Thottal Thodarum

Dec 2, 2017

கொத்து பரோட்டா 2.0-49


சென்சார் போர்ட் என்றாலே பஞ்சாயத்து என்றாகிவிட்டது. ஒரு பக்கம் தரமணி போன்ற படங்களை எடுத்தவர்கள் ஏ சர்டிபிகேட்டை வாங்கிவிட்டு, சென்சாரை கிண்டல் செய்து விளம்பரப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கேணத்தனமான சட்டங்களை புதியதாய் இயற்றிவிட்டு அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே இயற்றுவதும் நடைபெறுவது நம்மூரைத்தவிர வேறெங்கும் நடக்காது. தேசியக் கொடியை மினிஸ்டரி ஆஃப் ஹோம் அனுமதியில்லாமல் பயன்படுத்தக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் விதிமுறையின் படி சென்சார் போர்டும் ஆறு மாதங்களுக்கு முன்னால் படங்களில் தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு அமைச்சக டிபார்ட்மெண்டில் ஏன் இந்தக் காட்சியில் தேசியக் கொடி பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்ற நியாயமான காரணத்தை சொல்லிவிட்டுத்தான் பயன் படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றியிருக்கிறது. இம்மாதிரியான சட்டம் சென்சார் போர்ட் கடைபிடிக்கப் போகிறது என்பதை இந்திய அளவில் திரைப்படமெடுக்கும் பெரும்பாலான இயக்குனர்களுக்கு தெரியவே தெரியாது என்பதுதான் உண்மை. இதனால் இப்படி அனுமதியில்லாமல் படத்தில் பயன்படுத்தியதால் ஒன்று படத்தில் தேசிய கொடி வரும் காட்சிகளில் கொடியை “மசமச’வென ஆக்க சொல்லுகிறார்கள். இல்லையேல் அக்காட்சியையே எடுக்க சொல்கிறார்கள். நம் நாட்டு படத்தில் நம் தேசியக் கொடியை பயன்படுத்தியமைக்காக நாமே அதை மசமசவென ஆக்குவது அபத்ததின் உச்சமாய் தான் தெரிகிறது.

தேசியக் கொடியை யாரும் தவறாய் பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக முன் யோசனையோடு கொடுக்கப்பட்ட தீர்ப்பாக இருந்தாலும், ஒரு காட்சியில் தேசியக் கொடி பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கான உத்தரவுக்காக எத்தனை நாள் காத்திருக்க வேண்டுமோ? ஏற்கனவே இந்த அனிமல் வெல்பேர் ஆட்களின் அடாவது தனிக்கதை. இந்த சட்டத்தினால் சமீபத்தில் வெளியான சிவராஜ்குமார் ஆர்மி ஆபிசராய் டெரரிஸ்டுகளை வேட்டையாடும் கன்னட படத்தில் நம் தேசியகொடி மங்கலாக்கப்பட்டிருக்கிறது. ஜெய்ஹிந்த்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
The Returned
பேய்க் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யம்தான்.  மோகினி, ட்ராகுலா, கொள்ளிவாய் பிசாசு, இச்சினி, அதுஇதுவென ஆயிரம் பேர்களையும் உருவங்களையும் கொண்ட பேய்க்கதைகளை, அவர்களின் ப்ளாஷ்பேக்குகளை கேட்டு, பார்த்திருப்போம். இந்தப் பேய்க்கதை சீரிஸ் கொஞ்சம் வித்யாசமானது. அமெரிக்காவில் உள்ள ஒர் சிறிய டவுன். அதில் ஒர் பள்ளி பஸ் பயணித்துக் கொண்டிருக்க, அதில் கமீலா யோசனையாய் அமர்ந்திருக்க, அவளுள் ஏதோ ஒர் உணர்வு கிளம்பி, உடனடியாய் ஓடுகிற பஸ்ஸிலிருந்து குதிக்க முற்படுகிறாள். அவளை கவனிக்கும் நேரத்தில் பஸ் விபத்துக்குள்ளாகி பெரிய பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்குகிறது. இந்த சம்பவம் நடந்து நான்கு வருடங்களுக்கு பிறகு அதே இடத்திலிருந்து கமீலா விபத்துக்குள்ளான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கால் தரையில் பாவியபடி, எழுந்து நடந்து வீட்டிற்கு வருகிறாள். பெற்றவளுக்கே அதிர்ச்சியாகிறது. ஆவியில்லை. பேயில்லை. அச்சு அசலாய் மீண்டும் உயிரோடு திரும்பி வந்திருக்கிறாள் கமீலா. அதே நேரத்தில் அதே ஊரில் நான்கு வருடங்களுக்கு  முன் திருமணம் அன்று விபத்தில் இறந்து போன சைமன். மீண்டும் உயிரோடு வருகிறான். அவள் அவ்வூரின் போலீஸ் அதிகாரியுடன் திருமணத்துக்கு தயாராக இருக்கும் போது. டோனி எனும் பார் உரிமையாளன் அவனுடய தம்பியை அவனின் மனநிலை தவறிய செயல்களை தாங்க முடியாமல் அடித்து கொன்றிருக்க, அவன் திரும்ப வருகிறான். பல வருடங்களுக்கு முன் இறந்த இன்னொரு பேரிளம் பெண். அமைதியின் சொருபமாய் வரும் சிறுவன் . இவர்களை புரிந்து கொள்ள முயலும் பீட்டர் எனும் மனநல மருத்துவர். செத்து மீண்டும் உடனே உயிர் பெறும் பார் பெண், என பல பேர்  சில முக்கிய காரணங்களுக்காக திரும்ப வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் அதீத சக்திகள் இல்லை என்றும் சொல்ல முடியாது. செத்தால் மீண்டும் உயிர்தெழுந்து விடுவார்கள். ரத்தமும் சதையுமாய் இறந்தவர்கள் மீண்டும் எழுந்து வருவது ஏன்.. எதற்காக? அவர்கள் திரும்ப போவார்களா? இல்லையா? என்பதையெல்லாம் டீடெயிலாக பேசினால் சுவாரஸ்யம் போய்விடும். ஸோ.. நெட்பிளிக்ஸில் இருக்கிறது.. பார்த்துவிட்டு சொல்லுங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Abnormal – குறும்படம்
ஆரோகி மாதக்கணக்கில் அறையை விட்டு வெளியே வராமல் அழுது கொண்டிருக்கிறாள். பள்ளி மாணவி. ப்ளாஷ்கட்டில் காட்சிகள் விரிகிறது. உடன் படிக்கும் மாணவனுடன் நெருக்கமாய் பீல் செய்கிறாள். நாட்கள் செல்லச் செல்ல, அவனின் அக்காவின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. தன் மார்பகங்களை வெறுக்கிறாள். தன் அழகான சுருள் முடியை துறக்கிறாள். ஆண்களுக்கான சட்டையை அணிகிறாள். நண்பனின் அக்கா ராஷ்மியின் விருப்பத்துக்கு முக்யத்துவம் கொடுக்கிறாள். ஒரு நாள் தான் வரையும் ஸ்கெட்ச் புக்கை நண்பனிடம் கொடுத்து அதில் தான் வரைந்திருக்கும் படங்களை வைத்து தான் ஏன் அவனிடமிருந்து விலகியிருக்கிறேன் என்று விளக்க முற்படுகிறாள். ஓர் பாலின ஆர்வம் தன்னிடமிருப்பதை தெரிவிக்கிறாள். பள்ளியில் அவள் கேரோ செய்யப்படுகிறாள். ப்ளாஷ் கட் முடிகிறது. அரோகி தன் அம்மாவிடம் டாக்டரிடம் கூட்டிப் போயாவது என்னை சரி செய். நான் அப்நார்மலாய் இருக்க விரும்பவில்லை என்கிறாள். அம்மா அவளை எப்படி டீல் செய்கிறாள் என்பது தான் கதை. மிக அழுத்தமாய், சிறந்த நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணியிசை என்று பார்த்து செய்திருக்கிறார்கள். கடைசியாய் எல்.ஜிபிடிக்கு சாதகமான வரிகளை கொஞ்சம் லேசாய் பிரசாரம் செய்தாலும் பார்க்க வேண்டிய படம். https://www.youtube.com/watch?v=3ZeQiDGoe0w
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
B.A.PASS
ஜிகிலோ – ஆண் விபசாரனுக்கும் விபசாரிக்கும் இடையே ஏற்படும் காதல், அது ஏற்படும் பின்னணியை வைத்து சில வருடங்களுக்கு  முன் ஒர் நாவல் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் முதல் படம் வேலை பளுவின் காரணமாய் முடிக்காமல் இருக்கிற நிலையில். நான் எழுதிய அதே களத்தை அடிப்படையாய் வைத்து வந்திருக்கும் படம் தான் இந்த பி.ஏ.பாஸ்.

முகேஷின் பெற்றோர்களின் மரணத்தில் படம் ஆரம்பிக்கிறது. வேறு வழியேயில்லாமல் உறவினரின் குடும்பத்துடன் அடைக்கலமாகிறான் முகேஷும், அவனது சகோதரிகளும். அவர்கள் குடும்பத்தோடு இணையவும் முடியாமல், ஆண்டியின் இம்சை தாங்காமல் தங்கைகளை ஒர் ஹாஸ்டலில் விட்டு விட்டு, காலேஜ் போய்க் கொண்டிருக்கிறான். வயதுக்கே உரிய செக்ஸ் ஆர்வமுள்ள முகேஷுக்கும் , சவப்பெட்டி செய்யும் ஜானிக்கும் நட்பு உண்டாகிறது. அச்சமயம் வீட்டிற்கு வரும் ஆண்டியின் தோழிகளில் ஒருத்தியான சரிகா முகேஷை தன் வீட்டிற்கு ஆப்பிள் வாங்கிக் கொண்டு போவதற்காக வரச் சொல்லி, அவனை கட்டாயப்படுத்தி உறவு கொள்கிறாள். அப்படி உறவு கொண்டதற்கு பணமும் கொடுத்து, எத்தனை நாள்தான் உன் ஆண்டியிடம் கையேந்திக் கொண்டிருப்பாய் என்று ஏற்றி விட்டு, அவளைப் போலவே ஆர்வமுள்ள ஆண்டிகளிடம் இவனை அனுப்பி வைத்து ஆண் விபச்சாரி ஆக்குகிறாள். கை நிறைய பணம் சம்பாதிக்க துவங்க, தங்கைகளின் வார்டனின் இம்சை வேறு இருப்பதால் மேலும் பணம் சம்பாதித்து, தங்கைகளை தனி வீட்டில் கொண்டு குடித்தனம் வைக்க முயலும் போது, அண்டியிருக்கும் ஆண்டியின் பையன் அவனின் ட்ராயரிலிருந்து பணம் திருட முயற்சிக்கிறான். அதை பத்திரப்படுத்த சரிகாவிடம் கொடுத்து வைத்துவிட்டு கிளம்பும் போது சரிகா அவனை உறவு கொள்ள அழைக்க, அச்சமயம் பார்த்து அவளின் கணவன் வந்துவிடுகிறான். அதன் பின் அவளை தொடர்பு கொள்ள முடியாமல் போக, அவனின் பணமும், அவளிடம் மாட்டிக் கொண்டுவிட, தங்கைகளை கொண்டு வந்து தனிக்குடித்தனம் நடத்த் பணமில்லாமல் அலைகிறான். வேறு வழியே இல்லாமல் தன்னை ஒருகே’வாக காட்டிக் கொண்டு போகக்கூட முயற்சிக்கிறான். பழைய கஸ்டமர்களை தொடர்பு கொள்ளும் போது சரிகாவின் நெட்வொர்க் மூலமாய் வராததால் அவாய்ட் செய்கிறார்கள். பின் என்ன ஆனது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

மேல் ப்ராஸ்டிடூஷன் “ஜிகிலோ” பற்றிய படம் என்பதால் வெறும் செக்ஸ் படமாய் இருக்குமென்று நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள். படம் ஆரம்பித்தது முதல், சரிகா அவனை செட்யூஸ் செய்யும் காட்சியில் ஆரம்பித்து, அவன் விபசாரனாய் வலம் வரும் காட்சி வரை எங்கேயும் கொஞ்சம் தப்பினாலும், படு ஆபாசமாய் போய்விடக்கூடிய காட்சிகளை மிக நாசூக்காக பெண்களின் எராட்டிசத்தையும், அவர்கள் இன்னொரு முகத்தையும் மிக இயல்பாய் காட்டியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாய் டிவி சீரியல் நடிகை ஒருத்தி முகேஷுடன் உறவு கொள்ளும் போது வேறொரு பெயரை சொல்லியபடியே செக்ஸில் ஈடுபட, ஆரவம் தாங்காமல் முகேஷ் அது யாரு? என்று கேட்க, என் புருஷன் பேரு என்று சிரித்துவிட்டு, கட்டுக்கட்டாய் பணத்தை அவன் மேல் வீசியெறிந்துவிட்டு போகும் காட்சி, இறந்துவிடுவான் என்று தெரிந்தே அவனின் சாவுக்காக காத்திருந்து வெறுத்துப் போய் இவனிடம் வரும் தீப்தி நவல் வரும் ஒரு காட்சி கிட்டத்தட்ட கவிதை. முகேஷ் நெருங்கி வருகையில் வேண்டாம் என்று விலக்கிவிட்டு, அவனிடன் தன் கதையை சொல்லி படுப்பவருக்கு வரும் போனில் அவரது கணவர் இறந்துவிட்டார் எனும் செய்தி வருகிறது. படுக்க வந்த பையனுடனேயே தன் கணவனின் உடலைப் பெற்றுக் கொண்டு, வீட்டிற்குள் இறக்கியவுடன், நீ கிளம்பு.. உறவுக்காரங்க எல்லாம் வந்திருவாங்க என்று சொல்லி அனுப்பும் இடம் க்ளாஸ். 

சரிகாவாக நடிக்கும் ஷில்பா சுக்லாவின் நடிப்பு அருமை. கையும் களவுமாய் கணவனிடம் மாட்டிக் கொண்டபின் என்ன செய்வது என்று பதறாமல் கதவு மூடியிருக்கு இல்லை இப்படி உடைச்சிட்டா வரது என்று கேட்குமிடத்திலாகட்டும்,  சரசரவென முகேஷை கட்டிலில் கிடத்தி, தன் உடைகளை அநாயசமாய் கழட்டி அவன் மேல் பரவுமிடமாகட்டும், க்ளைமாக்சில் வேறு வழியேயில்லாமல் செய்யும் காரியமாகட்டும், அருமை. முகேஷாய் நடித்திருக்கும் சதப் கமலின் நடிப்பும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. இந்த வேலையை செய்ய முடியாது என்று பணத்தை திரும்பிக் கொடுத்துவிட்டு போய்விட்டு வேறு வழியேயில்லாமல் அதை தன் தங்கைகளுக்காக தொடர நேரும் வருத்தமும்,  அதே நேரத்தில் பணத்தை ஏமாற்றியதன் காரணமாய் சரிகாவின் மீது ஏற்படும் கோபமும், ஏதும் செய்ய முடியாமல் கையாலகத்தனமாய் உணரும் காட்சிகளில் அழகாய் சோபித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளராய் இருந்த இயக்குனராய் அடியெடுத்து வைத்திருக்கும் அஜய் பேல் இரண்டு நிலையிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாய் சரிகா வீட்டில் உள்ள கிழவி பேசும் பேச்சு.செஸ்ஸில் ஆர்வமுள்ள முகேஷின் வாழ்க்கையில் செய்த தவறான மூவ் எப்படியெல்லாம் அவனின் வாழ்க்கையை மாற்றியமைத்தது என்று ஒர் காட்சியில் ஜானியும், முகேஷும், செஸ் ஆடும் போது வைத்த காட்சி, இரவு நேர நியான் விளக்குகளின் இடையே ஓடும் முகேஷை துரத்தும் காட்சி, சரிகாவுக்கும், முகேஷுக்கும் இடையே நடக்கும் உடலுறவு காட்சி என  டபுள் செஞ்சுரி அடித்திருக்கிறார். ஏகப்பட்ட திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் படமாய் அமைந்திருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. நிச்சயமாய் போல்டான, ஒரு டார்க் படம் பி..பாஸ்.



Post a Comment

No comments: