Thottal Thodarum

Jan 14, 2018

கொத்து பரோட்டா 2.0-52

கொத்து பரோட்டா 2.0-52
பெஃப்ஸி ஸ்ட்ரைக். தொழிலாளர் பிரச்சனை என்றெல்லாம் பரபரப்பாக தமிழ் சினிமா நிகழ்ந்து கொண்டிருக்க, இதற்கான காரணம் திரைப்பட தயாரிப்பாளர்கள் புதிய ஆட்களை தெரிவு செய்து தனியே ஒரு சங்கத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுதான். புதிய ஆட்களை தெரிவு செய்வது என்பதும், இவர்களுடன் மட்டுமே வேலை செய்ய வேண்டுமென்ற மோனோபாலி மனப்பான்மை இனி வேலைக்காகாது என்பதையும் பெஃப்ஸிக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த சுதந்திர ஆள் எடுப்பு படலத்தினால் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் உழைப்பு சுரண்டல்கள் அதிகமாகப் போகிறது என்றே தோன்றுகிறது.

தொழிலாளர்களுக்கு எல்லாம் ஷூட்டிங் என்று போய்விட்டால் நிச்சயம்  சன்ரைஸ் கால்ஷீட்டில் ஆரம்பித்து, காபி டிபன், பேட்டா, என எல்லாமே கட்டாயம் உண்டு. ஆனால் ஷூட்டிங் நடந்தாலும், சரி நடக்காவிட்டாலும் சரி பேட்டாவோ, சம்பளமோ நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையே இல்லாமல் கிடைக்கிற வரைக்கும் லாபம். எப்படியாவது முட்டி மோதி ஒரு படம் பண்ணிரணும்னு துடியாய் உழைக்கிற உதவி இயக்குனர்கள் நிலை தான் பாவம். ஒரு திரைப்படம் தயாரிக்க தயாரிப்பாளர் எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் எடுக்க நினைக்கிற படத்தை திரைக்கு கொண்டு வர போராடும் இயக்குனர் அண்ட் உதவி இயக்குனர் டீம். ஆனால் இருப்பதிலேயே மிகவும் குறைவாய் மதிக்கப்படுகிறவர்கள் இவர்கள் தான்.  சம்பளம் தான் இல்லை. அட்லீஸ்ட் பேட்டாவாவது கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்ற நிலை இருந்ததை புதியதாய் வந்து வெற்றி பெற்ற சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அது கூட கிடையாது ஷூட்டிங் போனால் தான் பேட்டா என்று சொல்லிவிட, மாத சம்பளமாவது வருமா என்று பார்த்தால் அதுவும் வரும் போதுதான். சரி ஷூட்டிங் போனால் பேட்டா என்ற சந்தோஷமும் ஒவ்வொரு நாள் கடைசியிலும், மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே தரப்பட, நாளைக்கு வாங்கிக்கங்க என்று கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் துறத்தப்படும் இனம் உதவி இயக்குனர்கள் தான்.

பெரிய இயக்குனர்கள் படங்களில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தவர்கள் பாக்யவான்கள். நிச்சயம் மாத சம்பளம் ஒழுங்காய் வந்துவிடும். இன்னும் சில இயக்குனர்கள். ஒரு டூவீலர் கூட வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவர்களிடம் இருக்கும் நானூத்து அம்பது உதவியாளர்களில் ஒருவராய் தான் இருக்க முடியும். இருக்குற கூட்டத்தில் போராடி டைரக்டருக்கே நான் உங்க அஸிஸ்டெண்ட் என்று அவ்வப்போது நியாபகப்ப்டுத்தி எதையாவது செய்து, வெளியே வந்து படம் வாய்ப்பு பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஒரு முறை இந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்கை அனுபவத்தவர்கள் அதில் இருந்து வெளியே வர கஷ்டப்படுவார்கள். ஏனென்றால் இந்த நிலையான உதவி இயக்குன அனுபவம் வெளியே கிடைப்பது அரிதிலும் அரிது.

இத்தனைக்கும் இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு என்று சங்கம், பேட்டா, சம்பளம் ரூல்ஸ் எல்லாம் உண்டென்றாலும் வேலைக்காகாது. ஹிட் படம் கொடுத்த இயக்குனர்களுக்கு கூட முழு சம்பளத்தை செட்டில் செய்யாத தயாரிப்பாளர்கள் நிறைய பேர் உண்டு . ஏன் என்னைப் போன்றவர்களுக்கே பணம் கொடுக்காமல், வருடக்கணக்கில் இழுத்தடிக்கும் தயாரிப்பாளர்கள் இருக்கும் நிலையில் புதியதாய் தெரிந்தெடுக்கும் டெக்னீஷியன்களை, வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற மகோன்னத உயரத்திலிருந்து அவனின் அடிப்படை செலவுக்குக்கூட கொடுக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் கலவரமாய்த்தான் இருக்கிறது. சட்டமிருந்தே கேட்க முடியாத நிலையில் ஃபீரிலான்சராய் உள் நுழைந்தவர் என்னத்தை போராட்டம் செய்து கிழித்துவிட முடியும். சினிமாவில் எத்தையாவது சாதிக்க வேண்டுமென்று வீட்டை எதிர்த்துக் கொண்டு, பார்த்த சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு, உதவி இயக்குனராய் வலம்வரும் பல பேருக்கு வறுமை, பசி, போன்றவற்றினால் அடையும் மன உளைச்சல், ப்ரெஷர் எல்லாம் சேர்ந்து அவனை அழித்துவிடக்கூடிய நிலையில் தான் இருக்கிறான். இந்த புதியவர்களுக்கு ஆதரவு தர தயாராய் இருக்கிறவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தையும் கொஞ்சம் கவனத்தில் வைத்தால் நல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Only 13 – The true story of Lon                                                                                                                                                                                       
நான் ஏன் விபசாரியானேன்? என்று கேட்டால் வீட்டுல கஷ்டம், என் அண்ணன்/ அப்பா/ அம்மா வே இங்க கொண்டு வந்து வித்துட்டாங்க. தம்பிக்கு கண் தெரியாது என்பது போல பல கதைகளை தொடர்ந்து எழுதி, பார்த்திருப்போம். தாய்லாந்து என்றதும் sex tourism தான் நினைவுக்கு வரும். ஏன் அந்நாட்டில் மட்டும் இவ்வளவு சல்லீசாய், சுலபமாய் நடக்கிறது. அதுவும் எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் என்ற கேள்வி எழுந்தால் அதற்கான பதில் இந்த புத்தகத்தில் இருக்கிறது.

13 வயதான லான். இஸான் எனும் தாய்லாந்தின் குக்கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவள்.  வீட்டின் பிரச்சனை தாங்காமல் வீட்டை விட்டு ஓடியவள். மீண்டும் 13 வயதில் தாய்லாந்தின் பாரில் வேலைக்கு சேர்ந்தவள். 13 வயதில் ப்ரீமியம் ரேட்டுக்காக தன்னை இழந்தவள்.  மிகச் சிறிய வயதில் அத்தொழிலில் மிக அதிகமாய் சம்பாதித்தவள். மாடலானவள். இந்த லான் சொல்லும் காரணமும் அதே தான். வறுமை. ஆனாலும் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அவளின் அம்மா ஊரில் கெத்து காட்டிக் கொள்வதற்காக மேலும் பணம் கேட்பதும், வீட்டின் ஆண்கள் குடித்துவிட்டும், பிம்பிங் வேலை பார்த்தும், வீணாய் பணத்தை தண்ணீராய் செலவு செய்தும் வாழ்ந்து கொண்டிருப்பதையும் மீறி தனக்கான வீடு கட்டுவதற்காக போராடியவள். அதீத பணம், செக்ஸ் எல்லாவற்றையும் பார்த்ததினால்  பல சமயம் சுய பச்சாதாபத்தில் வாழ வேண்டிய கட்டாயம். யாரையாவது சார்ந்திருக்க வேண்டி காதலில் விழுவது. அந்த காதலை தன் முன்னேற்றத்துக்காக கழற்றி விடுவது இத்தொழிலிருந்து வெளியே வந்து செட்டிலாக நினைத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் ஐரோப்பாவில் விட்டது. இங்கிலாந்தில் வந்து செட்டிலாக வேண்டும் என்ற எண்ணத்துக்காக, ஒருவனிடன் காதலில் வீழ்ந்து, அவனை திருமணம் செய்து, பல கஷ்டங்களை பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டு, தனக்கு பிறந்த குழந்தையையே அவளின் மனநிலை காரணமாய் வேறு ஒருவருக்கு தத்து கொடுத்துவிட்டு, குழந்தை பாசத்தில் ஏங்கிக் கொண்டும், மனநல காப்பகத்தில் இருந்து கொண்டு, அரசு தரும் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் லானின் உண்மைக் கதைதான் இந்த புத்தகம்.

