சூடானி ஃபர்ம் நைஜீரியா
ஒவ்வொரு
வாரமும் மலையாள படங்களைப் பார்க்கும் போது, எப்படி இவர்களுக்கு மட்டும் இப்படியான கதைக்களன்கள்
கிடைக்கிறது என்ற யோசனை வருவதை தவிர்க்கவே முடிவதில்லை. பூமரம் ஒரு வகையான படமென்றால்
சென்ற வாரம் பார்த்த சூடானி ஃபர்ம் நைஜீரியா இன்னொரு வகை. அதற்கு இன்னொரு காரணமாய்
நான் நினைத்தது. அவர்களுடய விளையாட்டு, கலாச்சாரம். ஒரு பெரிய வரம்.
மலப்புரத்தில்
உள்ள ”Myc Accode” எனும் டீமில் ஏழு மேட்ச் விளையாடி ஹைஜீரியாவிலிருந்து ராபின்சன்
எனும் புட்பால் வீரனை அழைத்து வருகிறார்கள். அந்த டீமின் மேனேஜர் மஜீத். முப்பதுகளை
கடந்து, இன்னமும் திருமணம் ஆகாமல் இருப்பவன். காரணம் பெரிய விளையாட்டு வீரனாகவும் இல்லாமல்,
நிரந்தர வருமானம் இல்லாதவனாகவும் இருப்பது ஒர் முக்கிய காரணம். ராபின்சன் என்னதான்
தான் நைஜீரியாவிலிருந்து வந்தவன் என்று சொன்னாலும் ஊர்காரர்களைப் பொறுத்தவரை அவனைப்போன்ற
ஆட்களை சூடானிலிருந்து வந்தவன் எனக் கூறி சூடானி என்றே அழைக்கிறார்கள். சிறந்த வீரனாய்
இருக்கும் ராபின்சனுக்கு திடீரென ஒரு விபத்து ஏற்பட்டு, கால் முறிந்து போகிறது. டீம்,
மற்றும் மஜீத்தின் நிதி நிலை மிக மோசமாய் இருக்க, ராபின்சனை தன் வீட்டில் வைத்து பார்த்துக்
கொள்கிறான் மஜீத்.
மஜீத்தின்
வீட்டில் அவன் வயதான தாயாரும், அவளூடய இரண்டாம் புருஷன் மட்டுமே. அம்மாவின் ரெண்டாவது
கல்யாணத்தினால் அவளுடனோ, அல்லது இரண்டாம் தகப்பனுடனோ சுமூகமாக இல்லை. இந்நிலையில் மஜீத்தின்
அம்மாவும், ராபின்சனும் பாஷை தெரியாமலேயே நெருக்கமாகிவிட, இவனைப் பற்றி ராபின்சனுக்கும்,
ராபின்சனைப் பற்றி மஜீத்துக்கு தெரிய வருகிறது. ராபின்சன் அவன் நாட்டில் நடந்த சிவில்
வாரில் தன் குடும்பத்தை பறி கொடுத்து, தன் இரு தங்கை மற்றும் பாட்டியுடன் கேம்பில்
வசித்து வருகிறவன். இந்த மேட்ச் அவனுக்கு மிகப் பெரிய வருமானத்தை கொடுக்கும் என்று
நம்பி இங்கே வந்தவன்.
இதற்கிடையில்
ராபின்சன் எதிர் டீமில் உள்ளவனிடம் காசு வாங்கியதாய் தெரிய வர, மஜீத்துக்கும், ராபின்சனுக்கும்
சண்டை.. வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் என்று பார்த்தால் அவனை ஸ்பான்ஸர் செய்து வர
வழைத்தது மஜீத்தாய் இருக்கும் பட்சத்தில் அவன் தான் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற சட்டத்தை
காட்ட, வேறு வழியில்லாமல் வீட்டில் இருக்க வைக்கிறான். இவர்களைப் பற்றி வெளிவந்த ஒரு பேப்பர் நியூஸ் ப்ரச்சனையை கொண்டு வருகிறது.
ராபின்சனின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி போலீஸ் அழைக்க, பாஸ்போர்ட்டை
காணோம். பின் நடக்கும் ரகளையும், பாசப் போராட்டமும் தான் படம்.
இத்தனை
இயல்பாய் நடிப்பார்களா? அல்லது அவர்கள் போக்கில் படமாக்கிவிட்டு எடிட் செய்தார்களா?
என்று சந்தேகம் வரும் அளவிற்கு அத்துனை இயல்பான நடிப்பு. மஜீத்தாக வரும் சவ்பினினி
நடிப்பு அவ்வளவு இயல்பு. மேட்சினூடே வாட்ஸப்பில் “ஓவர் ஓவர்:” என பேசி தகவல் பறிமாறும்
காட்சியாகட்டும்,, தன் பெற்றோர்களிடம் காட்டும் கோபமாகட்டும். காசில்லாத நேரத்தில் ஆக்ஸ்டெண்ட் ஆகி பணத்துக்கு அலையும் நேரத்தில் பேசும்
பேச்சாகட்டும், பெண் பார்க்க போகுமிடத்தில் நடத்து கொள்ளும் விதமாகட்டும், மனிதர் அடிபொலி.
நைஜீரியன்
சாமுவேலிடம் பெரிய அளவிற்கு நடிப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், அந்த ஓங்கி வளர்ந்த
குழந்தை முகத்தில் தெரியும் இன்னொசென்ஸ், அட்டகாசம். ஜாகீர் அம்மாவின் திருமணம் காரணமாய்
அவளிடமும், அவளின் கணவனிடமும் நடந்து கொள்ளும் முறை. “என்னைக்காவது ஒரு நாள் ஜாகிருக்கு
இதே போல உடம்புக்கு முடியாம இருந்து நான் அவனை பார்த்துக்கணும்” என்று தன் மகனுடனான
நெருக்கமில்லாத தருணங்களை நினைத்து அழும் அம்மா, ராபின்சனுக்காக உடனிருக்கும் அத்தையுடன்
மசூதிக்கு போய் வேண்டுதல் செய்வது, ராபின்சனின் ப்ளாஷ்பேக் என அத்துனை காட்சிகளையும்
திணிக்காமல் அதன் போக்கிலே கொண்டு போயிருக்கும்
இயக்குனர் ஜாக்ரியா மொகம்மதுக்கு இது முதல் படமாம். என்ன ஒரு நேர்த்தியான ரைட்டிங்
அண்ட் எக்ஸிக்யூட்டிங். குறிப்பாய் க்ளைமாக்சில் வரும் ஜாகிரின் அப்பா, அம்மா காட்சி.
ஒரே ஒரு ரியாக்ஷன் தான் அந்த அம்மாவின் முகத்தில் தெரியும் ரியாக்ஷன் ஆயிரம் கதைகள்
சொல்லும். அத்துனை இயல்பு.
மிகைப்படுத்தாத
தெள்ளிய ஆறு போல் ஓடும் கதை கொண்ட படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? அப்படியான படங்களை
உரிமை வாங்கி ரீமேக் செய்யும் போது, மலையாள படத்தை ரசித்தார்ப் போல ஏன் தமிழில் அதே
விதமான ரசிப்புத்தன்மை மக்களிடம் இல்லை என்ற சந்தேகம் எப்போது மலையாள படம் பார்த்தாலும்
வந்து கொண்டேதானிருக்கிறது. அதற்கு முக்கியமான ஒரு விஷயம் அவர்களுடய கலாச்சாரம். கேரளாவில்
கால்பந்தும், லோக்கல் க்ளப்பும் கலாச்சாரம். நமக்கு?. மோகினியாட்டம் முதல் எல்லா ஆட்டம்
பாட்டத்திலேயும், இசையும், ஊடுருவியிருக்கிற அவர்களுடய பாரம்பரியம். என பல விஷயங்களை
அவர்கள் இன்றும் கொண்டாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுடய அடுத்த தலைமுறைக்கு கடத்திக்
கொண்டுமிருக்கிறார்கள். நாம் அதை செய்கிறோமா? என்ற கேள்வி மலையாள படங்களை பார்க்கையில்
எழாமல் இல்லை.
Post a Comment
1 comment:
good review sir welcome back
Post a Comment