Thottal Thodarum

Mar 19, 2019

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் மற்றும் வெப் படங்கள் – ஒரு பார்வை-1


ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களின் வருகை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒர் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இண்டர்நெட்டின் வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் சாட்டிலைட் சேனல் உரிமை வியாபாரம் மிகப் பெரிய கேள்விக் குறியாய் இருக்கும் நேரத்தில், ஸ்ட்ரீமிங் உரிமை எனும் இண்டர்நெட் ஒளிபரப்பு உரிமை கொஞ்சம் ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது.

படங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது போலவே,  வெப் சீரீஸ்கள் எனும் புதிய கதவு திறந்திருக்கிறது. வழக்கம் போல இந்தி பெரிய மார்கெட் என்பதால் அனுராக் காஷ்யப், விக்ரம் மோத்வானி, போன்ற பெரும் தலைகள் எல்லாம் சடுதியில் அதன் சூட்சுமத்தைப் பிடித்து பெரும் வெற்றி பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.  மற்ற மொழிகளில் வழக்கம் போல பட்ஜெட் மற்றும் வெப் சீரீஸ்களைப் பற்றிய கண்டெண்ட் அறியாமைகளோடு, களம் இறங்கியிருக்கிறார்கள்.

இதில் பெரும் கை நெட்ப்ளிக்ஸ் என்றாலும், இந்திய அளவில் பெரும் முதலாளி அமேசான் ப்ரைம் தான். இவர்களுடன் பாலாஜி டெலி பிலிம்ஸின் ஆல்ட் பாலாஜி, ஸ்டாரின் ஹாட் ஸ்டார், கலர்ஸின் வூட், சன் நெட்வொர்க்கின் சன் நெக்ஸ்ட், வியூ, டைம்ஸின் எம்.எக்ஸ் ப்ளேயர், ஜீ டிவியின்  ஜீ5, என வரிசைக் கட்டி ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் ஜியோ, ஏர்டெல், போன்றோர் மொத்த ஓ.டி.டி ப்ளாட்பார்மகளில் வரும் நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து தரும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இவர்கள் அனைவருக்கும் புதிய நிகழ்ச்சிகள் தேவை. இல்லாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் வரும் காலங்களில் நல்ல தரமான வெப் சீரீஸ் கண்டெண்டுகள் கிடைக்கப் பெறும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இவ்வாண்டின் முக்கிய முயற்சியாய் நெட்ப்ளிக்ஸ் தன் Black Mirror சீரீஸின் ஒர் எபிசோடாய் “Bandersnatch” எனும் புதிய எபிசோடில் எடுத்திருக்கும் முயற்சி மிக முக்கியமானது.  பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இண்டராக்டிவாய் காட்சிகள் அமைத்து வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாய் காட்சியில் நாயகனின் தந்தை இரண்டு உணவை தன் கையில் வைத்திருக்கிறார்.  காட்சியில் நாயகன் எதை சாப்பிட வேண்டும் என்று நீங்கள் முடிவு எடுக்கிறீர்களோ அதை நாயகன் சாப்பிடுவதாய் காட்சி வரும். அது போல க்ளைமேக்ஸை கூட நீங்கள் மாற்றலாம். இது போல வீடியோ கேம்களில் வந்திருக்கிறது. ஸ்டீமிங்கில் இது புதுசு. அவன் காட்டுறதை நான் ஏன் பார்க்கணும் வேற மாதிரி புதுசா நானே இதை வடிவமைச்சுக்கிறேன் என்கிறார்ப் போல எதிர்காலத்தில் வந்துவிடும் போல.

தற்போதைய நிலையில் கார்பரேட் முதலாளிகள் நடத்தும் இந்நிறுவனங்கள் தங்கள் வழக்கம் போல, ஏற்கனவே டிவி சீரீஸ் காலத்திலிருந்து மாவரைத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களோடு மட்டுமே இணைந்து தயாரிப்பில் ஈடுபடுகிற காரணத்தினால் பழைய சீரியல் மாவையே கொஞ்சம் புது மொந்தையில் தருகிறார்கள். அது மட்டுமில்லாமல் முழுக்க முழுக்க நிறுவனங்களின் பணம் என்பதால், எத்தனை சுருக்கி எடுத்து பெரிய லாபம் சம்பாதிப்பது என்ற கணக்கு முக்கியமாய் கருதப்படுவதால் தரம் நடுத்தரமாய்க் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் படங்களைப் பொறுத்தவரை அப்படி சொல்ல முடியாது. பெரும்பாலும் வெப் ரீலீஸுக்கு மட்டுமேயான படங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அதிலிருந்து இவர்கள் தெரிந்தெடுப்பதால் கொஞ்சம் பரவாயில்லை ரகமாய் அமைந்துவிடுகிறது. பெரும்பாலும் செக்ஸ் சம்பந்தப்பட்ட படங்கள். ஃபீல் குட் ரொமாண்டிக் மற்றும் குடும்பப் படங்கள் தான் அதிகம். காரணம் இவற்றுக்கு வெளியே வெள்ளித்திரைகளில் பெரும் வரவேற்ப்பை பெறுவது ரொம்பவே கஷ்டமான காரியமாய் இருப்பது ஒரு முக்கிய காரணம்.

இதையெல்லாம் மீறி இந்திய அளவில், தமிழிலும் மற்ற மொழிகளிலும் வந்த சீரிய வெப் சீரீஸ்  மற்றும் வெப் படங்களின் முயற்சிகளைப் பற்றிய கட்டுரைத் தொடர் தான் இது.
Breathe
அமேசான் தன் இந்திய மார்கெட்டை சென்ற வருடம் வெளியிட்ட “இன்சைட் எட்ஜ்” எனும் சீரீஸுடன் ஆரம்பித்திருந்தது. பெரும் வெற்றி. அவர்களது மிகப் பெரிய பட்ஜெட் மற்றும் இந்திய முக்கிய ப்ராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டது இன்னும் பல பேரை சென்றடைந்து பல இண்டர்நேஷனல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.  அது போல இந்த வருடம் மிக பெரிய விளம்பரங்களுடம் இந்தியாவெங்கும் மாதவன் நடிப்பில் வெளியானது இந்த வெப் சீரீஸ்.

தன் மகனின் லங் கேன்சருக்காக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார் மாதவன். ஆனால் பையன் அது வரை தாக்கு பிடிப்பது கஷ்டம் என்று தெரிய வர, உறுப்பு தானம் கொடுக்க லிஸ்டில் இருப்பவர்களை எல்லாம் கொல்கிறார். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. ஆரம்பக் காட்சிகள் சில சுவாரஸ்யங்கள் இருந்தாலும், லாஜிக்கலாய் உடல் உறுப்பு தானம் கொடுக்க பதிவு செய்திருக்கிறவர்களை தன் சுயநலத்துக்காக கொல்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாய் போனதால் மாதவனின் அருமையான நடிப்பு விழலுக்கு இறைத்தானதாய் போனது. என்ன இதனால் பயன் அடைந்தவர்கள் அமேசான். அதீத விளம்பரம் காரணமாய் நிறைய பேர் உறுப்பினர் ஆனார்கள் என்கிறார்கள்.


இந்த சீரீஸின் தோல்விக்கு காரணம் புகழ் பெற்ற  “ப்ரேக்கிங் பேட்” எனும் அமெரிக்க சீரியலை அப்படியே உட்டாலக்கடி அடித்ததினால். அதில் நாயகனுக்கு லங் கேன்சர் வந்துவிட, தான் சாவதற்குள் தன் குடும்பத்தைக் காப்பாற்ற உடனடி பணம் தேவை. எனவே போதைப் பொருள் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பிப்பான். அது அவனை எப்படி புதைகுழியில் கொண்டு போய் சேர்க்கிறது என்பதுதான் கதை. அதில் இருக்கும் அடிப்படை எமோஷன் கூட புரியாமல் மாற்றியமைத்ததுதான் தோல்விக்கு காரணம்.


Post a Comment

No comments: