பைனான்ஸ்
இல்லாமல் படமெடுக்கவே முடியாதா? என்று கேட்பீர்களானால் ஏன் முடியாது என்ற கேள்வியும்
எழும். ஏனென்றால் புதுமுகங்களை வைத்து, அல்லது ஒரிரு தெரிந்த முகங்களை வைத்து 1-3 கோடிக்குள்
தயாரிக்கப்படும் அத்துனை படங்களும் சொந்த பணத்தையோ, அல்லது நில புலன்களை அடமானம் வைத்தோதான்
எடுக்கப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால் நிஜமாகவே தமிழ் சினிமாவை காப்பாற்றும் ஆபத்பாந்தவன்
இந்த புது தயாரிப்பாளர்கள் தான்.
புது
தயாரிப்பாளர்கள் தற்போதெல்லாம் மஞ்சள் பையை தூக்கிக் கொண்டு மட்டும் வருவதில்லை வெளிநாடுகளில்
பொட்டித்தட்டி சம்பாரித்து வருகிறவர்கள். வீண் பெருமைக்காக வெளிநாடுகளில் தொழில் செய்யும்
முனைவர்கள் கன்வர்ஷன் மணியில் இங்கே மீடியாவில் புகழ் பெற, மற்ற சிற்றின்பங்களைப் பெற
படமெடுப்பவர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், மீடியேட்டர்கள், பிரபலங்களின் பினாமிக்கள்
என பல விதங்களில் வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் நிச்சயமாய் கடன் வாங்கி படமெடுப்பவர்கள்
இல்லை என்பதை உறுதியாய் சொல்ல முடியும்.
கதை
திரைக்கதை வசனமெழுதி இயக்குவதற்கு எப்படி ஒருவர் திறமையானவராய் இருக்க வேண்டுமோ அதே
அளவிற்கு தயாரிப்பாளருக்கும் தயாரிப்பு தெரிந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு கலை தான்.
முதல் படங்களில் ஏதும் தெரியாமல் இது தான் சினிமா போல என்று திக்கி திணறியவர்கள் கடவுள்
புண்ணியத்தில் அந்த படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து படமெடுத்து, கடைசி வரை தயாரிப்பு
என்பது என்ன என்பதையே தெரியாதவராய் வெளியேறியது கூட நடந்திருக்கிறது. எனக்கு தெரிந்த
தயாரிப்பாளர் ஒருவர் ஆறு படங்கள் தயாரித்திருக்கிறார். இது வரை ஒரு சினிமா எந்தெந்த
நிலையில் என்னன்ன முறையில் உருவாக்கம் செய்யப்படுகிறது என்பதைப் பற்றியோ, யார் யார்
என்னென்ன வேலைகள் செய்வார்கள் என்பது பற்றியோ கொஞ்சம் கூட தெரியாது. இப்படியானவர்கள்
எத்தனை படமெடுத்தாலும் அது பஞ்சாயத்தில் போய்த்தான் முடியும்.
சரி
அப்படியானால் பிரபல தயாரிப்பாளர் பலரும் பைனான்ஸ் வாங்கித்தான் படமெடுப்பதாய் சொல்கிறார்களே?.
ஆம் பிரபல தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் பைனான்ஸ் வாங்கித்தான் படமெடுக்கிறார்கள்.
சமீபத்தில் சிம்புவை வைத்து ஏஏஏ எனும் படத்தை எடுத்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
தான் வீடு வாசலை எல்லாம் இழந்துவிட்டதாக சொல்லி பேசிய பேச்சும் அறிக்கையையும் பார்த்திருப்பீர்கள்
படித்திருப்பீர்கள். ஆரம்பத்தில் சின்னதாய் படமெடுத்தவர் தான் போகப் போக கதை கேட்க போகும் போது கூட நடிகர்கள் கால்ஷீட் இருந்தால்
மட்டுமே படமெடுக்கலாம் என்று முடிவுக்கு வந்தவர். இத்தனைக்கும் அரசியல் பின்புலம்,
வியாபார பின்புலமென பலமானவர்தான். எப்போது நடிகனை முன்னுக்கு வைத்து தயாரிப்பில் இறங்குகிறார்களோ
அப்போதே படத்தின் மீதான அவருடய ஹோல்ட் போய்விடுகிறடு. படத்தின் பட்ஜெட்டையும் ரிலீசையும்,
வியாபாரத்தையும், படமெடுப்பதை பற்றியும் முடிவெடுப்பவன் நடிகனாகிப் போகிறான்.
ஒரு
புதிய தயாரிப்பாளர் சிறு முதலீட்டு படமெடுத்து நல்ல மார்கெடிங் மூலமாய் வெற்றிப் படத்தை
அளித்தவர். முதல் படத்தின் மூலம் கிடைத்த லாபம், நண்பர்களின் இன்வெஸ்ட்மெண்ட் என மீண்டும்
ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுத்தார். அதிலும் வெற்றி. தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களை
எடுத்து சரியான முறையில் மார்கெட் செய்து தொடர் வெற்றி பெற, பணபலமிக்கவர்கள் அவரை சூழ்ந்து
கொண்டார்கள். ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும் போது தேவையான பணத்தை கொடுத்து பர்ஸ்ட் காப்பியில்
தயாரித்து தரச் சொல்லும் அளவிற்கு பிரபலமானார்
அந்த தயாரிப்பாளர். தொடர் வெற்றி என்பது எப்போது சாத்தியமில்லாத ஒன்று. அது
அவருக்கும் நடந்தது சின்ன பட்ஜெட் படங்களில் வெற்றி பெற்றவர். அவரின் கை மீறிய பெரிய
பட்ஜெட் படங்களுக்கு போகும் போது சறுக்க ஆர்மபித்தார். உடனிருந்தவர்கள் பொறுத்தார்கள்.
தொடர் மிட் பட்ஜெட் படங்கள் கை கொடுக்காமல் போக, அடுத்தடுத்து வளர்த்த நடிகர், இயக்குனர்களை
வைத்து எடுக்கப்பட்ட படம் பட்ஜெட் மீறி, வியாபாரம் ஆகியும் மொத்தமாய் கை கடிக்க, நெருங்கியவர்கள்
கை தூக்கிவிட்டார்கள். தற்போது படம் தயாரித்தே ஆகவேண்டும். இத்தனை நாள் பணம் இன்வெஸ்ட்
செய்ய ஆளிருந்தார்கள். மீண்டும் சொந்த பணத்தில் படமெடுக்க வேண்டிய நிலை. ஓ.பி.எம்மில்
படமெடுத்து பழகிப் போயிருக்க, சரியான முறையில் தயாரிப்பு தொழில் தெரிந்த தைரியத்தில்
பைனான்ஸ் வாங்கி படமெடுக்க ஆரம்பிக்கிறார். படம் வளர, அந்த படத்தை தாங்க இன்னொரு மீடியம்
பட்ஜெட் படத்தை ஆரம்பிக்கிறார்கள். எல்லாம்
சரியான படி நடந்திருந்தால் நிச்சயம் லாபம் வருகிறதோ இல்லையோ, நஷ்டம் வந்திருக்காது
சினிமாவைப் பொறுத்த வரை எல்லா வியாபாரங்களும் நம்பிக்கையின் பேரில் தான் இயங்குகிறது.
நேற்றைக்கு விற்பனை ஆன ஒர் நடிகரின் ப்ராஜக்ட் இன்றைக்கு ஆகாமல் நிற்கும். ஏன் என்று
கேட்டால் அதற்கு பல காரணங்கள்.
எதிர்பார்த்த
வியாபாரங்க்ள் நடக்காததினால், வருமானமில்லாமல்
வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்ட வேண்டிய நிலை உண்டாகி, கொஞ்சம் கொஞ்சமாய் டைட்
ஆகிறார்கள். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், இருக்கும் பட்சத்தில் வட்டிக்கு
வட்டி போட்டோ, அல்லது படம் நன்றாக வந்திருக்கும் பட்சத்தில், படத்தின் சாட்டிலைண்ட்
உரிமை, ஏரியா உரிமை என எதையாவது வாங்கி வைத்துக் கொண்டும் வட்டியை கழிக்கும் வழக்கம்
உண்டு. சமீப காலமாய் சாட்டிலைட் உரிமம் என்பது வெற்றி பெரும் படங்களுக்கு மட்டுமே என்றான
பிறகு அதற்கு உறுதியில்லாததால் திரி சங்கு நிலைதான். இப்படியான நிலையில் எப்படி பைனான்ஸியர்
தன் கடனை எடுப்பார்? தயாரிப்பாளர் வாங்கிய கடனை கொடுப்பார்?
Post a Comment
No comments:
Post a Comment