கொத்து
பரோட்டா 2.0-56
ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் குழம்பிப்
போயிருக்கின்றன தீயில் மீண்டும் தமிழக அரசு எண்ணெய் ஊற்றியிருக்கிறது. தமிழக கேளிக்கை
வரி இருக்கிறதா? இல்லையா? என்ற குழப்பத்துடனே 18 முதல் 28 சதவிகித ஜி.எஸ்.டியை திரையரங்குகள்
வசூலித்துக் கொண்டிருந்தாலும், விநியோகஸ்தர்களுக்கு கடந்த சில மாதமாய் தியேட்டர் அதிபர்கள்
வசூலை செட்டில் செய்வதில் பல குழப்பங்கள். காரணம் மேற்ச் சொன்ன கேளிக்கை வரி இருக்கிறதா?
இல்லையா? என்கிற குழப்பம் காரணம். திடீரென ஆறு மாதத்திற்கு முன் தேதியிலிருந்து பணத்தை
கட்டுங்கள் என்ற சட்டம் போட்டுவிட்டால் விநியோகஸ்தர்களிடமிருந்து பணத்தை எப்படி வாங்குவது
என்ற பயத்தில் பல தியேட்டர்கள் வசூலான தொகையை கொடுக்காமலேயே இருக்கிறது. இந்த லட்சணத்தில்
இப்போது தடாலென தமிழ் சினிமாவிற்கு பத்து சதவிகிதம் வரி மற்ற மொழி படங்களுக்கு 20 சதவிகிதம்
வரி என்று அறிவிப்பு மேலும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம் முன்பு கேளிக்கை
வரி அரசின் நிர்ணையிக்கப்பட்ட 120 ரூபாய்க்குள் இருந்தது. அதாவது 120 ரூபாயில் முப்பது
சதவிகித வரியும் சேர்ந்தது. ஆனால் ஜி.எஸ்.டிக்கு பிறகு 120 ரூபாய் அப்படியே திரையரங்குக்கும்
விநியோகஸ்தர்களுக்கும் போய் சேர்ந்து கொண்டிருந்த நேரத்தில், இப்போது திடீரென பத்து
சதவிகிதம் வரி கட்டு என்றால் மீண்டும் அது 120 ரூபாய்க்குளிலிருந்து கட்ட வேண்டுமா?
அல்லது 120 ரூபாய்க்கு 10 சதவிகிதம் வரி போட்டு, பின்பு அதன் மேல் ஜி.எஸ்.டி போட்டு
வரி வாங்க வேண்டுமா? என்பதுதான். ஏற்கனவே காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் மக்களிடம்
156.40 பைசாவுக்கு சில்லரை தருவதில்லை. வழக்கத்திலேயே இல்லாத 50 பைசா, 10 பைசா மட்டுமில்லாமல்
ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் சில்லரையைக் கூட தராமல்மொத்தமாய் 160 வாங்கிப் போட்டுக்
கொள்ளும் திரையரங்குகள் ஏராளம். இப்படியிருக்க, இப்போது புது வரி. இது என்னன்ன குழப்பங்களை
கொண்டு வரப் போகிறதோ என்று புரியவில்லை.
பைரஸியை ஒழிப்பேன் என்று சொல்லுங்கள்.
தமிழ் நாடு முழுவதும் ஆன்லைனில் டிக்கெட் கொண்டு வரும் முறையை அமல்படுத்த சொல்லுங்கள்
நாங்கள் வரி கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று விஷால் அறிவித்துள்ளார். இது மல்ட்டிப்ளெக்ஸ்
தவிர மற்ற ஊர் தியேட்டர்காரர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும் விஷயம் தான். ஆனால்
இதை செய்தால்தான் அட்லீஸ்ட் நேர்மையாய் வரியை பிடித்தம் செய்து, விநியோகஸ்தர்கள் பங்கை
கணக்கில் கொண்டு வர முடியும். பைரஸியை ஒழிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை என்றாலும்
அரசின் துணையிருந்தால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். அதற்கு அரசை ஒத்துழைக்க வைக்க,
விஷாலின் கோரிக்கை கொஞ்சம் நியாயமாய்த்தான் படுகிறது. எதையுமே எங்களுக்கு செய்யாமல்
எதுக்கு வரி மட்டும் கேட்கிறாய்? என்கிறார். ஆனால் இப்படி ஒரேயடியாய் எல்லாவற்றிலும்
விலையேற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் மக்கள் தியேட்டர் பக்கம் ஒதுங்குவது ரொம்பவும்
கஷ்டமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Hindi
Medium
ஒரு தூக்கம் வராத நடுராத்திரி வேளையில்
பார்க்க ஆரம்பித்த படம். எப்படி இதை திரையில் பார்க்காமல் போனோம் என்று வருத்தப்பட
வைத்த அட்டகாசமான படம். ராஜு, மித்தா தம்பதியருக்கு ஒரு குட்டி தேவதை பெண். மித்தாவுக்கு
தன் பெண்ணை ஆங்கில மீடியம் ஸ்கூலில் தான் படிக்க வைக்க வேண்டுமென்று ஆசை. அதுவும் டெல்லியில்
உள்ள பெரும் பணக்கார பள்ளியில் மட்டுமே என்பது முக்கியம். ராஜ் டெல்லியில் சாந்தினி
சவுக் பஜாரில் பிரபல டிசைனர்களின் டிசைன்களை ஒரிஜினல் காப்பிஸ் என்று செம்ம வியாபாரம்
செய்து கொண்டிருக்கிறவன். டிபிக்கல் ஹிந்திவாலா. மனைவியின் இம்சை தாங்காமல் அத்துனை
பள்ளிகளின் அட்மீஷன் பாரத்தை விடிய விடிய நின்று வாங்குகிறான். ஆனால் அங்கேயெல்லாம்
சீட் கிடைக்க, பெற்றோர்களுக்கு க்ளாஸ் எடுக்க, மித்தாவின் கல்லூரி தோழன் ஒருவன் சீட்
கிடைக்க ஒரு கன்சல்டண்டை அறிமுகப்படுத்துகிறான். எல்.கே.ஜி. சீட்டுக்கு. அந்த கன்சல்டெண்ட்
பெண் படுத்தும் பாடுகள், குழந்தைக்கு ஆங்கில ஹைஃபை சொசைட்டி பழக்கம் வேண்டுமென்று இம்சித்து,
புராதான குடும்ப வீட்டை விட்டு, பக்கத்தில் இருக்கும் ஹைஃபை சொசைட்டியில் குடியேறுவது.சாதாரணம்
உடைகளை விட்டு, வெகு பணக்கார உடைகளுக்கு மாறுவது என எல்லா வேலைகள் செய்தும், நான்கு
ஸ்கூல்களில் ராஜ் – மித்தா தம்பதியரின் பெண்ணுக்கு சீட் கிடைக்காமல் போகிறது.
ஆர்.டி.ஈ எனும் படிப்பதற்கான உரிமை
கோரலின் படி ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சீட்டை வாங்க முடியும் என்று தெரிய வர,
ராஜ் பணம் கொடுத்து அந்த கேட்டகிரியில் அப்ளை செய்கிறான். அப்போது பார்த்து பள்ளியின்
மேல் ஏழைகளுக்கான சீட்டை பணக்காரர்களுக்குகொடுப்பதாய் பள்ளியில் வேலை பார்க்கும் ஒருவரே
கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட, நேரில் சென்று விசாரித்து பார்த்துதான் சீட் கொடுக்கப்படும்
என்று சொல்லிவிடுகிறார்கள். வேறு வழியில்லாமல்
ராஜ் – மித்தா தம்பதியினர் உடனடியாய் ஏழை வேஷம் போட வேண்டிய கட்டாயம். ஒரு லோயர் மிடில்
க்ளாஸ் இடத்தில் வாடகைக்கு போய் இருக்க பழகுகிறார்கள். அங்கு பல விஷயங்கள் அவர்களுக்கு
வாழ்க்கையை புரிய வைக்கிறது. அவர்களது பெண்ணிற்கு சீட்டும் கிடைக்கிறது. மீண்டும் தங்கள்
வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பினாலும், அநியாயமாய் ஒரு ஏழைக்கு கிடைக்க வேண்டிய சீட்டை
பறித்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியில் ஒரு கவர்மெண்ட் பள்ளியை தத்தெடுத்து அதை உயர்த்துகிறார்கள்.
ஆனால் பிரச்சனை ஏழையாய் வாழ்ந்த நாட்களில் நெருக்கமான நண்பனாய் வலம் வந்த ஷியாம் சுந்தரின்
வடிவில் வருகிறது. பின்பு என்ன ஆனது என்பதை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு கொள்க.
மிக சாதாரண கதை. படம் நெடுக பிரசாரமில்லா
சர்காசம். காமெடி. அற்புதமான வசனங்கள். ராஜ் என் மகளுடய சீட்டை உன் மகனுக்கு வாங்கிக்
கொடுக்கிறேன் என்று ஷியாமிடம் சொல்லும் போது, ஷியாம் கோபப்பட்டு, நீ கொடுப்பது பிச்சை. ஆனால் என்னிடமிருந்த் பறித்தது எனக்கான உரிமையை.
உரிமையை நான் ஏன் பிச்சையெடுத்து பெற வேண்டும்? என்று கேட்குமிடம் ஒர் உதாரணம். ராஜாக
நடித்த இர்பானின் நடிப்பு மிக இயல்பு. எழுதி இயக்கிய சாகேத் சவுத்ரிக்கு வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Newton
அரசியல் படம் எடுக்க வேண்டுமென்றால்
போலீஸ், எம்.எல்.ஏ, எம்.பி. அடியாள். பெய்ட் கில்லர் எல்லாம் தேவையில்லை. சாதாரண அரசு
அதிகாரியின் வாழ்க்கையை கண் முன்னே காட்டினால் போதும். அதிலும் உலகிலேயே பெரிய ஜனநாயக
கடமையான தேர்தலை சத்தீஷ்கரில், நக்சல்பாரிகளின் கண்ட்ரோலில் உள்ள ஒர் தொகுதியில் வெற்றிகரமாக
நடந்துவதற்கு போகும் நியூடன் குமார் எனும் அரசு அதிகாரியின் கதை. நியூடன் குமார் நேர்மையான
அரசு அதிகாரி. திருமணமாகாதவன். யாருமே தேர்தல் அதிகாரியாய் போகத் தயங்கும் இடத்திற்கு
போகிறேன் என்கிறான். அங்கே போகும் போதுதான் தெரிகிறது அங்கு இதுவரை நிஜத்தேர்தலே நடந்ததில்லை என்று. அதையும்
மீறி போலிங் பூத்துக்கு போயே ஆகவேண்டும் என்று கிளம்புகிறான் நியூட்டன். உடன் ஒர் அதிகாரியும்.
ஆதிவாசிகளிடையே படித்து அரசு அதிகாரியாய் பணிபுரியும் மைக்கோ எனும் பெண்ணுடன். போலிங்
பூத்துக்கு யாருமே வரவில்லை. மீறி அழைத்தால் யாருமே வருவதற்கு தயாராக இல்லை. ஆட்களே
வராத காரணத்தால் தன்னுடன் வந்திருக்கும் போலீஸ்காரர்களை கொண்டு போலி ஓட்டு போடலாம்
என்கிறார் போலீஸ் தலைவர். அதற்கு ஒத்துக் கொள்ளாத நியூட்டன் ஆட்களை தேடிப் போய் அழையுங்கள்
என்கிறான். அந்நேரம் பார்த்து வெளிநாட்டிலிருந்து மீடியா ஆதி வாசிகளின் தேர்தல் பூத்தை
படம்பிடிக்க வருவதாய் போலீஸுக்கு தகவல் வர, போலீஸார் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி
அனைவரையும் வரவழைக்கின்றனர். இது எதையும் அறியாத நியூட்டன் வந்தவர்களை ஓட்டுப் போட
அனுமதிக்க, எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷினில் ஓட்டுப் போடுவதைப் பற்றி எதையும் தெரியாமல்
முதல் ஓட்டரே விழிக்கிறார்.
வேறு வழியில்லாமல் அனைவருக்கு மீண்டும்
அங்கேயே க்ளாஸ் எடுக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு புரியவில்லை. போலீஸுக்கோ மீடியா
உயர் அதிகாரியுடன் வரும் போது ஓட்டு போடப்பட வேண்டிய கட்டாயம். அது ஒரு விளையாட்டு
உபகரணம் என்றும் விளக்கிற்கு பக்கத்தில் இருக்கும் படங்கள் உங்களுக்கு பரிசாய் வருமென்று
சொல்கிறார். நியூட்டன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் வேறு வழியில்லாமல் ஓட்டு பதிவு
நடைபெறுகிறது. மீடியா போன பின்பு திடீரென மவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த, அனைவரும் ஓட்டுப்
பதிவு முடிவதற்கு முன்பே அங்கிருந்து கிளம்புகின்றனர். எப்படி வராத ஓட்டர்கள் பாரின்
மீடியாவுக்கு முன் வந்தார்கள்? திடீரென எங்கிருந்து மாவோயிஸ்ட் தாக்குதல் என்று யோசித்த
நியூட்டனுக்கு ஒரு விஷயம் ஸ்ட்ரைக் ஆகிறது. அப்போது பார்த்து நான்கு ஓட்டர்கள் வழியில்
வர அங்கேயே அவர்களது ஓட்டை போட வைக்க விரும்புகிறான். போலீஸ் அவனை தடுக்கிறது.
மக்களுக்கான அரசாங்கம், ஒடுக்கப்பட்ட
மக்களுக்கான திட்டங்களைத் தீட்டும் அரசாங்கம் எப்படி இயங்குகிறது என்பதை அதே அரசாங்கத்துக்காக
பணி செய்யும் ஒர் ஊழியனின் பார்வையில் சாட்டையால் அடித்திருக்கிறார் இயக்குனர் அமித்
மசூர்கர். நியூட்டனாய் நடித்திருக்கும் ராஜ்குமார் ராவின் நடிப்ப ஆப்ஃட். க்ளைமேக்ஸை
நோக்கிப் போகும் திரைக்கதையில் பரபரப்பாக நடக்கும் காட்சிகள் கொஞ்சம் நம்பக்தன்மையற்றதாய்
அமைந்துவிட்டது நம்முடை ஆஸ்கர் கனவை தகர்க்க கூடியதாக அமைந்துவிட்டது வருத்தமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@