Thottal Thodarum

Nov 21, 2017

ஓ.டி.டி.எனும் மாயவன் -3

ஓ.டி.டி.எனும் மாயவன் -3
இன்றைய தேதிக்கு தமிழ் நாட்டில் மீடியா ஆட்களுக்கு மத்தியில் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எல்லாருமே சட்டென அதை நிறுத்தி விட்டு ஏன் நாம வெப்.சீரீஸ் ஆரம்பிக்க கூடாது என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சில பலர் தயாரிபில் கூட இறங்கிவிட்டார்கள். எப்படி டிஜிட்டல் சினிமா பிரபலமான பின் முன் பின் அனுபவமில்லாதவர்கள் எல்லாம் சினிமா தயாரிப்பில் இறங்கினார்களோ, அது போல இப்போது வெப் சீரீஸ் தயாரிப்பில். இவர்களில் பெரும்பாலோருக்கு டிவி தொடருக்கும் வெப் சீரீஸுக்கும் குறைந்தபட்சம் ஆறுவித்யாசங்கள் கூட தெரியுமா என்று தெரியவில்லை. சரி.. வெப் சீரிஸ் தயாரிப்பதால் என்ன லாபம்?. எப்படி அதை சந்தைப் படுத்துவது? எவ்வளவு செலவு ஆகும் என்பது போன்ற முக்கிய கேள்வியெல்லாம் பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஆட்டத்தில் இறங்கியவர்களி விடுங்கள் தெரிந்து ஆட்டத்தில் இறங்கியவர்கள் சில இருக்கிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் தன் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பாக ஒர் வெப் சீரீஸையும், ட்ரெண்ட் லவுட் சேனல் தன்  பங்குக்கு அமெரிக்க மாப்பிள்ளை எனும் சீரீஸையும், மெட்ராஸ் செண்ட்ரல் லிவின் எனும் சீரீஸின் வெற்றிக்கு பின் மெட்ராஸ் செண்ட்ரல் புகழ் கோபி,சுதாகர், ஜாவித்தை வைத்து புது சீரீஸை ஆர்மபித்திருக்கிறார்கள். ஏற்கனவே புட் சட்னி குழுவினர் தமிழில் cntrl +Alt +Del  எனும் வெப்ஸீரீஸ் வெற்றிகரமாய் வெளியாகியிருக்க, குட்டி பத்மினி தங்கள் நிறுவனத்தின் மூலமாய் ஆல்ட் பாலாஜி ப்ளாட்பார்முக்கு தமிழில் நடிகர் நந்தா நடிப்பில் ஒர் சீரிஸை அளித்திருக்கிறார். தெலுங்கில் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸ் வியூ ப்ளாட்பார்முக்காக PillA என்ற சீரீஸை தயாரித்திருக்க, அவர்களின் லேட்டஸ்டான “சோசியல்” சீரீஸின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ராணா டகுபதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதே  ரீதியில் தமிழில் தயாரிக்க இருப்பவர்கள் யாராவது பணம் தருவார்களா? அதை வைத்து ஒரு சில சதவிகித லாபத்தில் சுருட்டிக் கொடுக்கலாமா? என்றெல்லாம் எங்கெல்லாம் தம்தம் பழைய இன்ப்ளூயன்ஸ் உண்டோ அங்கே காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள் எப்படி தங்கள் இடத்தை நிலை நிறுத்திக் கொள்ளப் போகிறது?. எங்கேயிருந்து பார்வையாளர்களை இழுக்கப் போகிறார்கள்?. எப்படி இவர்கள் செய்யும் செலவுக்கு வருமானத்தை எடுக்கப் போகிறார்கள்? என்று ஒரு புறம் கேள்வியிருக்க, அதே நேரத்தில் இதற்கான தயாரிப்பாளர்கள் எப்படி போட்ட பணத்தை எடுக்க முடியும் என்பதையும் நாம் பார்க்கலாம்.

Ctrl+Alt+Del எனும் புட் சட்னியின் எட்டு எபிசோட் சீரிஸுக்கு, ஒரு  எபிசோடுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு என்று சொல்கிறார்கள். அவர்களின் கண்டெண்ட் தரத்தை பார்க்கும் போது நிச்சயம் அதற்கு தகுதியான விஷயமாய்த்தான் தெரிந்தது. வெறும் யூட்யூப் விளம்பரங்கள், ஹிட்சுகள் மூலம் காசு பார்க்க வேண்டுமென்றால் தொடர்ந்து விளம்பரப்படுத்தப் பட்டு, மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை சென்றடையும் போது நிச்சயம் ஒரு லாபகரமான ப்ராஜக்டாய் இருக்கும். ஆனால் மில்லியன் கணக்கில் தமிழில் ஹிட் வர சில வருடங்கள் ஆகலாம். அதற்காக ஒரு சிறந்த வியாபார முறையை அதில் கையாண்டார்கள். கிட்கேட், மற்றும் மிரிண்டா என்று இரண்டு ப்ராடக்டுகளை தங்கள் வெப் சீரீஸின் முக்கிய நிகழ்வின் போதெல்லாம் கேரக்டர்கள் மூலம் பயன்படுத்தவோ, அல்லது சொல்லு பயன்படுத்துவது போலவோ, ஒவ்வொரு எபிசோடிலும் காட்சிப்படுத்தி அந்த விளம்பரதாரர்களை தங்களது சீரீஸுக்கு ப்ராண்ட் பார்ட்னராய் ஆக்கி ஒர் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, தயாரிப்பில் இறங்கினார்கள். இது எல்லாருக்கும் சாத்தியமாகாது. ஏனென்றால் புட் சட்னி எனும் நிறுவனம் கல்சுரல் மிஷின் எனும் நிறுவனத்தை சார்ந்தது. ஹிந்தியில் மட்டுமில்லாமல் பெரிய அளவில் மார்கெட்டில் , முக்கியமாய் யூட்யூப் நெட்வொர்க்கில் பெரும் பலமுள்ள நெட்வொர்க் எப்படி சன் தன் குழும சேனல்களுக்கு தன் சன் சேனலை வைத்து மார்கெட் செய்கிறதோ அது போல தன் பெரும் மார்கெட் விரிவாக்கத்தை வைத்து விளம்பரதாரர்களை பெற்று தங்களது வெப் சீரிஸை வெற்றி பெற வைத்தார்கள்.  இப்படியான ஒர் நிறுவனத்துக்கே இப்படியான பெரும் பின்னணி தேவையிருக்க, மற்றவர்களின் வெப் சீரிஸ்கள் எப்படி மார்கெட் செய்வது என்பது ஒர் பெரிய கேள்விக் குறிதான்.

இப்படி யோசித்துக் கொண்டிருப்பதை விட செயல்படுவது சிறந்தது என மெட்ராஸ் செண்ட்ரல் நிறுவனத்தினரின் ‘லிவின்’ மக்கள் மத்தியில் பேர் பெற ஆரம்பித்திருக்க, உடனடியாய் புட்சட்னியின் சேனலுடன் தங்கள் சேனல் லிவின்னை அதிலும் ப்ளே செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களது சேனலுக்கான சப்ஸ்கிரைபரை விட, அதிக சப்ஸ்கிரைபரை வைத்திருக்கும் சேனலில் அவர்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பெரும் பார்வையாளர்களை ஈர்க்க ஆரம்பித்திருக்கின்ற அதே வேளை தங்களுக்கு என்று தனியாய்  ஒ.டி.டி. ப்ளாட்பார்மை ஆரம்பித்து, புட்சட்னியின் நிகழ்ச்சிகள், மற்றும் தங்களது வெப் சீரிஸ்களையும் ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்படி தங்களை நிருபித்த நிறுவனங்களே அடுத்த கட்டத்தை நோக்கி நகர பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க, பாலாஜிமோகனின் “ஆஸ் ஐயம் சபரிங் பரம் காதல்” சீரீஸ் எடுத்து முடிக்கப்பட்டு, பின்பு ஹாட் ஸ்டாரும், ட்ரண்ட் லவுடும் இணைத்து அதை விலை கொடுத்து வாங்கி ஹாட் ஸ்டாரில் வெளியிட்டது. ஒரு எபிசோட் கிட்டத்தட்ட ஆறு லட்ச ரூபாய்க்கு என்று சொல்கிறார்கள். நிச்சயம் இது லாபகரமான வியாபாரம் தான். ஆனால் எல்லோராலும் இந்த முதலீட்டை செய்து காத்திருக்க முடியுமா? எல்லா நிகழ்ச்சிகளை இப்படி நல்ல விலை கொடுத்து வாங்குவார்களா?. சாட்டிலைட் சேனல் போட்டி போல பலர் பேர் ஆளாளுக்கு ஓ.டி.டி ப்ளாட்பார்ம் ஆரம்பித்துவிட்டாலும் எத்தனை நாளைக்கு இவர்களால் நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்றோருடன் போராட முடியும்? மக்கள் எப்படி இத்தனை பளாட்பார்ம் நிகழ்ச்சிகளையும் பார்ப்பார்கள்?. அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.



Post a Comment

No comments: