தமிழ்
சினிமாவை தற்போதைய வகைப்படி ரெண்டாக பிரிக்கலாம். சோஷியல் மீடியாவுக்கு முன்/ சோஷியல்
மீடியாவுக்கு பின் என. ஆரண்ய காண்டம் திரைப்படம் இண்டர்நெட் 1 ஜிபி 300 ரூபாய்க்கு
விற்றுக் கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. அதனால் இத்தனை விந்தோதுதல்கள் இல்லாமல்,
உனக்கு தெரியலைன்னா உன் பொண்டாட்டி பத்தினி இல்லை என்று சபிக்காமல், சரியான வகையில் எடுத்துக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்ட
படம் தான். அது தான் ஓடவேயில்லையே அப்புறம் என்ன கொண்டாடப்பட்டது என்று சொல்கிறீர்கள்
என்றால் கொண்டாட்டம் என்பது அதன் வியாபாரத்தை வைத்து அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
லெளகீகத்தை வைத்து பேசினால் நிச்சயம் தயாரிப்பாளரின் டார்க் கதையைப் பற்றியும் பேச
வேண்டும். அது படைப்பிற்கு தேவையில்லாத ஒன்று.
சினிமாவாக
எனக்கு மிகவும் பிடித்த படம் ஆரண்ய காண்டம். தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில்
தமிழில் வெளிவந்த வித்யாசமான கதை சொல்லல் கொண்ட படம். குவாண்டின் படங்களில் வரும் நீண்ட ஷாட்கள். ஷார்பான
ப்ளாக் ஹூயூமர். சம்பந்தமேயில்லாத பேச்சு. பின்னணி பாடல்கள் வித்யாசமான மேக்கிங் என
அத்தனை விஷயங்களிலும் இன்ஸ்பயர் செய்த படம். அதைப் பற்றி என் வலைப்பூவில் விரிவாக எழுதியிருந்தேன். சரி நாம நிகழாமல் போன அற்புதம் குறித்து பேசுவோம்.
சூப்பர் டீலக்ஸை ஏன் நிகழாமல் போன அற்புதம் என்று சொல்ல வருகிறேன்?. காரணம் ஒன்றே ஒன்று தான் எங்கேயும் இக்கதைகள் எனக்குள் நிகழ வேண்டிய அந்த அற்புத தருணத்தை நிகழ்த்தவே இல்லை. அதுதான் காரணம்.
நான்கு
கதைகள். கல்லூரி காதலன். கட்டாயத் திருமணம். காதலி அவனை வீட்டுக்கு போன் பேச்சில் அழைக்கிறாள்.
பேச்சு உடலுறவாகிறது. இரண்டாவது முறை ட்ரை செய்ய அவள் விழையும் போது அவன் மார்படைத்து
இறக்கிறான். கள்ளக்காதலனோடு மாட்டினாலே பிரச்சனை இதில் அவன் மேட்டருக்கு பிறகு மர்டராகிப்
போயிருக்கும் பட்சத்தில் எத்தனை பிரச்சனை? கிட்டத்தட்ட வீட்டில் வந்து போகும் காதலனை துண்டு துண்டாய் பிரியாணி சமைத்துப் போடும் கதை ஒன்றை நலன் குமாரசாமி எழுதி, குமாரராஜா இயக்கிய X எனும் அந்தாலஜி படம் நியாபகம் வருகிறது.
ஏழரை
வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப் போன கணவன் திரும்ப வரப் போகிறான் என்று குடும்பமே
காத்துக் கொண்டிருக்கிறது. அவனது பிள்ளை உட்பட. அவன் அவளாக உருமாறி வருகிறான்.
நான்கு
பதின்பருவத்து பையன்கள். திருட்டுத்தனமாய் பிட்டு படம் பார்க்க வீட்டில் ப்ளான் போடுகிறார்கள்.
அதில் வரும் ஒர் பிட்டு படத்தில் பையன்களில் ஒருவனின் அம்மா நடித்திருக்க, டிவி உடைபடுகிறது.
ஒடைந்த டிவியை ரீப்ளேஸ் செய்ய வேண்டும்.
தனசேகரன்.
