Thottal Thodarum

Mar 29, 2018

சாப்பாட்டுக்கடை - வைரமாளிகை - சென்னை

திருநெல்வேலிக்கு போனால் நிச்சயம் வைரமாளிகை பரோட்டாவையும், தேங்காய் எண்ணையில் பொரித்த நாட்டுக்கோழியையும் சாப்பிடாமல் வரமாட்டேன். சில வருடங்களுக்கு முன் சென்னை ரஷ்யன் கல்சுரல் அகாடமியில் உள்ள காப்பிஷாப்பில் ஆரம்பித்தார்கள்.  ஆனால் கூட்டம் தான் வரவில்லை என்றார்கள். வாசல்ல ஏகே 47 வச்சிட்டு நின்னுட்டிருந்தா எவன் பரோட்டா சாப்பிட வருவான்? என்று கேட்ட ஒரிரு மாதத்தில் கடையை ஏறக்கட்டிவிட்டார்கள். 

அவர்கள் இப்போது டிநகர் வித்யோதயா ஸ்கூலின் எதிரில் தங்களது புதிய சென்னைக் கிளையை திறந்திருக்கிறார்கள். அதே மொறு மொறு பரோட்டா, தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டுக்கோழி, அதன் உடன் கொடுக்கப்படும் பாயா டேஸ்டில் கொடுக்கப்படும் வெஜ் கிரேவி. தற்போது உடன் நான் வெஜ் கிரேவியும் கொடுக்கிறார்கள்.

பரோட்டாவை பிய்த்து போடாமலேயே சால்னாவை ஊற்றி ஊற வைத்து, பிய்த்தாய் அப்படி இலகுவாய் பரோட்டா பிய்ந்துக் கொண்டு வரும். வாயில் வைத்தால் லபக்கென வழுக்கிக் கொண்டு ஓடும். நாட்டுக்கோழி ஆஸ்யூஸுவல் அட்டகாசம். நான் வெஜ் கிரேவி நம்மூர்காரர்களுக்கான விஷயமாய் இருந்தாலும், ஒரு பரோட்டா வெஜ் கிரேவிக்கும் இன்னொன்று நான் வெஜ்ஜுக்கு என்று மாற்றி மாற்றி அடிக்கலாம். முடிக்கும் போது கலக்கி ஒன்றை ஆர்டர் செய்தால் சும்மா தளதளவென வெங்காயம் போட்ட கலக்கி வாழையில் வைத்து கொடுப்பார்கள். லாவகமாய் எடுத்து அப்படியே வாயினுள் போட வேண்டும் டிவைன். 

மிக முக்கியமான ஒன்று விலை. பார்டர் கடை போல அநியாய விலை இல்லை. நான்கு பரோட்டா, ஒரு கலக்கி, ஒரு சிக்கன் எல்லாம் சேர்த்து 197 ரூபாய் தான். 

Mar 16, 2018

கொத்து பரோட்டா 2.0-53

கொத்து பரோட்டா 2.0-53
எங்கு பார்த்தாலும் ப்ளூ வேல் விளையாட்டு பற்றியும், தற்கொலைகள் பற்றியுமே பேச்சாகவும், செய்திகளாகவும் இருக்கிறது. எல்லா பசங்க கையிலேயும் போன் இருக்க, அவங்க அதை வச்சி என்ன பண்ணுறாங்கன்னு வாட்ச் பண்றது எப்படினு கைய பிசைஞ்சிட்டு இருக்கிற பெற்றோர்கள் நிறைய பேர். கம்ப்யூட்டரை காமன் ஹால்ல வையுங்க. பாஸ்வேர்ட் எல்லாம் எதுன்னு பசங்க கிட்ட பேசி தெரிஞ்சுக்கங்க, என்ன விளையாடுறாங்கன்னு பார்த்துட்டேயிருங்க என்றெல்லாம் நிறைய அட்வைஸ்கள் கிடைத்துக் கொண்டேயிருந்தாலும், பெற்றோர்கள் இருக்கிற பிஸியில் இதுங்க நம்மளை தொல்லை பண்ணாம அதும் பாட்டுக்கு ஏதோ விளையாடிட்டு இருக்குதுங்கனு விடுற பெற்றோர் தான் அதிகம். பிரச்சனை அங்க தான் ஆரம்பிக்கிறது. நாம் அவர்களை தனியே விட விட, அவர்கள் மேலும் அவர்களின் செயல்களில்  மிக ஆழமாக ஈடு படுகிறார்கள்.  ஆனால் இதையெல்லாம் யூஸ் பண்ணாதே, போன் எதுக்கு என்றெல்லாம் கேட்பதை விட, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். பள்ளி, ட்யூஷன், பாட்டுக்கிளாஸ், ஹிந்திக்ளாஸ், கீ போர்ட் க்ளாஸ் என நம்மை விட படு பிசியாய் இருக்கும் நம் குழந்தைகளுக்கு செல் போன் தேவையாய்த்தான் இருக்கிறது.

முடிந்தவரை உங்களுடய செல்போனுக்கு பாஸ்வேர்ட் இல்லாமல் வையுங்கள். இல்லையேல் எல்லோருக்கும் தெரியும் படியான பாஸ்வேர்டை வைக்கவும். பிள்ளைகள் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பதை கொஞ்சம் தூரத்திலிருந்தே வாட்ச் செய்யவும். நீங்களும் விளையாட்டு விரும்பியாய் இருந்தாலும் கூட சேர்ந்து விளையாடவும். அவர்களுக்கும் உங்களுக்குமான பிணைப்பு இன்னும் இறுக்கமாகும். விருப்பமில்லாமல் இருப்பவராய் இருந்தால் என்ன எப்பப்பார்த்தாலும் கேம் என்று கடுப்படிக்காமல் விட்டுபிடித்து, அவர்கள் விளையாடும் நேரம் உங்கள் கண் முன் இருக்கும் நேரமாய் பார்த்துக் கொள்ளவும். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் என்பதால் தனி அறை குடுத்திருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் அரை மணிக்கொரு தரம், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கொஞ்சம் வாட்ச் செய்வது அவசியம். தனி அறை, இண்டெர்நெட், மொபைல், போன்ற வஸ்துக்கள் சல்லீசாய் கிளர்ச்சியடைய வைக்கக்கூடியவை. முடிந்தவரை அவர்களை கண்காணிப்பது போல் இல்லாமல், அறைக்கும் நுழைந்து அவர்களுடன் பேசுவது, என்ன படிக்கிறாய்? விளையாடுகிறாய் என்று கேட்பது போல கொஞ்சம் நேரம் அவர்களுடன் பேசுங்கள். தினம் உங்களுடய ரெகுலர் நிகழ்வுகளை அவர்களுடன் பேசி செலவிடுங்கள். அவர்களையும் சொல்ல பழக்குங்கள். நாம் எவ்வளவு பிஸியாய் இருந்தாலும், அம்மா, அப்பா இருவரில் ஒருவர் இதை பாலோ செய்யுங்கள். நிச்சயம் உங்கள் மகனோ/மகளோ உங்களிடம் பெரிதாய் மறைக்க விஷயங்கள் ஏதுமிருக்காது. சமீபத்தில் நாங்கள் என் மகனிடம் டிஸ்கஸ் செய்தது அவன் நண்பர்களுடனான விவாதம் குறித்து. காதல் என்றால் என்ன? என்பதைப் பற்றி டிஸ்கஷன். கடைசியாய் நீ என்ன சொன்னே? என்றேன். இப்ப நாம படிக்கிற டைம். இன்பாச்சுவேஷன் எல்லாம் லவ் இல்லேன்னு சொன்னேன். நாலு பேர்ல மூணு பேர் ஒத்துகிட்டாங்க. என்றான்.ஒத்துக்காத உன் ப்ரெண்டப் பத்தி என்ன நினைக்கிறே? என்றேன்.  “ஒண்ணும் நினைக்கல.. அவன் இப்பத்தான் எங்க க்ரூப்புல பேச ஆரம்பிச்சிருக்கான். பேசப் பேசப் புரிஞ்சுப்பான். நான் எங்க வீட்டுல இதை பத்தி பேசுவேன்னு சொன்னா அவன் ஆச்சர்யப்பட்டு சாகுறான். இதுல என்னப்பா இருக்கு ஆச்சர்யபட” என்றான் மஹா ஆச்சர்யத்துடன். ப்ளூ வேலோ, கேமோ, டிவியோ, காதலோ.. எல்லாத்தையும் விட அவங்க விரும்பற விஷயமா நாம அவங்களோட ஸ்பெண்ட் பண்ணுற நேரங்கிறத பீல் பண்ண ஆரம்பிச்சிட்டா.. ஆல் இஸ் வெல்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேர்மையாய் இருப்பது என்பது ரெண்டு பக்கமும் கூர்மையான ஆயுதத்தை ஏந்துவது போல. சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் மூலம் திரைப்பட பிரிவியூவுக்கு அழைக்கப்பட்டேன். படம் பார்த்தேன் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை. படம் வெளிவரவேயில்லை. அதன் பிறகு ஒரிரு ஆண்டுகளுக்கு முன்னால் என் தயாரிப்பாளர் என்னை அழைத்து நான் ஏற்கனவே பார்த்த படத்தின் பெயரைச் சொல்லி, அதை ரிலீஸ் செய்ய பைனான்ஸ் கேக்குறாங்க.. நீங்க போய் பார்த்துட்டு நல்லாருக்குன்னு சொன்னா நான் கொடுக்குறேன் என்றார். படம் பெயரைக் கேட்டதுமே.. அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். நல்லாயில்லை வேண்டாம் என்று சொன்னால் யாரோ ஒருவரின் படம் வெளியாக நான் தடை செய்ததாகிவிடும். செய்யுங்க என்று சொன்னால் என் தயாரிப்பாளர் என் மேல் வைத்த நம்பிக்கையை பொய்ப்பதாகும். இக்கட்டான நிலையில் உண்மையை சொல்லி என்னைப் பொறுத்தவரை அந்த படத்தின் மீது இன்வெஸ்ட் செய்வது சரியான முடிவாய் இருக்காது அதன் பிறகு உங்கள் இஷ்டம் என்றேன். அவர் அதை அப்படியே அவர்களிடம் சொல்லிவிட்டார். அவரும் நேர்மையானவர். அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் நான் சொல்லிதான் என் தயாரிப்பாளர் பணம் கொடுக்காமல் கெடுத்துவிட்டேன் என்று வருடக்கணக்கில் சொல்லி வருத்தப்படுவதாய் கேள்விப்பட்டேன்.

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் ப்ராஜெக்ட் விஷயமாய் ஒரு கார்பரேட் கம்பெனியில் மீட்டிங். பேச்சு வார்த்தை சிறப்பாய் போனது. வெளியே வந்து என்னை அழைத்த நண்பரிடம் நடந்தவற்றை தெரிவித்தேன். அப்ப நிச்சயம் ஒர்க்கவுட் ஆயிரும் என்று வாழ்த்தினார். நான் சிரித்து “இல்லைங்க.. ஆகாது.” என்றேன். ஏன் என்று புரியாமல் அதிர்ச்சியுடன் கேட்டார். மேற்கூறிய சம்பவத்தை சொல்லி, அவர் தான் உங்க கம்பெனி சி.ஈ.ஓ என்றேன். நேர்மை ரெண்டு பக்கம் கூர்மையான கத்தி சமயங்களில் நம் கையையும் பதம் பார்க்கவல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Livin – வெப் சீரீஸ்
மெட்ராஸ் செண்ட்ரல் சேனலிலிருந்து வந்திருக்கும் புதிய வெப் சீரீஸ். வழக்கம் போல் லிவ் இன் கலாச்சாரத்தை பற்றிய கதைதான். அப்பர் மிடில் க்ளாஸ் வாழ்க்கை. அதீத நுனி நாக்கு ஆங்கிலம். போட்டோகிராபி, டிவியில் படம் பார்ப்பது, கேம் விளையாடுவது. செக்ஸைப்பற்றியும், ஃபக் பற்றியும் மிக சாதாரணமாய் பேசும் பெண்கள். அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் ஃபங்கியாய் அலையும் கண்ணா ரவி, நமக்கெல்லாம் எங்க என்கிற ரேஞ்சில் இருக்கும் கண்ணாவுடன், லிவின்னில் இருக்கும் அம்ருதா. துரத்தியடித்தாலும் கொஞ்சம் கூட இங்கிதமோ, சங்கோஜமோ படாத ஹைஃபை நெர்ட் சாம் ஆகிய மூவரையும் சுற்றும் கதைக்களன். இந்த லிவின் கலாச்சாரம் நண்பர்களிடையே, ஹவுஸ் ஓனர்ளிடையே, அவர்களுடய மனைவிகடையே எப்படி எடுத்து கொள்ளபடுகிறது என்பதை விட, சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள்,குடும்பத்தினரிடம் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது மிக முக்கியம். அதையும் கொஞ்சம் ஆங்காங்கே தொட்டிருக்கிறார்கள். இக்கால இளைஞர்கள் ஆன்லைன் புட் ஆர்டர்கள், டவுன்லோடட் படங்கள், ஆன்லைன் சமாச்சாரங்கள், பேசுவதற்கு ஏதுவுமேயில்லாதது போல ஒரே விஷயத்தை பற்றி பேசிப் பேசி மாய்வதை மீறி, ஒரு சில எபிசோடுகள் சுவாரஸ்யமே. முக்கியமாய் சாம், அம்ருதாவின் நடிப்பு. மிக இயல்பான மேக்கிங் இவற்றுக்காக நிச்சயம் பார்க்கலாம். இந்தியில் இதை விட போல்டான காட்சிகளுடன் லிவின்னை பற்றி பல குறும்படங்களும், வெப் சீரிஸ்களும் எடுத்திருக்கிறார்கள். நம்மூருக்கான இலுப்பைப்பூ சர்க்கரை.. https://www.youtube.com/watch?v=OhwcIU55YDE&t=2s
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
யூட்யூப் வைரல்
இணையமெங்கும் ஜிமிக்கி கம்மல் பாடல் தான் வைரல். ”வெலிபடேண்ட புஸ்தகம்” என்ற மோகன்லால் நடித்து வெளியாகியிருக்கும் படத்தில் வரும் பாடல் தான் அது. அந்த பாடல் ஆன்லைனில் பத்து லட்சம் ஹிட்ஸ் அடித்திருக்கிறது என்றால், அந்த பாடலை வைத்து, பத்திருபது சேச்சிகள் லைவாய் ஆடிய ஆட்டம் வீடியோ தான் நிஜ வைரல். கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஹிட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் சேச்சிகள் என்று பொதுவாய் சொல்லி விட முடியாது முதல் வரிசையில் ஆடிய ரெண்டு பெண்களில் ஒருவரான ஷெர்லிதான் இந்த ஹிட்டுக்கு காரணம் என்கிறார்கள் இணையவாசிகள். டிபிக்கல் மலையாள மாப்ள சாங். அதை ஆடிய சேச்சிகள் நடனம் ஒன்றும் ஆஹா ஓஹோ  கேட்டகரி இல்லை. ஹைஸ்கூல் க்ரூப் டான்ஸில் முதல் வரிசையை தவிர பின்னது எலலம் தங்கள் இஷ்டத்துக்கு ஆடும் ஆட்டம் தான். பட் ஷெர்லியின் முகம் தான் இந்த வீடியோவுக்கான ஸ்ட்ராங் ட்ராயிங் பாயிண்ட். இன்று வரை அவர் யார் என்று வெளியுலகுக்கு தெரியாவிட்டாலும், இணையவாசிகள் அவரின் போட்டோவை வைத்து பேஸ்புக் ப்ரோபைல், எல்லாம் தேடி பிடித்து ட்ரோல் செய்து,  ஒரே நாளில் ஹாட் ஷெர்லி ஆக்கிவிட்டார்கள். எங்கம்மாவோட ஜிமிக்கி கம்மல திருடி வித்து அதுல வாங்குன சாராயத்தை, எங்கம்மாவே புல்லா அடிச்சிட்டாங்கிற கருத்துள்ள பாடல் தான் இந்த பாடல். என்ஸாய் ஷெர்ல்லி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Mar 14, 2018

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -1

எங்கு பார்த்தாலும் கந்துவட்டி.. கந்து வட்டி என்கிற பேச்சுத்தான். ஒரு மாதத்துக்கு முன் கந்துவட்டிக் காரணமாய் தீக்குளித்த குடும்பத்திற்கு கிடைத்த கவன ஈர்ப்பை விட சமீபத்தில் பைனான்ஸ் பிரச்சனையால் தூக்கு மாட்டிக் கொண்ட இயக்குனர்/ நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரின் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளருமாகிய அசோக்குமாரின் மரணம் ஏற்படுத்தியிருக்கிறது. சினிமாவின் பவர் அப்படி.

இறந்தவர் தன் இறப்புக்கு காரணமானவர் அன்பு செழியன் என்கிற பைனான்ஸியர்தான் என்று எழுதி வைத்துவிட்டு போக, ஏற்கனவே அவரின் பேரில் பல செவிவழிக்கதைகள் உள்ள நிலையில் பற்றிக்கொண்டது. உடனடியாய் கைது செய் என்று ஒரு கோஷ்டி போர்க்கொடி ஏந்தி களத்தில் இறங்க, அடுத்த நாளே அன்பு செழியன் நல்லவர் , வல்லவர், உத்தமர் எங்களீடம் அவர் நன்றாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார். என்று பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு பேட்டிக் கொடுக்க ஆரம்பித்த ஒரு கோஷ்டி என தமிழ் சினிமா ரெண்டாய் பிளந்திருக்கிறது. இதில் அரஸ்ட் செய்யச் சொல்லி போராடுகிறவர்கள் அதே அன்புவிடம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களும் இருக்க, இந்த பிரச்சனையை பெரிது செய்து அதில் அவர்களின் கடனை மஞ்சள் குளிக்க முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பெருகியிருக்கிறது.

நிஜத்தில் அன்பு செழியனால் தான் தமிழ் சினிமா நடக்கிறதா? என்று கேட்டால் ஒரு மாதிரி மையமாய் தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை. முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் தங்களது பணத்திலிருந்து படமெடுக்க ஆரம்பிப்பார்கள். படம் முடியும் தருவாயில் தேவைக்கேற்ப பணம் கடன் வாங்கிய காலங்களும் உண்டு. செட்டியார்கள் சினிமா பைனான்ஸில் கொடி கட்டி பறந்த காலம் ஒன்று இருந்து, பிற்காலத்தில் தயாரிப்பாளர்கள் ஆன கதையும் உண்டு. ஆனால் அப்படி பணம் கடன் வாங்கும் தயாரிப்பாளர்கள் கந்துவட்டியெல்லாம் வாங்கி படம் செய்ததில்லை.  காரணம் அன்று இருந்த தயாரிப்பு முறையும், வியாபாரமும். சினிமா எனும் ஜிகினா உலகில் அப்படி யாரும் சுலபமாய் நுழைந்துவிட முடியாது. அதையும் மீறி கோட்டைக்குள் நுழைந்தால் அன்றைய சினிமா தயாரிப்பாளர்கள் வசமிருந்தது. தயாரிப்பாளர்களை முதலாளி என்று சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அழைப்பார்கள் என்றெல்லாம் சொல்வார்கள்.  ஏனென்றால் பணம் போடும் முதலாளிதான் தெய்வம்.  ஆனால் அதே எம்.ஜி.ஆர் தான் தயாரிப்பாளர்கள் கையில் இருந்த சினிமாவை ஹீரோக்கள் கையில் மாற்றியவர் என்றும் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கொடுத்துவிட்டால் அங்கே இங்கே புரட்டி, இரண்டு பேர் மூன்று பேர் சேர்தெல்லாம் பணம் போட்டு படம் தயாரித்த கதை உண்டு. ஏன் எம்.ஆர்.ராதாவே கூட எம்.ஜி.ஆர்.கால்ஷீட் கிடைத்து படமெடுக்க போய் அதில் பிரச்சனை ஆரம்பித்து பின்பு துப்பாக்கி சூடுவரை போனது உலகம் அறிந்ததே. எனவே பைனான்ஸ் எனும் விஷயம் சினிமாவிற்கு புதிதல்ல. எல்லா காலங்களில் வாங்கி வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் ஒழிந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்க முனையும் போது நல்ல கதையை தெரிந்தெடுப்பார்கள். பின்பு அதற்கான நடிகர்களை, டெக்னீஷியன்களை தெரிவு செய்வார்கள். இப்படி கதைக்காக நடிகர்களை தெரிந்தெடுத்த காலத்திலிருந்து விலகி, இன்றைக்கு இந்த நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர். போன படத்து பட்ஜெட் 40 கோடி என்றால் இந்த படத்துக்கு அட்லீஸ்ட் 60 கோடியாவது இருக்க வேண்டுமென்று முடிவு செய்து படமெடுக்கிறார்கள். படத்துக்கு எது தேவையோ அதை விட்டுவிட்டு. முன்பு தயாரிப்பாளர் ஆக வேண்டுமென்றால் பரம்பரை பணக்காரர்கள் தான் படமெடுக்க வருவார்கள். புரடக்‌ஷன் மேனேஜர்கள், மேக்கப் மேன்கள், காஸ்ட்யூமர்கள் என ஆரம்பித்து மொத்தமாய் லட்சத்தில்  வாங்கியவர்கள் கூட தயாரிப்பாளர்கள் ஆனது நடிகர்களின் கால்ஷீட்டும், பைனான்ஸியர்கள் பணத்தினாலும் தான். கையில் கால் காசு கூட இல்லாமல் நடிகர்களின் கால்ஷீட்டை வைத்து ஓ.பி.எம். எனும் அதர் பீப்பிள் மணியை வைத்து படமெடுப்பது எப்படி சுலபமோ? அதைப்போல மிகவும் ரிஸ்கானதும் கூட. படம் தோல்வியெனில் திரும்ப வராது. செட்டில்மெண்ட் செய்ய அந்த நடிகர் தான் வர வேண்டும். தயாரிப்பாளரிடம் ஒன்றும் இருக்காது.

இருபது வருடங்களுக்கு முன் ஒரு படம் தயாரிக்க கொஞ்சம் முன் பணம் வைத்துக் கொண்டு, ஒரு பத்து நாள்ஷூட்டிங் போய் விட்டால் நிச்சயம் பைனான்ஸ் கிடைக்கும். படத்தின் நெகட்டிவ் உரிமையை வைத்துக் கொண்டு பணம் கொடுப்பார்கள். படத்தின் ரிலீஸ் அன்று பணம் செட்டில் செய்யப்பட வேண்டும். எப்படி செட்டில் செய்வார்கள்? என்றால் படத்தை வியாபாரம் செய்துதான். சரியான முறையில் திட்டமிடப்பட்டு, சரியான பட்ஜெட்டில் படமெடுத்த சின்ன பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பல பேர், படத்தை விற்று லாபமும் சம்பாதித்து கடனை அடைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சினிமாவுக்கு தியேட்டர் மூலம் வெளியாகி, அதில் வரும் வருமானம் தவிர வேறேதும் இல்லாத காலம். என்ன ஆடியோ மார்கெட் என்று ஒன்று எங்கேயோ கொஞ்சமே கொஞ்சம் இருந்த காலம். அந்த ஒரே ஒரு வியாபாரத்தை வைத்து பணம் எடுத்து, சம்பாதித்து, கடன் அடைத்தோரும் இருந்த காலமது. ஆனால் இன்றோ, ஆடியோ, வீடியோ, தியேட்டரிக்கல், ஸ்ட்ரீமிங் டிஜிட்டல், வெளிநாட்டு உரிமம், என பல உரிமங்கள் இருந்தாலும் கடன் கடனாகவே இருக்கிறது. இன்றைக்கு பிரபலமாக உள்ள நான்கைந்து நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள் இதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தால் எப்படி இவர்களால் இத்தனை கோடியெல்லாம் செலவு செய்து படமெடுக்கிறார்கள் என்று கேட்டீர்களானால் அதற்கு ஒரே காரணம் அன்பு செழியன் போன்ற பைனான்ஸியர்கள் என்றே சொல்வேன்.


Mar 2, 2018

பைரஸியும் சினிமாவும் -5

பைரஸியும் சினிமாவும் -5
ஆம் தமிழ் சினிமாவின் பைரஸி உலகம் இலங்கை தமிழர்களால் தான் நடத்தப்படுகிறது. அதன் கீழ் இருக்கும் நாமெல்லாம் அவர்களது அடிபொடிகள் மட்டுமே. எந்த தமிழ் சினிமாவின் மார்கெட் உலகளாவிய வகையில் வளர உதவினார்களோ, அவர்களே தான் உலகளாவிய பைரஸிக்கும் காரணம். இந்த உண்மையை சொன்னதால் இயக்குனர் சேரனை கழுவி ஊற்றினார்கள் நம் தமிழ் பற்றாளர்கள். இவர்கள் எல்லாரும் எங்கேயிருந்துதான் வருவார்கள் என்று தெரியவில்லை. இலங்கை தமிழர்கள் என்றாலே கிளம்பி விடுகிறார்கள். இப்போது உலகம் எங்கும் இருக்கும் இலங்கை தமிழர்கள் இரண்டாம், அல்லது மூன்றாம் தலைமுறையினர்.  அவர்களைப் பொறுத்தவரை தமிழ் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள வரவேற்பு காரணமாய் நல்ல வியாபாரம் இருக்கிறது என்பது மட்டுமே தெரியும். அதற்கு இணையம் மிகப் பெரிய காரணம்.

பல ஐரோப்பிய நாடுகளில்  உள்ள சிறு திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்களை வாடகைக்கு வாங்கி திரையிடுகிறவர்கள் இந்த இரண்டாம்/ மூன்றாம் தலைமுறை இலங்கை தமிழர்களே. வாடகைக்கு வாங்கி அவர்களே பைரஸியும் எடுத்து அவர்களது வெப் சைட்டில் போட்டால் அதனால் வரும் வருமானம் பல கோடி. உலகமெங்கும் சர்வர்களை வைத்து நடத்தும் அளவிற்கு பிரபலமான சைட்டுகளை, அதிலும் குறிப்பாய் தமிழ் திரைப்படங்களுக்கான சைட்டுகளை நடத்துவது இவர்கள் தான்.

சில வருடங்களுக்கு முன்னால் நண்பன் ஒருவரை திடீரென கேரள போலீஸ் அரஸ்ட் செய்ய வந்தது. காரணமாய் சொல்லபட்டது என்னவென்றால் அவரது அக்கவுண்டுக்கு ஒர் குறிப்பிட்ட பைரஸி இணைய தளத்திலிருந்து பணம் பெறப் பட்டிருக்கிறது என்பதாகவும். எனவே அந்த பைரஸி சைட்டுக்கும் இவருக்கும் சம்பந்தம் இருப்பதாய் குற்றம் சாட்டினர். நிஜத்தில் இவரது அக்கவுண்டுக்கு சுமார் 120 ரூபாய் மட்டுமே அந்த இணையதளத்திலிருந்து வந்திருந்தது. நண்பரோ பேச்சுலர். ஏதோ பேங்கிலிருந்து பணம் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்து அன்றைய தினப்படி செலவுகளுக்காக எடுத்து செலவும் செய்திருக்கிறார். பின்பு தான் தெரிந்தது. கேரளாவில் பைரஸிக்கென தனி உயரதிகாரியின் கீழ் பெரிய டீம் அமைத்திருப்பதும், டெக்னிக்கலாய் அவர்கள் ஸ்ட்ராங்கான டீம் அமைத்து, இப்படி ஆன்லைனில் பார்பவர்களில் ஆரம்பித்து, அப்லோட் செய்கிறவர்கள் வரை கண்காணிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த வெப் சைட்டில் அப்லோட் செய்யப்பட்டது ஒரு மொக்கை மலையாளப்படம்.

தெலுங்கு படங்களோ, மலையாள படங்களோ, படம் வெளியான அன்றைக்கே பைரஸி வந்ததில்லை. இத்தனைக்கும் தெலுங்கு படங்கள் ஐரோப்பிய மார்கெட்டுகளிலும், அமெரிக்க, கனடிய மார்கெட்டுகளிலும் பெரும் அளவில் வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது. மலையாள படங்களுக்கு ஏற்கனவே இருக்கிற கல்ஃப் மார்கெட் போதும்.  ஆனாலும் இவர்களது படங்கள் இணையத்தில் குறைந்தது மூன்று மாதங்களுக்காகவாவது வெளிவருவதில்லை. மக்களிடமும் பெரிய ஆதரவில்லாதது ஒர் முக்கிய விஷயம். ஏனென்றால் தமிழ் நாட்டை போல தியேட்டர்களில் அவர்களின் டவுசர் அவிழ்க்கப்படுவதில்லை. அநியாய டிக்கெட் விலையும், அதிகப்படியான திரைப்படங்களின் வெளியீடும், தமிழ் சினிமாவின் பைரஸி வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாய் கருதப்படுகிறது.

சரி இத்தனை ரிஸ்க் எடுத்து நடத்தும் தொழிலில் அவ்வளவு பணம் கிடைக்குமா என்று கேட்டீர்களானால் நிச்சயம் உண்டு. இவர்களது சைட்டுகளின் ட்ராபிக் காரணமாய் அதில் வரும் விளம்பரங்கள். வழக்கமான் கூகுள் விளம்பரங்கள் இதில் வராது என்றாலும், இம்மாதிரியான வெப் சைட்டுகளுக்கு என்றே நிறைய விளம்பர நிறுவனங்களிருக்கிறது. குறிப்பாய் போர்ன் மற்றும் போரக்ஸ் பற்றிய விளம்பரங்கள் அதிகமாய் இருக்கும். கூகுள் தருவதை விட அதிகமாய் விளம்பர பணம் இவர்களது விளம்பரதாரர்களிடமிருந்து கொடுக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் டொனேஷன் செய்யுங்கள் என்று ஒரு பட்டன் இருக்கும். பேபால் மூலமாய் பணம் பெறக்கூடிய வசதி என உலகம் முழுவதும் படங்களைப் பார்க்கும் பல பேர் ஏதோ இவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டிலிருந்த படியே படம் பார்க்க வைக்க இப்படி உழைக்கிறானே என்று பரிதாபப்பட்டு, பத்து டாலரோ, ஐந்து ஈரோவோ ட்ரான்ஸ்பர் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவர்களது சைட்டுகள் மட்டுமில்லாமல் மற்ற சைட்டுகளின் மூலம் வரும் வருமானம். அவர்களது விளம்பரங்கள் என வருமானம் பல வகைகளில்.

இது மட்டுமில்லாமல் போட்டி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என லோக்கல் பாலிடிக்ஸ் போல ஐரோப்பிய லோக்கல் பாலிடிக்ஸ் மூலம் அவன் படம் வாங்கினா நீ உடனே ரிலீஸ் பண்ணு என்று பணம் கொடுத்து கோர்த்துவிடும் தொழில் போட்டி என பல வகைகளில் இவர்களது நெட்வொர்க் ஸ்ட்ராங்க். இத்தனை நிறுவனங்களையும் நடத்துவது பெரும்பாலும் இலங்கை தமிழர்கள் தான்.

பல கோடி ரூபாய் செலவு செய்து தயாரிக்கப்படும் படத்தை ஒரு சில கோடி கொடுத்து வாங்கப்பட்டு, உலகெங்கும் சர்வர்களுக்காக மட்டுமே ஒரு சில கோடிகளை செலவு செய்து , சம்பாரிக்கும் அளவிற்கான தொழிலாய் இந்த பைரஸி தொழில் வளர்ந்திருக்கிறது என்றால் அதன் வருமானத்தை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பைரஸி வெளியான பின் டிவிடி,போட்டு விற்பவர்களை பிடிப்பது எல்லாம் இவர்களது வியாபாரத்தில் ஒரு பர்செண்ட் கூட இருக்காது. பட். அதை தடுக்கவில்லை என்றால் நிச்சயம் பைரஸி வளர்ந்து கொண்டேயிருக்கும். இதை தடுக்க அரசு மனது வைக்காமல் எதுவும் முடியாது. ஏன் அமெரிக்க ஹாலிவுட் படங்கள் கூட நம்மூர் தமிழ் ராக்கர்ஸ் போல பல சைட்டுகள் வாரம் ஒரு டொமைன் என மாறிக் கொண்டே நடத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் இவர்களது திறமையெல்லாம் ஆசிய மார்கெட்டுகளில்தான். இவர்கள் தளத்தை நடத்துவதே அமெரிக்க மார்கெட்டுக்காக கிடையாது. ஏனென்றால் அங்கே இம்மாதிரியான சைட்டுகளை நீங்கள் தொடர்ந்து பார்க்கிற்வராய் இருந்தால் உங்களுக்கு காப்பிரைட் படி நோட்டீஸ் வந்து முப்பாட்டன் சொத்தையும் சேர்த்து எழுத வேண்டுமளவுக்கு சட்டம் ஸ்ட்ராங்க். நம்மூரில் அப்படியில்லை. காப்பிரைட் என்பதற்கான அர்த்தம் பெரும்பாலான பேர்களுக்கு தெரியவே தெரியாது. அதை சரியான முறையில் அமல்படுத்தி, அதற்குரிய சட்டதிட்டங்களை கடுமையாய் வகுத்து, பார்க்கிறவர்களையும் தடை செய்தால் தான் பைரஸி முழுவதும் ஒழியும். ஆனால் அதற்கு முதலில் முன் நிற்க வேண்டியது அரசு. அரசினால் மட்டுமே இது சாத்தியப்படும்.

லீகலாய் பணம் கட்டி பார்க்கும் ஸ்ட்ரீமிங் சைட்டுகளில் பார்க்கிறவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகியிருக்கிறார்கள். அது ஒரு விதத்தில் நல்லது என்றாலும், நல்ல சப்டைட்டில் ஹெச்.டி. பிரிண்டை இந்த சைட்டுகளிலிருந்து டவுன்லோட் செய்து பைரஸி சைட்டுகளில்  அப்லோட் செய்யும் வேலையும் ஆரம்பித்திருக்கிறது. இது தொடர்ந்தால் அந்த ஸ்ட்ரீமிங் வியாபாரமும் படுத்துப் போகும். எனவே மக்களே உங்களுக்கான சந்தோஷத்துக்காத்தான் எல்லாமே. ஆனால் அது மற்றவர்களின் சோகத்தில் கொண்டாடப்படுபவை அல்ல. ஒவ்வொரு முறை நீங்கள் பைரஸியை சப்போர்ட் செய்யும் போதும், நீங்கள் ஒரு தீவிரவாத செயலுக்கோ, அல்லது உலகின் மோசமான விஷயங்களுக்கு பயன்படும் விதமாய் துரோகச் செயலில் ஈடுபடுகிறவர்களுக்கு நீங்கள் மறைமுகமாய் ஆதரவு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.