Thottal Thodarum

Feb 20, 2019

Glitch – உயிர்தெழுதல்- web series review

Glitch – உயிர்தெழுதல்
சினிமாவில் சொன்னால் நம்ப முடியாத சில கதைகளை சீரீஸில் சொன்னால் சுவாரஸ்யப்படுத்திவிட முடியும். அதிலும் குறிப்பாக அமானுஷ்ய கதைகள். அம்மாதிரியான கதைகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்குமிடம் வெப் சீரீஸ்கள். சமீபத்தில் பார்த்த நெட்ப்ளிக்ஸ் சீரிஸான “க்ளிட்ஜ்” கதை படு சுவாரஸ்யம்.

முதல் எபிசோடிலேயே நம்ம கட்டிப் போட ஆரம்பித்துவிட்டது. ஒரு சுடுகாடு. நடு ராத்திரி. கல்லரை ஒவ்வொன்றாய் விரிசல் கொண்டு பிளக்க ஆரம்பிக்கிறது. மெல்ல அதிலிருந்து நிர்வாணமான மனிதர்கள் வெளியே வருகிறார்கள். வந்தவர்கள் உடல் முழுவதும் மண் அப்பியிருக்க, ஒன்றும் புரியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் ஆளாளுக்கு மலங்க, மலங்க விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த சிறுவன் ஒருவன் அதை படம் பிடிக்கிறான். போலீஸுக்கு தகவல் சொல்கிறான். அங்கு வரும் போலீஸ் இவர்கள் எல்லாரும் யார் என்ன என்று விசாரிக்க, அவர்களால் ஏதும் பதில் சொல்ல முடியவில்லை. அனைவருக்குமான முதல் உதவிகளை செய்ய அருகில் உள்ள லோக்கல் கவர்மெண்ட் ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கிறான் போலீஸ் அதிகாரியான ஜார்ஜ்.

அனைவரையும் அழைத்துப் போய் ஆஸ்பிட்டலில் செக் செய்யும் போதுதான் தெரிகிறது அனைவரும் இறந்தவர்கள் என்று. அதுவும் ஒவ்வொரு காலகட்டத்தில் அந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரியான ஜார்ஜின் மனைவி எம்மாவும் இருக்க, அதிர்ச்சியாகிறான். கேன்சரினால் அவள் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகி, வேறொரு பெண்ணை திருமணம் செய்து அவள் கர்பமாக இருக்கும் சூழ்நிலையில் மனைவி உயிருடன் வந்ததைப் பற்றி சந்தோஷப்படுவதா, இல்லை கலவரமடைவதா என்று குழம்பித் தவிக்கிறான்.

வந்தவர்களில் ஒருத்திக்கு தான் கொல்லப்பட்டது மட்டுமே நியாபகம் இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன் இறந்திருக்க, அதன் நியாபகம் வர, வர, அதை நோக்கி போகிறாள். இன்னொருத்தி அழகிய குடும்பத்தலைவி. தன் கணவனின் அடி தடி எல்லாவற்றையும் தாண்டி தன் அழகு பெண் குழந்தையையும் குடும்பத்தையும் நேசிப்பவள் நாற்பது ஐம்பது வருடத்துக்கு முன் இறந்தவள். அவள்தன் குடும்பத்தை தேட ஆரமிக்கிறாள். இன்னொருவனுக்கு ஆங்கிலமே தெரியவில்லை. இத்தாலி மொழி பேசுகிறான். எழுபது என்பது வருடங்களுக்கு முன் இறந்தவன். டேட்டாபேஸை வைத்து அவனின் அண்ணன் ஒருவர் இன்னமும் ஊரின் எல்லையில் வாழ்ந்து கொண்டிருப்பதாய் தெரிய வர, அவனை அங்கு அழைத்துப் போனால் எப்படி இவன் இறந்தான் என்றும், இவன் மீண்டும் எப்படி உயிர்பெற்று வரக்காரணம் ஏதுவாய் இருக்குமென்று நினைத்து அவனை அழைத்துப் போகிறான் ஜார்ஜ். ஆனா ஊர் எல்லையில் உள்ள ஒரு பாலத்தை தாண்டும் முன்பு அவன் எரிந்து பஸ்மமாகிறான்.

இப்படி உயிர் பிழைத்த எல்லாரையும் வெளியுலகத்திற்கு தெரியாமல் ஹாஸ்பிட்டலிலேயே தங்க வைத்து அவர்களின் உயிர்தெழுதலின் காரணத்தை கண்டு பிடிக்க, உத்வுகிறாள் டாக்டர் எலிஷா. அதே நேரத்தில் ஜார்ஜின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட உடன் வேலை செய்யும் போலீஸ் ஆபீஸர் தனியாய் விசாரணை செய்ய முயல, அவன் ஒரு விபத்தில் இறக்கிறான். இறந்தவன் உடனடியாய் உயிர் பெற்று, தான் ஏன் உயிர் பெற்றோம் என்று காரணத்தை தேடியலைகிறவர்களை கொல்ல ஆரம்பிக்கிறான்.

ஜார்ஜிடம் மாட்டாத இன்னொரு மனிதனும் ஊருக்குள் புகுந்து விடுகிறான். அவன் தன்னுடய சிலையை பார்க்கிறான். நூறு வருடங்களுக்கு முன் தான் தான் அந்த நகரின் மேயர் என்று எழுதியிருக்க, அவனை பாலோ செய்யும் சிறுவன் அவனுக்கு உதவுகிறான். தான் எப்படி உயிருடன் வந்தேன் என்று புரியாமல் காரணத்தை  தேட ஆரம்பிக்கிறார். அப்படி தேடும் போது கிடைக்கும் அனுபவங்களில் அவருக்கு தெரிய வரும் விஷயம் ஆச்சர்யமான ஒன்று. தான் இயல்பாய் சாகவில்லை என்பதும், தன்னை கொன்றது தன் குடும்பமே என்று அறிகிறார். ஏன் கொன்றார்கள் என்று தேடும் போதுதான் புரிகிறது. அவருக்கும் அவருடய வேலையாளான ஒரு கறுப்பின பெண்ணுக்குமிடையே ஆன உறவும், காதலும். அதனால் அவள் கர்பமாக இருக்க, சொத்துக்கு பிரச்சனை வருமென்று தகப்பனையே கொன்று புதைத்திருக்கிறார்கள் என்று புரிபடுகிறது. உதவும் சிறுவன் தான் தன் பேரன் என்று புரிந்து கொண்டு சொத்தை கைப்பற்றி பேரனுக்கு கொடுக்க் நினைக்கிறார்.

இவர்கள் எல்லோரும் ஊரை விட்டு வெளியே போக முடியாது. போக நினைத்தால் எல்லா தாண்டியதும் பஸ்மமாகி விட வேண்டியதுதான். இவர்களுக்கு என்று ஸ்பெஷல் பவர் ஏதும் கிடையாது. சாதாரன மனிதர்களுக்கு இருக்கும் அதே சக்தி மட்டுமே. தாங்கள் ஏன் உயிர் பெற்றோம். தங்கள் சாவுக்கான காரணம். தன் மரணத்திற்கு பிறகு உடனிருந்தவர்களின் இயல்பு வாழ்க்கை வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாமை. அதற்கு எதிர் நடவடிக்கைகள். இயற்கைக்கு மாறாய் நடக்கும் விஷயங்களை அழிக்க உருவாகும் வில்லன். என செம்ம எமோஷனல் சீரீஸ்.
இப்படியாக எப்படி சாத்தியம் என்பதற்கு இவர்கள் இக்கதையில் கொடுத்திருக்கும் விளக்கம் கொஞ்சம் டகால்டியாயிருந்தாலும், சீரீஸ் நெடுக கொடுக்கப்படும் திருப்பங்கள், கதை சொல்லும் முறை எல்லாமே சுவாரஸ்யம். வாய்ப்பிருப்பவர்கள் பார்க்கக் கடவது. இல்லையேல் உயிர்தெழுவிக்க படுவீர்கள் 



Post a Comment

No comments: