Thottal Thodarum

Jun 14, 2018

கொத்து பரோட்டா 2.0-58

கொத்து பரோட்டா 2.0-58
படிக்கிற பழக்கம் வழக்கொழிந்து கொண்டே வருகிறது என்பது எப்படி உண்மையோ அதே அளவுக்கு ஓரமாய் படிப்பவர்கள் உருவாகிக் கொண்டும் இருக்கிறார்கள். படிப்பவர்கள் இல்லாமலா சேத்தன் பகத்தில் புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்கிறது என்பீர்களானால் நியாயமாய் நம் நாட்டின் மக்கள் தொகைக்கு கோடிக் கணக்கில் விற்க வேண்டும். சினிமாவில் தற்போது வரும் பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்கு படிக்கும் பழக்கமே சுத்தமாய் இல்லை என்பதும், அதை விட எழுதும் திறமை  அட்லீஸ்ட் கம்ப்யூட்டரிலாவது எழுதும் பழக்கம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். மேக்ஸிமம் ட்விட்டரில் ரெண்டு வரியும், பேஸ்புக்கில் நாலு வரியும் மட்டுமே இவர்களின் மொத்தமான எழுத்துப் பணி. வெறும் சினிமா பார்த்தே படமெடுக்க வருகிறார்கள். அதனால் தான் பெரும்பாலான தற்போதைய படங்களில் கேரக்டர்கள் மனதுக்கு நெருக்கமாய் இருப்பதில்லை.

என்னிடம் உதவியாளராய் வர விரும்பும் இளைஞர்களிடம் நான் கேட்பது ரெண்டே ரெண்டு கேள்விதான். புத்தகங்கள் படிப்பாயா? சமீபத்தில் பார்த்து மிகவும் பிடித்த படமெது?. என்பதுதான். முதல் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் பொன்னியின் செல்வனையும், சுஜாதாவையும் கட்டாயமாக சொல்வார்கள்.  பொன்னியின் செல்வன் எத்தனை பாகம் என்ற கேள்வியிலேயே டக் அவுட் ஆகி போகிறவர்கள் ஒருபுறமென்றால் இன்னொரு புறம் சரியாய் பதில் சொல்லி, சரி பழுவேட்டரையர் யார்? என்று கேள்விக்கு மிக தீவிரமாய் மூளையை நிரடி தேடிப் பார்த்து “சாரி சார். மறந்திருச்சு.” என்பார்கள். சுஜாதா பற்றிக் கேட்டால் இன்னும் சுத்தம். இந்தியன் படத்துக்கு டயலாக். மணிரத்னம் படம் என்று ஜல்லியடிப்பார்கள். இன்னும் கொஞ்சம் பேர் அவரோட திரைக்கதை எழுதுவது எப்படி? மட்டும் படிச்சிருக்கேன் சார்.. என்பார்கள். அப்படியா உனக்கு பிடித்த சிறந்த திரைக்கதை எது என்று கேட்டால் அப்போதைக்கு பரபரப்பாய் ஓடி ஒர் பெரிய நடிகரின் பெரும் மசாலா படத்தை சொல்வார்கள்.  சமீபகாலமாய் திரைப்படங்களிலிருந்து திரைப்படமெடுக்க காப்பியடிப்பதிலிருந்து இம்ப்ரூவ் ஆகி, குறும்படம் எடுக்க குறும்படத்தையே காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஸோ படிப்பது என்பது இல்லாததால் தான் இந்த நிலை. எப்படியாவது வருங்கால சந்ததியரை புத்தகம் படிக்க பழக்குவது என்பது எதிர்கால இந்தியாவுக்கு மிக அவசியமான ஒன்று என்றே தோன்றுகிறது.

அப்படியான விஷயத்தை ஆந்திர அரசு “புக் ஹுண்டி” என்ற பெயரில் மாணவர்களை பள்ளி லைப்ரரியிலிருந்து புத்தகங்களை எடுத்துக் கொள்ளவும், அவர்களிடமிருக்கும் புத்தகங்களை லைப்ரரிக்கு கொடுக்கவும் ஏதுவாய் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு விதத்தில் இது நல்ல முயற்சி தான். அட்லீஸ்ட் இப்படி ஆரம்பிக்கும் போதாவது ஒரு சில பக்கங்களை படிக்க ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது. கூடவே வாரத்திற்கு மூன்று க்ளாஸ்களாவது லைப்ரரி ப்ரீயட் வைத்து புத்தகம் படிப்பதை கட்டாயமாக்கினால் இன்னும் சிறப்பாய் அமையும். பெரும்பாலான கல்லூரிகளில் லைப்ரரிக்கான ப்ரீயட் மதியம் வரும் கடைசி இரு வகுப்புகளாய் இருக்க, கட் அடித்து பஸ் பிடித்து வீடு வருவதற்கோ, மேட்னி செல்வதற்கோ, எதாவது ஒரு மாலில் கோக்கை சப்பிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதற்கோதான் செலவாகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் நாட்டின் சினிமா டிக்கெட் விலையை 25 சதவிகிதம் உயர்த்தியதை ஒத்துக் கொள்ளாமல், மேலும் உயர்த்திக் கேட்டும், அரசின் பத்து சதவிகிதம் கேளிக்கை வரியை எதிர்த்தும் புதிய படங்களை வெளியிடாமல் போராடி மல்ட்டிப்ளெக்ஸுகளில் அதிகபட்சம் 150 + கேளிக்கை வரி+ ஜி.எஸ்.டி யோடு சேர்த்து 200 ருபாய் வருகிறது. இதனூடே ஆன்லைன் புக்கிங் சார்ஜ் வேறு. சிங்கிள் ஸ்க்ரீன், சிற்றூர், பெரிய ஊர், மாநகராட்சி, பேருராட்சி என்று தனித்தனியே இல்லாமல் மொத்தமாய் எல்லா தியேட்டர்களிலும் அதிக பட்சம் ஏசி அரங்குக்கு 120, ஏசி இல்லாத அரங்கிற்கு 100 ரூபாய் + வரிகள் என நிர்ணையித்து உள்ளார்க்ள். இதற்காக மிகவும் போராடியவர்கள் தியேட்டர்காரர்கள்தான். விலையேற்றத்தை ஒப்புக் கொண்ட பின் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இனி எம்.ஆர்.பியில் தான் திண்பண்டங்கள் விற்க வேண்டும். பார்க்கிங் கட்டணம் வாங்கக்கூடாது என்றெல்லாம் விஷால் அறிக்கை விட, தியேட்டர் அதிபர்கள் கொந்தளித்துவிட்டார்கள். இவர் யார் எங்களை கலக்காமல் அறிக்கை விடுவது என்று சண்டை ஆரம்பித்துவிட்டது. அவர்கள் கொடுத்த அறிக்கையெல்லாம் முன்பே சட்டத்தில் உள்ளதுதான். இதற்கு முன் அதிகபட்ச விலை 50-120 இருந்த போது சென்னையை அடுத்த மற்ற ஊரக்ளில் எல்லாம் 200-300 கொடுத்துத்தான் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். அரசுக்கும் இது தெரியும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண சின்ன படங்களுக்கு குறைந்தபட்சம் என்பதிலிருந்து 100 என பல வருடங்களாய் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு அந்த தொகைக்குத்தான் வசூல் விபர்ங்களும் வரும்.

இப்போது அபீஷியலாய் அரசு நிர்ணையித்துவிட்டது. இனி அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி, தயாரிப்பாளர்களை ஏமாற்றி தொழில் நடத்தாமல் முன்பு கிடைத்ததை விட முப்பது முதல் நாற்பது ரூபாய் அதிகமாய் வருமானம் வரும் வழிவகை அரசு செய்திருக்கிறது. இனியாவது கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட், நியாயமான பார்க்கிங் கட்டணம், நல்ல குடிநீர், இருக்கை வசதியோடு திரையரங்குகளை அமைக்க செய்தால் மெல்ல மக்கள் மீண்டும் உள்ளே வர வாய்ப்பு.  ஏற்கனவே இவர்களின் அராஜகமான விலையினால் தியேட்டருக்கு வரும் வழக்கத்தையே மாற்றிக் கொண்ட நாற்பது ப்ளஸ் ரசிகர்களை இழந்தவர்கள். இன்றைய இண்டர்நெட் உலகில் பைரஸி, வெப் சீரீஸ், ஸ்ட்ரீமிங் வீடியோ என பல பொழுது போக்குகள் மக்களை அதிலும் முக்கியமாய் இளைஞர்களை ஆக்கிரமித்திருக்கும் வேலையில் அவர்களிடமிருக்கும் கொஞ்சம் நஞ்சம் பாக்கெட் மணியையும் பதம் பார்க்கும் விதத்தில் விலையேற்றம் இருக்கும் பட்சத்தில் அவர்களையும் இழக்கத்தான் போகிறார்கள் என்று தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அனுகூல் – குறும்படம்
சத்யஜித்ரேவின் எழுத்தில் வெளிவந்த சிறுகதையை சுஜய் கோஷ் குறும்படமாக்கியிருக்கிறார். மாஸ்டரின் கை வண்ணம் கதைக் கருவிலும், அதில் வரும் வசனங்களிலும் தெரிகிறது.  தன்னை பார்த்துக் கொள்ள மனித உருவிலுள்ள ரோபாட்டை விலைக்கு வாங்கி வைத்துக் கொள்கிறார் ஸ்வரூப் சுக்லா. ரோபாட்டினால் வேலை வாய்ப்பு இழந்து, மக்கள் போராடிக் கொண்டிருக்க, ஸ்வரூப் சுக்லாவின் தம்பிக்கும் வேலை போய்விடுகிறது. அண்ணன் வீட்டில் ரோபாட் இருப்பதை பார்த்து கடுப்பாகிப் போய் அதை அடித்து உடைத்துவிடுகிறான். அதை சரி செய்ய வரும் ரோபாட் கம்பெனிக்காரி இனியொரு முறை இம்மாதிரி நடந்தால் ரோபாட் அதிக வோல்டேஜ் கரண்டை வெளிப்படுத்தி தன்னை தற்காத்துக் கொள்ளும் என்று சொல்லிவிட்டு செல்கிறாள். இதற்கிடையில் ஸ்வரூப் சுக்லாவுக்கும் ரோபாட்டினால் வேலை போக , அதன் பின்பு நடக்கும் கதை படு சுவாரஸ்யம். இந்த குறும்படத்தின் மிகப் பெரிய பலம் சத்யஜித்ரேவின் எழுத்தும் எதிர்காலத்தில் ரோபாட்டுகளால் ஏற்படப் போடும் பிரச்சனைகளையும் யூகித்த விதம் தான். ரோபாட்டுகளை வேலைக்கு வைக்கும் வீட்டின் முன் போராட வரும் கம்யூனிசவாதி. ஸ்வரப் சுக்லாவின் தம்பி கேரக்டர் என செம்ம இண்டர்ஸ்டிங் https://www.youtube.com/watch?v=J2mqIgdae5I&feature=youtu.be 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Suits -சீசன் 1
சூயிட்ஸ் ஒரு அமெரிக்க டிவீ சீரிஸ். 2011 இதன் முதல் சீசன் ஆரம்பித்தது. நியூயார்கில் உள்ள சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு வக்கீல்களை சுற்றி நடக்கும் கதை. மைக் ரோஸ் ஒரு ஸ்கூல் ட்ராப் அவுட். அதீத புத்திசாலி. நியாபகங்களில் அவன் ஒரு கம்ப்யூட்டர். தன் பாட்டியை பார்த்துக் கொள்வதற்காக நண்பனின் மரியூவான விநியோகிக்கும் வேலையை செய்து கொண்டே லா ஸ்கூலில் ஆள் மாறாட்டம் செய்து பரிட்சை எழுதி சம்பாதித்துக் கொண்டிருந்தவன். ஒரு நாள் போலீஸ் துரத்திலிடையே ஹார்வியின் இண்டர்வியூக்குள் நுழைந்து விட, அவனின் சட்ட அறிவைப் பார்த்து ஹார்வி அவனை தன்னுடய உதவியாளனாய் சேர்த்துக் கொள்கிறான். அவன் சட்டம் படிக்கவில்லை என்பது தெரிந்தும் அவனை வைத்துக் கொள்கிறான். ஹார்வியின் ஈவு இரக்கமற்ற ஆட்டிட்டியூட், மைக் ரோஸின் இன்னொசென்ஸ் கலந்து புத்திசாலித்தனம் இரண்டும் சேர்ந்து பல வெற்றிகளை தேடிக் கொண்டுக்கிறது. அவர்களது நிறுவனத்திற்கு. ஹார்விக்கு மைக்கின் உண்மை நிலையை வெளியே தெரியாம பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வேறு.
கிட்டத்தட்ட நம்ம கணேஷ் வசந்தை இங்கிலீஷில் பேசி பார்த்தார் போல இருக்கிறது. என்ன வசந்த் போல மைக் செக்ஸ் ஜோக்ஸ் சொல்வதில்லையே தவிர எல்லா டகல்பாஜி வேலைகளையும் செய்கிறார். இந்த தொடரின் முக்கியமான அம்சம் ஸ்க்ரீன் ரைட்டிங். ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு கேஸ். சுவாரஸ்ய கதை சொல்லலும், மிக சிறந்த நடிப்பும் வசனங்களும் நம்மை அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு கடத்தி செல்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




Post a Comment

No comments: