உயிர் பெரும்
பி & சி
ஒரு வளர்ந்து வரும் நடிகன் ஸ்டார் ஆவது
பி &சி எனும் ஏரியாக்களில் வெற்றிக் கொடி நாட்டும் போதுதான். அப்படித்தான் எம்.ஜி.ஆர்,
சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய்காந்த் என வரிசைக் கட்டி வென்றவர்கள். ஆனால்
அவர்களுக்கான படங்கள் சமீபகாலமாய் வருவதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் ஒரு புறமிருக்க,
இன்னொரு பக்கம் வந்தா மட்டும் ஓடிருதா? என்பார்கள்.
ஆனால் டிஜிட்டல் வருவதற்கு முன் பிலிம்
காலங்களில் ஒரு படம் சிட்டிக்களில் ரிலீஸ் ஆகி, மெல்ல, அடுத்தடுத்த செண்டர்களுக்கு
சென்று அங்கும் ஒரு பெரிய ரவுண்ட் ஓடி மூச்சு வாங்கி, பிரிண்ட் தேய்ந்து புது பிரிண்டுகள்
போடப்பட்ட காலமெல்லாம் இருக்க, இன்று ஒரே நாளில் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை செண்டர்களிலும்
படங்களை திரையிட முடிகிறது. அதனால் பி & சி எனும் ஷிப்டிங் மார்கெட்டே இல்லாமல்
போய் விட்ட நிலையில், ஒரே நேரத்தில் அத்துனை அரங்குகளிலும் வெளியாகும் படங்களுக்கான
வரவேற்பு கிடைக்கிறதா? என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
சமீபத்தில் எங்களது “6 அத்யாயம்” திரைப்படத்தை
ஒர் பி செண்டர் ஏரியாவில் வெளியிட்டோம். திரையரங்கு உரிமையாளருக்கு போன் செய்த போது,
“அதிசயமா இருக்கு சார். முகம் தெரிஞ்ச ஹீரோக்கள் நடித்த படத்துக்கே 20 பேருக்கு மேல
வர மாட்டாங்க மொத ஷோவுக்கு. உங்க படத்துக்கு 120 டிக்கெட் எப்படின்னே புரியலை” என்றார்.
இதுதான் நிஜ நிலமை பி & சி தியேட்டர்களில்.
சிங்கிள் ஸ்கீரீன் தியேட்டர்கள் காத்தாட
ஆரம்பிக்க, மெல்ல அரங்குகள், கொடவுன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாற, சிட்டியைப்
போல சிலது மல்ட்டி ப்ளெக்ஸுகளாய் உருமாற, மல்ட்டிப்ளெக்ஸ் ஆடியன்ஸை மட்டுமே குறிவைத்து
படங்கள் தயாரிக்கப்பட, சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஏரியாக்களில் மட்டுமே கல்லா
கட்டும் அர்பன் எனச் சொல்லப்படும் மாநகர கதைகள் அதிகம் வர ஆர்மபித்தது. த்ரில்லர் படங்களும்,
மார்டர்ன் படங்களும், ப்ளாக் காமெடிக்களும் தான் இந்த மார்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்க,
எப்போதோ ஒரு முறை தான் பி & சி ஏரியாக்களுக்கு படங்கள் தயாராகின்றன.
முக்கியமான காரணம் இம்மாதிரியான பி
&சி படங்களை பற்றி இணையங்களில் பெரிதாய் கொண்டாடப்படுவதேயில்லை. அது மட்டுமில்லாமல்
அப்படங்களை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இணையத்தில் மட்டுமே வெற்றி பெற்றால் போதும்
என்கிற எண்ணம் தான் பெரும்பாலான நடிகர்கள் மனதில் இருக்கிறது. ஏனென்றால் இம்மாதிரியான
கிராமப்படங்களில் நாடகத்தனம், செண்டிமெண்ட் வசனங்கள், டிபிக்கல் சண்டைக்காட்சிகள் என
பல வருடங்களாய் இருக்கும் டெம்ப்ளேட் க்ளீஷே காட்சிகள் நிரம்பியிருக்கும். அதை ட்ரெண்டி
பார்வையாளர்கள் கழுவி ஊற்றுவார்கள். ஆனால் அதே படங்கள் தான் சாதாரண பார்வையாளனுக்குள்
ஒர் தொடர்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இம்மாதிரியான படங்களில் நடிக்க ஆரம்பித்தால் அது
ஓடாது. கொஞ்சம் வெற்றி கொடுத்திருக்க வேண்டும். மக்களின் முகம் தெரிந்தவனாக இருக்க வேண்டும் அப்படியான நடிகர் தான் இம்மாதிரியான படங்களை பார்க்க தியேட்டருக்கு வருவார்கள்
மக்கள். இது தெரியாமல் ஒர் புது முக நடிகன் இம்மாதிரியனா பி & சி படங்களில் நடித்தால்
வெற்றியடைவது கொஞ்சம் கஷ்டமே.
சென்ற வாரம் வெளியான இரண்டு படங்களுமே
தியேட்டருக்கு வராத மக்களை மீண்டும் அழைத்து வந்திருக்கிறது என்கிறார்கள். தமிழ்படம்
எல்லா வயதினரையும் இழுந்து வந்துருக்க, முதல் நாள் வசூல் மட்டுமே 3 கோடியை தாண்டியிருக்கிறது.
உடன் வந்த கடைக்குட்டி சிங்கம் மெல்ல பிக்கப் ஆகி, இன்று தமிழ், தெலுங்கு என இரண்டு
மொழிகளிலும் வெற்றியை தாண்டியிருக்கிறது. குறிப்பாய் முன்பு கொம்பன் படம் வந்த போது
பல ஊர்களில் மக்கள் கூட்டமாய் வண்டி கட்டிக் கொண்டு வந்தார்கள் என்ற பேச்சு இருந்தது.
அது போல பேமிலி கூட்டம் நன்றாகவே இருப்பதாய் தகவல். என்னதான் பெரிதாய் ஹிட் என்றாலும்
திங்கட்கிழமை அன்று தான் படங்களில் ஒரிஜினல் நிலை தெரியும். அந்த வகையில் பார்த்தால்
திங்கட்கிழமை மதியக் காட்சிக்கு சென்னையில் உள்ள ஒர் மல்ட்டி ப்ளெக்ஸில் சுமார் ஐம்பது
சதவிகிதம் ஆடியன்ஸ் கடைக்குட்டி சிங்கத்துக்கு வந்திருந்தார்கள். படத்தின் வெற்றியை
இது பறை சாற்றுகிறது.
தெலுங்கில் இம்மாதிரியான பேமிலி செண்டிமெண்ட்
படங்கள் பெரும் வரவேற்பை பெரும் விஷயம். கூட்டு குடும்பம், விவசாயம், ஒவ்வொரு வளரும்
ஹீரோவும் இம்மாதிரியான செண்டிமெண்ட் பி செண்டர் படங்களில் நடித்துவிடுவார்கள். ஏனென்றால்
அம்மாதிரியான படங்களின் வெற்றி அவர்களை இன்னமும் நெருக்கமாய் மக்களிடையே கொண்டு போய்
சேர்க்கும் என்பதால். சதமானம் பவதி ஒர் ஹிட் என்றால் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு
போட்ட “ரங்கஸ்தலத்தின் வெற்றி அதை விட பெரியது. வசூலில் மட்டுமில்லாமல் ராம் சரணை ஒர்
நல்ல நடிகனாகவும் வெளியே தெரிய வைத்தது.
வியாபாரமாய் வந்த ரெண்டு படங்களும் பெரும்
ஹிட் என்பது தமிழ் சினிமாவுக்கு நல்ல விஷயம் தான். இரும்புத்திரை, டிக் டிக் டிக்,
தமிழ் படம்2, கடைக்குட்டி சிங்கம் என திரும்பவும் மக்கள் தியேட்டர் நோக்கி வரவழைத்திருக்கிறார்கள்.
இதை சாக்காய் வைத்து மீண்டும் அவர்களின் டவுசர் அவிழ்க்க முயலாமல், ஆன்லைன் டிக்கெட்
கொள்ளை, பார்க்கிங் கொள்ளை, ஸ்நாக்ஸ் கொள்ளைகளை விட்டால் தமிழ் சினிமா உயிர்த்தெழும்.
Post a Comment
No comments:
Post a Comment