Thottal Thodarum

Dec 23, 2017

கொத்து பரோட்டா 2.0-50

கொத்து பரோட்டா -2.0-50
சினிமா வீரன்
’ஒரு வண்டிக்கு குறுக்கே இன்னொரு கார் நுழையுது. அதைப் பார்த்த வண்டிக்காரன் சடன் ப்ரேக் அடிக்கிறான். அது ஸ்கிட் ஆகி அப்படியே வண்டி மேல இடிச்சி பறந்து போய் விழுது’  இப்படி எழுதும் போதும், சொல்லும் போது சுலபமாய் இருக்கும் விஷயம் காட்சிப் படுத்தும் போது சுலபமாய் இருப்பதில்லை. ஏற்கனவே அனுபவமிருந்தாலும் நம் படத்திற்கு செய்யும் போது பதட்டமாய்த்தான் இருந்தது.

எத்தனையோ படங்களில் பார்த்த ஆக்‌ஷன் காட்சிகள் தானே? இதில் என்ன பெரிய விஷயம்?. டென்ஷன்?. என்று யோசிக்கலாம். எத்தனையோ படங்களில் நடந்த விபத்துக்கள். நின்ற படப்பிடிப்புகள் என பல விஷயங்கள் மனதில் ஓடியது. வண்டி ஜம்ப்புக்கான ரன்வே ரெடியாகிவிட்டது. வண்டியை ஓட்டப்போகும் குட்டியண்ணனை மாஸ்டர் அறிமுகப்படுத்தினார். அகண்ட தோள்களுடன்  பார்க்க கரடு முரடாய். கொஞ்சம் சாய்ந்து சாய்ந்து நடந்து வந்தார். பேச்சில் குழந்தைத்தனம் இருந்தது. 

அண்ணே.. லெப்டுல ஜிம்மில ஒரு எம்.எக்ஸ். இங்க ஒரு எபிக், ராம்புக்கு கீழே ஒரு கோ ப்ரோ. எதிர்ல வர்ற கார்ல ஒரு 5டி, அது தவிர ஒரு கோ ப்ரோ உங்க வண்டிக்குள்ள என்று சொல்ல.. அண்டர் டேக்கன் என்றார் குட்டியண்ணன். புரிஞ்சிக்கிட்டாராம். ராம்ப் தயாராக ஆரம்பித்தது. இதன் நடுவில் அவர் ஸ்கார்பியோ காரை எடுத்து ஒரு நாலு வாட்டி ரன் வேயில் ஓட்டினார். டெஸ்ட் ரைடே80 கி.மீ ஸ்பீட். எல்லா கேமராக்களையும் பிக்ஸ் செய்யப்பட்டது. மக்கள் கூட்டம் வேறு சேர்ந்ததுவிட, எல்லார் முகத்திலும் ஆர்வம் அதிகமான காணப்பட்டது.  குட்டியண்ணன் பதட்டமில்லாமல் இருந்தார்.

இது மாதிரி எத்தனை ஜம்ப் பண்ணியிருக்கீங்கண்ணே?

அது நிறைய சார். என்றபடி தன் கையில் உள்ள ஒரு குட்டி செல் போனில் ஒரு வீடியோவை காட்டினார். அதில் இரண்டு கார்கள் தலைக்குப்புற விழுந்து பல்டியடித்துக் கொண்டிருந்தது. இரண்டாவது கார்ல நான் தான் இருந்தேன் என்றார் பெருமையாய். வீடியோவை பார்த்துவிட்டு நிஜத்தில் அதனுள் இருந்த ஆளைப் பார்க்கையில் லைட்டாய் ஜெர்க்காகத்தான் செய்தது.

இது வரைக்கும் எத்தனை ஜம்ப் பண்ணியிருப்பீங்கண்ணே?

சரியா ஞாவகமில்லை. 60-70 இருக்கும்

பெருசா அடி ஏதும் பட்டதில்லையில்லை?

அது இல்லாமய.. உடம்பு பூராவும் உள் காயமா நிறைய இருக்கும். கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு ஓட்ட வேண்டியதுதான். எங்களூக்கு எல்லாம் மெடிக்கல் இன்சூரன்ஸ், லைஃப் இன்ஸூரன்ஸ் ஏதும் கிடையாது தெரியுமா? என்றபோது இதெல்லாம் இல்லாமயே இப்படியெல்லாம் செய்யுறோம் பாத்தியா என்ற பெருமை.

வண்டியில ஏறச் சொல்ல என்னா நினைப்பீங்க?

ஒண்ணியும் நினைக்க மாட்டேன். நினைச்சா.. வண்டி ஒழுங்கா ராம்புல ஏறாது.   வண்டிய ரன்வேல ஓட்டிட்டேன்னா அவ்வளவுதான். ஃபீனீஷ். அதுக்கப்பால ரன்வேல ஒரு சைடா, ஏத்தும் போது கண்ணை மூடிக்குவேன். அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் நம்ம கையில இல்லை. என்று மேலே கையைக் காட்டினார். ஒரு முறை ஸ்பீடாய் வண்டி ஓட்டி பேலன்ஸ் போய் சிராய்ப்பு வாங்கியதிலிருந்து மழைக்காலங்களில் ஸ்பீடாய் வண்டியோட்ட இன்றும் யோசித்துக் கொண்டிருக்கும் என்னை நினைத்து பார்க்கையில் அபத்தமாய் இருந்தது. வீழ்ந்தால் என்னவாகும் என்று தெரிந்தே மறுபடியும் மறுபடியும் விழும் வேலை செய்யும் அவரை பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது.

மாஸ்டர், கேமராமேன், என்னை, குட்டியண்ணனை ராம்புக்கு முன்னால் நிற்க வைத்து எலுமிச்சை பழம் சுற்றிய போது வயிற்றுக்குள் சுர்ரென அமிலம் ஊறியது. அதுவரை எனக்குள் எல்லா கேமராவிலேயும், சரியா விழணும். எத்தனை ஷாட் கிடைக்கும். கேமரா ஆங்கிள் வச்ச இடத்தில சரியா வண்டி விழணும்னு இப்படியெல்லாம் மட்டுமே யோசித்துக் கொண்டிருந்த என் நினைப்பில் சட்டென அப்பா பெரியாண்டவனே.. குட்டியண்ணனுக்கு ஏதும் ஆகாம நல்ல படியா எழுந்து வரணும் என்று தோன்றியது. மாஸ்டரில் ஆரம்பித்து, ஒவ்வொருவராய் குட்டியண்ணனை கட்டி அணைத்து நல்லா வாங்கண்ணே என்று வாழ்த்தும் போது கண்ணீர் மல்கி எங்கே அழுதுவிடுவேனோ என்று தோன்றியது. அண்ணன் எந்த விதமான உணர்வும் இல்லாமல் எல்லோரிடமும் கை கொடுத்துவிட்டு, சட்டென வண்டியில் ஏறி உட்கார்ந்து ரன் வேயின் அடுத்த முனைக்கு கிளம்பினார்.  கிளம்பிய அடுத்த நொடியில் எல்லார் உடலிலும் பரபரப்பு தொற்றிக் கொள்ள, எல்லா கேமராக்களையும் சரியாக பிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறதா? என்று ஒன்றுக்கு மூன்று முறை செக் செய்துவிட்டு ரெடி மாஸ்டர் என்று வாக்கியில் கத்தினேன், மாஸ்டர் குட்டியண்ணுக்கு அருகில் இருந்த அஸிஸ்டெண்டுக்கு ரெடி ரோட் கிளியர் வண்டி கிளப்புங்க.. ஆக்‌ஷன் என்று கத்த, பெரும் கூட்டம்  இருந்த இடத்தில்  மூச்சுவிடும் சத்தத்தை தவிர வேறேதுமில்லை.  “வண்டி ஸ்டார்ட் ஆயிருச்சு என்று வாக்கியில் பதில் வந்ததும் எல்லார் கவனமும், வண்டி வரும் திசையிலேயே இருக்க,  தூரத்தில் வெகு வேகமாய் ஒரு கார் வரும் சத்தம் மெல்ல கேட்க, கிட்டே வர வர, அதன் சத்தம் அதிகமாக பீல்டில் எட்டிப்பார்த்த மாஸ்டர் வண்டி வந்திருச்சு என்று கத்திக் கொண்டே மறைவிடத்தை நோக்கி ஓட, ஐந்து கேமராக்கள் ஒரே நேரத்தில் சுழல, பெரும் சத்தத்துடன் வந்த வண்டி, ராம்பின் மேல் டம்மென்ற சத்தத்துடன் மோதி ஏறி, சட்டென அந்தரத்தில் ஒரு சுழன்று சுழன்ற வேகத்தில் தரையில் நெட்டுக்குத்தாய் சட்டென குத்தி, எக்குத்தப்பாய் மறுப்பக்கம் சுழன்று தரையில் மோத, எதிர் திசையில் 5டியை முகத்தில் கட்டிக் கொண்டு வந்த குவாலிஸ் ட்ரைவர் தன் கார் மீது மோத இருந்த குட்டியண்ணன் வண்டியை படு நேக்காய் தவிர்த்து, காரில் இருந்த படி ஆஆஆஆஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று பெருங்குரலெடுத்து கத்தியபடி குட்டியண்ணனின் வண்டியை அரைவட்டமடித்து ஸ்கிட்டோடு தன் கேமராவை மீண்டும் குட்டியண்ணனின் வண்டியை நோக்கி திருப்ப ஸ்கிட் செய்து புழுதி பரக்க நிறுத்திய விநாடி, குட்டியண்ணனின் வண்டியும் நின்றது. சடுதியில் நடந்துவிட்ட இத்தனை நிகழ்வுகளில் ஆச்சர்யத்தையும்  தாங்க முடியாமல் மொத்த கூட்டமும் அதே அமைதியுடன் இருக்க, சட்டென ரிலாக்சான குழு ஆட்கள் குட்டியண்ணனின் வண்டியின் அருகே ஓடினார்கள்.

உள்ளேயிருந்த அண்ணணை உடைந்த கண்ணாடிகளூக்கிடையே விலக்கி, மெல்ல தன் உடலில் இருந்த பேட் எல்லாவற்றையும் விலக்கி மெல்ல கண் விழித்து சிரித்தபடி எழ,  குட்டியண்ணன் ஸேஃப். எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி. விழுந்த அதிர்ச்சி, ஆச்சர்யம் எல்லாவற்றையும் மீறி எல்லா கேமராக்களிலும் ஒழுங்காய் பதிவாயிருக்கிறதா என்று பார்க்கும் ஆர்வம் மிக, அண்ணனை கட்டியணைத்துவிட்டு, அதற்கு ஓடிவிட்டேன். என்னா ஒரு சுயநலமி நான் என்று என்னையே நொந்து கொண்டேன். 

ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்தில், ரஜினியின் வாய்ஸ் ஓவரில், சினிமா ஸ்டண்ட் கலைஞர்களைப் பற்றிய ”சினிமா வீரன்” ஆவணப்படத்தை பார்க்கும் போது என் படத்தில் நடந்த நிகழ்வுகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. முதல் காட்சியில் ஸ்டண்ட் யூனியனில் படப்பிடிப்பின் போது இறந்தவர்களின் புகைப்படங்களை மாட்டியிருப்பதற்கான காரணம் சொல்லும் போதே தொண்டையை அடைக்கும்.

ஒவ்வொரு ஸ்டண்ட் கலைஞர்களின் பேட்டியின் பின்னால் உள்ள சுவாரஸ்யத்தையும் மீறி, கண்களில் லேசான பயத்துடன் பேட்டி கொடுக்கும் அவர்களது ஸ்டண்ட் சாதனைகளை சொல்லும் போது அவர்கள் முகத்தில் தெரியும் பெருமையை விட, அவர்களது மனைவிமார்களின் முகத்தில் தெரியும் லேசான கலவர முகம் படம் பார்த்த பின்பும் நிழலாடுகிறது.  நிச்சயம் இந்த சினிமாவீரன் கவனிக்கப்பட, வணக்கத்துக்குரிய  ஆவணமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் – Carbon
நவாசுதீன் சித்திக் சின்ன கேமியோ கேரக்டர் செய்திருக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் குறும்படம். 2067ல் பூமியெங்கும் கார்பன் படர்ந்து, இயற்கையாய் சுவாசிக்க, ஆக்ஸிஜனும், தண்ணீரும் இல்லாமல் போயிருக்க, அரசு தரும் இலவச ஆக்ஸிஜன், விட தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் ஆக்ஸிஜன்களின் வியாபாரம் பெருகியிருக்க, இயற்கை இதயமில்லாத இக்கதையின் கதாநாயகனுக்கு எப்போது இயற்கை ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல அனுமதியிருக்கிறது. அதை மார்ஸுக்கு கடத்த இவன் மூலம் ப்ளான் செய்கிறது.எப்படியாவது பூமியிலிருந்து கிளம்பி மார்ஸில் சென்று செட்டிலாக வேண்டுமென்பதே இவனது குறிக்கோள். ஆக்ஸிஜனிஅ கடத்தும் ராண்டம் சுக்லாவின் நிலை என்ன ஆனது? மார்ஸுக்கு ஏன் கடத்துகிறார்கள். ராண்டம் சுக்லா அங்கே சந்திக்கும் பெண் பரி யார்? போன்ற பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாய் விடையளித்திருக்கிறார்கள். கூடவே சுற்றுப்புற சூழலை நாம் இப்போது பாதுகாக்கவில்லையென்றால் எதிர்காலத்தில் எப்படி வாழ வேண்டியிருக்கும் என்று பயமுறுத்தவும் செய்கிறார்கள். சுவாரஸ்யம். https://www.youtube.com/watch?v=zMVpwc1nO2k

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

No comments: