தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாதீங்க நல்ல டிபன் கடைக்கு கூட்டிட்டு போறேன் என்றார். நான் போய் சேர்ந்த போது மணி ஒன்பது. பஸ் பயணம் என்பதால் இரவு உணவை தவிர்த்து விடுவேன். அதனால் வயிறு கபகபவென இருந்தது. நான் குளிச்சு, இவரு வந்து என கொஞ்சம் அங்கலாய்ப்பாய் இருந்தாலும், என் ரசனை தெரிந்தவர் நிச்சயம் ஒர் நல்ல கடைக்குத்தான் கூட்டிப் போவார் என்று ஆவலாய் சடுதியில் குளித்து ரெடியானேன்.
ராஜனும், நண்பர் அரண்மனை சுப்புவும் வந்தார்கள். அல்லி நகர் போகும் வழியில் உள்ள ஒர் சின்னக் கடையில் நிறுத்தினார்கள். சின்னக் கடை என்றால் நிஜமாகவே சின்னக்கடைதான். மொத்தமாய் ஒரு எட்டு பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய கடை தான் செல்வம் மெஸ்.
ப்ரைட் ரைஸ் போன்ற ஒரு சாதத்தை கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்று கேட்டேன் பொங்கல் என்றார்கள். என்னாடா இது இப்படி உதிரி உதிரியாய் பொங்கலா என்று அதை ஒரு கை பார்ப்போம் என்று ஆர்டர் செய்தோம். நெய்யும், இல்லாமல் டால்டாவும் இல்லாமல் சீரகம், மிளகு எல்லாம் போட்ட மணம் வீடும் பொங்கல். நம்மூரில் சாப்பிட்டு பழகிய பொங்கல் போல இல்லை. கூடவே தொட்டுக் கொள்வதற்கு நல்ல சாம்பார். கார சட்னி, தேங்காய் சட்னி இருந்தாலும் காரச் சட்னி ஆசமோ ஆசம்.
உடன் ஆளுக்கொரு இட்லி, மற்றும் ஊத்தப்பம் பேமஸு என்ற அரண்மனை சுப்புவின் ரெக்கமெண்டேஷன் வேறு. ஊத்தப்பம் வந்தது. வாவ்.. அருமையோ அருமை.. ருசிக்கு முக்கிய காரணம் விறகடுப்பு. நன்றாக எண்ணெய் உற்றப்பட்டு, வெங்காயம் நன்கு வேகும் வரையில் ஊத்தப்பம் வேக வைக்கப்பட, எடுத்து வாயில் போட்டால் ம்ம்ம்ம்ம்.. கூட காரச்சட்னி மீண்டும் ஆசமோ ஆசம்.
நிச்சயம் தேனி பக்கம் போனால் காலை டிபனுக்கு போய் விடுங்கள். அருமையான சைவ டிபன் வகைகளுக்காக. 50 வருடங்களுக்கு மேலாக நடத்தப்படும் இந்த உணவகத்தில் கவனிப்பு மிகவும் பர்சனலாய் இருக்கிறது வருகிற அத்தனை பேரிடமும். ஒர் இஸ்லாமிய பெரியவவர் வந்து ஊத்தப்பம் ஆர்டர் செய்தார். எண்ணெய் இல்லாம.. என்றார்.
”அதுக்கு எதுக்கு ஊத்தப்பம் சாப்புடுறீய.. கொஞ்சம் இத்தா சொட்டு ஊத்தினா ஒன்னியும் ஆவாது அத்தா” என்று சொல்லியபடி இட்லிக்கு சட்னி ஊற்றினார்.
Post a Comment
No comments:
Post a Comment