பைரஸியும் சினிமாவும் -3
டிஜிட்டலானாதால்
இருக்கும் பாதுகாப்பின்மை ஒரு ரிஸ்க் என்றாலும், பெரும்பாலானவர்களின் அடிப்படை நேர்மையினால்
பைரஸிக்கு துணை போகாவிட்டாலும், ஒரு சில படங்களின் வீடியோக்கள், ஏன் சில படமே வெளிவந்ததற்கான
காரணம் அங்கிருந்த மனசாட்சி இல்லாத ஒரு சில அரைவேக்காட்டு பண தேவை மிகுந்த அப்ரசண்டிகள்
தான் காரணம்.
முன்பெல்லாம்
வெளிநாட்டு வீடியோக்கள் மூலம் வந்ததைப் போல டிஜிட்டல் கேமராக்களின் வளர்ச்சி இன்றைக்கு
மொபைலிலேயே அட்டகாச படமெடுக்கும் வசதி வரை வந்து விட்டதால் சுலபமாய் போய்விட்டது. தியேட்டர்
ஆப்பரேட்டர்களின் உதவியுடன் கேமரா பிரிண்டுகள் வெளிவர ஆரம்பித்தது. பல தியேட்டர்களை
ஒரிஜினல் ஓனர்கள் நடத்தாமல் லீசுக்கு விட்டு விட்டு மாச காசு மட்டுமே வாங்கிக் கொண்டிருக்க,
பெரும்பாலான பி, சி செண்டர் தியேட்ட்ரகளின் ஓனர்கள் தியேட்டர் மேனேஜரும், ஆப்பரேட்டருமாகவே
இருக்க, சொற்ப சம்பளம், இவர்களின் தேவையை அதிகரித்திருக்க, லம்பாய் 50 ஆயிரம் முதல்
1 லட்சம் வரை கிடைக்கக் கூடிய வாய்ப்பை யார் வேண்டாமென்று சொல்லுவார்கள்?. இப்படியாக
தியேட்டர் பிரிண்டுகள் வர ஆரம்பிக்க, க்யூப், யூ எப்.ஒ போன்ற நிறுவனங்கள் எந்த தியேட்டரிலிருந்து
படமெடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க, சாப்ட்வேரெல்லாம் வைத்திருந்தாலும் அதை கண்டுபிடிக்க,
கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட
மூன்று வாரங்களாவது ஆகிவிடுகிறது. சூப்பர் ஹிட் படமே மூணு வாரத்துக்கு மேல் ஓடுவதில்லை
என்பதால் இனிமே யார் பைர்ஸி எடுத்தா என்ன எடுக்காட்டி என்ன என்கிற மனநிலையில் தயாரிப்பாளர்
போய்விடுகிறார்கள்.
இதுதான்
பைரஸிக்காரர்களுக்கு சாதகமாய் ஆகிப் போனது. 24 படம் பைரஸி வெளியான போது அதன் தயாரிப்பாளர்
இந்த முறையில் எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்று கண்டுபிடித்தார். பிவிஆர் பெங்களூர்
என்று தெரியவந்தும், அந்த நிறுவனத்தின் மேல் எந்தவிதமான ஆக்ஷனுக்கு எடுக்கப்படவில்லை.
அந்த நிறுவனமோ ஏதோ போனால் போகட்டும் என்று வருத்தக் கடிதம் மட்டுமே கொடுத்தது. இவர்கள்
மீது பாயாத சட்டம் எப்படி சின்ன தியேட்டர்காரர்கள் மீது பாயும்?. நாளை அதே தியேட்டரில்
இவர்களின் படத்தை மீண்டும் வெளியிட நின்றுதானே ஆக வேண்டுமென்ற காரணத்தினாலும், பெரும்பாலான
படங்கள் ஓடுவதில்லை என்பதாலும் லோக்கல் ஸ்டேஷனில்
ஆப்பரேட்டரின் கம்ப்ளெயிண்ட் கொடுப்பதோடு மட்டும் பைரஸிக்காக எடுத்த முயற்சியாய் போய்விடுகிற
நிலை தான் இன்றைக்கும்.
தியேட்டர்
பிரிண்டெல்லாம் மீறி உடனடி பிரிண்டுகள் வெளிநாட்டு உரிமை கொடுக்கப்படுமிடத்திலிருந்தே
வர ஆரம்பித்தது. ஏற்கனவே சொன்னபடி வீடியோ கேசட்
காலத்திலேயே இந்த பிரச்சனை இருந்தது. அது இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான
சின்ன படங்கள் எப்.எம்.எஸ் விற்பனையாகும் போதே வெளிநாட்டு தியேட்டர், வீடியோ, சாட்டிலைட்,
இண்டர்நெட் என அத்துனை உரிமைகளையும் அடியில் கண்ட சொத்துக்கள் அத்தனையும் என்கிற ரீதியில்
எழுதி வாங்கிக் கொண்டு போய்விடுவதால் படம் வெளியான அன்றைக்கே அவர்கள் டிவீடி போட்டு
விற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் முன்பெல்லாம்
அங்கிருந்து ப்ரிண்ட் போட்டு சென்னைக்கு அனுப்புவார்கள் ஆனால் டெக்னாலஜியும் அதற்கான
செலவுகளும் அதிகப்படியாவதால் ரைட்ஸ் வாங்கிய அன்றே ஹார்ட் டிஸ்கை வெளிநாட்டுக்கு அனுப்பவதற்கு
முன்னாலேயே இங்கேயே மாஸ்டர் காப்பி எடுத்து விற்பனைக்கு கொடுத்துவிட்டுத்தான் ப்ளைட்
ஏறுகிறார்கள். அங்கே விற்பது தனி. பல சின்ன படங்கள் சொன்ன தேதியில் வெளியாகாமல் தள்ளிப்
போய்விடும் நேரத்தில் இம்மாதிரியான முறையில் படங்கள் வெளியான கதை அதிகம். படமும் வெளியே
தெரியாத காரணத்தால், பைரஸியும் வந்தது தெரியாமல் போய் விடும்.
இணையத்தில்
அபார வளர்ச்சி சிடி, டிவிடி வியாபாரத்தை மொத்தமாய் அழித்தது. இன்றைக்கும் டிவிடியில்
படம் பார்க்கிறார்கள் என்றும், காப்பி போட்டவர்களை கைது செய்ததாய் தகவல்கள் வந்தாலும்,
பைரஸி மட்டும் குறையவேயில்லை. இணையம் இவர்களை இன்னமும் ரகசியமாக்கி வியாபாரத்தை பெரிதாக்கிக்
கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் வெளிநாட்டு உரிமை தான் என்று சொல்லலாம். பெரும்பாலான
பெரிய படங்கள் இங்கே வெளியாகும் நாளுக்கு முதல் நாள் இரவே வெளியாகிறது. அப்படி வெளியாகும்
படங்கள் உடனடியாய் தியேட்டர் பிரிண்டுகள் டிஜிட்டல் கேமராக்களால் எடுக்கப்பட்டு டோரண்டுகளில்
அப்லோட் செய்யப்படுகிறது. ரெண்டொரு நாளில் சின்ன படமாய் இருந்தால் ஹெச்டி பிரிண்டும்,
பெரிய படமாய் இருந்தால் ஒரு வாரத்தில் தரமான
ஹைடெபனிஷன் ப்ரிண்டுகளும் வந்துவிடுகிறது. நீங்கள் வெளிநாட்டு உரிமையை விற்பதால்தானே
வருகிறது என்று கேட்பீர்கள். பட் யோசித்து பாருங்கள் பல 50 -60 கோடி போட்டு படமெடுக்கும்
தயாரிப்பாளர்களுக்கு சுமார் 10-15 கோடி வரை வெளிநாட்டு உரிமையில் கிடைக்கும் எனும்
போது இந்த பைரஸியெல்லாம் அவர்கள் கண்ணுக்கே தெரியாது. ஆனால் சொல்லலாம் பைரஸி இல்லையென்றால்
இன்னமும் அதிகம் சம்பாதிக்கலாமே என்று? ஒரு
வேளை ஓடாமல் போய்விட்டால் முன்பு வாங்க இருந்த விலையில் பத்து சதவிகிதம் கூட வியாபாரம்
ஆகாது என்பதால் அந்த ரிஸ்க் எடுக்க யாரும் தயாராய் இல்லை? அப்படியென்றால் வெளிநாட்டு
உரிமைதான் பெரிய பிரச்சனையா? அங்கே யார் இதை தொழிலாய் செய்கிறார்கள்? இதனால் இவர்களுக்கு
என்ன லாபம்? என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..
Post a Comment
No comments:
Post a Comment