எத்தனையோ லட்சம் பேர் சுனாமியில் இறந்திருக்க, பிழைத்த ஒருவன். தான் ஆசீர்வதிக்கப்பட்டவன்
என்று நம்பி ஆசீர்வாதம் ஆனவன். இக்கதையில் வரும் இணைப்பு கேரக்டர்களான லீலா தான் பதின்பருவ
பையனின் பிட்டு பட அம்மா. அவனுடய தகப்பன் இந்த தனசேகரனான அற்புதம். மற்ற மூன்று கதையை
இணைக்கும் பெர்லினெனும் இன்ஸ்பெக்டர்.
அற்புதங்கள்
நிகழக்கூடிய கதைக்களன் தான். எங்கே நிகழாமல் போனது? அக்கதைகளில் வரும் நம்பகத்தன்மை
இன்மையால். அதற்கு முக்கிய காரணம் கதை நடக்கும் இடம். காலமென ஆரம்பிக்கும் முதல் குழப்பங்கள்.
கேட்டால் சென்னை என்பீர்கள் என்றால் சென்னையின் அடையாளங்கள் எதையாவது சொல்லுங்கள்.
காதலனுடனான
உறவு. மரணம். நிச்சயம் பதட்டத்தின் உச்சத்தில் முக்கியமாய் கணவனுக்கு தெரியாமல் மறைக்க
வேண்டிய கட்டாயம் வேம்பூவுக்கு இருக்கிறது. மறைக்கிறாள். ஆனால் புருஷன் ப்ரிட்ஜில்
பொணத்தைப் பார்த்ததும், வெறும் சத்தமான ஃபக் மட்டுமே அவனது அதிர்ச்சியாய் இருப்பதும்,
கீழ் வீட்டிலிருந்து வரும் உறவினர்கள் இருக்கும் போதே உடலை துண்டு துண்டாய் அறுக்க
பிணத்துடன் கறி வெட்டும் கத்தியோடு மிகச் சாதாரணமாய் கணவன் விவாதிப்பது ஏன்? எதற்கு?
எப்படி?. நிச்சயமாய் வீட்டிற்கு வந்த விருந்தாளி மரணம் அடைந்துவிட்டான் என்று போலீஸில்
சொன்னால் கூட கொலை கேஸாகாது. அது மட்டுமில்லாமல் கிரிமினலாய் யோசிக்க வேண்டிய கட்டாயம்
வேம்பூவுக்கு வேண்டுமானால் இருக்கலாம். கணவனுக்கு இருக்க வேண்டிய அவசியம்?.
மேட்டர்
பண்ணிட்டேன் என்று வேம்பூ சொல்லும் போது தியேட்டரில் அத்தனை சந்தோஷமாய் சிரிக்கிறார்கள்.
ப்ளாக் ஹூயூமர். பட் அந்த காட்சியில் நாயகனின் அதிர்ச்சி ரிஜிஸ்டர் ஆகாமல் வெறும் ஃபக்கோடு
போகிறது, சரி புருஷன் மனைவியின் துரோகத்துக்கு உதவுகிறான் என்றாலும், வீட்டில் வந்திருக்கிற
கீழ் வீட்டு உறவினர்கள் போவதற்குள் பிணத்தை அறுக்க, டிஸ்பொஸ் செய்ய வேண்டிய அவசியம்
தான் என்ன? இவர்கள் எழுதிய கதைக்காக திணிக்கப்பட்டவுடன் அங்கே நிகழ வேண்டிய அற்புதம்
மிஸ்ஸாகிறது.
ஷில்பாவாக
வரும் மாணிக்கம். குடும்பம் அதிர்ச்சியாகிறது. அதிலிருந்து மீள என்ன செய்யப் போகிறது?
என்று யோசிப்பதற்குள் மகனின் பள்ளிக்கு கிளம்புகிறாள். ஏன் என்றால் அப்படிப் போக வேண்டும்
என்று எழுதப்பட்டாகிவிட்டது. ஷில்பாவும், ராசுக்குட்டியும் க்ராஸ் செய்யும் சந்து எங்கே
இருக்கிறது? அங்கே ஏன் பொதுக்கக்கூஸு? அத்தனை கூட்டம்? அது என்ன மாதிரியான இடம்?. எதற்காக
அந்த வழியாய் போக வேண்டும். ஏன் ஜிப்பு ராசுகுட்டியின் லுல்லாவில் மாட்ட வேண்டும்.
அவன் முன்னால் எதற்கு ஷில்பா உட்கார வேண்டும்.?. இத்தனையும் போலீஸ் ஸ்டேஷனில் அவளை
உட்கார வைக்க வேண்டும் என்று எழுதப்பட்டதால் இயல்பாய் நடக்க வேண்டிய அற்புதம் மிஸ்ஸாகிறது.
விடலைப்
பருவப் பசங்க பிட்டு படம் பார்க்குறதுக்கு ஒண்ணு சேர்ற எடம். இயல்பு. ஆனால் அதை சிடி
வாங்கிப் போட்டு ஒண்ணா பாக்குறாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சப்ப திணிக்கப்படுற விஷயம். ஏன்னு
கேட்டா 3டில பாக்குறதுக்காகனு சொன்னதும் அது சாதாரண எல்.ஈ.டி டிவி தானே? அதுல எங்க
3டி இருக்கு? டிவிடில எப்படி 3டி மேட்டர் வீடியோ வரும்? சரி அப்படியே வந்தாலும் அது
எப்படி 50 ரூபாய்க்கு கிடைக்கும் என்கிற கேள்விகள் எழும் போதே சுவாரஸ்யம் போக ஆரம்பிச்சது.
ஆனானப்பட்ட பர்மா பஜாரிலேயே இன்றைக்கு பிட்டு படம் விற்பனை ஹார்ட் டிஸ்கிலேயோ, பென் ட்ரைவிலோ விற்க ஆரம்பித்துவிட்டர்கள்.
இன்னமும் சொல்லப்போனால் மெயில் ஐடி கொடுத்தால் கூகுள் ட்ரைவில் அனுப்பும் ஆட்கள் எல்லாம்
வந்துவிட்ட காலத்தில் பிட்டு படம் விற்கும் கடை செட்டப்பே திணிப்பு. அதில் விற்பனை
அக்கா. அதை விட திணிப்பு. பின்பு அந்த பசங்க
கொலை செய்யுற அளவுக்கு எல்லாம் போகறதுனு வர ஆரம்பிச்சதும் மொத்தமா வேடிக்கைப் பார்க்குற
மனநிலைக்கு வந்து க்ளைமேக்ஸ் ஏலியனா வரும் போது அங்கே நிகழ இருந்த மொத்த அற்புதமும்
காணாம போயிருச்சு.
கதை
முழுவதும் ஒரே நாளில் நடக்கிறது. இறந்த காதலனின் உடலை டிஸ்போஸ் செய்ய அலையும் போது
இன்ஸ்பெக்டர் பெர்லின் அதை வாட்ச் செய்கிறான். பின் தொடர்கிறார். அதே நாளில் இன்ஸ்பெக்டர்
காலையில் வேட்டி சட்டையோடு போலீஸ் ஸ்டேஷனில் ஷில்பாவோடு வல்லுறவு கொள்கிறார். பின்பு
அதே ஸ்டேஷனில் போலீஸ் யூனிபார்மோடு பிள்ளையை தொலைத்துவிட்டு வரும் ஷில்பாவிடம் மீண்டும்
உறவு வைக்க முயன்று அடிபடுகிறார். இதற்கிடையில் பையன்கள் ஏலியனை சந்தித்து பணம் தயார்
செய்து டிவி வாங்கி வீட்டில் வைத்துவிட்டு, பழைய டிவியை தூக்கிக் கொண்டு வந்து எங்கோ
ஒரு மாடியிலிருந்து போடுகிறார்கள்.
இதன்
கால நேரம் என்ன? எப்போது டிரஸ் மாற்றுகிறார். வேம்புவை பாலோ செய்கிறார். இதற்கெல்லாம்
பின்பு என்றால் வேம்புவின் வீட்டில் சம்பவம் காலையில் நடை பெறுகிறது. அதே காலையில்
தான் ஷில்பா ஸ்கூலுக்கு தன் மகனோடு கிளம்புகிறாள். அதே காலையில்தான் ஸ்கூல் போவதற்கு
பொய் சொல்லிவிட்டு வீட்டில் பிட்டு படம் பார்க்க தங்குகிறார்கள் பையன்கள். இப்படி நம்ப
முடியாத டைம் ப்ரேம்கள் முதல் பாராவில் ஏதோ ஒரு மாடியிலிருந்து தூக்கிப் போடப்படும்
டிவி, வேம்பூவின் கதையில் வரும் பெர்லினின் தலையில் வீழும் போதும் மொத்த கதையிலும்
நடக்க வேண்டிய அற்புதம் காணாமல் போய்விடுகிறது.
