Thottal Thodarum

May 29, 2018

கந்து வட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -7

கந்து வட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -8

தமிழ் சினிமாவின் முக்கிய ஏரியாவான வடபழனியில் ஒவ்வொரு துறையினருக்கும் ஒரு டீக்கடை முக்கு உண்டு. பிரசாத ரெக்கார்டிங் முன்பு பார்த்தால் நிறைய உதவி இயக்குனர்கள், ஏன் ஒரு படம் செய்து அடுத்த படத்திற்காக காத்திருப்பவர்கள். முதல் பட தோல்விக்கான காரணங்களை நின்று அலசுகிறவர்கள் என பெரும்பாலும் இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே அதிக்கம் செலுத்துமிடம் காவேரி கார்னர்.
அடுத்து கொஞ்சம் தூரம் போனால் மரங்கள் அடர்ந்த பாரதியார் தெரு. நீங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவை பார்க்கிறவர்கள் என்றால் நீங்கள் பல படங்கள் பார்த்த,அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய அளவில் பிரபலமான பல துணை நடிகர்களை அங்கே பார்க்கலாம். அந்த தெரு ஒரு நம்பிக்கை தெரு. அந்த தெருவிலிருந்துதான் சூரி, மூனீஷ்காந்த், என பல நடிகர்கள் பிரபலமாகியிருக்கிறார்கள். அங்கே கூடும் ஒவ்வொருக்கும் எனர்ஜி கொடுக்ககூடிய ஒர் முக்கிய விஷயம் அவர்களின் வெற்றிதான். “தோ.. இங்கதான் நானும் சூரியும் தெனம் முனை கடையில டீ குடிச்சுட்டு, ஆபீஸ் ஆபீஸா ஏறிட்டு வருவோம்” எனும் நண்பரை நீங்கள் நிறைய படங்கள் பார்த்திருப்பீர்கள்.

“என்ன.. அவனுக்கு டைம் ஒர்க்கவுட் ஆயிருச்சு. மேலே போயிட்டான்.” என்பவரின் கண்களில் தூரத்து வெளிச்சம் பளீரென தெரியும்.

வாட்சப் இல்லாத காலங்களில் இந்த இடம் தான் வாய்ப்பு தேடும் நடிகர்களின் டேட்டா பேஸ். பெரும்பாலனவர்கள் கூடும் நேரம் மதியம் தான். சாப்பிட்ட பிறகோ, அல்லது சாப்பிட காசில்லாமல் வெறும் டீ மட்டுமே குடித்துவிட்டு, பசி மயக்கத்தை சரிக்கட்ட மரத்துக்கு கீழ் நிற்பார்கள்.  ஆபீஸ் ஆபீஸாய் போட்டோ கொடுத்து, ஆடிஷன்கள் செய்துவிட்டு, வருகிறவர்கள், அங்கே இருக்கும் மற்றவர்களிடம் “இந்த ஆபீஸ் போனியா? அந்த ஆபீஸ் போனியா? ‘என்று அட்ரஸ் கொடுப்பார்கள். யார் யார் படம் ஆரம்பிக்கப் போகிறார்கள்?. எப்போது ஆரம்பமாகிறது. எது உப்புமா கம்பெனி, யார் மேனேஜர். எந்த படத்தின் இணை இயக்குனர் அங்கே இருக்கிறார். என்பது போன்ற தகவல்கள் அங்கே சொல்லபடும். வேண்டுகிறவர்கள் எழுதிக் கொண்டு தங்கள் முயற்சியை தொடர்வார்கள். அங்கே தகவல் கொடுக்கிறவர்களுக்கு இவர்கள் போய் வந்த அலுவலகம் மற்றும்மேலதிக தகவல்களை அளிப்பார்கள். இங்கே இருக்கிறவர்கள் யாருக்கும் ஈகோ என்பது இருக்காது. எனக்கு கிடைக்கிற வாய்ப்பு நிச்சயம் எனக்குத்தான் வரும். உனக்கு வருவது உனக்கு. என்ற எண்ணம் அதிகம். தன்னிடம் இருப்பது வித்யாசமான நச் நடிப்பு என்ற நம்பிக்கை பலரிடம் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். நிஜமாகவே திறமையான பல பேர் அங்கே நின்றிருப்பார்கள். இன்றைக்கு அதே இடத்தில் கூடுகிறவர்களின்  வாட்ஸப் குழு ஆர்மபிக்கப்பட்டு, இதே தகவல்கள் அங்கேயும்  பகிரப்படுகிறது.

வீடுகள் நிறைய ஆனதால் பெரிய கூட்டங்கள் கூடாவிட்டாலும் இன்றைக்கும் நான்கைந்து அடுத்த தலைமுறை ஆட்கள், பழையவர்களுடன் நின்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலும், அனுபவஸ்தர்கள் பெரிய பெரிய நடிகர்களுடன் தாங்கள் நடித்தது, அல்லது அவர்களின் சொதப்பல்கள், அவர்களின் சொதப்பல்களை மறைக்க, துணை நடிகர்களான தங்கள் மீது காரணம் சொல்லி எஸ்கேப் ஆன கதை எல்லாம் சொல்வார்கள். புதிய பார்ட்டிகள் பெரும்பாலும் குட்டிக் குட்டி படங்களில் தூரத்தில் கூட்டத்தில் நின்று வந்திருக்கிறவர்கள் வாய் பிளந்து கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்.  பல சமயங்கள் துணை நடிகர்கள் சொல்லும் கதையில் இருந்த சுவாரஸ்யம் அந்த படக்காட்சியில் கூட இருக்காது.  

நண்பர் ஒருவர் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நடிகர். யாரோ ஒருவர் பெரிய இயக்குனருக்கு நண்பர் எனவும் தனக்கு நல்ல கேரக்டர் வாங்கித் தருவதாய் சொல்லியிருக்கிறார் என்றார். வாழ்த்து சொல்லிவிட்டு வடபழனியில் இறக்கிவிட்டு வந்தேன். இரவு போன் செய்த போது அதைப் பற்றி மட்டுமே பேசாமல் இருந்தார். என்னங்க ஆச்சு? என்றவுடன் வேறு வழியில்லாமல் “அட நீங்க வேறங்க.. காலையில இறக்கிவிட்டதிலேர்ந்து அவருக்காக ரெண்டு மணி நேரம் காத்துட்டிருந்தேன் எப்ப போன் பண்ணாலும், ஷங்கர் சார் ஆபீஸுல, மணி சார் ஆபீஸுலன்னார்.. அப்புறம் வந்தாரு. ஓலாவுல. இறங்கி என்னை கூப்பிட்டார். போனேன். 240 சேஞ்ச் இருக்கான்னு கேட்டாரு.. இருந்த 500 ஐ கொடுத்தேன். சேஞ்ச் வாங்கிட்டு, அப்படியே பாக்கெட்டுல போட்டுக்கிட்டு, வண்டி வச்சிருக்க இல்லனு கேட்டாரு.. ஆமா சார்னேன். வண்டிய எடுன்னுட்டு என் பின்னாடி உக்காந்து வடபழனி, வள்சரவாக்கம், அன்பு நகர், கோயம்பேடுன்னு ஒவ்வொரு ஆபீஸா போனாரு. ஹால்ல உட்கார வச்சிட்டு, உள்ளாரப் போவாரு. கொஞ்ச நேரத்துல திரும்ப வந்து ஒரு போட்டோ கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு, உள்ளாரப் போய்ட்டு, சார் கிட்ட சொல்லிட்டேன் டைரக்டர் இப்ப டிஸ்கஷன்ல இருக்குறதுனால, கூப்புடுறேனு சொல்லியிருக்காருனு சொல்லிட்டு, இதே போல பல ஆபீஸுகள் காட்டிவிட்டு, திரும்ப வடபழனில இறக்கிட்டு கிளம்பறேனு சொன்னாரு.  நான் ரொம்பவே தயங்கி.. “ சார்.. அந்த 500ன்னதும்” “என்ன தம்பி எத்தனை ஆபீஸுல உன்னை அறிமுகபடுத்தியிருக்கேன் என்கிட்டயே காசைக் கேக்குறே. எனக்கு பணம் முக்கியமில்லை சொல்லிட்டு, தன் பேண்ட் பாக்கெட்டுலேர்ந்து காசை விட்டெறியாப்புல எடுக்க, அதிலேர்ந்து நாலைஞ்சு போட்டு அவர் போட்டோ வந்துச்சு. கீழ விழுந்ததை எடுத்து அவர் கையில கொடுத்துட்டு “சார்.. தயவு செய்து ஏமாத்தாதீங்கனு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன்” என்றான்.

பாவமாய் இருந்தது. இப்படி இவர்களை ஏமாற்றி பிழைக்கிற ஆட்களிடமிருந்து அவர்கள் தப்பி நான்கைந்து படங்களில் தலை காட்டுவதே பெரிய விஷயம். ஆனால் அவர்களையும் குற்றம் சொலல் முடியாது. பல வருடங்களாய் சினிமாவில் என்றைக்காவது நானுமொரு சிறந்த நடிகனாய் வலம் வருவேன் என்கிற சூளுரை கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து குடும்பத்த காப்பாற்ற வேறு வழியில்லாமல் இப்படி காலம் ஓட்டுகிறவர்கள் அவர்கள்.


சில மாதங்களுக்கு முன் அந்த தெருவுக்கு போக நேர்ந்தது. வழக்கமாய் உட்கார்ந்திருக்கும் கும்பல் இருக்க, எல்லாரும் வருத்தமாய் இருந்தார்கள்.  என்னவென்று கேட்டேன். வயதான ஒரு துணை நடிகரின் பேரைச் சொல்லி, “செத்துட்டாரு சார். பாவம். சினிமா சினிமான்னு காலத்த தள்ளிட்டாரு. கல்யாணம் கூட ஆகலை. அவரோட ரூம்ல அநாதையா செத்துக் கிடந்தாரு. நாங்க எல்லாரும் தான் காசு போட்டு அனுப்பி வச்சோம். நேத்து கூட சொல்லிட்டிருதாரு.. இந்தவாட்டி ஹரி படத்துல நல்ல கேரக்டர்டா.. நான் செயிச்சுருவேன்னு..” என்று அழ ஆர்மபித்தான். அவன் அழுதது அவருக்காக மட்டுமல்ல என்று எனக்கு புரிந்தது. 

Post a Comment

2 comments:

Subramanian Narayanan said...

மனம் கனத்து போனது சார்!

குரங்குபெடல் said...

மிகவும் நெகிழ்வான பகிர்வு