கொத்து
பரோட்டா -2.0 -42
கக்கூஸ்
தமிழகத்தில் பல இடங்களில் திரையிட
போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்ட ஆவணப்படம். மேனுவல் ஸ்கேவஞ்சிங் எனப்படும் மனிதனால்
மனித கழிவுகளை அகற்றுகிறவர்களைப் பற்றியும், துப்புறவு பணியார்களின் பிரச்சனை, வேலை,
உடல் நலம், அவர்களது ஜாதிப் பின்னணி, ஏன் குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டுமே இப்பணிக்கு
தெரிந்தெடுக்கப்படுகிறார்கள்? அரசாங்கம் இவர்களது நலனில் எவ்வளவு கவனம் செலுத்துகிறது?
விஷ வாயு மரணங்கள், அவர்களுக்கான இழப்பீடு? என பல விஷயங்களைப் பற்றி இந்த ஆவணப்படம் பேசுகிறது.
சென்னை வெள்ளத்தின் போது தெருவெங்கும்
கழிவுகள் மலை போல குவிந்து கிடக்க, அதை சுத்தமாக்க, அசலூர், மாநிலங்களில் இருந்து எல்லாம்
துப்புரவு பணியாளர்களை அழைத்து வந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் என்னவாகியிருக்கும்
என்று யோசிக்கும் போது பயமாய்த்தான் இருக்கிறது. அடைப்பட்ட, ட்ரைனேஜ், செப்ட்டிக் டேங்குகள்,
கிடைத்த இடத்தில் எல்லாம் ஒண்ணுக்கடிக்கும் சிவிக் சென்ஸ் இல்லாத நம் மக்கள், நாப்கின்களாலும்,
ரோட்டில் தூக்கியெறியப்படும் ப்ளாஸ்டிக்கினாலும் அடைபட்ட கக்கூஸ் ட்ரைனேஜுகள், என பல
இக்கட்டுகளுக்கு நம்முடைய மோசமான சிவிக் சென்ஸே காரணம் என்ற குற்றவுணர்சியை கிளப்பிவிடும்
ஆவணப்படம்.
மருத்துவ உதவி, இறந்தால் கிடைக்கும்
இழப்பீடு, அதற்கான போராட்டம், நம்ம டாய்லெட் என்ற பெயரில் கட்டப்பட்டு மலக்கிடங்காகியிருக்கும்
அவலம், நிரந்தர வேலையில்லாத நிலை, மிகக் குறைவான சம்பளத்திற்கு ஆள் எடுக்கும் கொடுமை.
வேலை பார்க்கும் பெண்களிடம் பாலியல் தொல்லை தரும் அதிகாரிகள், மேஸ்திரிகள். சிறப்பு
உபகரணங்களை அளிக்காத மாநகராட்சி நிர்வாகம். இந்த வேலையை செய்யும் இவர்களுக்கு சமூகத்தில்
கிடைக்கும் மரியாதை அவமரியாதைகள். இவ்வளவு கஷ்டமிருக்கிறது என்று தெரிந்தும் ஏன் இந்த
வேலைக்கு வருகிறார்கள் என்ற கேள்விக்கான பதில், இழப்பீடு வாங்குவதே பெரிய போராட்டம்
என்றால் அந்த இழப்பீட்டை வாங்கித் தருவதாய் சொல்லி, ஏமாற்றும் அவர்கள் ஜாதி லோக்கல்
தலைவர்கள். வாங்கி கொடுத்த பணத்தில் ஒன்னரை லட்சம் கட்டிங் போட்ட தலைவர்கள். மேனுவல்
ஸ்கேவஞ்சிங்க் செய்ய பணித்தவரை கைது செய்யும் சட்டமிருந்தும் எத்தனை பேரின் மேல் இந்த
சட்டம் பாய்ந்திருக்கிறது? என பல கேள்விகளை நம்முன் எடுத்து வைத்திருக்கிறது.
நிச்சயம் காட்சிக்கு காட்சி ரசித்து
பார்க்க வைக்கக்கூடிய விஷுவல் இல்லை. சாப்பிடும் போது பார்க்கத் தகுந்த விஷயமில்லை.
வீஷுவலில் பார்த்தாலே மூக்கை பொற்றிக் கொள்ள வைக்கும் காட்சிகள் தான் அதிகமென்றாலும்
இத்தனைக்கும் காரணம் நாம் என்று நினைக்கும் போது ஏதாவது செய்யணும் பாஸ் என்கிற எண்ணம்
நம்முள் தோன்ற வைக்கும் காட்சிகள் தேவையென்றாலும் மறுபடியும் மறுபடியும் காட்டப்படும்
ஒரே ஷாட்களின் தொகுப்பு ஆயாசப்படுத்துகிறது. பரிதாபம் ஏற்படுத்த வேண்டுமெனபடுவதாய்
திரும்பத் திரும்ப உயர்ஜாதிகளையும் அதிகாரிகளையும், சமூகத்தையும் குற்றம் சாட்டும் பேச்சுக்கள் ஒன்சைட்டாகவே இருப்பதாய் தோன்றுகிறது.
இவர்களது கையுறை, பூட்ஸுகள், முகமுடிகள் ஆகியவற்றை தருவதேயில்லை, தந்தாய் சொல்லி போட்டோ
எடுத்து விட்டு திரும்பவும் வாங்கிக் கொள்வார்கள் என்ற குற்றசாட்டை சொல்லும் போதே, இன்னொரு பக்கம் எங்களுக்கு
அளித்தார்கள் ஆனால் நாங்கள் பயன்படுத்துவதில்லை என்று சொல்லும் காட்சிகளும் இருக்கிறது.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் க்ளவுசைப் போட்டால் கையெல்லாம் நாற்றமடிக்கிறது என்பதுதான்.
அது மட்டுமில்லாமல் இவர்கள் பெரும்பாலும் குற்றம் சொல்லும் முக்கிய மேலதிகாரி இவர்களுடய
மேஸ்திரி தான். அவர் இவர்களின் குழுவில் இருந்து பதவியுவர்வு பெற்றவர்தான். அவர்கள்
நினைத்தால் இவர்களது பல அடிப்படை விஷயங்களை அதிகாரிகளிடம் பேசி, போராடி பெற்றுத்தர
முடியும். ஏன் அதைப் பற்றி பேசவில்லை இந்த ஆவணப்படம்.
மனித கழிவுகளை அகற்ற மனிதனுக்கு
பதிலாய் மிஷின்களை வாங்கிட வழி வகுத்தால் அதற்குரிய மோட்டரை வாங்க ஒரு லட்சம் ஆகும்
என மிஷினை கிடப்பில் போட்டு விட்டு, மனிதனை அனுப்பும் அரசாங்க அவலம் ஒர் நிதர்சனமென்றால்,
அதே மனிதன் இறந்தால் பத்து லட்சம் தர தயாராக இருக்கிறது இந்த அரசாங்கம் எனும் முரண்
கொடுமையாய் இருக்கிறது.
ஊரையே சுத்தம் செய்யும் இவர்களது
இருப்பிடங்கள் மட்டும் ஏன் குப்பை மேடாய், சுத்தமில்லாமல் இருக்கிறது எனும் கேள்வி
நியாயமானதே. அவர்களும் நமது குடிமக்கள் தானே? அவர்களுக்குரிய உரிமை இல்லையா? எனும்
கோபமும் சரியே. இவர்களது சமூகத்திலிருந்து படித்து உயர்ந்தவர்கள் கூட இவர்களை அடுத்த
கட்டத்திற்கு அழைத்து செல்ல, முயல்வதில்லை என்கிற விஷயம் கூட பேசப்பட்டிருக்கிறது.
என் நெருங்கிய நண்பர் ஒருவர் துப்புரவு
பணியாளரின் மகன். அடிப்படை கல்வி பெற்றவர். அவர்களின் தொழில் எனப்படும் துப்புரவு பணியை
செய்யவில்லை. என்னுடன் கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டு முதலாளியாகி, அரசு பணி கிடைத்து
செட்டிலாகிவிட்டார். அவருக்கு முன்று குழந்தைகள். அவருடய தம்பியும் அவருடன் வேலை பார்த்து
வந்தார். பின்னாளில் கார்பரேஷன் துப்புரவு வேலை கிடைத்து நண்பரின் தொழிலில் பகுதி நேர
வேலை பார்த்து வருகிறார். துப்புரவு வேலை அதிகாலையில் முடித்துவிட்டால் மீண்டும் அடுத்த
நாள் வரை வேலை செய்யத் தேவையில்லை. மேஸ்திரியை சரி கட்டிக் கொண்டால் போதும் என்பார்.
இப்படித்தான் பெரும்பாலான ஆட்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் கணக்கோடு போய் கொண்டிருக்கிறார்கள்.
