Thottal Thodarum

Feb 7, 2018

கொத்து பரோட்டா 2.0-24

கொத்து பரோட்டா 2.0-54
Saheb Bibi Golaam
பத்திரிக்கையாளர், எழுத்தாளர், விமர்சகர், இயக்குனர் என பன் முகம் கொண்ட ப்ரீதம் டி. குப்தாவின் இயக்கத்தில் 2016ல் வெளிவந்த வங்காள மொழிப் படம். இவருடய முந்தைய படமான ”பாஞ்ச் அத்யாய்” கமர்ஷியல் வெற்றியையும், விமர்சனகளிடையேவும் மிகுந்த வரவேற்பை பெற்ற ரொமாண்டிக் ஜெனர் படம். இது முற்றிலும் வேறான கதைக்களன். ஜிம்மி, ரிட்டையர்ட் போலீஸ். தற்போதைய தொழில் காண்ட்ரேக்ட் கில்லர். ஜெயா ஒர் குடும்பத்தலைவி. ஆனால் பார்ட் டைம் விபச்சாரி. ஜிகோ டாக்ஸி ட்ரைவர். அவனுக்கு கல்லூரி மாணவியான ரூமிக்கும் காதல். ஜிம்மிக்கு ஒரு  காண்ட்ரேக்ட் வருகிறது. அரசியல்வாதியின் பையனான அவனை பாலோ செய்கிறான். அவனது நடவடிக்கைகளை கண்காணித்து, அவன் தினமும் ஒரு ஃபேமிலி டைப் விபச்சார விடுதிக்கு செல்கிறதை கண்டுபிடிக்கிறான். ஒரு தினத்தை குறித்து அவனை கொல்ல தயாராகிறான். அந்த தினமும் வருகிறது. துப்பாக்கியை எடுத்து குறிபார்த்து தனக்கு முதுகு காட்டி நிற்கிறவனை சுடுகிறான். அவனை அணைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முகம் க்ளோஸப்பிற்கு போக, அவளின் கதை ஓப்பன் ஆகிறது.

ஜெயா ஒரு பெண் குழந்தைக்கு தாய். மொனாட்டனியான வாழ்க்கை, மாமியார். கண்டு கொள்ளாத கணவன் என விரக்தியின் எல்லையில் பயணித்துக் கொண்டிருக்கும் டிபிக்கல் மிடில் க்ளாஸ் பெண். மதியம் பெண்கள் குழுவில் பேசிக் கொண்டிருக்கும் போது தங்களது செக்ஸுவல் மற்றும் பணத்தேவைகளுக்காக புருஷனை நம்பாமல் சந்தோஷமாய் இருக்க பல வழிகள் இருப்பதாய் உடனிருப்பவர்கள் சொல்ல, எப்படி என்று ஆர்வம் அவளுள் கிளறப்பட, தினமும் ஆபீஸ் போவது போல, மேடம் வீடு இருப்பதாகவும், பேமிலி பெண்களை விரும்புகிறவர்கள் அங்கே வருவார்கள். அவர்களுடன் நாம் சந்தோஷமாகவும் இருந்து கொண்டு பணமும் சம்பாதிக்கலாம் என்று சொல்ல, சலனப்பட ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டத்தில் கணவனின் நடவடிக்கைக்கு காரணம் அவனின் கே உறவு என்பதை தெரிந்து கொண்டு, கிட்டத்தட்ட அவனை பழிவாங்கும் உணர்வுடன் அந்த விடுதியில் சேர்கிறான். தன்னுடய பேண்டஸிக்களை அடைய வாழ ஆரம்பிக்கிறாள். அவளை அணைத்தவன் தான் குண்டடிப்படுகிறான்.

தான் தப்பானவனை சுட்டுவிட்டோம் என்று தெரிகிறது ஜிம்மிக்கு. அவனை காப்பாற்ற தூக்கிக் கொண்டு ஓடுகிறான். ஜிக்கோ டாக்ஸி ட்ரைவர். இளைஞன். அந்த விடுதிக்கு வாடிக்கையாளரை கொண்டு வருகிறவன். அவனுக்கு ஜெயாவுக்குமிடையே ஏதுவுமில்லை என்றாலும் ஒர் சின்ன பாச பிணைப்பு இருக்கிறது. ஒர் நள்ளிரவில் மிகு போதையில் டாக்ஸியில் ஏறும் ரூமியை ட்ராப் செய்கிறான்.  அவர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாய் நெருக்கம் உண்டாகிறது. தாய் தந்தை விவாகரத்துக்கு பிறகு தாந்தொன்றியாய் சுற்றியலையும் அவளுக்கு இவனின் இணக்கமான அன்பு பிடித்து காதல் வயப்படுகிறாள். தன் தந்தையிடம் கூட சொல்கிறான். அவனை சந்திக்க அவளுடய அப்பா தேதி கொடுக்க,  ஜிக்கோவை வரச்சொல்லி காரை எடுக்கிறாள். அதற்கு பிறகு நடக்கும் சம்பவம் தான் இப்படத்தின் கோர் பாயிண்ட். அந்த துப்பாக்கி சூடு மீட்டிங் பாயிண்ட்.  விறுவிறு திரைக்கதை. நல்ல நடிப்பு. சிறப்பான டெக்னிக்கல் விஷயங்கள். என இண்ட்ரஸ்டிங் பொக்கே.  டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Revelation
ஆங்கிலப் பெயர் என்றாலும் தமிழ் படம் தான். இண்டிபெண்டண்ட் திரைபடம். இம்மாதிரியான திரைப்படங்களுக்கு டிஜிட்டல் மீடியம் ஒர் வரப்பிரசாதம். திரையரங்குகளில் இம்மாதிரியான படங்களுக்கு நிச்சயம் கமர்ஷியல் வரவேற்பு கிடைக்காத நிலையில் அங்கே ரிலீஸ் செய்வதை விட, இம்மாதிரியான ப்ளாட்பார்மில் வெளியிட்டு வெற்றி பெருவது சந்தோஷமான விஷயம். பூஷன் பிலிம் பெஸ்டிவலில் திரையிட தெரிவு செய்யப்பட்ட படம்.

நடுத்தர வயது மனோகர் தன் பாரலைஸ்ட் தாயுடன் கொல்கத்தாவுக்கு குடி வரும் தமிழன். அதே வீட்டில் சேகர் – ஷோபா தம்பதியினர் வசிக்கிறார்கள். தமிழர்கள். சேகர் ஒர் ஆங்கில பத்திரிக்கையில் நிருபராய் வேலை செய்கிறான். மனோகரின் தாயை பார்த்துக் கொள்ள ஷோபாவிடம் உதவி கேட்க, அவள் தானே பார்த்துக் கொள்வதாய் சொல்கிறாள். மனோகர், ஷோபாவிற்குமான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் வளர ஆர்மபிக்க, சேகரின் பத்திரிக்கை ஆசிரியர் திவ்யா எனும் புதிய இண்டர்னுடன் சேர்ந்து கொல்கத்தாவில் உள்ள பேண்ட் களைப் பற்றி ஆர்டிக்கள் எழுத சொல்ல, அவர்கள் இருவரும் சேர்ந்து பயணிக்கிறார்கள். அவர்களின் நெருக்கமும் கொஞ்சம் கொஞ்சமாய்  நெருக்கமாகிறது. அவளுக்கு 60 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவும் அளவிற்கு. இரண்டு ஜோடிகளின் நெருக்கமும் உடல் ரீதியாய் நெருக்கமாக முனைய, அங்கே சேகரும், இங்கே மனோகரும் தவிர்க்கிறார்கள்.  தவிர்ப்பதற்கான காரணம்? சேகர், ஷோபா தம்பதிகளிடையே இருக்கும் வெறுமைக்கான காரணம்?. மனோகர் ஷோபாவை இக்னோர் செய்வதற்கான காரணம் போன்ற எல்லாவற்றிக்கும் விடை க்ளைமேக்ஸில் வெளிப்படுகிறது.

சேத்தனை பல படங்களில் சீரியல்களில் நாம் பார்த்திருப்போம். நிஜமாகவே அவரின் திறமைக்கு சரியான தீனிப் போட்டிருக்கும் படம். லஷ்மிப்பிரியாவின் மிக இயல்பான நடிப்பு இதில் பெரிய ப்ளஸ்.

