சென்சார்
எனும் கொடுங்கோலன்.
ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது
என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனால் தான் அதற்கு பேர் டெலிவரின்னு வச்சிருக்காங்க
என்று நடிகர் சத்யனின் அப்பா அடிக்கடி சொல்லுவார். இன்றைய தேதிக்கு நிலைமை மிக மோசம்.
தயாரிப்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு நிலையை தாண்டி வருவது என்பது அசாத்யமான விஷயமாகிக்
கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான நிலை சென்சார். ஏற்கனவே சென்சாருக்கும் நம் திரையினருக்குமிடையே
பல விதமான வேறுபாடுகள். பிரச்சனைகள். ஹிந்தி படத்தில் காதலர்கள் கிஸ்ஸடித்தால் “யூ”.
அதே நம்மூரில் அடித்தால் “ஏ” என பலவிதமான கலாச்சார வழிகாட்டிகளோடு சிறப்பாக செயல்படுகிறவர்கள்
நம்மூர் சென்சார் போர்ட் ஆட்கள். இதில் பெரிய படத்தில் கெட்ட வார்த்தை, டபுள் மீனிங்,
ரத்தகளறியாய் காட்சி வைத்தாலும் முன்பிருந்த வரிவிலக்கிற்காக “யூ” கொடுப்பார்கள். எவனாவது
சின்ன தயாரிப்பாளர் கொஞ்சமே கொஞ்சம் ரத்தம் தூரத்தில் தெளித்தார்ப் போல காட்டினால்
கட்டுடன் ‘ஏ” கொடுப்பார்கள். இப்படியான ஓரவஞ்சனைகளை பற்றியும், இவர்கள் தின்றே தீர்க்கும்
டிபன் வகையராக்கள் பற்றியும் எழுத நிறைய இருந்தாலும் இன்றைய தயாரிப்பாளர்கள் தலையாய
பிரச்சனையாய் உருவாகியிருக்கும் சென்சாருக்கு அப்ளை செய்யும் விஷயத்தைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும்.
முன்பெல்லாம் நமக்கு சென்சார் ஸ்கிரிப்ட்
எழுதும் ஆட்களிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்தால், அவர்களே சென்சார் போர்ட் ஆட்களை
தொடர்பு கொண்டு, அதற்கான தொகையை கட்டி, ஸ்க்ரீனிங் ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வார்கள்.
படம் பார்த்த பிறகு நமக்கும், சென்சார்போர்ட் மெம்பர்களுக்குமிடையே நடக்கும் கந்தாயங்கள்
தனிக்கதை. இதை கம்ப்யூட்டர்மயமாக்குகிறோம்
என்று மத்திய அரசு முடிவு செய்து ஈ.சினிரமா எனும் இணைய தளம் மூலமாய் மட்டுமே சென்சாருக்கு
அப்ளை செய்ய முடியும் என்று சொன்னார்கள். இனி வரும் நாட்களில் எல்லாமே வெளிப்படையாய்
இருக்கும். யார் யார் எப்போது அப்ளை செய்கிறார்களோ அந்த வரிசைப்படிதான் சென்சார் ஆகும்.
தயாரிப்பாளர்களுக்கு தங்களது நிலை என்ன என்பதை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிய படுத்தி நேரடி
தொடர்பை ஏற்படுத்துவதால், மிடில் மேன்களின் உதவி இல்லாமலேயே வேலை சுலபமாய் முடிந்துவிடும்
என்றார்கள். அட நல்ல விஷயமாய் இருக்கிறதே என்று பல சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள்
சந்தொஷப்பட, பொங்கலுக்கு ரிலீஸ் என்று முடிவு செய்துவிட்டு, கொட்டுவாய் வரை ப்ரீ ப்ரொடக்ஷனில்
வைத்துக் கொண்டு, கடைசி நேரத்தில் இன்ப்ளூயன்ஸ் மூலமாய் உடனடி சென்சார் செய்து பழக்கப்பட்ட
மிகச் சிறு பெரிய தயாரிப்பாளர்களுக்கு துக்கமாகவும் இருந்தது.
ஆனால் பிரச்சனை பெரியவர்கள் சிறியவர்கள்
என்றில்லை. அனைவருக்குமான பொது விஷயமாய் சைட் ப்ரச்சனை மூலம் ஆர்மபித்தது. இந்தியா
முழுவது தயாரிப்பாளர்கள் சென்சாருக்காக ஒரே நேரத்தில் மொத்தமாய் ஆயிரம் பேருக்கும்
மேல் லாகின் செய்ய வாய்ப்பில்லாத ஒரு சைட், பாதி நேரம் ஐ.ஆர்.டிசி சைட்டை விட படு மோசமாய்
தொங்கிப் போய் நிற்கும். அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி ரேஞ்சுக்கு சபதத்தோடு,
தொடர் முயற்சியில் வெற்றிபெற்றால் முதல் பக்கத்தை படித்து விட்டு, அடுத்த பக்கத்தை
தொட்டால் எரர் மெசேஜ் வந்து நிற்கும். சரி டீத்திங் ப்ராப்ளம் என காத்திருந்து பல புகாருக்கு
பிறகு கொஞ்சம் ஓக்கே வானால், அடுத்த பிரச்சனை ஆதார் நம்பருடன் இணைந்த மொபைல் நம்பர்
மட்டுமே இணைக்கப்பட வேண்டும் என்பது போன்ற
சீரிய விதிகளை பாலோ செய்து. அவர்கள் கேட்டிருக்கும் தரவுகளை டிஜிட்டல் டேட்டாவாக மாற்றி
அப்லோட் செய்தால், அதன் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள அவர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள்.
அது வந்தவுடன் மீண்டும் பகீரத பிரயத்தனங்களுடன்
லாகின் செய்து பார்த்தால் தான் நம் அப்ளிக்கேஷன் நிலை தெரியும்.
ஒரு வழியாய் எல்லா கந்தாயங்களையும்
முடித்து சென்சாருக்கான தொகையை ஆன்லைன் ட்ரான்ஸ்பர் செய்யும் வசதிக்கு க்ளிக் செய்தால்
அது வேலை செய்யாது. இல்லை அந்த பக்கத்திலிருந்து கல்லுளிமங்கன் போல நகரவே நகராது. சரி
இதை பர்றி நம் இடைத்தரகரிடம் கேட்டால் ஆயிரத்து சொச்ச மார்க்கு வாங்கியும் “நீட்”டில்
பாஸ்சாக முடியாதவர் போல விழிப்பார். ஆர்.ஓவிடம் சொன்னால் கால் டைவர்ட் ஆகி, அங்கிருக்கும்
அடுத்த நபருக்கு செல்லும். அவர் அப்படியா? ஒர்க் பண்ணலையா? ஆவுமே சார்.. நல்லா பாருங்க
என்பார். எத்தனை முறை கேட்டாலும் அவர் ஏதோ கம்ப்யூட்டர் விற்பனர் போலவும், நமக்கும்
அதற்கும் ஸ்நானப் ப்ராப்தியும் இல்லாதவர்கள் போலவும் பேசுவார். பெங்களூரிலிருந்து நான்
லாகின் செய்தேன் என்று சொன்னதற்கு நீங்க உங்க கம்பெனிய சென்னையில வச்சிட்டு ஏன் பெங்களூர்ல
லாகின் பண்ணீங்க? என்ற கேள்வி கேட்கும் அலவிற்கு விற்பனர் அவர். பின்பு நம் பின்புலத்தையும்
கம்ப்யூட்டர் அறிவையும், ஆற்றலையும் விளக்கி சொன்னால், கொஞ்சம் பம்மி. “அதுக்கு நீங்க
பாம்பே கால்செண்டருக்குத்தான் காண்டேக்ட் பண்ணனும்” என்பார்.
பாம்பே கால் செண்டர் என்பது “ஏக்
காவ் மே ஏக் கிஷான் ரஹதாத்தா” ரேஞ்ச் தான் கிந்தி தெரியாவிட்டால் மொத்தமும் போச்சு,
ஏற்கனவே லைன் கிடைக்க, அரை மணி நேரம் ஆகும். அத்தனைக்கும் மீறி காளியாத்தா, மாரியாத்தாவையெல்லாம்
வேண்டிக் கொண்டு, இங்கிலீஷ் பேசுறவன் வரணும் என்கிற வேண்டுதல் பலித்தால் நல்லது. அல்லது
மீண்டும் முதலிலிருந்தே ஸ்டார்ட் செய்ய வேண்டும். ஒரு வழியாய் லைன் கிடைத்து நம் பிரச்சனையை
எல்லாம் சொல்லி புரியவைத்தால், அங்கேயும் “அப்படியா.. சரியா செக் செய்தீர்களா? ஒரு
ஸ்நாப் ஷாட் எடுத்து அனுப்புங்களேன்?” என்பது போன்ற ஹெல்புகள் மட்டுமே முதலில் கிடைக்கும்.
அவர்களின் மெயில் ஐடிக்கு எல்லாவற்றையும் அனுப்பிவிட்டு காத்திருந்தால் பதில் மெயில்
வரும் என்று எதிர்பார்பது பேராசை. எனவே மீண்டும் கால் செண்டர். அவர்கள் இம்முறை ஆமாம்
சர்வர் பிரச்சனை என்று ஒத்துக் கொண்டு, காலையில ட்ரை பண்ணுங்க, இல்லாட்டி நடுராத்திரி
ட்ரை பண்ணுங்க என்பார்கள். நான் ஏன் நடுராத்திரியில சுடுகாட்டுக்கு போகணும் என்று கேட்க
நினைத்தாலும் முடியாது. ஆன்லைன் இல்லாட்டி
என்ன அதான் ஆப்லைனில் பணம் கட்டலாமில்லை என்று நம்மூரில் கேட்டால் “அதெல்லாம் வாங்க
கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க சார் “ என்கிறார்கள். அப்புறம் என்ன எழவுக்கு
ஆப்லைன் ஆப்ஷன் என்றே தெரியவில்லை.
இப்படி எல்லா இம்சைகளையும் தாண்டி
ஒரு வழியாய் சர்வர் கிடைத்து, பணம் கட்டி, க்யூவில் நின்று, எஸ்.எம்.எஸ் மூலமும், மெயில்
மூலமும் பணம் கிரெடிட் ஆனதாய் வந்த பின்புதான் நமக்கு நிம்மதி வரும். பிறகு சென்சார்
நடக்கவிருக்கும் தேதிக்கான காத்திருப்பு. நீங்க உங்கள் கண்டெண்டை லோட் செய்து வைத்துக்
கொள்ளுங்கள் என்று அறிவிப்பு வந்த மாத்திரத்தில் லோட் செய்து வைத்தால். நாளை காலையில்
சென்சார் என்றால் முதல் நாள் நடு ராத்திரிக்கு கொஞ்சம் முன்னே நாளைக்கு காலையில் சென்சார்
என்று லோக்கல் ஆர்வோ மெசேஜ் அனுப்புவார். ஒரு
வழியாய் அடித்து பிடித்து தியேட்டரை கன்பார்ம் செய்து சென்சாரை முடிப்பதற்குள் போதும்
போதுமென்றாகிவிடும்.
தரகர்களை வைத்து, பேரம் பேசி, லஞ்ச
லாவன்யத்தை வளர்பதை தவிர்க்கத்தான் இந்த ஆன்லைன் விஷயம் ஆரம்பத்தில் டீத்திங் ப்ராப்ளம்
இருக்கத்தானே செய்யும் என்பீர்களானால் கிட்டத்தட்ட நானகைந்து மாதங்கள் ஆகிவிட்டது.
இன்றைக்கும் இதே நிலை தான் இந்த இணையதளத்தில் நிலை. அதே நிலைதான் நம்மூர் ஆட்களின்
உதவும் அறிவும்.
எல்லாவற்றுக்குமே பாம்பேயிடமிருந்துதான்
மெசேஜ் வரணுமென்றால் எதற்காக ரீஜினல் சென்சார் அலுவலகம்?. இன்றைய தேதியில் பெரும்பாலனவர்களுக்க்
அடிப்படை கம்யூட்டர் அறிவு படித்தவர்களுக்கு இருக்கிறது என்றாலும் இம்மாதிரி பிரச்சனைகளின்
போது கால் செண்டரை அணுகி தெளிவு பெற ஹிந்தியோ, ஆங்கிலமோ சரளமாய் பேசத் தெரிந்தால் மட்டுமே
அடுத்த கட்டத்தை நோக்கி போக முடியுமென்பது எப்படி எல்லோருக்கும் சாத்தியம்?. பேமெண்ட்
கேட்வேயில் உள்ள பிரச்சனையை இத்தனை தொடர் புகார் மின்னஞ்சல்களுக்கு பிறகும் சரியாகவில்லை
என்றால் யாரைத்தான் அணுகுவது?. இத்தனை பிரச்சனை இருக்கும் பட்சத்தில் ஏன் ஆப்லைன் ஆப்ஷனான
ட்ராப்ட், செக் போன்ற வகைகளில் பணம் பெற ஏன் மறுக்கிறார்கள்?. தயாரிப்பாளர்களுக்கு
ஏன் ரெண்டு தினம் முன் அவர்களதுபட சென்சார் விஷயமாய் தகவல் வருவதில்லை?. சென்சார் நடந்து
முடிந்த பின் உங்களது படம் இன்றைக்கு சென்சார் என்று மெயில் அனுப்பவது எந்த வகையில்
திறமையான மேனேஜ்மெண்ட்?.
இத்தனை கேள்விகளுக்கு ஒர் சிறிய,சீரிய
முயற்சியாய் அவர்களது சர்வரையும், பேமெண்ட் கேட்வேயும் சரியாகும் வரை ஆப்லைனில் செயல்பட
அனுமதித்தால் பல தயாரிப்பாளர்களுக்கு நிம்மதியாய் இருக்கும். ஸ்டரைக், சிறிய படங்களுக்கு
திரையரங்கு கிடைக்காமை, ஜி.எஸ்.டி, லோக்கல் டேக்ஸ், அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலை
என பல பிரச்சனைகளை, வட்டி சுமைகளை வைத்துக் கொண்டு, ஆயிரம் பிரச்சனைகளோடு படத்தை தயாரித்து
வெளியிட வரும் தயாரிப்பாளர்களை அட்லீஸ்ட் பத்து நிமிடத்திற்கு கிட்டத்தட்ட ரெண்டாயிரம்
ரூபாய் பணம் சென்சார் பீஸாய் கட்டி, அவர்கள் பார்ப்பதற்கான அரங்குக்கு பணம் கட்டி,
அவர்களது டிபன், காப்பி, சாபாட்டு செலவுக்கு பணம் கொடுத்து கிட்டத்தட்ட 50-1 லட்சம்
ரூபாய் செலவு செய்ய காத்திருக்கும் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?.
Post a Comment
No comments:
Post a Comment