மேனுவல் ஸ்கேவஞ்சிங் நிச்சயம் ஒழிக்கபட வேண்டிய, குறிப்பிட்ட ஜாதியினர்களுக்கானது எனும்
வரையரையை மாற்றியமைக்க வேண்டுமென்பது இன்றியமையாத ஒன்றுதான். அதே நேரத்தில் மேற்சொன்ன
விஷயங்களை இப்படம் பேசியிருந்தால், கல்வி அவர்களுக்கு கொடுக்கும் உரிமை, பலம் போன்றவற்றையும்,
அவர்களில் ஒருவர் இதிலிருந்து வெளியே வந்திருப்பது பற்றி சொல்லியிருந்தால், ஒருதலை
பட்ச ஆவணப்படமாய் ஆகியிருக்காது என்பது என் எண்ணம். இந்த ஆவணப்படத்தில் ஒலி சம்பந்தமான
டெக்னிக்கல் குறைகள் இருந்தாலும், நிதர்சனத்தை அழுத்தமாய் எடுத்துரைத்த இயக்குனர் திவ்யாவை
எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படத்தை பார்த்துவிட்டு,
இவர்களது நல்லதுக்காக போராடுகிறோமோ இல்லையோ? இவர்களது பல பிரச்சனைகளுக்கான காரணம் நாம்
தான் என்பதை உண்ர்ந்து செயல்பட ஆரம்பித்தாலே வெற்றிதான். https://www.youtube.com/watch?v=-UYWRoHUpkU
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
7
Boxes
உலகளவில் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட
பராகுவேயன் படம். பராகுவேயின் தலைநகரான அசான்காய்ன்
நகரில் உள்ள மார்கெட்டில் தள்ளுவண்டி தள்ளுகிறவன் விக்டர். அங்கேயுள்ள டிவி கடையில் படம் பார்த்து கனா காண்கிறவன்.
பதினேழு வயது இளைஞன். வேடிக்கைப் பார்த்ததில் அவனுக்கு கிடைக்க இருந்த வேலை வேறு ஒருவனுக்கு
போகிறது. உடனடியாய் அடுத்த வேலையை தேடியலையும் போது ஒருவன் அழைக்கிறான். அவனிடம் நூறு
டாலர் நோட்டின் பாதியை கொடுத்து, ஒரு பேக்கிரியின் பின்னால் இருக்கும் ஏழு பெட்டிகளை
எடுத்துக் கொண்டு, எட்டு ப்ளாக்குகள் தள்ளியிருக்கும் இடத்தில் சேர்த்துவிட்டால் மீதி
பாதி டாலர் நோட்டை பெற்றுக் கொள்ளலாம் என்கிறான். நூறு டாலர் என்பது பெரும் பணம். சரி
என்று ஒத்துக் கொள்கிறான். உடன் அவனை துரத்தும் காதல் தோழியுடன். நான்கைந்து ப்ளாக்குள் போய்க் கொண்டிருக்கும் போது
அதில் ஒரு பெட்டியை ஒருவன் திருடிக் கொண்டு ஓடுகிறான்.
அதே நேரத்தில் இந்த வேலையை வழக்கமாய்
செய்கிறவன் குழந்தையின் உடல் நிலை காரணமாய் மருத்துவமனைக்கு அலைந்துவிட்டு, லேட்டாய்
வந்தால் வேலை வாய்ப்பு போய்விட, விக்டரிடமிருந்து அதை கைப்பற்ற வெறி கொண்டு அலைகிறான்.
ஒரு கட்டத்தில் அதில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் போது ஒரு பெண்ணின் உடலை துண்டு
துண்டாக்கி பார்சல் செய்திருக்க, தான் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருப்பதை
உணர்கிறான் விக்டர்.
தொலைந்த பார்சலை தேட, அதை அனுப்பிய
டீமே ஒரு பக்கம் துறத்துகிறது. இன்னொரு பக்கம் வேலை வாய்ப்பை இழந்தவன். இன்னொரு புறம்
ராணுவ போலீஸ். இதன் நடுவில் நிறைமாத கர்பிணிப் பெண். அவளின் பிரசவம். கொரியனுக்கும்
லோக்கல் பெண்ணுக்குமான சின்னக் காதல். இதற்கெல்லாம் காரணமான வில்லன். இவையனைத்து ஒரு
நாள் இரவில் நடந்து முடிந்துவிடுகிறது. பரபர க்ளைமேக்ஸ், பின்னணியிசை, மேக்கிங் எல்லாம்
பெரிய பலம் இப்படத்திற்கு. 2005ல் நடைபெறும் இக்கதையில் செல்போனின் ஆதிக்கம். அதன்
மூலமாய் நடக்கும் பல நிகழ்வுகள் சுவாரஸ்யம்.
Post a Comment
No comments:
Post a Comment