Thottal Thodarum

May 12, 2018

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -5

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -5
நண்பருக்காக படம் தயாரிக்க வந்து கிட்டத்தட்ட மூன்று கோடிக்கு மேல் இழந்து இன்னும் முடிக்காமல் இருக்கும் படத்தை கையில் வைத்துக் கொண்டிருந்தவரிடம் நான் சொன்ன பதில் யோசனை செய்ய வைத்தது. ” அப்ப படத்த அப்படியே விட்டுற சொல்றீங்க?”

“நான் சாதகம் பாதகம் ரெண்டையும் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம் “ என்றேன்.
நீண்ட பெருமூச்சை எடுத்து விட்டு, “நல்லதோ கெட்டதோ நான் ஒரு விஷயத்தை எடுத்தா முடிக்காம விட்டதில்லை. இனி யோசிக்கிறதுக்கு ஒண்ணுமில்லை. இன்னும் ஒரு ஐம்பதுலட்சம் தானே.. போகட்டும்” என்று சொல்லிவிட்டு, ஊருக்கு சென்றவர் தான். இது வரை பட ரிலீஸ் அன்றைக்கு கூட அவர் வரவில்லை. அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு குழந்தையைப் போல யாருக்கும் தெரியாமல் அந்த படம் சென்னையில் மொக்கை தியேட்டர்களில் ரீலீஸ் செய்யப்பட்டு ரெண்டொரு ஷோவில் தூக்கப்பட்டு முடிந்து போனது.

கந்து வட்டிதான் சினிமாவை இயக்குகிறதா? என்று கேட்பீர்கள் என்றால் நிச்சயம் இல்லை இம்மாதிரியான தயாரிப்பாளர்களினால் தான் சினிமா இயங்குகிறது என்று சொல்வேன்.

இவராவது சினிமா எனும் மாயை தெரியாமல் நண்பருக்காக மாட்டி கொண்டவர். என்றைக்காவது ஒரு நாள் சினிமாவில் நடித்தே தீருவேன் என்ற நம்பிக்கையில் ஊரிலிருந்து மஞ்சப்பை கூட இல்லாமல் வந்தவர் நண்பரொருவர். ஆரம்பக் காலத்தில் ஏறாத படியில்லை. அந்தக்கால சின்ன ராஜ் கிரண் போல இருப்பார். கிராமத்து படங்கள் ஏகபோகமாய் ஓடிக் கொண்டிருந்த காலம். “ராமராஜனெல்லாம் நடிக்கும் போது எனக்கென்ன  குறைச்சல்” என்று வெளிபடையாகவே பெருமுவார். தீவிர முயற்சி செய்து நான்கைந்து படங்களில் வாய்ப்பு கிடைத்தது கூட்டத்தில் குரல் கொடுப்பதாகவோ, அல்லது நான்கைந்து பேர்களுடன் நடந்து போவதாகவோ இருக்க, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், சென்னையில் ஒரு கடைக்கு வேலைக்கு போய்விட்டார். சில பல வருடங்களுக்கு பின் அவரை சந்தித்த போது ஒர் பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு உரிமையாளராய் இருந்தார்.  அவரை எப்போது சந்தித்தாலும் நான்கைந்து கண்களில் பஞ்சடைந்த இளைஞர்கள் சுற்றி இருப்பார்கள். எல்லாரும் உதவி இயக்குனர்கள். நண்பர் உடலை கட்டு மஸ்தாகவே வைத்திருந்தார். இன்றைக்கு அவரது வயது ஐம்பதுக்கும் மேலே. ஆனால் பார்த்தால் தெரியாது. உடனிருக்கும் இயக்குனர்கள் தினமும் அவரை சந்தித்து கதை சொல்வது, படங்களுக்கு போவது என்றிருக்க, ஒவ்வொரு நாளும் அவர் இன்னமும் ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கையையும் ஏற்றிக் கொண்டேயிருந்தர்கள்.

“சார்.. ஹிந்தியில ஷாருக், சல்மான் எல்லாம் அம்பது வயசு கிட்ட.. அவங்க எல்லாம் மாஸ் ஹீரோ உங்களுக்கு என்ன குறைச்சல் சும்மா கிண்ணுனு இருக்கீங்க.. நல்ல கதை தான் நல்ல சினிமாவுக்கு அடிப்படை. நல்ல கதையை எடுத்தோம்னா ஹிட்டாயிட்டு போகுது. இந்தியாவுலேயே தமிழ் சினிமாதான் அப்படியான படங்களை, கதைகளை கொடுத்திட்டிருக்கு. தெரியுங்களா.. உங்களுக்காகவே ஒரு கதை பண்ணுவோம் அதை நல்லா பண்ணுவோம் என்று திரும்பத் திரும்ப சொல்ல, ஒரு சுபயோக சுப தினத்தில் அவர் நாயகனாய் போட்டோ செஷன் செய்து ஒரு பட விளம்பரம் வெளியானது. விளம்பரத்தை பார்த்ததும் போன் செய்தேன். விளம்பரத்தில் வித்யாசமாய் இருப்பதாய் சொன்னேன். பெரிதாய் சிரித்தார். “பர்ஸ்ட் லுக்கே அசத்திருச்சு போலருக்கே. அதுலேயும் நீங்களே நலலருக்குன்னு சொல்றீஙக்”என்று சந்தோஷப்பட்டார். ஒரு மரியாதை நிமித்தமாய் பாராட்டியதை அவர் சீரியசாய் எடுத்துக் கொண்டார் என்பது புரிந்தது.

அதன் பிறகு அவரை சந்திக்க விழையும் போதெல்லாம் இயக்குனரோ, உதவி இயக்குனரோ, சமயங்களில் பதினெட்டு வயது நாயகியோ உடனிருக்க, அவருடன் பேசவே நேரம் கிடைக்கவில்லை. ஜரூராய் படப்பிடிப்பு போனது. ஒரு நாள் அவரிடமிருந்து போன். “தலைவரே. நம்ப படத்துக்கு பைனான்ஸ் கிடைக்குமா?” என்றார்.

“அண்ணே தப்பா நினைச்சுக்காதீங்க.. புது நடிகர்கள் படத்துக்கு பைனான்ஸ் எல்லாம் பண்ற நிலைமையில இப்போதைக்கு தமிழ் சினிமா நிலவரமில்லை” என்றேன்.

“படம் நல்லா வந்திட்டிருக்கு. டைரக்டர் கொஞ்சம் பர்பெக்‌ஷன் பார்ட்டி. நம்மளை நல்லா கொண்டு வரணும்னு ரொம்பவே மெனக்கெடராரு. அதான் பட்ஜெட் கொஞ்சம் ஜாஸ்தியாவுது.” என்று இழுத்தவர். நம்ம வீட்டு மேல கடன் கிடைக்குமா?’ என்று கேட்டவரின் குரலில்  அவசரம் இருந்தது.

”அண்ணே உங்க நண்பர்ங்கிற முறையில கேட்குறேன் .தப்பா நினைச்சுக்காதீங்க.. ஒரு வாட்டி எடுத்த வரைக்கும் பார்க்க முடியுமா? ஏதாச்சும் கரெக்‌ஷன் அல்லது செலவு குறைச்சு இருக்குறத வச்சி முடிக்க முடியுமான்னு பார்ப்போமே? “ என்றேன்.

எதிர் முனையில் பதிலில்லை. சிறிது நேரம் கழித்து “ நான் கூப்புடுறேன்” என்று போனை வைத்தவர் தான். அதன் பின் கூப்பிடவேயில்லை. வேறு ஒரு வேலையாய் அவரின் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வழியாய் சென்ற போது அவரை பார்க்கலாம் என்று போன போது அவரது பையன் தான் இருந்தான்.

“அப்பா எப்படி இருக்காரு?

‘ அத ஏன் கேக்குறீங்க.. சொல்ல சொல்ல கேட்காமல் வீட்டை அடமானம் வச்சி, படமெடுத்தாரு. அதுவும் பத்தாம, வட்டிக்கு கடன் வாங்கி. வீடும் போயிருச்சு. நல்ல வேளை கடை என் பேர்ல எழுதி வச்சிருக்க, அத வச்சி கடனடசிச்ட்டிருக்கோம். எப்பவும் சொல்லிட்டே இருப்பாரு.. உங்கள கூட்டிட்டு வந்து படத்த காட்டியிருந்தா தப்பாயிருக்காதுன்னு.

இப்ப எங்க இருக்காரு? என்றேன். ஊருக்கு அனுப்பிட்டோம்.  என்றார்.  என் கண் முன் பழைய இளமையான ராஜ்கிரன் போல இருக்கும் அவரது போட்டோ கடையில்  சிரித்துக் கொண்டிருந்தது.



Post a Comment

No comments: