Thottal Thodarum

Dec 2, 2017

ஓ.டி.டி. எனும் மாயவன் -4

ஓ.டி.டி. எனும் மாயவன் -4
ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், யெப் டிவி, சன் நெக்ஸ்ட், ஆல்ட் பாலாஜி, வியூ, வூட், சோனிலிவ், ஜியோடிவி, ஏர்டெல்டிவி, என மீடியாக்காரர்களும் தொலை தொடர்பு நிறுவனத்தினரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆளாளுக்கு  தனி ஆவர்தனம் வாசிக்க, சமீபத்தில் சாட்டிலைட் சேனல்களில் சி கிரேட் சேனல்கள் எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து ஒர் ஆப்பை நிறுவி, அவர்களுக்கு என்று ஒர் ஓ.டி.டி. ப்ளாட்பாரமை ஆரம்பித்திருக்கிறார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் நான்கைந்து புதியவர்கள் இந்தியாவெங்கும் ஆரம்பித்திருக்க வாய்ப்பு அதிகம்.

இப்படி ஆரம்பிக்கப்படும் ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள் எப்படி சர்வைவ் ஆகப் போகிறது?. சன் நெக்ஸ்ட், ஹாட்ஸ்டார் சோனி, வூட் போன்றோர்கள் பெரும்பாலும் அவர்களது டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியும், அதில் நடுவே தனியாய் மார்கெட் செய்யப்பட்ட விளம்பரங்களோடு சர்வைவ் ஆக, டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் ஒரிஜினல் கண்டெண்ட்டுகளை ஒளிபரப்ப ஆகும் செலவுகளை ப்ரீமியம் சர்வீஸ் என, மாத சந்தா வாங்கிக் கொண்டு காட்டுகிறார்கள். உதாரணமாய் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் பீக்கில் இருந்த காலத்தில் டிவியில் பார்க்க முடியாமல் அடுத்த நாள் ஹாட்ஸ்டாரில் இலவசமாய் பார்த்து பழக்கப்பட்டவர்களிடையே இனிமே இது ப்ரீமியம் சர்வீஸ் மாத சந்தா 199 கட்டினால் மட்டுமே பார்க்க முடியும் என்றார்கள். பிக்பாஸின் பரபரப்பு குறைய அந்த நிகழ்ச்சியை ப்ரீமியத்திலிருந்து விலக்கி, இலவசமாக்கி விட்டனர்.

ஆனால் ஹாட்ஸ்டாருக்கு போனால் பார்க்க முடியும் என்கிற ஒர் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இப்படி பழக்கம் ஆக, ஆக, மெல்ல டிவியில் இல்லாத ஒரிஜினல் சீரிஸ்களான “ஆஸ் ஐயம் சபரிங் ப்ரம் காதல்” ”சண்டை வீரன்” போன்ற டாக்குமெண்டரிகளை அறிமுகப்படுத்தி பார்க்க வைக்க, ஹெச்.பி.ஓவின் சேனலின் சீரீஸ்கள் எல்லாவற்றையும் அமெரிக்காவில் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே இவர்களது ஆப்பில் சென்சார் இல்லாமல் பார்க்க ப்ரீமியம் மாத கட்டணம் 200 வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய நிகழ்ச்சியின் தரம்தான் அவர்களது மாத வருவாயை அதிகரிக்கவோ, குறைக்கவோ போகிறது எனும் போது சந்தாதாரர்களை தக்க வைக்க, தரமான நிகழ்ச்சிகளை அவர்களுக்கு தந்தே ஆக வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு. தொடர்ந்து மொக்கை நிகழ்ச்சிகளாய் கொடுத்துக் கொண்டிருந்தால் அடுத்த மாதம் சந்தாதாரர் வேறு சேனலுக்கு போய்விடுவார்.

ஹாட்ஸ்டாருக்கு 200, சன் நெக்ஸ்டுக்கு  50, ஆல்ட் பாலாஜிக்கு வருடத்துக்கு 300, நெட்ப்ளிக்ஸுக்கு 500, ப்ரைம் வீடியோவுக்கு வருடத்திற்கு 499 என எத்தனை பேருக்கு ஒரு சந்தாதாரர் பணம் கட்ட முடியும்? கேபிள் டிவி, இண்டர்நெட், இந்த ஓ.டி.டி. ப்ளாட்பார்ம்கள் என முவாயிரம் நாலாயிரம் எல்லாராலும் செலவு செய்ய முடியுமா?  ஏதாவது ஒன்றிரண்டு பணம் கட்டலாம். அப்படி கட்ட வேண்டுமெனில் அந்த ப்ளாட்பாமின் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களை கவரும் வகையில் இருக்க வேண்டி தயாரித்து அளிக்க வேண்டும். நெட்ப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோவில் எல்லாம் கண்டெண்டுகள் கொட்டிக் கிடக்கிறது. இத்தனைகுமான முதலீட்டை மாத சந்தாவிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதற்கு பல வருடங்கள் கூட ஆகலாம். அதனால் டீப் பாக்கெட் எனும் நல்ல பண பலமுள்ள நிறுவனங்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விவகாரம்.

இப்படி ஆரம்பிக்கும் ஒவ்வொரு ப்ளாட்பார்முக்கும் நிச்சயம் சினிமா, மட்டுமில்லாமல், ஒரிஜினல் நிகழ்ச்சிகளாய் பல புதிய கண்டெண்டுகள் தேவை. அத்தனை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி மாத சந்தா மூலமோ, அல்லது விளம்பரம் மூலமாகவோதான் அவர்களது முதலீட்டை திரும்ப எடுக்க முடியும். ஆனால் இன்றைக்கு அவர்கள் செலவு செய்யும் பணம் இன்றைக்கே வரும் என்பது நிச்சயம் கிடையாது. ஏனென்றால் இந்த துறை தற்போதுதான் தவழ ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகளை தயாரித்து தங்களது லைப்ரரியை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்க, அவர்களது வருமானம் அதிகரிக்கும்.

யூட்யூப் சேனல் மூலமாய் பிரபலமாகி, இன்றைக்கு சினிமாவில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கு ஸ்மைல் சேட்டை விக்னேஷ், மெட்ராஸ் செண்ட்ரல் கோபி, என பல புதிய முகங்கள் வெற்றியாளர்களாய் வளைய வரும் வாய்ப்பு இந்த ஓ.டி.டி. ப்ளாட்பார்மினால் சாத்தியமாகியிருக்கிறது.

பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சினிமா, டிவி, என இரண்டில் மட்டுமே இருந்தவர்களுக்கு இன்னொரு புதிய களம். நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு ஒர் புதிய களத்திற்கான வாய்ப்பு.  என பல பேருக்கு பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிற இந்த மாயவன் நம் நாட்டுக்கு புதியவன். 

நம் நாட்டின் இண்டர்நெட் மூலமாக பொழுது போக்கு சாத்தியமா? என்று பார்த்தால் ஜியோவுக்கு முன் ஜியோவுக்கு பின் என்றுதான் பார்க்க வேண்டும். ஜியோவின் வருகை, ப்ராட்பேண்ட் இண்டர்நெட்டின் வளர்ச்சி, விலை வீழ்ச்சி எல்லாம் டவுன்லோட் செய்து பார்த்தவர்கள் எல்லோரும் ஸ்ட்ரீமிங்கில் பார்க்க வசதி வாய்ப்பு உருவாக காரணமாகியிருக்கிறது. இதனை பயன்படுத்தி பலபுதிய வியாபாரங்கள் உருவாக வாய்ப்புமிருக்கிறது.  எல்லா வியாபாரங்களைப் போல இந்த புதிய ஓ.டி.டி. ப்ளாட்பார்மிலும் லாப நஷ்ட ரிஸ்க் அதிகம் என்றாலும் மீடியா எனும் நட்சத்திர வசீகரம் இழுக்காமல் இருக்காது.

இன்றைய தேதிக்கு இருபதுக்கு மேலான ஓ.டி.டி. ப்ளாட்பார்ம் துரித கதியில் சில பல கோடிகளை முதலீடிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்க, விளம்பரமோ, சந்தாவோ இவற்றில் ஏதாவது ஒன்றை நம்பியே இந்த வியாபாரம் இருக்கிறது. இலவசமாய் தெரியும் வரை எல்லா ஓ.டி.டி. ப்ளாட்பார்ம்களையும் பார்க்கும் மக்களால் பணம் ஆகும் போது பார்பார்களா? என்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். அப்படி தனித்தனியாய் கல்லா கட்டமுடியாத நிறுவனங்களை பின் வரும் காலத்தில் அமேசான், நெட்ப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார் போன்ற திமிங்களங்கள், அவர்களின் ஒரிஜினல் கண்டெண்டோடு கபளீகரம் செய்ய காத்துக் கொண்டுதானிருக்கும். அப்படியில்லையெனில் அவர்களது ப்ளாட்பாமில் ஒரு இடத்துக்கு துண்டைப் போட்டுக் கொண்டு சர்வைவ் ஆக வேண்டியிருக்கும் நிலையும் உருவாகும். சரி.. ப்ளாட்பார்ம் நடத்தும் இவர்களது நிலையே இப்படியிருக்க, இவர்களுக்காக நிகழ்ச்சிகளை தயாரிக்கிறேன் என்று இறங்கியிருக்கும் நிறுவனங்கள் எப்படி லாபம் சம்பாதிக்கும் ? என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.



Post a Comment

No comments: