Thottal Thodarum

Feb 27, 2019

Sacred Games - Web Series

Sacred Games
சினிமா அவ்வளவுதான் இனிமே. எல்லாரும் டிவி பார்க்க போயிட்டாங்கனு சொல்லிக் கொண்டிருந்த போதும், சிடி, டிவிடி, டவுன்லோட் காலம் என ஒவ்வொரு ப்ரீயட் வரும் போதும் அவ்வளவுதான் சினிமா என்பார்கள். ஆனால் சினிமா எனும் ராட்ஷனுக்கு அழிவே கிடையாது. எதாவது ஒரு வழியில் மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருப்பவன். 

அது வெளிப்படும் டெக்னாலஜி வேண்டுமானால் மாறுமே தவிர சினிமா மாறுவதேயில்லை. 2010 நான் சினிமா வியாபாரம் புத்தகத்தில் இன்னும் பத்து வருடங்களில் நாம் சினிமாவை வீட்டில் தான் பார்க்கப் போகிறோம், அதுவும் இண்டர்நெட் வழியாய் என்று எழுதியிருந்தேன். அது ஆறு வருடங்களுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்துவிட்டது.

பெரிய திரைகளில் சூப்பர் ஹீரோ படங்களும், வீட்டின் டீவியில் மொக்கை சீரியல்களும் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் வெப் சீரீஸ் எனும் புதிய சீரியல் வடிவம். சினிமாவுக்கு சற்றும் குறையாத வகையில், அதே பிரம்மாண்டத்தோடு விதவிதமான கதைக்களன்களில், மிகச் சிறந்த நடிகர்களோடு, டெக்னீஷியன்களோடும், ஹாலிவுட்டில் களமிறங்க ஆரம்பிக்க. நாமெல்லாம் நெட்ப்ள்க்ஸிலும், அமேசானிலும் ஆவென வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தோம். நம்மூர்ல அந்த தரத்தோடு சீரிஸ் எல்லாம் வருமா? என்று. அதை அமேசானின் இன்சைட் எண்ட்ஜ் மூலம் கணக்கை தொடங்கினார்கள். இப்போது நெட்ப்ளிக்ஸ் தன் பலத்தை, அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானி, நவாசுதீன் சித்திக், சாயிப் அலிகான், ராதிகா ஆப்தே.. விக்ரம் சந்திராவின் நாவலை சீரீஸ் ஆக்கியிருக்கிறார்கள்.

சர்டஜ் சிங். நேர்மையான போலீஸ் ஆபீஸர். ஆயுதமில்லாமல் சரணடைய வந்த ஒர் அக்யூஸ்டை சுட்டதற்காக கமிஷன் முன்பு உண்மை சொல்ல விழைபவன். ஆன்ஸைட்டி ப்ரச்சனை, டைவர்ஸ் என கிட்டத்தட்ட தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் அலைபவன். அவனை 16 வருடங்களாய் கண் காணாமல் இருக்கும் மும்பையின் டான் கணேஷ் கைக்கோண்டே அழைக்கிறான். மும்பை இன்னும் 25 நாட்களில் மொத்தமாய் அழியப் போகிறது. அனைவரும் சாகப் போகிறார்கள். திரிவேதியை தவிர என்கிறான். மேலும் தகவல்களை கேட்க அணுகுவதற்குள் கணேஷ் கைக்கோண்டே தற்கொலை செய்து கொள்கிறான். மும்பைக்கு என்ன ஆகப் போகிறது? யார் இந்த கணேஷ் கைக்கோண்டே, ரா, லோக்கல் அரசியல்வாதிகள் ஏன் இந்த பிரச்சனையில் இவ்வளவு ஆர்வர்ம் காட்டுகிறார்கள். எதிரிகள் ஒவ்வொருவராக கொல்லப்பட, மும்பை எப்படி காப்பாற்றப்படப் போகிறது என்பதை எட்டு நாற்பத்தைந்து நிமிஷ எபிசோடாக சொல்லியிருக்கிறார்கள்.

சூத்தியா, காண்ட் என ஹிந்தி, மராத்தியில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளை மிகச் சாதாரணமாய் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏகப்பட்ட நிர்வாணக்காட்சிகள், உடலுறவு காட்சிகள் என, இந்திய சினிமாவில் சென்சாருடன் போராடினால் கூட வைக்க வாய்ப்பில்லாத பல விஷயங்கள் இந்த சீரீஸில் சாத்தியமாகியிருக்கிறது.

கணேஷ் கைக்கோண்டேவாக நவாசூதீன் சித்திக். மனுஷனுக்கு எங்கே நடிக்கிறார்?. அவ்வளவு கேஷுவல். ஆனால் கணேஷ் ஏன் இப்படி ஆனான் என்று ஆரம்பித்து அவன் தாதாவாக வரும் அத்தனை காட்சிகளும் காட்பாதரில் ஆரம்பித்து, நம்மூர் நாயகன் வரை சலிக்க, சலிக்க பார்த்த விஷயங்கள் தான் என்றாலும் அனுராக்கின் கைவண்ணம் நம்மை கட்டிப் போடுகிறது.   சீரீஸ் நெடுக நவாசூதீன் பேசும் வசனங்களில் ஏகப்பட்ட சர்க்காஸம். சீரீஸின் தலைப்பைப் போலவே

மொத்தம் 190 நாடுகளில் ஒரே நேரத்தில் பார்க்ககூடிய வகையில் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தயாரித்திருக்கும் முதல் சீரீஸ். ஒர் கமர்ஷியல் படத்துக்கு கொடுக்கப்படும் அத்துனை விளம்பர முக்யத்துவமும் இதற்கும் கொடுத்து களமிறக்கியிருக்கிறது நெட்ப்ளிக்ஸ்.

இந்த சீரீஸ் மூலம் நிறைய அரசியல் பேசியிருக்கிறார்கள். எமர்ஜென்சி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, காங்கிரஸ், மும்பை குண்டு வெடிப்பு, பாப்ரி மஸ்ஜித் என ஒவ்வொரு காலகட்டதையும் கதையோடு இணைத்து பேசுகிறார்கள்.

உண்மையில் சொல்லப் போனால் இந்த சீரிஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்பதை வரும் விமர்சனங்களை வைத்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதே நேரத்தில் நெட்ப்ளிக்ஸின் நார்கோஸ் போன்ற சீரீஸ்களை பார்த்தவர்களுக்கு இது ஓகே ரகமாய்த்தான் தெரியும். காரணம் நாம் ஏற்கன்வே பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளால்தான். ஆனால் அதே வேளையில் நார்கோஸ்  போன்ற சீரீஸ்கள் மூலமாய் அந்நாட்டு அரசியல், அதில் நடக்கும் ஊழல்கள், லோக்கல் பாலிட்டிக்ஸ். கலாச்சாரம் போன்றவற்றோடு பார்க்கும் போது சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

இந்த சீரீஸை வெளிநாட்டினர் பார்க்கும் போது அதே உணர்வு நிச்சயம் அவர்களுக்கும் ஏற்படும். குறிப்பாய் இந்திய அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளை வைத்து அமைத்திருக்கும் திரைக்கதை. அட்டகாசமான சர்காஸ்டிக் வசனங்கள். தரமான நடிப்பு. இந்த்ய படங்களில் இத்தனை தைரியமான காட்சிகளா? என்று ஆச்சர்யபடுத்த தவறாது.

இது அத்தனையும் சாத்தியமானதற்கான காரணம் நெட்ப்ளிக்ஸ், அதன் பட்ஜெட் . சுமார் ஆறு கோடி வரை ஒரு எபிசோடுக்கு செலவ் செய்திருப்பதாய் சொல்கிறார்கள்.  பின் ஏன் வராது தரம். நவாசூதீன் சித்திக்கின் எபிசோடை அனுராக் தான் இயக்கியிருக்கிறார் என்று சொல்லாமலேயே புரிகிறது. அவரது முந்தைய படங்களின் சாயல் இக்காட்சிகளில் இருந்தாலும் பம்பாய் வெல்வெட் படத்தில் வரும் பழைய மும்பை. காபரே லோக்கல் தாதா வளரும் காட்சிகள் எல்லாம் தரமோ தரம்.

இந்திய அளவில் இந்த சீரீஸ் ஒர் பெரிய மைல் கல். ஆனால் அதே நேரத்தில் போலியான மறு உருவாக்கமாகவும் தெரிகிறது. சாக்ரெட் கேம்ஸின் வெற்றி மேலும் பல சிறந்த கலைஞர்களின் சுதந்திர களங்களை, படைப்புகளை வெளிக்கொணர நெட்ப்ளிக்ஸ் வழி வகுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Feb 20, 2019

Glitch – உயிர்தெழுதல்- web series review

Glitch – உயிர்தெழுதல்
சினிமாவில் சொன்னால் நம்ப முடியாத சில கதைகளை சீரீஸில் சொன்னால் சுவாரஸ்யப்படுத்திவிட முடியும். அதிலும் குறிப்பாக அமானுஷ்ய கதைகள். அம்மாதிரியான கதைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்குமிடம் வெப் சீரீஸ்கள். சமீபத்தில் பார்த்த நெட்ப்ளிக்ஸ் சீரிஸான “க்ளிட்ஜ்” கதை படு சுவாரஸ்யம்.

முதல் எபிசோடிலேயே நம்ம கட்டிப் போட ஆரம்பித்துவிட்டது. ஒரு சுடுகாடு. நடு ராத்திரி. கல்லரை ஒவ்வொன்றாய் விரிசல் கொண்டு பிளக்க ஆரம்பிக்கிறது. மெல்ல அதிலிருந்து நிர்வாணமான மனிதர்கள் வெளியே வருகிறார்கள். வந்தவர்கள் உடல் முழுவதும் மண் அப்பியிருக்க, ஒன்றும் புரியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் ஆளாளுக்கு மலங்க, மலங்க விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த சிறுவன் ஒருவன் அதை படம் பிடிக்கிறான். போலீஸுக்கு தகவல் சொல்கிறான். அங்கு வரும் போலீஸ் இவர்கள் எல்லாரும் யார் என்ன என்று விசாரிக்க, அவர்களால் ஏதும் பதில் சொல்ல முடியவில்லை. அனைவருக்குமான முதல் உதவிகளை செய்ய அருகில் உள்ள லோக்கல் கவர்மெண்ட் ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கிறான் போலீஸ் அதிகாரியான ஜார்ஜ்.

அனைவரையும் அழைத்துப் போய் ஆஸ்பிட்டலில் செக் செய்யும் போதுதான் தெரிகிறது அனைவரும் இறந்தவர்கள் என்று. அதுவும் ஒவ்வொரு காலகட்டத்தில் அந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரியான ஜார்ஜின் மனைவி எம்மாவும் இருக்க, அதிர்ச்சியாகிறான். கேன்சரினால் அவள் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகி, வேறொரு பெண்ணை திருமணம் செய்து அவள் கர்பமாக இருக்கும் சூழ்நிலையில் மனைவி உயிருடன் வந்ததைப் பற்றி சந்தோஷப்படுவதா, இல்லை கலவரமடைவதா என்று குழம்பித் தவிக்கிறான்.

வந்தவர்களில் ஒருத்திக்கு தான் கொல்லப்பட்டது மட்டுமே நியாபகம் இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன் இறந்திருக்க, அதன் நியாபகம் வர, வர, அதை நோக்கி போகிறாள். இன்னொருத்தி அழகிய குடும்பத்தலைவி. தன் கணவனின் அடி தடி எல்லாவற்றையும் தாண்டி தன் அழகு பெண் குழந்தையையும் குடும்பத்தையும் நேசிப்பவள் நாற்பது ஐம்பது வருடத்துக்கு முன் இறந்தவள். அவள்தன் குடும்பத்தை தேட ஆரமிக்கிறாள். இன்னொருவனுக்கு ஆங்கிலமே தெரியவில்லை. இத்தாலி மொழி பேசுகிறான். எழுபது என்பது வருடங்களுக்கு முன் இறந்தவன். டேட்டாபேஸை வைத்து அவனின் அண்ணன் ஒருவர் இன்னமும் ஊரின் எல்லையில் வாழ்ந்து கொண்டிருப்பதாய் தெரிய வர, அவனை அங்கு அழைத்துப் போனால் எப்படி இவன் இறந்தான் என்றும், இவன் மீண்டும் எப்படி உயிர்பெற்று வரக்காரணம் ஏதுவாய் இருக்குமென்று நினைத்து அவனை அழைத்துப் போகிறான் ஜார்ஜ். ஆனா ஊர் எல்லையில் உள்ள ஒரு பாலத்தை தாண்டும் முன்பு அவன் எரிந்து பஸ்மமாகிறான்.

இப்படி உயிர் பிழைத்த எல்லாரையும் வெளியுலகத்திற்கு தெரியாமல் ஹாஸ்பிட்டலிலேயே தங்க வைத்து அவர்களின் உயிர்தெழுதலின் காரணத்தை கண்டு பிடிக்க, உத்வுகிறாள் டாக்டர் எலிஷா. அதே நேரத்தில் ஜார்ஜின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட உடன் வேலை செய்யும் போலீஸ் ஆபீஸர் தனியாய் விசாரணை செய்ய முயல, அவன் ஒரு விபத்தில் இறக்கிறான். இறந்தவன் உடனடியாய் உயிர் பெற்று, தான் ஏன் உயிர் பெற்றோம் என்று காரணத்தை தேடியலைகிறவர்களை கொல்ல ஆரம்பிக்கிறான்.

ஜார்ஜிடம் மாட்டாத இன்னொரு மனிதனும் ஊருக்குள் புகுந்து விடுகிறான். அவன் தன்னுடய சிலையை பார்க்கிறான். நூறு வருடங்களுக்கு முன் தான் தான் அந்த நகரின் மேயர் என்று எழுதியிருக்க, அவனை பாலோ செய்யும் சிறுவன் அவனுக்கு உதவுகிறான். தான் எப்படி உயிருடன் வந்தேன் என்று புரியாமல் காரணத்தை  தேட ஆரம்பிக்கிறார். அப்படி தேடும் போது கிடைக்கும் அனுபவங்களில் அவருக்கு தெரிய வரும் விஷயம் ஆச்சர்யமான ஒன்று. தான் இயல்பாய் சாகவில்லை என்பதும், தன்னை கொன்றது தன் குடும்பமே என்று அறிகிறார். ஏன் கொன்றார்கள் என்று தேடும் போதுதான் புரிகிறது. அவருக்கும் அவருடய வேலையாளான ஒரு கறுப்பின பெண்ணுக்குமிடையே ஆன உறவும், காதலும். அதனால் அவள் கர்பமாக இருக்க, சொத்துக்கு பிரச்சனை வருமென்று தகப்பனையே கொன்று புதைத்திருக்கிறார்கள் என்று புரிபடுகிறது. உதவும் சிறுவன் தான் தன் பேரன் என்று புரிந்து கொண்டு சொத்தை கைப்பற்றி பேரனுக்கு கொடுக்க் நினைக்கிறார்.

இவர்கள் எல்லோரும் ஊரை விட்டு வெளியே போக முடியாது. போக நினைத்தால் எல்லா தாண்டியதும் பஸ்மமாகி விட வேண்டியதுதான். இவர்களுக்கு என்று ஸ்பெஷல் பவர் ஏதும் கிடையாது. சாதாரன மனிதர்களுக்கு இருக்கும் அதே சக்தி மட்டுமே. தாங்கள் ஏன் உயிர் பெற்றோம். தங்கள் சாவுக்கான காரணம். தன் மரணத்திற்கு பிறகு உடனிருந்தவர்களின் இயல்பு வாழ்க்கை வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாமை. அதற்கு எதிர் நடவடிக்கைகள். இயற்கைக்கு மாறாய் நடக்கும் விஷயங்களை அழிக்க உருவாகும் வில்லன். என செம்ம எமோஷனல் சீரீஸ்.
இப்படியாக எப்படி சாத்தியம் என்பதற்கு இவர்கள் இக்கதையில் கொடுத்திருக்கும் விளக்கம் கொஞ்சம் டகால்டியாயிருந்தாலும், சீரீஸ் நெடுக கொடுக்கப்படும் திருப்பங்கள், கதை சொல்லும் முறை எல்லாமே சுவாரஸ்யம். வாய்ப்பிருப்பவர்கள் பார்க்கக் கடவது. இல்லையேல் உயிர்தெழுவிக்க படுவீர்கள் 


Feb 16, 2019

Sammohanam

Sammohanam
ரெண்டு ரீலுக்கு ஒரு பாட்டு, எந்தவிதமான மனநிலையில் ஹீரோ இருந்தாலும், ஹீரோயினின் அம்மாவோ, அல்லது மாமனாரோ அவங்க ரெண்டு பேரும் மழையில ஜாலியா குத்து பாட்டு பாடுவாங்களோ என்று கற்பனையிலாவது கடைசி ரீலுக்கு முன் ஒரு குத்துப் பாட்டை போட்டு நம்மை ஜெர்க்காக்கி உட்கார வைக்கும் தெலுங்கு சினிமாவில் அவ்வவ்ப்போது தென்றலாய் படங்கள் வருவதுண்டு. அதில் முக்கியமானவர் சேகர் கம்மூலா.

இவரது முதல் படமான டாலர் ட்ரீம்ஸில் ஆரம்பித்து, ஆனந்த், கோதாவரி, ஹாப்பி டேஸ், சமிபத்திய ஃபிடா வரைக்கும் என சொல்லலாம்.  அதே நேரத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன பட்ஜெடுகளில் ஃபீல் குட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இன்னொரு முக்கிய இயக்குனர் மோகனகிருஷ்ணா இந்திராகாந்தி. இவரது முதல் படமான கிரகணம் தேசிய விருது பெற்ற படம். அதன் பிறகு இவர் எடுத்த படங்களில் அஸ்தா சம்மா, கோல்கொண்டா ஹைஸ்கூல், அந்தாக்க முந்து ஆ தரவாத்தா, ஜெண்டில்மேன், அமிதுமி போன்ற படங்கள் கிரிட்டிக்கலாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களே. மினிமம் கேரண்டி காதல் கதை. அதில் கொஞ்சம் நகைச்சுவை, நல்ல எமோஷன் என கலவையாய் அமையப் பெற்ற படங்கள். இவரது புதிய படமான சம்மோகனமும், அந்த லிஸ்ட் தான்.

ஹூயூக்கிராண்ட், ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த “நாட்டிங்ஹில்” படத்தை லேசாய் தழுவியபடம் என்றாலும், ப்ரசெண்ட் பண்ண விதம் ஆஸம். சுதிர்பாபு ஒரு ஆர்டிஸ்ட். குழந்தைகளுக்கான அனிமேசனில் தான் ஆர்வம். நல்ல அப்பா, அம்மா, தங்கை என அருமையான குடும்பம். அவர் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு கேட்கிறார்கள். தன்னையும் ஒரு கேரக்டர் ரோலில் நடிக்க ஒத்துக் கொண்டால் வீடு தருகிறேன் என்கிறார் சினிமா ஆர்வலரான சுதிர்பாபுவின் தந்தை நரேஷ். பிரபல ஹீரோயின் சமீரா நடிக்கிறார் என்றதும், ஊரே ஆர்வமாயிருக்க, சுதிர் மட்டும் பெரிய சுவாரஸ்யம் காட்டவில்லை. சமீரா டயலாக் பேசும் கொச்சை தெலுங்கை கிண்டல் செய்ய, தன் தெலுங்கை சரி செய்து கொள்ள சுதிரையே வசனம் சொல்லித்தருமாறு பணிக்கிறாள். இருவருக்கிடையே ஆன நெருக்கம் வளர்கிறது. ஒர் மழை நாளில் சுதிர்பாபு வீட்டில் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருவருக்கிடையே ஆன நெருக்கம் அதிகமாகி, விலகுகிறார்கள். தன் காதலை சொல்லப் போன சுதிரை அவள் மறுக்கிறாள். பின்பு என்ன ஆனதுதான் கதை.

சிம்பிளான லைன். அதை அழகாய், அழுத்தமாய் மாற்றியது இயல்பான திரைக்கதை. வசனம். அண்ட் இயக்கம். காதல் மறுதலித்த சோகத்தில் மகன். தான் நடித்த படத்தின் தன் காட்சிகள் அனைத்தும் வெட்டப்பட்ட விஷயம் தெரிந்து நொந்து போயிருக்கும் கணவன், அண்ணன் தங்கைக்குள்ளான சண்டையில் முறுக்கிக் கொண்டிருக்கும் தங்கை என ஆளாளுக்கு தனித்தனியாய் இருக்க, மகனுக்கு காப்பி எடுத்துக் கொண்டு வந்த அம்மா “எல்லாரும் மூட் அவுட் ஆகி ஒவ்வொரு ரூமுல இருக்க, நான் மட்டும்தான் சந்தோஷமா ரூமுக்கு ரூம் சர்வ் பண்ணிட்டிருக்கேன்” என்று ஆரம்பித்து மகனுக்கு ஆறுதல் சொல்லும் காட்சியில் அவர் பேசும் வசனங்களும், அதை சுதிர் பாபு எதிர்கொள்ளும் விதமும், அவ்வளவு இயல்பு.

மொட்டை மாடியில் சுதிர்பாபுவும், அதிதியும் பேசும் காட்சி லைட்டான ஹைக்கூ. அக்காட்சியில் வரும் க்ளேசப் வசனங்கள் அட்டகாசம். அதற்கு பின்னணியாய் உறுத்தாத இசை இன்னும் சூப்பர்.


அனுபமா கிருஷ்ணமூர்த்தி, நரேஷ் என அனுபவமிக்க நடிகர்களின் இயல்பான பங்களிப்பு. அதிதி ராவின் பேசும் கண்கள். ரொம்பவுமே அடக்கி வாசிக்கப்பட்ட அண்டர்ப்ளே சுதிர்பாபு, அவ்வப்போது மனசாட்சியாய் அறிக்கைவிட்டுப் போகும் அவரின் நண்பர் ராகுல் ராமகிருஷ்ணா என நல்ல நடிகர் பட்டாளம். மிக இயல்பான வசனங்கள். உறுத்தாத பிண்ணனி இசை, இரைச்சல் இல்லாத விவேக்கின் இசை. அதீத க்ளோசப்களில் கூட கவிதையாய் வண்ணம் இழைக்கும் பி.சி.விந்தாவின் ஒளிப்பதிவு, படம் நெடுக இழையோடும் இயல்பான நகைச்சுவை போன்ற பல ப்ளஸ்கள் இருந்தாலும், நாடகத்தனமான நரேஷின் கேரக்டர். சினிமா காட்சிகள். ஹாலிவுட் டெம்ப்ளேட் க்ளைமேக்ஸ் போன்றவை லேசான உறுத்தல்தான். பட். .ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பீல் குட் படம் பார்த்த திருப்தி. 

Feb 12, 2019

Lust Stories

Lust Stories
செக்ஸுவல் உணர்வு சார்ந்த கதைகளை தமிழில் எடுத்தால் பெரும்பாலும் ஹிப்போக்கிரேட் ஷோஷியல் மீடியா சூழ் உலகில் அவைகளை பிட்டுப்படங்களாய் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் உலக சினிமாவென்றால் அதே பிட்டுக் காட்சிகள் பிரஸ்தாபிக்கப்படும். இந்தியாவின் பெரும் மக்கள் தொகையை டார்கெட் செய்து இரண்டு வெளிநாட்டு ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களான நெட்ப்ளிக்ஸும், அமேசானும்  தங்களது கண்டெண்டுகளால் இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது.

பெரிய நடிகர்கள் ஃபீல் குட் படங்களில் நடிப்பதில்லை. சிறிய நடிகர்கள் நடித்த ஃபீல் குட் படங்கள் ஓடுவதில்லை. ரெண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இந்திய சினிமாவுக்கு இந்த ப்ளாட்பார்மகள் பெரும் வரப்பிரசாதம். லவ் பர் ஸ்கொயர் ஃபீட், போன்ற படங்கள் மூலம் நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினல் படங்கள் சீரீஸை ஆரம்பித்திருக்க, இன்னொரு பக்கம் அமேசான், தமிழ், தெலுங்கு நடிகர்களை வைத்து கிட்டட்தட்ட மசாலா படம் லெவலுக்கு படங்களையும் சீரீஸ்களையும் இறக்குகிறது.

நெட்ப்ளிக்ஸ் தேர்ந்த கலைஞர்களுடன் கைகோர்த்து சமீபத்தில் அளித்திருக்கும் ஒரிஜினல் படம் தான் இந்த “லஸ்ட் ஸ்டோரீஸ்”. காமம் சார்ந்த கதைகள். அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபங்கர் பனர்ஜி, கடேசியாய் கரன் ஜோஹர் ஆகிய நால்வரும் இயக்கிய நான்கு காமம், வாழ்க்கை சார்ந்த படங்கள் வரிசைக் கட்டியிருக்கிறது.

அனுராக்கின் படம் வழக்கம் போல கொஞ்சம் மனோதத்துவம் சார்ந்து, உறவுகளில் உள்ள சிக்கல், அதுவும் டீச்சர், மாணவனிடையே உருவான செக்ஸுவல் உறவு. அதன் சார்ப்பாய் எழும் மனவெழுச்சி ப்ரச்சனைகள், கொஞ்சம் டாக்குமெண்டரித்தனமாகவும், அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் கையாண்ட கதை. க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் நச். வசனங்களும், ராதிகா ஆஃப்தேவின் நடிப்பும் வழக்கம் போல் ஆசம்.

ஜோயா அக்தரின் படம் ஆரம்பிக்கும் போதே தீயாய் ஒரு உடலுறவில் ஆரம்பிக்கிறது. வீட்டு வேலைக்காரிக்கும், முதலாளி இளைஞனுக்குமிடையே நடக்கிறது. நெருக்கமாய் பேசிக் கொள்கிறார்கள். சில நாட்கள் பிறகு அவனுடய பெற்றோர்கள் வருகிறார்கள். ஒழுக்கமான பையனாய் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அவனுக்கு பெண் பார்க்கிறார்கள். அவளுடனான தனிப் பேச்சு அந்த வீட்டிலேயே நடக்கிறது. வேலைக்காரியின் மனம் படும் அவதிதான் படம். அவளுக்கு தெரியும் அவனை அடைய முடியாது என்று. நெருக்கமும், காமமும், கொடுத்த உறவு அதை இழக்க விரும்பாது அலைபாய்கிறது. அதிலிருந்து எப்படி வெளி வருகிறாள் என்பதுதான் இவரது கதை. பூமிபட்னெகரின் நடிப்பு சிறப்பு.

திபங்கர் பேனர்ஜியின் கதை ரொம்பவே மெச்சூர்ட். இரண்டு குழந்தைகளுக்கு தாயான மனிஷா கொய்ராஜா. ஸ்விம் ஸூட்டில் பீச்சில் குளித்து எழுந்து கரையில் காத்திருப்பவரிடம் நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா போல என்கிறார் இவர். கரையில் இருப்பவர் அவளது கணவனில்லை. கணவனின் நண்பன். இவளுக்கு கல்லூரி நண்பன். கல்லூரி காலத்தில் இவள் மேல் காதல் கொண்டிருந்து வெளியே சொல்லாதவன். சொல்லிய சல்மானுக்கு மனைவியாகி, ரெண்டு குழந்தைகளுக்கு தாயாகி, குடும்ப வாழ்க்கையில் தன்னிறைவு இல்லாமல், தனக்கென அடையாளம் இல்லாமல், ஆணாதிக்க அழுத்தத்தில் வாழ்கிறவள். பழைய நண்பனான சுதிருடன் உறவு. அது அவளது கணவனுக்கு சந்தேகத்தை வரவழைக்க, இதை சரி செய்ய அவனையும், சுதிருடன் இருக்கும் பீச் ஹவுஸுக்கு அழைக்கிறாள். தனக்கும் சுதீருக்குமிடையே ஆன உறவை சொல்லுகிறாள் பின்பு என்ன நடந்தது என்பது கதை. மிக அழகாய் இக்கதையை கையாண்டிருக்கிறார் இயக்குனர் திபங்கர் பேனர்ஜி.  மனிஷாவின் க்ளைமேக்ஸ் ரியாக்‌ஷன் ஒன்று போதும் அவரது நடிப்பை பற்றி சிலாகிக்க. கார்பரேட் மனிதர்களின் காமம்.

மொத்த படத்திலேயே கொஞ்சம் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட சீரியஸ் கதை கரண் ஜோகரின் கதை தான். திருமணம் என்பது குழந்தைப் பிறப்புக்கு மட்டுமே என்ற குடும்பத்தில் பெண்ணின் செக்ஸுவல் ஆசை என்பது மறுத்தளிக்கப்படுகிற நிலையில். அவள் தோழியின் வைப்பரேட்டரை நாடுகிறாள். நாடிய அந்த நாளில் நடக்கும் விஷயங்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவையாய் இருந்தாலும், செம்ம இண்ட்ரஸ்டிங்.
இந்த நான்கு கதைகளும் பெண், அவளின் தேவை, அவளது காமம் சார்ந்த தேடல். அதன் சார்ந்த பிரச்சனைகள். இதை அணுகும் ஆண்களின் மனப்பான்மை. ஏன் பெண்களின் மனப்பான்மை கூட பேசுகிறது. என்ன எல்லாவற்றையும் மேலோட்டமாய் பேசுகிறது. சென்ஸார் உள்ள சினிமாவில் கூட புரட்சியாய் காட்சி வைப்பவர்கள் இதில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இன்னும் கொஞ்சம் ஆழமாய் பேசியிருக்கலாம். படமாக்கியிருக்கலாம். பட்.. நல்ல முயற்சி. இவைகள் தமிழில் வருவது எப்போது என்று வழக்கம் போல காத்திருப்போம்.


Feb 1, 2019

பஞ்சாட்சரம்


அந்த பரந்த மைதானத்தின் நடுவில் ஒரு சிறிய மேடை அமைத்திருந்தார்கள். மேடையின் நடுவில் ஒரு கழு மரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, சுற்றியிருந்த மக்களிடையே பெருத்த அமைதி நிலவியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்த அமைதிக்கு பின் ஒரு பெரிய அழுத்தமிருப்பதை அவர்களின் மெளனம் வெளிப்படுத்தியது. அவர்களின் மெளனத்தை கலைப்பது போல குதிரைப்படை வீரர்கள் புழுதி பறக்க உட்புக, கடைசி குதிரையுடன் ஒரு உருவம் கயிற்றால் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்பட்டது. கூட்டத்தில் மெல்ல ஒரு ஜாக்கிரதை உணர்வுடனான ஒரு பரிதாபக் கூக்குரல் ஏறி அடங்கியது.

முன்னால் படை நடத்தி வந்தவன் கூட்டத்தைப் பார்த்து தேவையேயில்லாமல் “அமைதி.. அமைதி” என்று கத்தினான். அவன் போட்ட கூச்சல் தான் அங்கிருந்த நிசப்தத்தை கலைத்தது. குதிரையில் கட்டி வரப்பட்ட உருவத்திடமிருந்து எந்த விதமான் அசைவும் இல்லை. உடலெல்லாம் ரத்த சகதியாய் இருந்தது. அவன் அணிந்திருந்த அங்கி வித்யாசமாய் இருந்தது. கூட்டத்தை கலைத்துக் கொண்டு இன்னொரு படை வீரன் வேகமாய் வர, பின்னால் ஒரு சாரட்டு வண்டி அங்கே வந்து நின்றது. வண்டியில் இருந்த குதிரையோட்டி, அதீதமான பவ்யத்துடன் வண்டியை திறந்து விட்டான். உள்ளிருந்திருந்து ஒரு வெண் தாடி பெரியவர் இறங்கினார். முகம்  முழுவதும் இருந்த தாடியை மீறி கண்களில் ஒரு பளபளப்பும் அதிகாரமும் இருந்தது. நெற்றியில் தகதகத்த திருநீறு அவரின் முகத்திற்கு மேலும் ஒரு களையை கொடுத்தது. தொண்டையை கனைத்தபடி ”எனதருமை மக்களுக்கு இந்த ராஜகுருவின் ஆசீர்வாதம் உரித்தாகுக. இதோ இங்கே குதிரையின் சேணங்களில் பூட்டப்பட்டு இழுத்து வரப்பட்டிருக்கும் இந்த தேசத் துரோகியின் தண்டனை நிறைவேற்றுவதற்காக
, நம் அரசனின் ஆணையை நிறைவேற்றுவதற்காக இங்கு வந்திருக்கிறேன்.” என்றதும் கூட்டத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டது. ராஜகுரு அருகில் இருந்த குதிரை வீரனை திரும்பிப் பார்க்க, அவன் குதிரையின் பின்பக்கத்தில் “சுளீர்” என பிரம்பால் அடித்து, கூட்ட்த்தை நோக்கி விரைவாய் ஒரு சுற்றி சுற்ற ஆரம்பிக்க, சலசலப்பு சட்டென அணைந்து ஊசி விழுந்தால் கூட ஒலி உண்டாகும் அளவிற்கான அமைதி உண்டானது.

