Thottal Thodarum

Jul 27, 2018

கொத்து பரோட்டா 2.0-61

கொத்து பரோட்டா 2.0-61
மாதக்கடைசி. உதயம் தியேட்டரிலிருந்து காசிக்கு போக அசோக் பில்லரில் ஒரு சிக்னல் இருக்கும். அது ஒன்வே தான் இருந்தாலும் அங்கே முனையில் இருக்கும் கோவிலருகே மக்கள் கிராஸ் செய்ய என அந்த சிக்னல் வைக்கப்பட்டிருப்பதாய் சொல்வார்கள். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து என்றைக்கும், எப்போதும் அங்கே ஆட்கள் கிராஸ் செய்வதோ, அல்லது, வண்டிகள் நின்றோ போனதே கிடையாது. இத்தனைக்கும் பில்லர் அருகே தான் போலீஸ் தன் பரிவாரங்களோடு எப்போதும் இருப்பார்கள். இரவு நேரங்களீல் பேரிகேட் போட்டு, டிரிங் அண்ட் ட்ரைவ் கேஸ் பிடிப்பார்கள். மேற்ச் சொன்ன மாதக்கடைசி நாட்களில் ஒரு நாள் வழக்கம் போல வண்டியை திருப்பினேன். குடுகுடுவென ஓரத்தில் மறைந்திருந்த ஒரு போலீஸ் வண்டியின் குறுக்கே வந்து நின்று ஓரம் கட்ட சொன்னார். காரை ஓரம் கட்டினேன். கதவருகில் வந்து நின்று இறங்குங்க என்றார். நான் வண்டியை ஆப் செய்து சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே, இறங்கியபடி. “என்ன விஷயம்? என்றேன். தெரிந்தே. சிக்னல் மீறிட்டீங்க. பைன் கட்டிட்டு போங்க என்றார். அப்படி கட்டணும்னா கட்டுறேன். ஆனால் நீங்க எதுக்கு ஒளிஞ்சுட்டு ஓடி வந்து பிடிக்கிறீங்க? என்றதும் துணுக்குற்று, ”ஏன் நாங்க ஏன் ஒளீயணும்?” என்றார்.

உங்களோட வேலை சிக்னல் அருகே நிற்பதுதான். சிக்னலில் நிங்க நின்று மக்களை சிக்னல் மீறாமல் தடுத்து நிறுத்துவதுதான் உங்கள் கடமை. ஆனா இங்கே ஒளிஞ்சுட்டு மக்களை தவறு செய்ய உதவிட்டு, அவங்களுக்கு தண்டனை கொடுக்குறது என்ன நியாயம்? என்றேன். ரொம்ப ரூல்ஸ் பேசாதீங்க சார்.. சிக்னல் மீறினா பைன் கட்டித்தான் ஆகணும்.என்றார் உடனிருந்த இன்ஸ். அப்ப உங்க வேலைய அந்த சிக்னல் கிட்ட வந்து செய்யுங்க.. அங்க வந்து கட்டுறேன் என்றேன். ஏனோ தெரியவில்லை அதன் பின் என்னை எதுவுமே கேட்கவில்லை. நான் பைன் கட்டிவிட்டு வந்தேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் – லஷ்மி
வாழ்க்கையில் மொனாட்டனி என்பதை தவிர்க்கவே முடியாது. அதிலும் ஆண் பெண் உறவுகளிடையே மிகவும் கஷ்டமான விஷயம். இதில் லோயர்,மிடில், அப்பர் என பாகுபாடே இல்லையென்றாலும், ஆண் பெண் உறவுகளிடையே ஏற்படும் வெறுமையை புரிந்து கொண்டு, தங்களது உறவுகளுக்கு புத்துயிர் ஏற்படுத்த விழையும் முயற்சி மிடில் க்ளாஸ் மிஷின் வாழ்க்கையில் சாத்தியமேயில்லை. அப்படியான வாழ்க்கை வாழும் லஷ்மி தம்பதியினருக்கிடையே ஒர் வெறுமை. கணவனுக்கு ஒர் பெண் தோழி இருப்பதை போன் மூலம் அறிகிறாள். ரெயிலில் வழக்கமாய் சந்திக்கும் இளைஞனைப் பார்த்து புன்னகைக்கிறாள். ஒரு போராட்ட நாளில் அவளைப் பற்றி கவலையில்லாத கணவனிடமிருந்து ஒர் நாள், ஒரே நாள் மொனாட்டனியை உடைக்க, அந்த இளைஞனுடன் கழிக்கிறாள். அடுத்த நாள் அதே வீடு. இம்முறை ப்ரஷர் குக்கரின் மூச்சு டாப் ஆங்கிளில். “ட்ரயினுக்கு நேரமாச்சே கிளம்பலை’ என்று புருஷன் கேட்க, இனிமே கொஞ்ச நாளைக்கு பஸ்ல போகப் போறேன் என்று தன் மொனாட்டனியை தொடர்கிறாள்.

கொஞ்சம் யோசித்தால் தப்புன்னா எதுவுமே தப்புத்தான் இல்லைன்னா இல்லைதான் என்பது தான் கருத்தென்றாலும். உறவுகளிடையே ஏற்படும் வெறுமையை போக்க, உணர்ந்தவர்கள் முயல்வதேயில்லை. மூச்சு முட்டும் உறவின் இறுக்கத்திலிருந்து கொஞ்சம் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டிய கட்டாயம் பலருக்கு வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் வாழ்கிறார்கள். அதே நேரத்தில் இம்மாதிரியான கலாச்சார மீறலும், புருஷன் தப்பு பண்றான் அதனால நான் பண்ணா என்ன என்பது போன்ற கருத்து சொல்வதாய் எடுத்துக் கொண்டு சமூக கோபம் கொள்கிறவர்களுக்கு இது அவர்களுக்கானது இல்லை.  இப்படத்தை கொஞ்சம் பிசகினாலும் பிட்டு படமாகிப் போய்விடக்கூடிய அத்துனை ரிஸ்குகளிடையே லஷ்மிப்ரியா எனும் அற்புதமான நடிகையின் ப்ரெசென்ஸும் திறமையாய் கையாண்ட இயக்குனர் சர்ஜுனுக்கும் வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mukkabazz
அனுராக் கஷ்யப்பின் புதிய படம்.  ஷர்வன் சிங் பாக்ஸிங்கின் மேல் வெறி பிடித்தவன். எப்படியாவது நேஷனல் லெவலில் வெற்றி பெற்று, அரசு வேலை வாங்கிவிட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கும் திறமையான பாக்ஸர். குரு ஜிம்மி ஷிர்கிலின் அண்ணன் பெண்ணின் பார்வைபட, அந்த நிமிட பார்வையில் காதலில் வீழ்கிறான். வேலையில் கவனமிழக்கிறான். அடிக்க வரும் குருவை, மிக இயல்பான பாக்ஸரின் ரிப்ளெக்ஸ் காரணமாய் திரும்பியடிக்க, நாக்கவுட் ஆகிறார் குரு. இனி உன் எதிர்காலம் அவ்வளவுதான் என்று முடிவு செய்து அவனின் கேரியரையே அழிக்க தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சி. அதிலிருந்து ஷர்வன் சிங் எப்படி மீண்டு, தன் காதலியை கை பிடித்து, வேலை கிடைத்து, தன் கனவு பாக்ஸர் போட்டியில் வென்றானா? இல்லையா?என்பதுதான் இந்த முக்காபாஸின் கதை. கேட்டால் சாதாரணமாக தெரியும் காதல் கலந்த ஆக்‌ஷன் கதையாய் தெரியும். ஆனால் படம் முழுக்க, ஆதிக்க சாதியின் ஆணவம். அவர்களின் அதிகாரம். அதன் மூலம் நசுக்கப்படும் கீழ் ஜாதிக்காரர்களின் கனவும், வாழ்வுரிமையும்.

வாய் பேச முடியாத நாயகிக்கும் நாயகனுக்குமிடையே மலரும் அழகான காதல், அவளின் ஒற்றை பார்வை அத்துனை பேரையும் அடிக்க வைக்கும் உயிர்ப்பு என கலகல, விறுவிறு காதல் எபிசோட் பூராவும். ஆங்காங்கே இருவரது மனக்குமுறலை, காதலை மியூசிக்கலாய் மாண்டேஜுகளோடு கொண்டு வந்திருக்கிறார்கள். படம் முழுக்க, சிட்சுவேசனுக்கு ஏற்ப பாடல்கள் வந்து கொண்டேயிருக்கிறது. நம்மை படம் நெடுக கட்டிப் போடுகிறது. மாட்டுக்கறி அரசியல்,ஆளும் பி.ஜேபியை விமர்சனம் செய்யும் காட்சிகள். உத்திரபிரதேச பாக்ஸிங் பெடரேஷன் ஊழல்கள். கீழ் ஜாதி உயரதிகாரி, அவனை விட உயர் ஜாதியினரிடம் காட்டும் அடக்குமுறை. அந்த கீழ் ஜாதி கார அதிகாரிக்கு சொம்படிக்கும் மலையாள உயர் ஜாதி அல்லக்கை அதிகாரி, ஷர்வனுக்கு உதவும் தலித் ட்ரையினர். படம் நெடுக இந்திய அரசியல் மற்றும் விளையாட்டுத்துறையினரைப் பற்றிய பிரசாரமில்லாத குற்றச்சாட்டு என அருமையான ஒர் திரைப்பட அனுபவத்தை தந்திருக்கிறார் அனுராக் கஷ்யப். என்ன எனக்கு க்ளைமேக்ஸ் மட்டும் பிடிக்கவில்லை. ஆனால் இது உண்மைக்கதை. நிஜவாழ்க்கையில் பல சாதனையாளர்கள் காம்பரமைஸுக்கு ஒப்புக்கொண்டு தான் சர்வைவ் ஆக வேண்டியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. இந்த ஜாதி பாலிடிக்ஸால் பல திறமையான விளையாட்டு வீரர்களை இந்தியா இழந்து கொண்டிருக்கிறது என்பது வருத்தப்படக்கூடிய உண்மை. சுடுகிறது.
படத்தில் மிக முக்கியமாய் குறிப்பிட வேண்டிய விஷயம் ரசித்தா ஆரோராவின் பின்னணியிசையும் பாடல்களும். ராஜிவ் ரவி, ஷங்கர் ராமன், ஜெயேஷ் நாயரின் ஒளிப்பதிவும்.  எழுதி இயக்கிய அனுராக் கஷ்யப்பையும் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Laakhon Me Ek – லட்சத்தில் ஒருவன்
அமேசானில் வெளியாகியிருக்கும் புதிய இந்திய வெப் சீரீஸ். ஐ.ஐ.டி கோச்சிங் பற்றி சேத்தன் பகத்தின் ரெவ்வல்யூஷன் 2020 படித்தவர்களுக்கு புரியும் அது ஒரு தனி உலகமென. கோச்சிங் செண்டர் ஊழல்கள். ஐ.ஐ.டி படிக்கவே விரும்பாதவர்களை கிட்டதட்ட ஜெயிலில் அடைத்து படிபடி என படிக்க நிர்பந்திக்கப்பட்டவர்கள். பெற்றோரின் கனவை நினைவாக்குவதற்காக கடனே என்று ஐஐடி கோச்சிங் க்ளாஸ் சேர்ந்து படிப்பில் ஸ்கோர் செய்ய முடியாமல் வாழ்க்கையில் தோல்வியுறும் இளைஞர்கள், ப்ரஷர் தாங்காமல் குடி, ட்ரக் என தடம் மாறிப் போகிறவர்கள் என பல விஷயங்களை நான் பார்த்திருப்போம். படித்திருப்போம். அந்த லட்சத்தில் ஒருவனைப் பற்றிதான் இந்த சீரீஸ். ராய்பூரிலிருந்து அப்பாவின் கனவுக்காக 55 பர்செண்ட் எடுத்த ஆகாஷ் விசாகபட்டினத்தில் ஐ.ஐ.டி ட்ரையினிங் சேருவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. ஆனால் ஆகாஷுக்கு நடிகனாக வேண்டுமென்று ஆசை. அமிதாப்பச்சன், ஷாருக் போல மிமிக்கிரி வீடியோ ஷூட் செய்து யூட்ட்யூபில் ஏற்றி தனக்கு சப்ஸ்கிரைப் செய்யுமாறு நண்பர்களிடம் வேண்டிக் கொண்டிருக்கும் போது அப்பா உனக்கு ஆர்ட்ஸ் காலேஜில் சீட் கிடைக்கவில்லை என்று சொல்லி ஐஐடி கோச்சிங் சேர்த்துவிடுகிறார். அதன் பிறகு அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். அங்கே படிக்கும் மாணவர்கள், கழித்துவிட்ட மாணவர்களுக்கான சொல்லிக் கொடுக்கும் முறை. ஸ்ட்ரிக்ட் எனும் பெயரில் நடத்தப்படும் வன்முறை, படிக்கும் படிக்காத மாணவர்களிடையே இருக்கும் இடைவெளி, ப்ரெஷர். மார்க். சீட்டிங், குடி, போதை என ஏதுமறியா பச்சை பாலகனாய் உள்ளே வருகிறவனை இந்த உலகம் என்னவாக்கி வெளியே அனுப்புகிறது என்பதை மிக அழுத்தமாய் சொல்லியிருக்கிறார்கள். ஆகாஷாய் நடித்திருக்கும் ரித்விக்கின் நடிப்பும், ஆகாஷ் அகர்வாலின் ஒளிப்பதிவும், பிஸ்வாஸ் கல்யாண், கரண் அகர்வாலின் மிக இயல்பான வசனங்களும், நம்மை அடுத்தடுத்த எபிசோடுகளை பார்க்க வைக்க தூண்டுகிறது.



Post a Comment

No comments: