எனக்கு முன்னால் ஷைன் பைக்கில், சட்டி ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு போனவர், திடீரென வண்டியை ப்ரேக் அடித்து, விரைத்து, விதிர்த்துப் போய் வண்டியோடு சாய்ந்ததை பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது. கீழே விழும் போது ஹெல்மெட் தலையிலிருந்து விலகி ரோட்டில் ஓடியதால் அவரது தலை தரையில் மோதிய சத்தம், அத்தனை ட்ராபிக்கிலும் துல்லியமாய் எனக்கு கேட்டது. பதறியடித்து என் பைக்கை நிறுத்திவிட்டு,
அவரை தூக்க ஓடினேன். பைக்கின்
ப்ரேக்கை அழுந்த பிடித்திருந்ததில் அவரது வலி தெரிந்தது.
நடு
வயது ஆளாயிருந்தார். மீசையில் டை ஆங்காங்கே வெளிறியிருந்தது. “காதுல ரத்தம் வருதுங்க”
என்று ஒருவர் சொன்னதும், பதறிப் போய் ரத்தம் வந்த இடத்தை சோதித்தேன். இடது காதில் மேல்
உள்ள தலை பாகத்தில் அடிப்பட்டிருந்தது. அதிலிருந்து காதோரத்தில் ரத்தம் வடிந்திருந்தது. சட்டையின் தோள் பட்டை சைடில் ரத்தக்கரை ஆகியிருந்தது.
சடுதியில்
மக்கள் கூடிவிட, வண்டியோடு அவர் வீழ்ந்திருந்ததால், வண்டியையும் அவரையும் கிட்டத்தட்ட
பிரித்து எடுக்க வேண்டியதாகிவிட்டது. எழுப்ப, எழுப்ப துவண்டு கொண்டேயிருந்தார். “தண்ணி..தண்ணி”
என ரெண்டு மூன்று குரல்கள் கேட்டதே தவிர யாரும் கொண்டு வந்த பாடில்லை. எதிரே இருந்த
செல்போன் கடைக்காரர் தன் தண்ணீர் பாட்டிலை எடுத்து ஓடிவந்தார். அதற்குள் அடிபட்டவரை
அலேக்காக தூக்கி அருகே மூடியிருந்த கடைக்குள் உட்கார வைக்க பிரயத்தனப்படும் போது மீண்டும்
துவண்டு விழ ஆரம்பித்தார். மூச்சு சீராக இல்லாமல் திணறினார். அவரைச் சுற்றி ஏகப்பட்ட
ஆட்கள் குழுமி விட, விடுமுறை தினமாகையால் சுற்றிலும் டாஸ்மாக் வாசம்.
அதற்குள்
யாரோ ஒருவர் வண்டியை எடுத்து ஓரம் வைத்து, ஹெல்மெட்டையும் எடுத்து அதோடு கட்டி, வண்டியை
பூட்டிவிட்டு சாவியை கொடுத்தார்கள். இன்னொரு மனிதர் “108க்கு போன் பண்ணுங்கப்பா” என்றார்.
இன்னொருவர் போன் செய்தார்.
அவருடய
நாடியை பிடித்துப் பார்த்தேன் சீராகவே இருந்தது. “என்னப்பா 108 போன் பண்ணியாச்சா?”
என்றேன். “யாரோ ஒருத்தர் பண்ணிட்டு அவரு கிளம்பிட்டாரு” என்றார் இன்னொருவர். அவரின்
சட்டை பையிலிருந்து போன் தேடி அது ஸ்மார்ட் போனாய் இல்லாமல் சாதா போனாய் இருக்க, நம்பர்
லாக் ஏதும் இல்லாது இருந்ததால் நம்பர் தேடி அவரது கடைசி டயல் நம்பரை தொடர்பு கொண்டு
நடந்ததை சொன்னார்கள். எதிர்முனையில் ஒரு அரை மணி நேரத்தில் வருவதாய் சொன்னார்கள். அவர்கள்
குரலில் எந்தவிதமான பதைபதைப்பும் இல்லை என்றார்கள்.
சில
நிமிடங்களில், ஆம்புலன்ஸ் பெரிய அலறலோடு வந்தது. அதிலிருந்து ஒர் பெண் உதவியாளர் இறங்கி
வந்து, அடிபட்டவரை நெருங்கி, அவருக்கு அடிபட்ட இடத்தை பார்வையிட்டபடியே “அண்ணே.. சரக்கு.
பெருசா அடி ஏதுமில்லை. பர்ஸ்ட் எயிட் போதும்” என்றபடி அடிப்பட்ட இடத்தை சுத்தம் செய்துவிட்டு,
“வீட்டுக்கு யாராச்சும் சொல்லி அழைச்சிட்டு போயிருங்க” என்று கிளம்பிவிட்டார்கள்.
“சரக்கு
அடிச்சிருக்காரா?” என்று ஆச்சர்யத்தோடு கூட்டத்தில் ஒருவர் கேட்க,
“உங்களுக்கு ஏதாச்சும்
உடம்பு சரியில்லையா? வந்து பார்த்த உடனே எனக்கு வாசம் வருது” என்று சிரித்தார் அந்தப்
பெண்.
”நிக்குற
பாதி பேர் சரக்கா இருக்குறதுல யார் குடிச்சிருக்காங்கனு தெரியலை போல “ என்று சொல்லியபடி
தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார். பல்ஸ் செக் செய்து “எல்லாம் ஓக்கே” என்று ஆம்புலன்ஸைப்
பார்த்து சொன்னார்.
அதுவரை
பச்சாதப்த்தோடு கூட்டமாய் வேடிக்கைப் பார்த்தவர்கள் சட்டென எல்லாம் முடிந்துவிட்டதாய்
கிளம்பி விட, நானும் இன்னொருவர் மட்டுமே அங்கே இருந்தோம். அதற்குள் அடிபட்டவர் கொஞ்சம் எழுந்து குழறலாய் “பொண்டாட்டி
கிட்ட சொல்லிட்டீங்களா?” என்றார். “எல்லாம் சொல்லியாச்சு. வீட்டுலேர்ந்து ஆள் வந்திட்டிருக்காங்க”
என்றேன்.
ஒர்
ஆட்டோவில் கும்பலாய் ரெண்டு பேர் வந்து இவரின் நிலையைப் பார்த்ததும் “எத்தன வாட்டின்னே..
இந்த கருமாந்திரத்தை குடிச்சிட்டு இப்படி ஆவே. டி அடிக்ஷன் ட்ரீட்மெண்ட் போய்ட்டிருக்கு.
தங்கமா ரெண்டு புள்ளைங்க. காலேஜு படிக்குது. இவன் இப்படி வீழ்ந்து கிடக்குறான். வயிரெல்லாம்
எரியுது” என்று திட்ட ஆரம்பித்தார். அவரின் தம்பியாம்.
“டேய்
அவனை திட்டாதடா.. பாவம் என்ன புரியவா போவுது?” என்று தம்பியிடமிருந்து விலக்கி, தன்னோடு
அடிபட்டவரை தாங்கி வாங்கி கொண்டு, “ த்தா.. பாடு.. பாடு.. என்னாத்துக்குடா.. இப்படி
பண்ணுறே? குடிக்காம இருந்துதான் பாரேண்டா ஒரு ரெண்டு நாளைக்கு. உனிக்கு எத்தனை பேர்
இருக்கோம்னு தெரியும்” என்று கண்கலங்கி அழுதபடி தன் ஆட்டோவின் பின்பக்க சீட்டில் படுக்க
வைத்துவிட்டு, “சுரேஷு நீ அவன் வண்டிய எட்தாந்திரு” என்று தம்பியிடம் சொல்லிவிட்டு
வண்டியை மிக மெதுவாய் அதிர்வில்லாமல் கிளப்பினார்.
”அவரு
யாரு?” என்று சுரேஷுவிடம் கேட்டேன்
“ப்ரெண்டு
சார். சின்ன வயசிலேந்து. அவரை எங்கேயும் எப்பவும் விட்டுக் கொடுக்கவே மாட்டாரு. இவரை
ட்ரீட்மெண்டுக்கு அழைச்சுட்டு போறதிலேர்ந்து எல்லாமே அவருதான் செய்வாரு. என்னை திட்டாதேனுட்டு
வழிபூரா அவரை திட்டிட்டேத்தான் போவாரு. ரொம்ப நன்றிங்க” என்று சொல்லிவிட்டு வண்டியை
கிளப்பிக் கொண்டு போனார். நாங்கள் இரண்டு பேர் மட்டும் கொஞ்சம் நேரம் அவர்கள் போவதையே
பார்த்துக் கொண்டிருந்தோம். “ அத்தனைக் கூட்டமும் சரக்குல அடிபட்டிருக்கானு தெரிஞ்ச
உடனே கலைஞ்சிருச்சில்ல?.” என்றேன் என்னுடன் கடைசி வரை இருந்த நண்பரிடம்.
Post a Comment
No comments:
Post a Comment