அங்கி மனிதனை கயிற்றிலிருந்து விடுவித்து எழுப்பி, நிற்க வைக்கப்பட்டான். அவனால் நிற்க கூட முடியவில்லை. சரிந்து சரிந்து விழுந்து கொண்டேயிருந்தான். கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில் இருந்தவனின் தலையில் குளிர்ந்த நீர் வேகமாய் ஊற்றப்பட, அரை மயக்கத்திலிருந்து விழித்தான். அவன் விழித்து தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஒரு பார்வை பார்த்ததுதான் தாமதம். அருகிலிருந்து வீரனொருவன் தன் சாட்டையை சுழற்றி அவன் மேல் வீச, அவ்வளவு பெரிய மைதானத்தில் சாட்டை உடலில் படும் ‘சுளீர்’ ஒலி தெளிவாகக் கேட்டது. அங்கி மனிதன் வலி தாளாமல் கத்தும் ஒலி வெளிவராமல் ஒரு பெரிய ஓலமாய் எதிரொலித்தது. அதற்கு காரணம் அவனின் வாயில் அடைக்கப்பட்டிருந்த துணி.

ராஜகுரு கண்களில் ஒரு விதமான குரூரம் தாண்டவமாடியது. “ என்னே நெஞ்சழுத்தம் இவனுக்கு? இவ்வளவு தண்டனைகளுக்கு பிறகும் அந்த பஞ்சாட்சரத்தை சொல்ல விழைய என்ன தைரியம் இருக்க வேண்டும்?. எனதருமை மக்களே.. இவன் யாரென்று உங்களுக்கு தெரியும். இவன் ஒரு பித்தன். மக்களின் மனதில் உட்புகுந்து மாற்றும் ஒரு மாயாவிச்சித்தன். மனநிலை பிழன்றவன். உங்களுக்கே தெரியும். நாம் தழுவும் சமயம் எதுவென. அப்படியிருக்க நமக்கு பிடிக்காத பஞ்சாட்சரத்தை உச்சரிப்பது எவ்வளவு கேடானது என்பதும், அதை உச்சரித்தால் அதற்கான தண்டனை என்ன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இச்சமயத்தில்  இந்த பித்தன், மூடன், நிர்மூலன் உங்களிடம் திரும்பத் திரும்ப ஒரு பஞ்சாட்சரத்தை சொல்லி, அதிலும் நம் உலகம் அறியாத மொழியில் ஒரு பஞ்சாட்சரத்தை சொல்லி உங்கள் மூளையை மழுங்கச் செய்திருக்கிறான்.

பஞ்சாட்சரத்தை உபயோகிப்பதையே தேசத்துரோகமாய் கருதப்படும் நம் நாட்டில் இருக்கிற பிரச்சனை போதாதென்று புதியதாய் நமக்கு தெரியாத, புரியாத ஒரு புதிய பஞ்சாட்சரத்தை சொல்லி அதை பரப்புவதை எப்படி நம் மன்னர் பொறுத்துக் கொள்ள முடியும்?. உலகின் ஒரே ஒரு உயர்ந்த சமயமான நம் சமயத்தில் சொல்லாத, நிகழ்த்தாத ஆச்சர்யங்களையா? இவன் சொல்லும் புரியாத பஞ்சாட்சரம் செய்யப் போகிறது?. இவனைப் போன்ற ஆட்களுக்கு தகுந்த தண்டனையை கொடுத்தால் தான் இம்மாதிரியான நிர்மூடர்கள் மீண்டும் கிளர்ந்தெழ மாட்டார்கள்.  மக்களிடையேயும் தேவையில்லாத ஒரு குழப்பம் உருவாகாமல் இருக்கும். இதை நன்கறிந்த நம் அரசர் தீர்க்கமாய் யோசித்து இட்ட தண்டனைதான் இந்த கழுவேற்றும் தண்டனை. கழுவேற்றிய நொடியிலிருந்து அவனுக்கு கிடைக்கப் போகும் வலியின் உச்சம் அவன் தன்னை தானே உணர்ந்து கொள்ள, தான் செய்த தவறின் பலனை உணர்ந்து கொள்ள, அவனின் ஊழை களைய  ஒரு வாய்ப்பாக அமையும்.”  என்றார்.

ராஜகுருவின் பேச்சுக்கு மறுபேச்சென்பது அரசரிடமே இல்லை என்பது மக்களுக்கு தெரியுமாதலால் கூட்டத்தில் ஏதும் சலசலப்பில்லை. மெல்ல கூட்ட்த்தை விலக்கிக் கொண்டு ஒரு தேர் வர, மக்கள் தங்களையறியாமல் குனிந்து வணக்கம் செலுத்தினர். அரசன் தேரினிலிருந்து இறங்கி மெல்ல மக்களைப் பார்த்து கையசைத்து, ராஜகுருவை பார்த்தார். ராஜகுருவின் பார்வையில் எல்லாம் தயார் என்ற பதிலிருக்க, அரசன் நடக்கட்டும் என்பது போல தலையாட்டினான். அங்கியணிந்தவனை இரண்டு வீரர்கள் தோள் பிடித்து தூக்கி நிறுத்தினார்கள். அரசன் அவனை பார்த்து “அரச நிந்தனைக்கு உட்பட்டால் இதுதான் பதில். உன் பஞ்சாட்சரம் உன்னை காப்பாற்றட்டும்” என்று சொல்லி பலமாய் சிரித்தார். அந்த சிரிப்பின் எக்காளம் அந்த மைதானமெங்கும் எதிரொலித்தது.

வீரர்கள் அவனை தரையில் உடல் தேய்த்தபடி இழுத்து சென்று கழுவேற்றும் மேடை மீது போட்டார்கள். அவன் ஏற்கனவே அரைமயக்க நிலையில் இருந்தான். அவன் மீது மீண்டுமொரு  குடம் குளிர்ந்த நீர் ஊற்றப்பட சிறிதும் சலனமில்லை. ஒரு வேளை இறந்துவிட்டனோ? என்ற சந்தேகத்துடன் மூக்கின் அருகில் மூச்சிருக்கிறதா? என்று கை வைத்து சோதித்தான் வீரன்.  இருக்கிறது என்பது போல பக்கத்திலிருந்தவனைப் பார்த்து சிரித்துவிட்டு, மேலும் ஒரு குடம் தண்ணீரை எடுத்து முகத்தில் மிகுந்த வேகத்தில் ஊற்றினான். தண்ணீரின் வேகம் தாங்காமல் மூச்சு திணறி “ஹாக்க்க்க்” என்ற சத்தத்துடன் சிலிர்த்தான். வீரர்கள் முகத்தில் சிறிய மகிழ்ச்சியுடன். அவனை அப்படியே மேலேழுப்பி, அவன் பெரிய அங்கியை களைந்து அம்மணமாக்கினார்கள். கூட்டத்தில் இருந்த பெண்கள் எல்லாம் தலைகுனிந்து கொள்ள, ஆண்களின் கண்களில் கண்ணீர் மல்கிக் கொண்டிருந்தது.

அம்மணமாக்கிய அவனின் கைகள் பின்பக்கமாய் கட்டப்பட்டது. வீரர்கள் கழுமரத்தின் கூர் முனையை அவனின் ஆசனவாய் நுனிக்கு சரியாய் பொருத்தி உட்கார வைத்தார்கள். கூட்டத்தில் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்ற ஒலி ஒரு சேர ஒலிக்க, ஒரு மாபெரும் பெரு நாகத்தின் மூச்சுக்காற்றைப் போல எழும்பி அடங்கிய நேரத்தில், அங்கிக்காரனின் உடல் கனத்தினால்  உட்கார்ந்த மாத்திரத்தில் கழுவின் கூர் முனை அடிவயிற்றின் முனையில் குத்தியிருக்க வேண்டும். வலி தாங்காமல் அவன் வாயிலிருந்த துணியை மீறி ஒவ்வொரு வார்த்தையாய் சொல்ல ஆரம்பிக்க, அரசனுக்கு பயந்து ஏதும் பேசாமலிருந்த மக்கள் இப்போது முழுவதும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவனுடன் சேர்ந்து அந்த பஞ்சாட்சரத்தை பெருங்குரலெடுத்து ஆவேசமாய் உச்சரிக்க ஆரம்பித்தார்கள்.
J…..E….S…..U…..S” 

தமிழர்கள் எமோஷனல் க்ரூக்ஸா?


தமிழர்கள் எமோஷனல் க்ரூக்ஸா

ஒரு ரெண்டு நாள் ஷோசியல் மீடியாவில் இல்லாமல் இருந்தா தான் தெரியும் தேவையில்லாம எதுக்கெல்லாம் நாம பொங்கிட்டிருக்கோம். அதைப் பத்தி மக்கள் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருக்காங்கன்னு என்றதுக்கு நண்பர் என்னை சங்கிக்களில் ஒருவராய் அடையாளம் கண்டு கொண்டதாய் சொல்லிப் போனார்.

இப்படித்தான் அறம் படத்தை பார்த்துவிட்டு வந்த போது. நண்பர்கள் படம் எப்படி என கேட்க” ஓகே” என்றதுக்கு ஒரு நல்ல படம் வந்தா அதைக் கொண்டாடுங்க.. அதை விட்டுட்டு நொட்டை சொல்லாதீங்க என்றார். நல்ல படமாய் இருந்தா நிச்சயம் சொல்லுவேன் நண்பா என்றதுக்கு பேஸ்புக்கைப் பாருங்க எப்படி கொண்டாடுறாங்க என்று உதாரணம் காட்டினார். ஆகாயத்தில ராக்கெட்டை பறக்க விடற நாம பூமியில குழியில விழுந்த குழந்தையை காப்பாற்ற முடியலை இந்த அரசாங்கத்தினால.. ஏழைகள் உயிர்னா அவங்களுக்கு அவ்வளவு ஏளனம்? என ஆரம்பித்து சாதி, அடையாளங்களோடு இணைத்து வீர ஆவேசமாய் பேசினார்.

நான் அமைதியாய் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “நயந்தாரா மட்டும் அந்த படத்துல இல்லைன்னா இவ்வளவு பெரிய அங்கீகாரம் இல்லை.  நான் கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுறீங்களா?” என்றேன். வேகமாய் தலையசைத்தார்.

“படத்துல பையன் குழிக்குள்ள வீழ்ந்துட்டானா?. ரோடே சரியில்லாத ஊருக்குள்ள ஆம்புலன்ஸை வரவழைச்சு மெடிக்கல் ஹெல்ப் கொண்டாந்தாங்களா?”

“ஆமாம்”

“போலீஸ் வந்துச்சா?”

“ஆமா”

“வி.ஏ.ஓ, டாக்டர்ஸ் டீம் எல்லாம் வந்தாங்களா?’

“ஆமாம்”

“ஏரியா எம்.எல்.ஏ என்னதான் மிரட்ட வந்தாலும், அங்கே இருந்தாரா? அவரு எங்கயாச்சும் அந்த குழந்தைய காப்பாத்துற முயற்சிய தடுத்தாரா?’

“இல்லை”

“ நேஷனல் டிஸாஸ்டர் போர்ஸ் வந்துச்சா?”

“ஆமா”

”எல்லாத்துக்கும் மேல மாவட்ட கலெக்டரே அங்கே நின்னு வேலை பார்த்தாங்களா?”

“ஆமா”

“குழிய போட்ட லோக்கல் அரசியல்வாதியை எம்.எல்.ஏ வை எதிர்த்து கைது பண்ணாங்களா? கலெக்டர்”

“ஆமா”

“இதுக்கு மேல ஒரு அரசாங்கம் ஒரு குழந்தைய காப்பாத்த என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க?”

“இல்லை.. அங்கே இருக்குற ஏழை பாழைங்க உயிக்கு என்ன மதிப்பு தராங்க?”

