இக்குறும்படம் இன்றைக்கும் பொருந்தி வரக்கூடியதுதான்.  https://www.youtube.com/watch?v=DCZYIhqoL7A&t=2s