Thottal Thodarum

Mar 2, 2018

பைரஸியும் சினிமாவும் -5

பைரஸியும் சினிமாவும் -5
ஆம் தமிழ் சினிமாவின் பைரஸி உலகம் இலங்கை தமிழர்களால் தான் நடத்தப்படுகிறது. அதன் கீழ் இருக்கும் நாமெல்லாம் அவர்களது அடிபொடிகள் மட்டுமே. எந்த தமிழ் சினிமாவின் மார்கெட் உலகளாவிய வகையில் வளர உதவினார்களோ, அவர்களே தான் உலகளாவிய பைரஸிக்கும் காரணம். இந்த உண்மையை சொன்னதால் இயக்குனர் சேரனை கழுவி ஊற்றினார்கள் நம் தமிழ் பற்றாளர்கள். இவர்கள் எல்லாரும் எங்கேயிருந்துதான் வருவார்கள் என்று தெரியவில்லை. இலங்கை தமிழர்கள் என்றாலே கிளம்பி விடுகிறார்கள். இப்போது உலகம் எங்கும் இருக்கும் இலங்கை தமிழர்கள் இரண்டாம், அல்லது மூன்றாம் தலைமுறையினர்.  அவர்களைப் பொறுத்தவரை தமிழ் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள வரவேற்பு காரணமாய் நல்ல வியாபாரம் இருக்கிறது என்பது மட்டுமே தெரியும். அதற்கு இணையம் மிகப் பெரிய காரணம்.

பல ஐரோப்பிய நாடுகளில்  உள்ள சிறு திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்களை வாடகைக்கு வாங்கி திரையிடுகிறவர்கள் இந்த இரண்டாம்/ மூன்றாம் தலைமுறை இலங்கை தமிழர்களே. வாடகைக்கு வாங்கி அவர்களே பைரஸியும் எடுத்து அவர்களது வெப் சைட்டில் போட்டால் அதனால் வரும் வருமானம் பல கோடி. உலகமெங்கும் சர்வர்களை வைத்து நடத்தும் அளவிற்கு பிரபலமான சைட்டுகளை, அதிலும் குறிப்பாய் தமிழ் திரைப்படங்களுக்கான சைட்டுகளை நடத்துவது இவர்கள் தான்.

சில வருடங்களுக்கு முன்னால் நண்பன் ஒருவரை திடீரென கேரள போலீஸ் அரஸ்ட் செய்ய வந்தது. காரணமாய் சொல்லபட்டது என்னவென்றால் அவரது அக்கவுண்டுக்கு ஒர் குறிப்பிட்ட பைரஸி இணைய தளத்திலிருந்து பணம் பெறப் பட்டிருக்கிறது என்பதாகவும். எனவே அந்த பைரஸி சைட்டுக்கும் இவருக்கும் சம்பந்தம் இருப்பதாய் குற்றம் சாட்டினர். நிஜத்தில் இவரது அக்கவுண்டுக்கு சுமார் 120 ரூபாய் மட்டுமே அந்த இணையதளத்திலிருந்து வந்திருந்தது. நண்பரோ பேச்சுலர். ஏதோ பேங்கிலிருந்து பணம் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்து அன்றைய தினப்படி செலவுகளுக்காக எடுத்து செலவும் செய்திருக்கிறார். பின்பு தான் தெரிந்தது. கேரளாவில் பைரஸிக்கென தனி உயரதிகாரியின் கீழ் பெரிய டீம் அமைத்திருப்பதும், டெக்னிக்கலாய் அவர்கள் ஸ்ட்ராங்கான டீம் அமைத்து, இப்படி ஆன்லைனில் பார்பவர்களில் ஆரம்பித்து, அப்லோட் செய்கிறவர்கள் வரை கண்காணிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த வெப் சைட்டில் அப்லோட் செய்யப்பட்டது ஒரு மொக்கை மலையாளப்படம்.

தெலுங்கு படங்களோ, மலையாள படங்களோ, படம் வெளியான அன்றைக்கே பைரஸி வந்ததில்லை. இத்தனைக்கும் தெலுங்கு படங்கள் ஐரோப்பிய மார்கெட்டுகளிலும், அமெரிக்க, கனடிய மார்கெட்டுகளிலும் பெரும் அளவில் வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது. மலையாள படங்களுக்கு ஏற்கனவே இருக்கிற கல்ஃப் மார்கெட் போதும்.  ஆனாலும் இவர்களது படங்கள் இணையத்தில் குறைந்தது மூன்று மாதங்களுக்காகவாவது வெளிவருவதில்லை. மக்களிடமும் பெரிய ஆதரவில்லாதது ஒர் முக்கிய விஷயம். ஏனென்றால் தமிழ் நாட்டை போல தியேட்டர்களில் அவர்களின் டவுசர் அவிழ்க்கப்படுவதில்லை. அநியாய டிக்கெட் விலையும், அதிகப்படியான திரைப்படங்களின் வெளியீடும், தமிழ் சினிமாவின் பைரஸி வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாய் கருதப்படுகிறது.

சரி இத்தனை ரிஸ்க் எடுத்து நடத்தும் தொழிலில் அவ்வளவு பணம் கிடைக்குமா என்று கேட்டீர்களானால் நிச்சயம் உண்டு. இவர்களது சைட்டுகளின் ட்ராபிக் காரணமாய் அதில் வரும் விளம்பரங்கள். வழக்கமான் கூகுள் விளம்பரங்கள் இதில் வராது என்றாலும், இம்மாதிரியான வெப் சைட்டுகளுக்கு என்றே நிறைய விளம்பர நிறுவனங்களிருக்கிறது. குறிப்பாய் போர்ன் மற்றும் போரக்ஸ் பற்றிய விளம்பரங்கள் அதிகமாய் இருக்கும். கூகுள் தருவதை விட அதிகமாய் விளம்பர பணம் இவர்களது விளம்பரதாரர்களிடமிருந்து கொடுக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் டொனேஷன் செய்யுங்கள் என்று ஒரு பட்டன் இருக்கும். பேபால் மூலமாய் பணம் பெறக்கூடிய வசதி என உலகம் முழுவதும் படங்களைப் பார்க்கும் பல பேர் ஏதோ இவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டிலிருந்த படியே படம் பார்க்க வைக்க இப்படி உழைக்கிறானே என்று பரிதாபப்பட்டு, பத்து டாலரோ, ஐந்து ஈரோவோ ட்ரான்ஸ்பர் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவர்களது சைட்டுகள் மட்டுமில்லாமல் மற்ற சைட்டுகளின் மூலம் வரும் வருமானம். அவர்களது விளம்பரங்கள் என வருமானம் பல வகைகளில்.

இது மட்டுமில்லாமல் போட்டி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என லோக்கல் பாலிடிக்ஸ் போல ஐரோப்பிய லோக்கல் பாலிடிக்ஸ் மூலம் அவன் படம் வாங்கினா நீ உடனே ரிலீஸ் பண்ணு என்று பணம் கொடுத்து கோர்த்துவிடும் தொழில் போட்டி என பல வகைகளில் இவர்களது நெட்வொர்க் ஸ்ட்ராங்க். இத்தனை நிறுவனங்களையும் நடத்துவது பெரும்பாலும் இலங்கை தமிழர்கள் தான்.

பல கோடி ரூபாய் செலவு செய்து தயாரிக்கப்படும் படத்தை ஒரு சில கோடி கொடுத்து வாங்கப்பட்டு, உலகெங்கும் சர்வர்களுக்காக மட்டுமே ஒரு சில கோடிகளை செலவு செய்து , சம்பாரிக்கும் அளவிற்கான தொழிலாய் இந்த பைரஸி தொழில் வளர்ந்திருக்கிறது என்றால் அதன் வருமானத்தை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பைரஸி வெளியான பின் டிவிடி,போட்டு விற்பவர்களை பிடிப்பது எல்லாம் இவர்களது வியாபாரத்தில் ஒரு பர்செண்ட் கூட இருக்காது. பட். அதை தடுக்கவில்லை என்றால் நிச்சயம் பைரஸி வளர்ந்து கொண்டேயிருக்கும். இதை தடுக்க அரசு மனது வைக்காமல் எதுவும் முடியாது. ஏன் அமெரிக்க ஹாலிவுட் படங்கள் கூட நம்மூர் தமிழ் ராக்கர்ஸ் போல பல சைட்டுகள் வாரம் ஒரு டொமைன் என மாறிக் கொண்டே நடத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் இவர்களது திறமையெல்லாம் ஆசிய மார்கெட்டுகளில்தான். இவர்கள் தளத்தை நடத்துவதே அமெரிக்க மார்கெட்டுக்காக கிடையாது. ஏனென்றால் அங்கே இம்மாதிரியான சைட்டுகளை நீங்கள் தொடர்ந்து பார்க்கிற்வராய் இருந்தால் உங்களுக்கு காப்பிரைட் படி நோட்டீஸ் வந்து முப்பாட்டன் சொத்தையும் சேர்த்து எழுத வேண்டுமளவுக்கு சட்டம் ஸ்ட்ராங்க். நம்மூரில் அப்படியில்லை. காப்பிரைட் என்பதற்கான அர்த்தம் பெரும்பாலான பேர்களுக்கு தெரியவே தெரியாது. அதை சரியான முறையில் அமல்படுத்தி, அதற்குரிய சட்டதிட்டங்களை கடுமையாய் வகுத்து, பார்க்கிறவர்களையும் தடை செய்தால் தான் பைரஸி முழுவதும் ஒழியும். ஆனால் அதற்கு முதலில் முன் நிற்க வேண்டியது அரசு. அரசினால் மட்டுமே இது சாத்தியப்படும்.

லீகலாய் பணம் கட்டி பார்க்கும் ஸ்ட்ரீமிங் சைட்டுகளில் பார்க்கிறவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகியிருக்கிறார்கள். அது ஒரு விதத்தில் நல்லது என்றாலும், நல்ல சப்டைட்டில் ஹெச்.டி. பிரிண்டை இந்த சைட்டுகளிலிருந்து டவுன்லோட் செய்து பைரஸி சைட்டுகளில்  அப்லோட் செய்யும் வேலையும் ஆரம்பித்திருக்கிறது. இது தொடர்ந்தால் அந்த ஸ்ட்ரீமிங் வியாபாரமும் படுத்துப் போகும். எனவே மக்களே உங்களுக்கான சந்தோஷத்துக்காத்தான் எல்லாமே. ஆனால் அது மற்றவர்களின் சோகத்தில் கொண்டாடப்படுபவை அல்ல. ஒவ்வொரு முறை நீங்கள் பைரஸியை சப்போர்ட் செய்யும் போதும், நீங்கள் ஒரு தீவிரவாத செயலுக்கோ, அல்லது உலகின் மோசமான விஷயங்களுக்கு பயன்படும் விதமாய் துரோகச் செயலில் ஈடுபடுகிறவர்களுக்கு நீங்கள் மறைமுகமாய் ஆதரவு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.





Post a Comment

1 comment:

Unknown said...

I want to see the picture or short film in legal manner. In what way I see the short film or picture in legal way. Because some of the film I want to see in the theater is not possible they run out from the theater in 3 or 4 days. Can you give suggestion
A Abdul Rahim