பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த காலம். முதன் முதலில் ஒரு சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்து மிரண்டு போயிருந்தேன்.
சிறுகதையின் பெயர் நியாபகமில்லை. மனைவி கர்ப்பம் . காரணம் அவளுடய கள்ளக்காதலன். அவள் கலைக்க சொல்கிறாள். ஏன் என்று கேட்டதற்கு “அந்த பையன் கருப்பு” என்கிறாள். கருக்கலைப்பில் இறக்கிறாள். அவளது இறுதி ஊர்வலத்தில் ரோட்டோரம் நின்று அழும் அந்த கள்ளக்காதலனையும் பாடை சுமக்க அழைத்துகிறான் கணவன். ப்பா.. என்ன ஒரு கதை என்று மிரண்டு போய் பாலகுமாரனின் அத்தனை நாவல்களையும் படிக்க ஆரம்பித்தேன். எனது தலைவன் சுஜாதா தான் என்றாலும் இன்னொரு தலைவனாய் பாலகுமாரனை ஏற்றுக் கொண்டேன். அத்தனை புத்தகங்களை படித்தேன். இன்னும் வீட்டின் லைப்ரரியில் வைத்திருக்கிறேன்.
’உனக்கென்ன
சாமி பூதம் கோயில் குளம்
ஆயிரமாயிரம் ஜாலியாய்
பொழுது போகும்...
வலப்பக்க கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன..
அடியே.. நாளையேனும்
மறக்காமல் வா."
எனக்கும் கவிதைகளுக்குமான தூரம் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் என்றாலும் இன்றளவிலும் ஞாபகம் இருக்கும் ஒரே கவிதை. அதை சில பல வருடங்களுக்கு முன்னால் குறும்படமாக எடுத்துப் பார்க்கும் அளவிற்கு விருப்பம்.
அவருடன் லேண்ட் லைன் காலத்தில் தொடர்ந்து தொலைபேசியில் பேசியிருக்கிறேன். நேரில் சந்தித்து இருக்கிறேன் . சுப்ரகீத் வாசலில் நடு ராத்திரியில் “காதலன்” ப்ரிவியூ பார்த்துவிட்டு அவரின் வசனத்தைப் பற்றிய விமர்சித்தேன். எப்போதும் விவாதமாய் இருக்கும் பேச்சு சண்டையாய் மாறி, அதன் பின் ஏனோ நான் அவரை தொடர்பு கொள்ளவில்லை.
அவருடய அத்துனை க்ளாஸிக்களில் ஆரம்பித்து ஆன்மீகத்துக்குள் செல்லும் வரையான அத்தனை புத்தகங்களையும் படித்திருக்கிறேன்.
மீண்டும் காதல் கதை எழுதுகிறார் என்று குமுதத்தில் விளம்பரம் வந்ததும் அத்தனை கொண்டாட்டமாய் படித்தேன். மனுஷனுக்கு வயசே ஆகலைடா.. என்று சந்தோஷித்தேன். அதை விட சந்தோஷம் குமுதம் லைஃபில் அவர் எழுதும் விளம்பரம் வந்த வாரத்துலேயே என் போட்டோ போட்டு நான் எழுதப் போகும் கொத்து பரோட்டா 2.0 வுக்காக விளம்பரம் வந்ததை பார்க்கும் போது கிடைத்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை.
காதலன் ப்ரிவீயூ சண்டைக்கு பிறகு நான் அவருடன் பேசுவதில்லை. சில வருடங்களுக்கு பிறகு புதுப்பேட்டை படத்தில் நடிக்க வந்திருந்த போது நேரில் சந்திக்க நேர்ந்தது.. அப்போது நான் வேறு ஒரு ஷூட்டிங்கில் இருந்தேன். எதிரே போய் நின்று சிரித்தேன். அவருக்கு ஞாபகமில்லை போல. வெறும் சிரிப்புடன் கடந்துவிட்டார்.
என்ன ஆள் இவர் எத்தனை நாள் பழகியிருக்கிறோம், பேசியிருக்கிறோம், சண்டை போட்டிருக்கிறோம் என்னை பார்த்தும் பார்க்காமல் போகிறாரே என்ற கோபம் குமைந்து, அதற்கு பிறகு பல முறை அவரை நேரில் புத்தக கண்காட்சியில் எல்லாம் பார்த்திருக்கிறேன். ஏனோ பேசத் தேன்றியதே இல்லை. அவருடன் சண்டைப் போட்டதும், வெறும் சிரிப்புடனேயே கடந்து போனதுமே ஞாபகம் வரும்.
ரெண்டொரு நாளுக்கு முன்னால் நண்பர் ஒருவர் என்னை எதிர்பட்டார். சிரித்து வணக்கம் வைத்தார். யாரென்று தெரியாமல் மையமாய் சிரித்து விலகிப் போனேன். அவர் பின்னாலேயே வந்து அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு, “மறந்துட்டீங்களா? என்று கேட்டார். சட்டென ஞாபகம் வந்துவிட்டது. எட்டு வருடங்களுக்கு முன் ஒர் படத்தை இயக்கிய இயக்குனர். கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்களுக்கு மேல் அவருடன் நான் பேசி பழகியிருக்கிறேன். கதை விவாதித்திருக்கிறேன். கடைசியாய் அவருக்கும் எனக்குமான கதை விவாதம் சண்டையில் முடிந்து போய் பிரிந்துவிட்டேன்.
”சாரி.. சட்டுனு நியாபகம் வரலை” என்று சங்கடமாய் சிரித்தேன்.
”பரவாயில்லை சார். இத்தனை வருஷத்துல எத்தனையோ பேரை, பிரபலங்களை தாண்டி வந்திருக்கீங்க. உங்க வளர்ச்சிய நான் பார்த்துட்டேயிருக்கேன். இத்தனை வளர்ச்சியில என்னைய நியாபகம் வச்சிக்க வாய்ப்பில்லை. ஆனா நான் மறக்க மாட்டேன். அன்னைக்கு நீங்க சொன்னதை கேட்டிருந்தா படம் தப்பிச்சிருந்திருக்கும். ” என்றவர் கைபிடித்து ”டெய்லி உங்களை நான் நினைச்சிட்டே இருக்கேன். வாழ்கையில ஒரு சில பேர்தான் கைபிடிச்சு இத பண்ணு பண்ணாதேன்னு உபதேசமில்லாம சொல்வாங்க அதுல என் வாழ்கையில நீங்க ஒருத்தரு.” என்று சொல்லிவிட்டு “ஒரு டீ சாப்பிடுவோமா?” என்றார். என் படத்தை எழுத்தை பற்றி விமர்சித்து பாராட்டிவிட்டு என் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு போனார்.
அவர் போன மாத்திரத்தில் எனக்கு பாலகுமாரன் தான் நினைவில் வந்தார். நானும் இவரைப் போல வழிமறித்து நின்று பேசியிருக்க வேண்டும், என்னை நியாபகம் இல்லையா? சுப்ரகீத் வாசல்ல நின்னு உங்க வசனத்தை விமர்சித்து சண்டை போட்டேனே சங்கர்.. என்று மீண்டும் அறிமுகபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
வாழ்க்கையில் பல விஷயங்களை மெச்சூர்டாய் டீல் செய்ய கற்றுத்தந்தவன். ஆண் அழலாமா? என்றால் அழலாம் என்று சொல்லித்தந்தவன். அதே நேரம் சக மனிதர்களை நேசிக்க கற்றுத்தந்தவன். பெண்களை வெறும் சதையாய், கொண்டாட்டமாய் பார்க்காமல் ஒரு சக மனுஷியாய் பார்க்க கற்றுத்தந்தவன், எதையும் எல்லாவற்றையும் நம் பார்வை வழியே பார்க்காமல் அவன் அப்படி செய்தான் என்றால் ஏன் அப்படி செய்ய விழைந்திருப்பான் என்று யோசித்து பார்த்து நம் எமோஷனை கட்டுப்படுத்த கற்று கொடுத்தவன். உறுத்தாமல் அறிவுரை சொன்னவன். தேடு தேடினால் தான் எல்லாமே கிடைக்கும் என்று வழி சொன்னவன். அவரிடம் பேசியிருக்க வேண்டும்.
நேற்று ராத்திரி வீட்டிற்குள் நுழைந்த போது “என்ன பாலகுமாரன் வீட்டுக்கு போய்ட்டு வரலையா?” என்றாள் மனைவி.
“இல்லை” என்றேன்.
“ஏன் சுஜாதாவை செத்துப் போய் பார்க்க விரும்பலைன்னு சொன்னீங்களே அது போலவா?”
மையமாய் சிரித்தேன். வாழ்க்கையில் சில பேர் நம்மிடமிருந்து விலகுவதேயில்லை. பாலகுமாரனும் அப்படித்தான். அவர் எனக்கு அறிமுகப்படுத்திய பல விஷயங்களை நான் பழகி, கடத்திக் கொண்டிருக்கிறேன். ரெண்டு நாள் முன்பு சந்தித்த இயக்குனர் மூலமாய் கற்றுக் கொண்டும் இருக்கிறேன். இதை இப்படி யோசிக்க எனக்கு பழக்கியவர் பாலகுமாரன். பாலாவுக்கு சாவு ஏது?.. எங்கும் நிறைந்தவன்.
Post a Comment
No comments:
Post a Comment