”அவங்க எல்லாம் முயற்சியையும் பண்ணிட்டிருக்கும் போது அவங்க உணர்ச்சிவசப்பட்டு திட்டுறதும், சம்பந்தப்பட்ட குழந்தையோட அம்மா உடம்பு சரியில்லாம போறப்ப அங்க வந்து என் பொண்டாட்டிய் நான் தூக்கிட்டு போறேன்கிறது மக்கள் கொதிக்கிறது எல்லாம் எல்லாம் அங்க நடக்குற குழந்தையை காப்பாற்றும் முயற்சிக்கு இடையூறு செய்யுறாங்களேனுதான் எனக்கு தோணுது. ஒரு பிரச்சனைக்கு எதிர் பிரச்சனை கதைக்கு தேவை அதுதான் எமோஷனலா படத்தோட நம்மை இன்னும் கட்டிப்போடும். ஆனால் எனக்கு படம் பார்க்கும் போது அவங்களோட காட்சிகள் இடையூறாத்தான் இருந்துச்சே தவிர எமோஷனல் ஆக மாறலை”

“இல்லை ஒரு குழந்தை உயிர காப்பாத்த வெறும் கயிற வச்சி ட்ரை பண்னுறது எல்லாம் எவ்வளவு அராஜகம். ராக்கெட் விட மட்டும் எத்தனை கோடி செலவு பண்றோம்”

“அலோ.. எல்லா ஊர்லேயும் ஏன் எல்லா நாட்டுலேயும் வீடியோ ரெபரென்ஸ் வச்சி பார்த்தா அவங்க எல்லாரும் இதே போல பக்கத்துல பெரிய டனல் செய்து அதன் வழியாத்தான் குழியில விழுந்த குழந்தைகளை காப்பாத்துறாங்க. அதான் இதுக்கு இருக்குற ஒரே வழிமுறை.. குழிக்குள்ள ஆக்சிஜன், கேமரா லைட் எல்லாம் டெக்னாலஜி வளர்ச்சி.”

“இல்லையே நம்மூர்ல ஒருத்தரு அதுக்கு மிஷின் கண்டுபிடிச்சிருக்கான். அதை யூஸ் பண்ணலாம் இல்லை”

“அப்படி ஒரு மிஷின் கண்டுப்டிச்சதை நம்ம அரசாங்கதாம் கண்டுக்கலை. படத்திலேயாவது அத பயன்படுத்தி காப்பாத்துறதா காட்டியிருக்கலாம் இல்லை. ஏன் காட்டுலைன்னா.. அத காட்டினா நயந்தாரா இன்னொரு பையன உள்ள அனுப்பினதை வச்சி அரசியல் பண்ணத, அவங்க ஹைஸ்பீடுல நடந்து வர்றத காட்ட முடியாது. உள் நீச்சல் அடிச்சி பழகின பையன பயன்படுத்தி எமோஷன் ஏத்த முடியாது. சினிமாவுக்கான க்ளைமேக்ஸா இருக்காது. அப்படின்னுதானே அதை பயன்படுத்தல.

“இல்லியே அவரு ஊருல இல்லைன்னு டயலாக் வருமே”

‘சரி.. அட்லீஸ்ட் படம் பூரா அரசாங்கட்தை குறை சொல்லியிருக்காங்களே. அரை மணி நேரத்துக்கு மேல குழந்தை விழுந்ததை தவிர இயக்குனர் பல அரசியல்களை முன் வைச்சு பேசிக்கிட்டிருக்கிறா போல டிவி நீயூஸ் சேனல் டிஸ்கஷன் வருதே அதுலேயாவது அந்த பையன் கண்டுபிடிச்ச மிஷின் எப்படி வேலை செய்யும், அதை ஏன் அரசாங்க பயன்படுத்தலை? அதை ப்பத்தி பேசியிருக்கலாம் இல்லை. இவ்வளவு பெரிய கேன்வாஸ் கிடைச்சிருக்கு. அதுல அந்த கண்டுபிடிப்பாளரை காட்ட மனசு இல்லையா?. காட்டினா.. ஏன் அதை பயன்படுத்தலைங்கிற கேள்வி அதிகமாகிரும். எமோஷன் போயிரும். இத்தனை பெரிய சினிமாவுல காட்டுற வாய்ப்பு இருந்து நம்மளே காட்டாத போது எப்போதும் மெத்தனமாவே இருக்கும் அரசாங்க எந்திரம் எப்படி கண்டுக்கும்னு நினைக்கிறீங்க?’

நண்பர் அமைதியாய் இருந்தார்.

”அரசாங்கத்தை எதிர்த்து படம் பண்ணா அதுவும் எமோஷனலா படம் பண்ணா நம்மூர்ல எப்பவும் ஒர்க்கவுட் ஆகும். அதுவும் இப்ப நடக்குற ஆட்சிக்கு செம்மையா ஒர்க்கவுட் ஆகும். ஸோ.. உணர்ச்சிவசப்படும் தமிழர்களின் மனசை மட்டுமே குறிவைச்சு, படம் பண்ணிட்டா போதுமா?”

நண்பர் மேலும் அமைதியா என்னை பார்த்துவிட்டு “தமிழர்களின் வாழ்வுரிமை, அடக்கப்பட்டோரின் எழுச்சி..இதையெல்லாம் பேசின படம். “

“நண்பா.. பேஸ்புக்கு மூலமா படம் பாக்காதவன் தான் படத்தை ஹிட் பண்றான் அவனைப் போய் கேளுங்க. .படத்த ஏன் பார்த்தேன்னு? நயந்தாரா நடிக்குது. பாவம் அந்த புள்ள குழிக்குள்ள வீழ்ந்திருச்சு ஒரே படப்படப்பா ஆயிருச்சு. என்னால ஃபீரியா மூச்சு விட முடியலை. அழுத்துட்டே இருந்தேன் அந்த குழந்தைய காப்பாத்துற வரைக்கும், என்னால படம் பார்க்க முடியலை. அவ்வளவு எமோஷனல் ஆயிட்டேன். இப்படித்தான் அவங்களோட விமர்சனமா இருக்கும். எல்லாத்துக்கு ஜாதி, எதிர் அரசியல், கோட்பாடு, அது இதுன்னு சொல்லி, சும்மாவாச்சும் பி.பி ஏத்திக்கிட்டு அலையாதீங்க. சமீபத்துல ஒரு ஆய்வுல இளம் வயதினர் பலருக்கு இதய பிரச்சனை வரதுக்கு காரணம் சோஷியல் நெட்வொர்க்தானு கண்டு பிடிச்சிருக்காங்களாம். எப்பவுமே அங்கே பொங்கிட்டிருக்கிறதுனால  எமோஷனல் கனெக்ட் தான் படம். அது நல்ல படமாய் இருக்கணும்ங்கிற அவசியம் இல்லை.“

”என்ன இருந்தாலும் ராக்கெட் விட டெக்னாலஜி யுஸ் பண்ற நம்ம நாட்டுல.. பூமிக்கு அடியில.. “ சிரித்துக் கொண்டிருந்தேன்.