ஆரம்பக் காட்சிகளிலிருந்து இறுதி வரை இறுக்கமான, மெதுவான லெந்தி விஷுவல்கள், கமர்ஷியல் பட ஸ்டைல் எடிட்டிங் இல்லாமல், நிறுத்தி நிதானமாய் போவது. மிகக் குறைந்த வசனங்களில் காட்சிகளின் கனத்தை, அது கொடுக்க வேண்டிய  உணர்வை சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களில் சேத்தன், லஷ்மி ஆகியோரின் நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பது, மிக மெல்லிய ரீ ரிக்கார்டிங். மிக இயல்பான கொல்கத்தாவை விஷுவலாக்கியிருப்பது. படம் நெடுக மெதுவான போக்கை வேண்டுமென்றே வைத்திருப்பதும்,  யாருக்கு என்ன பிரச்சனை என்பது வெளிப்படும் போது அந்த மெதுத்தன்மை நியாயமாகப்படுகிற சாமர்த்தியம். துரோகம், குற்றவுணர்ச்சி, இந்திய திருமண உறவு, போன்றவற்றை மிக திறமையாய் கையாண்டிருப்பது என இயக்குனர் விஜய் ஜெயபால் அழுத்தமாய் முத்திரை பதித்துள்ளார். நிச்சயம் கமர்ஷியல் பட விரும்பிகளுக்கான பரிந்துரையில்லை. நல்ல படங்களை விரும்புகிறவர்களுக்கான பரிந்துரை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரேடியோபெட்டி
இந்தப்படமும் 2015ஆம் ஆண்டு பூஷன் பிலிம் பெஸ்டிவலிலும், இண்டியன் பனோரமாவிலும், மாட்ரிட்டிலும் தெரிவான இண்டிப்பெண்டண்ட் தமிழ்ப்படம். உலக சினிமாக்களில் மூத்தவர்களின் வாழ்க்கையை எவ்வளவு அழகாய் படமாக்குகிறார்கள். இதைபோல எல்லாம் எங்கே நம்மூரில் என்று பொலம்பிக் கொண்டிருக்காமல் 70 வயது முதியவரின் வாழ்க்கையைப் பற்றி படமெடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி விஸ்வநாத்.

70 வயது முதியவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுடய ஒரே மகன் தனிக்குடித்தனமிருக்க, முதியவர் ஒரு கம்பெனியில் வேலைக்கு போய்விட்டு அதில் வரும் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டிருக்க, அவரின் ஒரே எண்டர்டெயின்மெண்ட் வால்வு ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதுதான். அது அவரின் அப்பா அவருக்கு கொடுத்தது. அதில் அவர் தன் அப்பாவை பார்த்துக் கொண்டிருப்பதாய் சொல்கிறவர். தன் இயலாமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டின் மின்சார செலவுக்கான காரணம் ரேடியோ பெட்டிதான் என்று வாக்குவாதம் செய்ய, ரேடியோ பெட்டியை தூக்கிப் போட்டு உடைக்கிறான் மகன். ரேடியோ பெட்டி போனதில் இருந்து வாழ்க்கையின் எல்லா சந்தோஷத்தையும் இழந்த்வராகிறார். ட்ரான்ஸிட்டர் எல்லாம் அவருக்கு செட்டாகமல் போக, மெல்ல அவரின் காதுக்குள் ரேடியோ ட்யூனாக ஆர்மபிக்கிறது. அவருக்குள் ரேடியோ கேட்க ஆரம்பிக்கிறது. அதனால் வரும் பிரச்சனைக்கு விடை என்ன என்பதுதான் கதை.

வயதான காலத்தில் பார்த்து பார்த்து வளர்த்த மகனே அவர்களை கைவிடுவது. ஒவ்வொரு பைசாவுக்கும் அவனை எதிர்பார்ப்பது. முதியவர்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் ரியாக்ட் செய்யும் மகன்களின் நிலை. அதனால் அவர்கள் படும் அவதி என மிக அழகாய் சொல்லப்பட்டுள்ள படம். முதியவராய் நடித்த லஷ்மணனின் நடிப்பு மிக அருமை. கொஞ்சம் மெதுவாக செல்லும் படம் தான் என்றாலும் நிச்சயம் ரசிக்கத்தக்க படைப்பே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



Post a Comment

1 comment:

Unknown said...

Saheb Bibi Golaam, Revelation, Radio Petti - moondrumae arumai yaana padangal maadhiri theriyudhu.

sema review. Revelation maadhiri Independent films - laabam sambaadhikka enna vazhigal irukkiradhu nnu ezhudhungal.