(இந்தக் கதை ஒரு நாளில் நடப்பது இல்லை. ரெண்டு நாளில் நடப்பது. இது கூட அறியாமல் என்ன எழுதுகிறாய் என்று சில பேர் கேட்டார்கள். எனக்கு தெரிந்த உலக சினிமா அறிவுக்கு எழுதிட்டேன். ரெண்டு மூணு தடவை பார்த்து யோசித்து கருத்து சொல்கிறவர்களுக்கு என் அனுதாபங்கள். ஒரு சினிமா அதன் அடிநாதமான விஷயத்தை முதல் பார்வையிலேயே கொடுத்து நம்மை கவரும் போதுதான் இரண்டாவது முறை பார்க்கும் போது அதன் நுணுக்கங்களை பார்த்து பரவசப்பட தோன்றும். இது முதல் எஃபெக்டையே சரி வரக் கொடுக்காத போது என்ன பிரயோஜனம்)
(இந்தக் கதை ஒரு நாளில் நடப்பது இல்லை. ரெண்டு நாளில் நடப்பது. இது கூட அறியாமல் என்ன எழுதுகிறாய் என்று சில பேர் கேட்டார்கள். எனக்கு தெரிந்த உலக சினிமா அறிவுக்கு எழுதிட்டேன். ரெண்டு மூணு தடவை பார்த்து யோசித்து கருத்து சொல்கிறவர்களுக்கு என் அனுதாபங்கள். ஒரு சினிமா அதன் அடிநாதமான விஷயத்தை முதல் பார்வையிலேயே கொடுத்து நம்மை கவரும் போதுதான் இரண்டாவது முறை பார்க்கும் போது அதன் நுணுக்கங்களை பார்த்து பரவசப்பட தோன்றும். இது முதல் எஃபெக்டையே சரி வரக் கொடுக்காத போது என்ன பிரயோஜனம்)
இவையெல்லாவற்றையும்
இணைக்கும் பெர்லினின் கேரக்டர் மிகையின் உச்சகட்டம். ஆண், பெண், திருநங்கை என யாரைக்
கண்டாலும் கிளப்பிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் காட்சியில் இருக்கும் நடிகர்களின்
நடிப்பு பசிக்கு தீனி போட வேண்டும் என்பதற்காக இழுத்தடிக்கப்பட்ட காட்சிகள். நீளமான
ஷாட்களில் பெரும்பாலும் சம்பவங்கள் ஏதுமில்லாமல் அங்கிட்டும் இங்கிட்டும் திருப்பி
திருப்பி கடுப்பேற்றுவதும் கூட நிகழாமல் போன அற்புதம்தான்.
சேட்டு
வீடு, ஷில்பாவின் வீடு, பையன்களின் வீடு, தனியார் ஹாஸ்பிட்டல், பிராத்தனைக்கூடம் என
எல்லா லொக்கேஷன்களும் அழுக்காக இருப்பதும். ஆங்காங்கே பாதி அடிக்கப்பட்ட ப்ளூ கலர்
சுவர் பூச்சுக்கள். ஆர்ட் டைரக்டர் வேலை ஆக்காஹா என்று பாராட்ட விஷயங்கள் இருந்தாலும்,
அது எங்கே இருக்கு? எந்த இடம்? போன்ற ஜியாகரிப்பிகல் கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கிற
காரணமும் நிகழாமல் போன அற்புதம்.
ராசுக்குட்டியாய்
வரும் சிறுவனின் நடிப்பு இயல்பு. டெஸ்ட் ட்யூப்
பேபி என்றால் அழும், சண்டைப் போடும் சிறுவனின் குழந்தைமை “கடவுள் ஒரு சில்ற பய” எனும்
போது பேபி ஷாமிலி காலத்து படமாய் மாறி அற்புதம் நிகழாமல் போகிறது.
ஷில்பாவின்
கேரக்டரில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்ததாய் விஜய் சேதுபதி சொல்லியிருந்தார். உண்மையில்
சொல்லப் போனால் இப்படத்தில் நடிக்கிறேன். ட்ரை பண்ணுறேன் என்று சொதப்பியது இவர் தான்.
ஸாரி டூ சே. எங்கேயும் எந்த இடத்திலும் திருநங்கைக்கான உடல் மொழி இல்லை. அவரு நாட்டுக்கட்டை
அப்படித்தான் இருப்பாரு என்பீர்களானால், நான் பொன்னம்பலம் போன்ற திருநங்கைகளையே பார்த்திருக்கிறேன்.
இவரது நடிப்பு எனும் திணிப்பினால் நிகழாமல் போய்விட்டது அற்புதம்.
நடிகர்களாய்
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நடிகர்கள் வேம்பூவாக வரும் சமந்தா, பெர்லினாய் வரும் பக்ஸ்
அக்கேரக்டரின் நடிப்பு எரிச்சலூட்டினாலும், அதனுடய ஸ்கெட்சே அப்படியெனும் பட்சத்தில்
இயக்குனர் தான் பொறுப்பு.
படம் நெடுக குறியீடுகளாய் பலநூறு டேக்குகளில் எடுக்கபட்ட
காட்சிகள் நிறைய என்று பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் கதையில் முக்கியமான
காட்சி சமந்தா தன் காதலனை அறுக்கும் காட்சியில் கண் திறந்தே இறந்திருக்கும் காதலன்
ரெண்டொரு ஷாட்களில் அரைக்கண் மூடி படுத்திருப்பதை தவற விட்டிருக்கிறாரே என்று நினைக்கும்
போது நிகழாமல் போன அற்புதமாகிவிடுகிறது.
அற்புதமே
நிகழவில்லையா? என்று கேட்டீர்களானால் படம்
நெடுக அட போட வைக்கிற விஷயங்கள் நிறைய, குறிப்பாய் ஆர்மபக் காட்சி. ஆல்மோஸ்ட் ஆரண்ய
காண்டம் படத்தின் ஆரம்பக் காட்சியானாலும், அக்காட்சி கொடுக்கும் திடுக். பின்னணியில்
ஓடும் ஐயம் எ டிஸ்கோ டான்ஸர். பிட்டு படம்
பார்க்க ஆரம்பிக்கும் போது ஒலிக்கப்படும் “வனிதாமணி” பாடல். காஜு, முட்டைபப்ஸு கேரக்டர்களின்
வடிவமைப்பு. அத்தனை களேபரத்திலும் முட்டைபப்ஸின் அக்காவின் மேலான காதலை சொல்லும் காஜி
கேரக்டர். டிவி ரிப்பேர் கடையில் பாட்டை வேடிக்கைப் பார்க்கும் காட்சி, பழைய ஐந்நூறு
ரூபாய் நோட்டுக்களை எடுத்து வந்துவிட்டு திரும்ப திருடப் போக வேண்டும், அங்கே இன்னும்
கொஞ்சம் காசு இருந்துச்சுன்னு சொல்ல, அப்பவே எடுத்துட்டு வர வேண்டியதுதானே? என்று காஜி
கேட்க, “நமக்கு எதுக்குடா அத்தனை பணம்?” என்று கேட்கும் மிடில் க்ளாஸ் அப்பாவி பையனின்
வெளிப்பாடு.
“ஒரு
லட்சம் பேர் பார்க்குறது தப்பில்லைன்னா நாலு பேர் நடிக்கத்தான் செய்வாங்க”
“ஹேர்ஸ்டைல்
நகம் வெட்டிக்கிறா மாதிரி நான் என் உடம்ப மாத்துனது தப்பா?”
”எப்படி
நடந்துச்சுன்னு தெரியலை. பேசிட்டேயிருந்தோம் மேட்டராயிருச்சு. திடீர்னு செத்துட்டான்’
‘இங்க
கூட பிரச்சாரமா?
என
ஆங்காங்கே தெரிக்க விட்ட வசனங்கள். சேட்டு வீட்டில் கிடக்கும் பாலீத்தீன் கவர்கள் மூலமாய்
வெளிப்படுத்தும் பேண்டஸி. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் செட் ப்ராப்பர்டீஸ்கள். ஷில்பா
நடந்து போகும் அந்த காரணேமில்லாத சந்தில் ஒட்டப்பட்டிருக்கும். ஆரண்யகாண்டம் நாயகன்
சிங்கபெருமாள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர். தனசேகரனின்
பிரார்தனை கூடத்தில் உடையும் கடவுள் சிலையிலிருந்து கிடைக்கும் வைரத்துக்கான காரணத்தை
ஒரு ரேடியோ செய்தியில் வெளிப்படுத்துமிடம், ராமசாமியின் மூலம் கிறிஸ்துவ அமைப்புகளின்
பிரசாரங்கள். அபத்த நம்பிக்கைகளை போட்டுடைத்தது. அட்டகாசமான ஒலியமைப்பு டிசைன். ஸ்டேடிக்
மற்றும் நீளமான ஸ்டெடி கேம் ஷாட்களின் அணிவகுப்பு. கதையில் வரும் இருண்மைக்கு குறைவில்லாத ஒளிப்பதிவு. எங்கே வேண்டுமோ அங்கே மட்டும்
சிறப்பான பின்னணியிசை அமைத்த யுவன்.
சுனாமியில்
உயிர் பிழைத்ததினால் தன்னைக் காப்பாற்றிய சிலையை கடவுளென கொண்டாடும் பித்தனாய் அற்புதமெனும்
தனசேகரன். தன் மூலமாய் கடவுள் நிகழ்த்த விரும்புகிறார் என நம்பும் தனசேகரனாகிய அற்புதத்தின்
நம்பிக்கையை, சப்வேயில் ஷில்பாவின் மூலமாய்
உடைத்து நீ மட்டுமல்ல நானும் தான் சுனாமியில் பிழைத்தவள் என்று நம்பிக்கை உடைபடும்
இடம் வாவ். அட்டகாசம். மொத்த திரைப்படத்திலேயும் எமோஷனலாக சிங்கான ஒரே இடம் இதுதான்.
என்ன கிளைமேக்ஸில் தசாவதாரம் போல குழப்பமான பதில் தான் என்றாலும் கமல் சொன்னால் அது
குழப்பம் தியாகராஜன் குமாராஜன் சொன்னால் அது வாழ்க்கை தத்துவம் என்று ஏற்றுக் கொள்ள
பழகினால் அது நிஜம்.
காஜி,
தனசேகரன், லீலா, பெர்லின், வேம்பூ ஆகிய கேரக்டர்களில் இருக்கும் எக்ஸ்ட்ரீம் தன்மைதான்
கதையின் பலம். அதுவே பலவீனமும் கூட. எக்ஸ்டீமாகவும், எக்ஸெண்டிரிக்காகவும் உள்ளவர்களின்
கதை. யதார்த்தமாய் சிந்திக்கவே சிந்திக்காதவர்களின் உணர்வு வெளிப்பாடு. குறிப்பாய்
நீ என்னை திட்டணும்னா நடிப்பு பயிற்சிக்கு போற இல்லை. குடிச்சா மாதிரி நினைச்சு திட்டிக்கோ
என்று சொல்லி அவன் திட்டுமிடமெல்லாம் புதுசாய் தெரிந்தாலும், “அரிப்பெடுத்த முண்டை
என்று கிடைத்த தனிமையில் அவள் மேல் வன்முறை பிரயோகம் செய்வதோ, அல்லது என் கிட்ட என்ன
குறை கண்டே என்று ஒப்பாரி வைத்து அழும் கணவர்களே வெகுஜனங்களாய் இருக்கும் பட்சத்தில்
யதார்த்தம் மிகையாகிப் போய் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் மனோபாவம் தான் வருகிறது. அதே தனசேகரன்,
லீலா, அவளது மகன் கதையில் இருக்கும் யதார்த்தம், எந்த காரணத்தினால் நான் இப்படி ஆனேனோ
அதுதான் என் மகனின் வாழ்க்கைக்கும் என்று அற்புதம் புலம்பும் போதும், “உன்னை யாராச்சும்
பெரிய நடிகையாக்குறேனு ஏமாத்திட்டாங்களா?” என்று அவளின் நடவடிக்கைக்கு ஏதாவது சால்ஜாப்பு
காரணங்கள் கிடைக்காதா? என்று ஏங்கும் மகனின் கேள்வியில் இருக்கும் நிஜம் மற்ற எந்தக்
கதைகளில் இல்லாததால் கொண்டாட முடியவில்லை.
சூப்பர்
டீலக்ஸ் தியேட்டரில் ஓடும் வாழ்வின் ரகசியம் பலருக்கு புரிந்தார் போல தோன்றினாலும்,
படத்தில் காஜி சொல்வது போல ஏற்கனவே நான் பார்த்துட்டேன் என்று வாழ்வின் ரகசியத்தைப்
பற்றி சொல்வார். மீண்டும் பார்க்க போகும் முன். நிகழாத அற்புதமான சூப்பர் டீலக்ஸும்
அப்படியே.