பைரஸியும் சினிமாவும்.
நியாயமாய்
சினிமாவும் பைரஸியும் என்று தான் ஆர்மபித்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையில்
சினிமா என்றில்லாமல் எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் ஆக்டபஸாய் ஆக்கிரமித்து அழித்துக்
கொண்டிருப்பது பைரஸி என்பதால் அது முதல் நிலையில் செல்ல வேண்டிய கட்டாயம். சென்ற வாரம்
என்னுடய புதிய திரைப்படமான “6 அத்யாயம்” திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு
விழா நடந்தேறியது. இது ஒரு அந்தாலஜி திரைப்படம்.
ஆறு கதைகள், ஆறு இயக்குனர்கள், ஒரே ஜெனர். முக்கியமாய் உலக திரைப்பட வரலாற்றில் முதல்
முறையாய் அனைத்து கதை க்ளைமேக்ஸ்களும் கடைசி அரை மணி நேரத்தில் காண்பிக்கப்படும் படம்.
இப்படியான சிறப்புகள் கொண்ட சுயாதீன திரைப்பட விழாவுக்கு வந்திருந்து வாழ்த்தியவர்கள்
அனைவரும் பேசிய முக்கிய விஷயம் நாம் ஐந்து வாரமாய் பேசிய ஓ.டி.டி டிஜிட்டல் ப்ளாட்பார்ம்
பற்றியும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ப்ளாட்பார்ம்களின் ஆக்கிரமிப்பு எப்படி இருக்கப்
போகிறது என்பதைப் பற்றியும்.பைரஸி பற்றியும் தான்.
சினிமா
டிஜிட்டலாய் மாற ஆரம்பித்ததிலிருந்த காலத்திலிருந்தே பைரஸி ஆரம்பித்துவிட்டது என்று
சொல்ல வேண்டும். ஊர் திருவிழாவில் திரை கட்டி படம் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாம்.
வீடியோ கேசட் வந்த பிறகு அதே கொண்டாட்டத்தோடு 12 /24 மணி நேரங்களுக்கு வாடகைக்கு எடுத்து
மொத்தமாய் நான்கைந்து படங்கள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் நாலு பழைய படமென்றால் ரெண்டு புது படமாய்த்தான் இருக்கும். அப்படி வரும்
புதுப்படங்கள் திருட்டுத்தனமாய் எடுக்கப்படும் கேமரா பிரிண்டுகளாய் இருக்கும், ரெண்டு
வாரத்துக்கு பின்பு அதே படம் உருது சப்டைட்டில்களோடு, திரை நெடுக நீலம் ஆக்கிரமிக்கப்பட்ட
கொஞ்சம் நல்ல ப்ரிண்ட் வரும். மீண்டும் சில வாரங்களுக்கு பின் நல்ல தரமான வீடியோ பிரிண்டுகள்
வலம் வரும். முதலில் வந்தது திருட்டுத்தனமாய்
திரையரங்குகளில் எடுக்கப்பட்ட வீடியோ. அதன் பின் வருபவை எல்லாம் வெளிநாட்டு உரிமை என்று
அரபு மற்றும் சிங்கப்பூர் மலேசியாவுக்கு விற்ற உரிமம் மூலமாய் வீடியோ கேசட்டுக்கள்
வெளியிடப்பட்ட சூட்டோடு, நம்மூருக்கு ப்ளைட் ஏற்றிவிடுவார்கள். பின்பு வழக்கம் போல
காப்பிகள் போடப்பட்டு விநியோகம் நடக்கும்.
வீடியோ
கேசட்டை புதிய வரவான சீடி வந்து மொத்தமாய் ஆட்டத்திலிருந்து விலக்கினாலும், பைரஸி உள்ளங்கை
அடக்கமானது. அடுத்த கட்டமாய் டெக்னாலஜியின் புதிய வரவான கேபிள் டெலிவிஷன் வந்து சீடியின்
டிமாண்டை குறைத்தது ஒரு சிடி வாங்கி பல நூறு காப்பிகள் போட வேண்டிய தேவையில்ல. ஒரு
சிடி எடுத்து கேபீள் டிவியில் போட்டா ஊரே பார்த்துவிடலாம். என்ற நிலையில் இணையம் பிரம்மாண்டமாய்
வளரத் தொடங்கி, இன்று 100 எம்.பிபிஎஸ் வேகத்தில் வீட்டில் உட்கார்ந்தபடியே ஒரு முழு
படத்தை மூன்று நிமிடங்களில் எல்லாம் டவுன்லோட் செய்யக்கூடிய நிலையாகிவிட்டபடியால் பைரஸியும்
மிக வேகமாய் வளர ஆர்மபித்துவிட்டது. மக்களுக்கும் தாங்கள் செய்வது தவறு என்று உறுத்துவதில்லை.
சினிமா, எண்டர்டெயிண்ட்மெண்டுக்காக செய்யும் திருட்டுக்கள் திருட்டுக்களாகவே மக்களுக்கு
படுவதில்லை.
வீடியோ
கேசட் காலத்தில் வெளிநாட்டு உரிமை விற்பதால் தான் பைரஸி வருகிறதென்று வெளிநாட்டு உரிமம்
முதல் மூன்று வாரங்களுக்கு விற்காமல் எல்லாம் முயன்று பார்த்தார்கள். தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள். பட் நோ யூஸ். இன்றைக்கும் அதே போல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்
சங்கம் இருபது வருஷத்துக்கு முன் பேசினார்ப் போலவே பேசிக் கொண்டிருக்க, பைரஸி கட்டுக்குள்
வந்த பாடில்லை. ஆந்திராவைப் பாருங்கள், கேரளத்தை பாருங்கள், ஹிந்தி திரையுலகை பாருங்கள்
அங்கேயெல்லாம் பைரஸியே இல்லை என்று உதாரணத்தோடு சொன்னாலும், ஆந்திரத்தில் பெரும்பான்மை மக்களின் எண்டர்டெயிண்ட்டான
சினிமா எக்ஸ்பென்ஸிவ் கிடையாது என்பதும், நல்ல தரமான ஒளி, ஒலி அமைப்புகளுடன் கூடிய
அரங்கில் 80 ரூபாய்க்குள் திரைப்படம் பார்க்க முடியும் என்பதும், கேரளாவில் மக்களே
பைரஸியை வரவேற்க்காமல் இருக்க, அதையும் மீறி கேரள அரசு பைரஸிக்கென்றே ஒர் தனி பிரிவை
தொடங்கி, அப்லோட், டவுன்லோட் செய்கிறவர்களை எல்லாம் ஐ.பி அட்ரஸ் தேடி கண்டுபிடித்து
முட்டிக் முட்டி தட்டிக் கொண்டிருப்பதை சொல்ல மாட்டார்கள்.\
பைரஸி
குறைய வேண்டுமென்றால் மக்களின் வாங்கும் சக்திக்கு ஏதுவான விலை. தரமான அரங்குகள், வரும்
பார்வையாளர்களுக்கான சேவை என இவையெல்லாம் மிகவும் முக்கியம். பொழுது போக்கிற்காக உள்ளே
வரும் பார்வையாளனின் டவுசரை மொத்தமாய் அவித்து விடாமல் இருப்பது மிக முக்கியம். சமீபத்தில் ஒர் ஆங்கில
வெப்சைட்டில் தமிழ் ராக்கர்ஸின் அட்மின் ஒருவரிடம் பேட்டி எடுத்ததாய் போட்டிருந்தார்கள்.
அதில் தயாரிப்பாளர்களே படங்களை லீக் செய்ய தயாராய் இருப்பதாகவும் சொல்லியிருந்தார்கள்.
ஓரளவுக்கு அது உண்மை என்றாலும், அந்த பெரிய பேட்டி பெரும் பொய் என்பதுதான் நிஜம். ஏனென்றால்
அந்த பேட்டியில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் பத்திரிக்ககளில் படித்த விஷயங்களின் தொகுப்பாய் தான் இருந்தது.
ஆந்திராவில்
அத்தாரிண்டிக்குதாரேதி எனும் பவன் கல்யாண் படத்தை
காழ்ப்புணர்ச்சி காரணமாய் இணையத்தில் வெளியிட்ட கதை, போட்டி பொறாமையால் வெளியிட்டார்கள்
என்பது போல பல கதைகள் உலவினாலும் இன்றைய அளவில் ஒரு படம் வெளியாகும் முன்பே பைரஸியாய்
வெளியாகும் சாத்தியம் இரு நூறு சதவிகிதத்துக்கும் மேல். அத்தனை வழிகள் இருக்கிறது. பிலிம் இருந்த காலத்தில் இது
சாத்தியமே இல்லை. அத்துனை ஃபூல் ப்ரூப் பாதுகாப்பு இருந்தது. டிஜிட்டலான பின் எப்படி
அவ்வளவு சுலபமாய் பைரஸி செய்ய முடியும்? பைரஸி நிஜமாய் எங்கிருந்து வருகிறது? என்பதை அடுத்த கட்டுரையில் பார்போம்.
Post a Comment
No comments:
Post a Comment