சாலிகிராமத்தில் சொல்லிக் கொள்கிறார்ப் போல நல்ல தரமான வெஜ் உணவகங்கள் அவ்வளவாக கிடையாது. நான் வெஜ் மட்டும் இருக்கிறதா என்று கேட்டீர்களானால் கொஞ்சம் தள்ளி வளசரவாக்கம், விருகம்பாக்கம் பக்கம் போனால் இருக்கிறது. மீண்டும் சரவணபவன், பார்வதி பவனை விட்டால் சிலாக்கியமாய் ஏதுமில்லாத நிலையில் ஒரு ஷூட் இடைவேளையில் நண்பர் நல்ல சாம்பார் சாதம், தயிர்சாதம் வாங்கி வரச் சொன்னார். எங்கிருந்து என்று கேட்க, விஜயகாந்த் வீட்டுக்கு முன்னால் அபுசாலி தெருவில், மாடியில் சின்னக்கடை இருக்கிறது. தக்காளி சாதம், புளி சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் என வகை வகையான சித்ரான்னங்கள் வெறும் நாற்பது ரூபாய்க்கு என்றார். அடுத்த வாரமே அங்கே படையெடுத்தோம்.
படத்தில் காட்டப்பட்டிருக்கும் கருவேப்பிலை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் சேர்த்து எவ்வளவு தெரியுமா? ரூ.40 தான். தனியே வாங்கினால் இதே அளவுக்கு முழு சாதம் தருகிறார்கள்.
உதவி இயக்குனர்கள் வெகுவாய் சுற்றியலையும் இந்த ஏரியாவில் இம்மாதிரியான உணவகங்கள் அட்சய பாத்திரம். நல்ல தரமான,சுவையான சாத வகைகள். சரவண பவனிலேயே தயிர் சாதத்திற்கு மாதுளை போடாத காலத்தில் இங்கே கரண்டி தயிர் சாதத்திற்கும் மாதுளையோடுதான் சப்ளை. இது நாள் வரை நான் இங்கு புளீத்த தயிர் சாதம் சாப்பிட்டதேயில்லை.
வீட்டிலிருந்தே செய்து கொண்டு வந்து விடுகிறார்கள். சிப்ஸ், மிக்ஸர், அல்லது காராபூந்தி என நாளொரு மேனிக்கு சைட் டிஷ் வேறு. எல்லாமே வெறும் நாற்பது ரூபாய்க்கு.
விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டி ஒரு அம்மன் கோயில் ரோட்டிலேயே இருக்கும் அங்கே நின்று மாடியில் பார்த்தால் அந்த சின்ன உணவகம் இருக்கும். தவறாது விசிட் செய்து ஆதரவு கொடுங்கள். நிச்சயம் தரமான, மலிவான வெஜ் உணவகம்.
உங்க வீட்டு சாப்பாடு
அபுசாலி தெரு
சாலிகிராமம்
விஜய்காந்த் வீடு தாண்டி.
Post a Comment
No comments:
Post a Comment