இந்த புத்தகத்தை எழுதியவர்கள் ஜுலியா மன்ழானரெஸும், டெரெக் கெண்ட்டும். லான் அவர்களிடம் சொல்லி எழுதியது. இந்த புத்தகத்தின் மூலமாய் வரும் வருமானத்தில் செக்ஸ் டூரிசத்தில் ஏற்கனவே உழன்று கொண்டிருக்கும் இளம் பெண்களை அதிலிருந்து மீட்பதற்கும், இனி விழ இருக்கும் பெண்களை காப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.  லானின் கதை எல்லார் கதை போல இருந்தாலும், சாதாரண வேலை செய்தால் சம்பாதிக்க முடியாததை இந்த தொழிலில் ஈடுபட்டால் மிக சுலபமாய் சம்பாதிக்க முடியுமென்ற பணம், புகழ், சுதந்திர ஆசை யும், அதே பணம் மூலமாய் தன் குடும்பத்தை உயர்த்திக் காட்ட, செட்டிலாக நினைக்கும் குடும்பத்தினருக்கும் மகளின் மூலமான இந்த வருமானம் ஆரம்பத்தில் தேவையாகவும், போகப் போக ஆடம்பரத்தை நிலை நிறுத்திக் கொள்ள  வேண்டிய கட்டாயத்தில் தேவை அதிகரிக்க, கூசாமல் இன்னும் கொஞ்சம் அனுப்பு என்று கேட்பவர்களாகவும் மாற்றி விடுகிறது என்பதை தன் குடும்பம் என தனியே சொல்லாமல் பல நண்பிகளின் குடும்பக் கதைகள் மூலம் சொல்கிறார் லான்.  இவரின் நிஜ காதலரின் கேரக்டர் மிக அருமை. இந்த தொழிலை விட்டு விடு நான் மாதா மாதம் பணம் அனுப்புகிறேன் என்ற அக்ரிமெண்ட்டில் மாதம் பணம் அனுப்பும் வெளிநாட்டுக்காரர்கள். அவர்களை சீட் செய்து மேலும் சம்பாதிக்க விழையும் பேராசை. சிட்டிங் தெரிந்தவுடன் ஆமா இப்ப என்ன எனக்கு நீ அனுப்பும் காசு பத்தலை என்று ப்ளேட்டை மாற்றிப் போட்டு எக்ஸ்ட்ரா காசு வாங்கும் வித்தை.

காதல், காதலனை நாயாய் பயன்படுத்தியவிதம். தன் ஆசைக்காக பர்வர்ட் ஒருத்தனிடன் காதல் வயப்பட்டு, இங்கிலாந்தில் செட்டிலாக கல்யாணம் செய்து கொண்டதும் நடக்கும் மன அழுத்த நாட்கள் எல்லாம் லானின் மீதான பரிதாபம் ஓங்கச் செய்யும் நிகழ்வுகள்.  எங்கேயும் தன் செய்கைகளை நியாயப்படுத்தாமல், ஆனால் எக்காரணம் கொண்டும் தன் தங்கைகளை இந்த தொழிலுக்கு வந்து சம்பாதிக்க விட்டுவிடக்கூடாது என்ற அழுத்தமான கொள்கைக்காக,  இத்தனைக்கு பின்பும் அதைக் காப்பாற்ற, குடும்பத்திற்கு பணம் அனுப்பிக்  கொண்டிருக்கிறாள் லான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

1 comment:

jscjohny said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி சார்.