Thottal Thodarum

Jan 31, 2019

ராமின் பேரன்பு

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என ராம் எடுத்த மூன்று படங்களிலும் நான் முரண்பட்டேயிருக்கிறேன். ஆனால் என்றைக்கும் ராமின் படங்கள் பிடிக்காமல் போனதில்லை. படங்களின் மேல் விமர்சனங்கள் வைத்திருந்தேனேயன்றி, குற்றம் சாட்டியதில்லை. ராமின் படங்கள் விமர்சனங்களை மீறி என்னை அலைக்கழிக்காமலும் இருந்ததில்லை. ஆனந்தியை மறக்க முடியுமா?, பறவையே எங்கு இருக்கிறாயையோ? ‘நிஜமாத்தான் சொல்லுறியா?” என்கிற அப்பாவி ஆனந்தியின் கேவலையோ மறக்கத்தான் முடியுமா?. இன்றளவில் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு பயணப்பாடலை காணவேயில்லை. ராமின் ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம் தான். அப்படியொரு அனுபவத்தை காண ராம் அழைத்த போது எந்தவிதமான முன்முடிவும் இல்லாமல் தான் அமர்ந்தேன்படம் ஆரம்பித்த முதல் ப்ரேமிலேயே நான் படத்துள் மூழ்கிப் போனேன்.

நீங்க வாழுற வாழ்க்கை எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டதுன்னு என்னோட கதையக் கேட்டா புரியும்என்கிற வசனம் ஒலித்த போது பெரிதாய் பாதிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வரும் போது புரிந்தது. ஆம்.. நான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று.

ஊரே பாட்டும் கூத்துமாய் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் போது எங்கோ ஒருவன் மட்டுமே அத்துனை கொண்டாட்டத்தையும் அமைதியாய், எந்திவிதமான ரியாக்ஷன்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பான். அவன் ஏன் அப்படி இருக்கிறான் என்று கவனிக்கவோ? கேட்கவோ ஆளில்லை. ஏனென்றால் அனைவரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவனைப் பற்றி அக்கறையில்லை. அல்லது தெரியாது. அப்படியே தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.  அப்படி தனியான ஒருவனைப் பற்றிய கதை. அவனுக்கு இருக்கிற ஒரே கொண்டாட்டம், தூக்கம் எல்லாமே அவனின் மகள். ஸ்பாஸ்டிக் சைல்ட் அதுவும் பெண் குழந்தை. அவள் வளர ஒரு தந்தையாய் அவனும் வளர்கிறான். துக்கப்படுகிறான். புரிந்து கொள்ள பிரயத்தனப்படுகிறான். அவமானப்படுகிறான். அடிபடுகிறான். வாழ்க்கை அவனை வளர்த்தெடுக்கிறது

படம் நெடுக வசனங்கள் மிகக் குறைவு. ஆனால் பேசும் விஷயங்கள் நிறைய. குறிப்பாய் அஞ்சலி ஒரு காட்சியில் மன்னிப்பு கோரும் வகையில்நான் அதை ஏன் செய்தேன்னு கேட்டுட்டுப் போங்கஎன்று இறைஞ்சுவார். மம்முட்டிவேணாம். நான் ஏன் இப்படி இருக்கேன். எவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரிஞ்சு எனக்கே இப்படி பண்ணியிருக்கீங்கன்னா.. நீங்க எவ்வளவு கஷ்டத்துல இருப்பீங்க?” என்று கேட்டுவிட்டு போய்க் கொண்டேயிருப்பார். அன்பு ஒன்றுதான் எல்லாவற்றுக்குமான பதில் என்பதை குறிக்கும் அக்காட்சி அத்தோடு முடியவில்லை. அவர் போவதைப் பார்த்துக் கொண்டே வருத்ததில்பாவம் ரொம்ப நல்லவர் இல்லைஎன்று கூறுவார். “நாம மட்டும் என்னவாம்?”என்று பதில் கூறுவார் உடனிருப்பவர். எத்தனை அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். மளுக்கென கண்களில் நீர் கட்டியது.

ஸ்பாஸ்டிக் குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்கிறவனை காட்டிக் கொடுத்த சிறுவனை அடிபட்டு இருக்கிறான் என்று அவன் தந்தையை தேடிப் போய்உங்க பையனை அங்க அடிக்கிறாங்கஎன்று சொல்லும் போது பூ ராமின் முகத்தில் தெரியும் வருத்தத்தை எத்தனை வார்த்தையில் சொன்னாலும்  விளக்க முடியாது. அதன் பின் அவர் பேசும் வசனம்ஹாஎன துக்கம் தொண்டையை அடைக்கும்

ஸ்பாஸ்டிக் குழந்தைகளைப் பற்றி பெரிய அளவில் ்தமிழில் ந்ததாய் நியாபகம் இல்லை. கல்கி கோல்சின் நடித்த படம் தான் வளர்ந்த ஸ்பாஸ்டிக் பெண்ணின் உடல் சார்ந்த வேட்கை, காதல் என பல விஷயங்களை பேசிய படம்

இப்படத்தில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவருமே படத்துடன் இயந்து செயல் பட்டிருக்கிறார்கள். யாரும் எங்கேயும் துருத்திக் கொண்டு இதோ பார் நானிருக்கிறேன் என்கிறார்ப் போல செயல்படவில்லை. கொடைக்கானல் காட்சியில் இருந்த அமைதியும், அழகும், சென்னைக்கு வந்தபின் வைக்கப்பட்ட  கீக்கிட ஷாட்கள் பல விஷயங்களை புரிய வைக்கிறது. எங்கே பாடல்கள் அல்லது பின்னணியிசை ஆரம்பிக்கிறது என்றோ முடிகிறது என்றோ உணர முடியவில்லை. அத்துனை தரமான இசை.  

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது வாழ்க்கையில் வெற்றி பற்றி பேசிக் கொண்டிருந்தார். எது வெற்றி என்று கேட்டேன். பணமா? சோஷியல் ஸ்டேடஸ் அங்கீகாரமா? செய்யும் தொழிலில் கிடைக்கும் அங்கீகாரமா? என்று திரும்பக் கேட்டதற்கு பதில் இல்லை. நான் விரும்பும் விஷயத்தில் இயங்கிக் கொண்டிருப்பதே வெற்றிதான் என்றேன். அது வரம் என்று அவருக்கு புரியவில்லை. புரிந்தவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ராம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். பேரன்பு பெரு வாழ்க்கை. ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.




Post a Comment

No comments: