Thottal Thodarum

Aug 28, 2018

Poomaram -Malayalam film

பூமரம்

தமிழ் சினிமாவின் ஸ்ட்ரைக் என்னை போன்ற தீவிர படம் பார்க்கிறவர்களையே தியேட்டர்களை விட்டு தள்ளி வைத்துவிட்டது. எந்த படம் வந்தாலும் முதல் நாளே பார்க்கிறவன் யாராவது பார்த்துவிட்டு சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம் என்கிற சோம்பல் வந்துவிடக் காரணம் தொடர் படங்கள் வெளியிடாமை. என்னைப் போன்றவர்களுக்கே இப்படியான எண்ணம் என்றால்.. மாசத்திற்கு ஒரு படம் பார்க்கிறவர்களின் மனநிலை. சரி அதை விடுங்கள். அதையும் மீறி சில படங்கள் பார்க்கச் சென்று அது கொடுக்கும் மனநிறைவு தான் சினிமா.  அப்படியான ஒரு படம் சமீபத்தில் பார்த்த மலையாள படமான “பூமரம்”

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் ஏற்கனவே நடித்திருந்தாலும் அவரின்  முதல் மலையாள படம். வழக்கமாய் மலையாளப் படங்களின் படப்பிடிப்பு 25-30 நாட்களுக்குள் மிகச் சாதாரணமாக பெரிய பட்ஜெட் படங்களையே முடித்துவிடுவார்கள். ஆனால் சுமார் ஒன்னரை வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்படத்தை முடிக்க. அதனாலேயே கதையின் நாயகனை வைத்து சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்த மீம்ஸ்கள் ஏராளம். ஆனால் அத்தனைக்கும் பதில் சொல்கிறார்ப் போல ஒரு படம்.

ரொம்பவே சிம்பிளான கதை. மஹாராஜா காலேஜ் சேர்மன் காளிதாஸ். அக்கல்லூரியில் நடக்கும் 5 நாள் கல்சுரல் தான் கதைக் களம். ஏற்கனவே செயிண்ட் மேரீஸ் காலேஜ் தான் ஐந்து வருடங்களாய் எல்லா முக்கிய கோப்பைகளையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இம்முறையும் அதை தக்க வைக்க, திறமையாய் தயாராகி வர, அதே நேரத்தில் மஹாராஜா காலேஜும் தயாராகிறது. அஹா.. வழக்கமான காலேஜ் சண்டை படமா? என்ற முடிவுக்கு வராதீர்கள்.

சமீபத்தில் இவ்வளவு இயல்பாய் ஒரு படத்தை நான் பார்க்கவில்லை. ஆரம்பக் காட்சியில் அப்பாவும் மகனும் பேசிக் கொள்ளும் நீண்ட வசனக்காட்சி. அதில் பேசப்படும் விஷயங்கள். டைட்டில் அதனூடே பயணிக்கிறது. வசனங்களை கவனிக்க தவறினால் நிச்சயம் கொஞ்சம் என்னடா இது என்கிற மனநிலையை கொடுக்கக்கூடிய காட்சிதான் என்றாலும், அக்காட்சியின் கனம் க்ளைமேக்ஸில் அற்புதமாய் உணர்த்தப்படுகிறது.

கதையில் எங்கேயும் யாரும் தண்ணியடித்துவிட்டு, சலம்பவில்லை. குத்து பாட்டோ, ஆட்டமோ போடவில்லை. கல்லூரி மாணவர்களின் அத்துனை கொண்டாட்டங்களையும் அவர்களூடேயே இருந்து பார்த்து அனுபவித்ததைப் போல ஒர் உணர்வை நமக்கு ஏற்படுத்தியது இயக்குனரின் அபார திறமை.

ஏன் மலையாள படங்களில் மட்டும் இசை அவ்வளவு மிருதுவாய், நெகிழ்வாய் இருக்கிறது? என்ற கேள்விக்கான பதில் இப்படம் நெடுக சொல்லப்படுகிறது. கல்லூரி பேராசிரியர் முதல் நாள் இரவில் காதல் கவிதை படிக்கிறார். மைம் ஆக்டிங்கில் சொல்லப்படும் அசோகரின் கதை. பரதநாட்டியம், கதகளி, மோகினியாட்டம். ஆதிவாசிகளின் நடனம், வெஸ்டர்ன் இசை.  ஒவ்வொரு கல்லூரி டீமுடம் இருக்கும் அதற்கான பயிற்சியாளர்கள். அவர்களின் திறமை. அதிலும் செயிண்ட் தெராசா கல்லூரிக்கு வரும் ட்ரைனர் டான்சர் அட்டகாசம். கலாச்சார கலைகள் முதற் கொண்டு, இன்றைய புதிய தலைமுறை கலைகள் வரை  மிக இயல்பாகவே இசையும், கலையும் அவர்களூடே பயணிக்கிற விதம். பாடப்படும் பாடல்கள். எல்லாமே ஸூத்திஙான விஷயம்.

குட்டிக் குட்டிக் கேரக்டர்களின் காதல், ப்ரோபசல்கள், பார்வை பறிமாற்றங்கள், நூல் விடுதல், புதிய காதலுக்கான தொடக்கம், காதலை சொல்ல சான்ஸ் தேடும் தருணங்கள் என மாண்டேஜுகளாய் படம் முழுவதும் விரவியிருக்கும் “வாவ்” தருணங்களின் படப்பிடிப்பும், எடிட்டிங்கும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் போகும் நிகழ்வுகளில் இடையே ஏற்படும் வழக்கமான காலேஜ் சண்டை. அது கொண்டு போய் நிற்க வைக்குமிடம் போலீஸ் ஸ்டேஷன். கொஞ்சமே கொஞ்சம் திணிக்கப்பட்டதாய் தெரிந்தாலும், போலீஸ் ஸ்டேஷனில் வரும் காட்சிகள், வசனங்கள் எல்லாமே ஆஸம்.

குறிப்பாய் சொல்லப் போனால் முப்பதுக்கும் மேற்பட்ட கேரக்டர்கள். இதில் யாருமே ஹீரோ, ஹீரோயின் என தனியாய் பிரிக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காட்சிக்கு முக்கியமானவர்கள். க்ளைமேக்ஸில் தங்களால் ஏற்பட்ட பிரச்சனைக்கு விடிவு தேடி கடக்கும் நெடிய இரவும், அதன் முடிவும், பாடலும் மயிர்க்கூச்செரிய வைக்கும் காட்சிகள். ஏனோ தெரியவில்லை. மிகவும் எமோஷனலாய் என்னை மாற்றிவிட்டது.

கல்லூரி கல்சுரலில் கேமராவை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு, நான்கைந்து நாட்கள் கழித்து, எடுத்துப் போட்டு பார்த்து எடிட் செய்த படம் போல அத்துனை இயல்பான படப்பிடிப்பு. ஞானம் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு.  அட்டகாசமான அபிரிட் சைனின் இயக்கம். மிக இயல்பான நடிப்பை நல்கிய நடிகர்கள். என ஒரு கோஜாஜ் குதூகல உணர்வை அளித்த படம். “பூமரம்”



Post a Comment

1 comment:

srik said...

Tamil industry is not in any strike now. It was before 4 months.