Thottal Thodarum

May 14, 2018

சாப்பாட்டுக்கடை - ஞானமதுரா ஸ்வீட்ஸ் & ஹோம்லி மீல்ஸ்


சில வருடங்களுக்கு முன் வளசரவாக்கத்தில் 6 அத்யாயம் அலுவலகம் ஆரம்பித்த நேரத்தில், பெரும்பாலும் வாயில் வைக்க வழங்காத டீயைத்தவிர வேறேதும் கிடைக்காது. அப்போதுதான் இவர்களது கடையை பார்த்தேன். மாலை நேரங்களில் சூடான பில்டர் காபி, வடை, பஜ்ஜி, போண்டா, மிளகாய் பஜ்ஜி, ஜவ்வரசி வடை, வாழைப்பூ வடை, கத்திரிக்கா, உருளை பஜ்ஜி, கேரட் அல்வா, காசி அல்வா, மிளகாய் பொடியில் பிரட்டி ஊறிய இட்லி, சாம்பார் சாதம், தளதள வத்தக்குழம்பு சாதம், ரசம் சாதம், சமயங்களில் நல்ல கெட்டி தயிர் ஊற்றிய புளிக்காத தயிர்சாதம் என  நாக்கில் எச்சிலூற வைக்கும் அயிட்டங்களை வரிசைப்படுத்தி டிஸ்ப்ளே செய்திருந்தார்கள்.

அந்தந்த பண்டிகை சீசன்களில் அந்ததந்த பலகாரங்கள் இவர்களுடய ஸ்பெஷாலிட்டி காரடையான் நோன்பின் போது, வெல்லம், உப்பு குழக்கட்டைகள், தினசரி பருப்பு, தேங்காய் போளி, பிள்ளையார் சதுர்த்தி வெல்லக் குழக்கட்டை தினசரி கிடைக்கும். கொஞ்சமே கொஞ்சம் மாவு திக்காய் இருந்தாலும் உள்ளே பூரணம் அட்டகாசமாய் இருப்பதினால் நோ ரெக்ரெட்ஸ். சமயங்களில் நன்றாக தயிரில் மட்டுமே ஊறவைக்கப்பட்ட தயிர் வடை. அதன் மேல் லேசாய் தூவின காராபூந்தியோடு வைத்திருப்பார்கள். அவர்களுடய ஸ்நாக்ஸ் அயிட்டத்தில் மிக முக்கியமான அயிட்டம் இந்த காராபூந்தி. கால்கிலோ 100 ரூபாய். பட் அந்த கிரிஸ்பியான டேஸ்டுக்கு முன்னால் நூறெல்லாம் தூள் தூள் தான். அந்த காராபூந்திக்கு என் குடும்பமே அடிமை. முக்கியமாய் இவர்கள் எந்த அயிட்டங்களிலும் வெங்காயம் பூண்டு பயன்படுத்துவதில்லை. விலை கொஞ்சமே கொஞ்சம் அதிகம் தான் கால் கிலோ 100 ரூபாய்.


திவ்யமான பில்டர் காபி. நாக்கில் ஒட்டிக் கொள்ளும். காபி சாப்பிட்டபின் ஒரு அரை மணி நேரத்திற்கு எதையும் வாயில் போட மனசு வராது. அந்த கசப்பு கொடுக்கும் சுவை. அரையே அரை டம்ளர் காபி கொடுத்துவிட்டு  32 ரூபாய் வாங்கும் சரவணபவன்கள் போல் இல்லாமல் 20 ரூபாய்க்கு நல்ல அளவான டம்பளரில் பில்டர் காபி. கூடவே எந்த ஸ்நாக்ஸ் வாங்கினாலும் வெறும் பத்து ரூபாய்தான். 

எல்லா பஜ்ஜி, வடை அயிட்டங்களும் சுடச் சுட போடப்படுவதால் போட்ட மாத்திரத்திலேயே காலியாகிவிடுமளவுக்கு கஸ்டமர் பேஸ் வேறு. கட்லெட், சமோசா, என வட இந்திய ஸ்நாக்ஸ் வேறு. 

மக்கள் இவர்களுக்கு கொடுத்த ஆதரவினால் இந்தக்கடையில் பின்னாலேயே சின்ன மெஸ்ஸை ஆரம்பித்திருக்கிறார்கள். டிபிக்கல் கல்யாண சாப்பாடு, டிபன். 90 ரூபாய்க்கு ரெண்டு கீரை, கூட்டு, பொரியல், ஸ்வீட், அங்காயம், கொத்துமல்லி, பருப்பு, என தினசரி ஒரு விதமான பொடி, நெய்யோடு ஆரம்பிக்கும் மதிய சாப்பாடு, அட்டகாசமான சோடாப்பூ இல்லாத அப்பளம். சாம்பார், ரசம், வத்தக்குழம்பு அல்லது மோர்குழம்பு, தயிர் என சாப்பாடு. எதிலும் வெங்காயம், பூண்டு கிடையாது. திவ்யமான மதிய சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால் நிச்சயம் ஒரு நடை போய் வருவது உசிதம். 

காலையிலும், மாலையிலும், டிபன் வகையராக்கள் ஆரம்பித்திருகிறார்கள். என்னுடய பேவரேட் ரவா தோசையும், சோலா பூரியும். சோலா பூரியை சின்னச் சின்னதாய் மூன்று எண்ணிக்கையில் தருகிறார்கள். கூடவே சென்னா. அரிசி உப்புமா இன்னொரு ஸ்பெஷாலிட்டி.  ரவா தோசையை நல்ல முறுகலாய் கேட்டால் பொன் நிறத்தில் தருகிறார்கள். கூடவே நல்ல அரைத்துவிட்ட சாம்பார், ரெண்டு சட்னி. ஆஸம். திவ்யமான ஐயர் வீட்டு ட்ரெடிஷனல் உணவை விரும்புகிறவர்களுக்கு விருகம்பாக்கம், வளசரவாக்கம் அருகில்..
கேபிள் சங்கர்.

ஞான மதுரம் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ்
விநாயகர் கோயில் தெரு,
ராமகிருஷ்ணன் நகர், (ஆள்வார் திருநகர்)
சென்னை 87
9841355111/ 9841455111


Post a Comment

No comments: