Thottal Thodarum

Mar 15, 2019

வரதன் – ஐரோப்பிய படங்களின் தாக்கம்.

வரதன் – ஐரோப்பிய படங்களின் தாக்கம்.
பொதுவாகவே மலையாள படங்களில் ஐரோப்பிய படங்களின் தாக்கம் அதிகமாய் இருக்கும். பிரியதர்ஷன் காலத்திலிருந்தே அம்மாதிரியான விஷயங்கள் அங்கு அதிகம். அதற்கு முக்கிய காரணம் தனிமையான வீடுகள். அமைதி. நகர்புறதன்மையற்ற கதைகளை எடுக்கக்கூடிய நிலப்பரப்பு. கிருஸ்துவ குடும்ப அமைப்புகள். தனிமை. குடும்பத்தோடு குடிப்பது என்பது போன்ற பல விஷயங்களை சொல்லலாம்.

நாடே பல மொழிகளில் கொண்டாடிய திருஷ்யம் ஒரு ஜப்பானிய மொழியாக்கம் என்பது இன்றளவில் உள்ளக் குற்றச்சாட்டாக இருந்தாலும் மலையாளிகள் மிகச் சிறப்பாய் கதைகளை அவர்களுக்கான படங்களாய் ஆக்குவதில் வல்லவர்கள். அதற்கு காரணம் அங்குள்ள எழுத்தாளர்கள். இன்றளவில் எழுத்தாளர்களை கதையின் நாயகர்கள் அளவுக்கு கொண்டாடிக்  கொண்டிருக்கும் ஒரே திரையுலகம் மலையாள உலகம் தான். பல சமயங்களில் அசாதாரணமான கதைகளை மிகச் சாதாரணமாய் எழுதிக் கொடுத்துவிடுவார்கள்.

பட்டர்ப்ளை ஆன் வீல்ஸ் என்ற ஹாலிவுட் படம். நம்ம ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் ப்ரான்சன் நடித்திருப்பார். அது ஒரு த்ரில்லர் வகை படம்  அதை மலையாளத்தில் காக்டெயிலாக்கி கொடுத்திருந்தார்கள்  வெற்றியும் பெற்றார்கள். அதே நேரத்தில் என் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரிஜினல் படத்தைக் கொடுத்து அதை தமிழில் திரைக்கதையாக்கி தருமாறு கேட்டிருந்தார். படத்தைப் பார்த்ததும் யாரோ இதை படமாக தமிழில் எடுத்துக் கொண்டிருப்பதாய் எனக்கு தகவல் வந்ததாய் சம்சமயம். எனவே விசாரிக்க ஆரம்பித்தேன். கண்டு பிடித்து அதிர்ச்சியடைந்தேன். அதற்கு ரெண்டு காரணங்கள் ஒன்று. அதை தயாரித்து நடித்துக் கொண்டிருந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதை விட அதிர்ச்சியான விஷயம் தெரிந்தோ தெரியாமலோ எந்த படத்தை தழுவி எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த படத்தின் பெயரையே டேக் லைனாக வைத்திருந்த புதுமை.  அந்த படம் பெயர் லத்திகா. இப்போது புரியும் எனக்கு ஏன் அதிர்ச்சி ஏற்பட்டது என. ஆனால் ஒரு பெரிய காமெடி என்னவென்றால் ஆங்கிலத்தில் வந்து, மலையாளத்தில் தழுவி, தமிழிலும் தழுவப்பட்ட அதே கதையை மலையளத்திலிருந்து உரிமை வாங்கி இங்கே மீண்டும் தமிழில் படமாக்கி தோல்வியடைந்தார்கள். இப்படியான கதைகள் பல உண்டு. இம்மாதிரியான படங்கள் மலையாளத்தி ஹிட்டடிக்கும் தமிழில் கொஞ்சம் கஷ்டமே.

அங்காமாலி டைரீஸ், நண்டுகளோட நாட்டில் ஒர் இடைவேளா, திருஷ்யம், தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும், மகேஷிண்டே பிரதிகாரம் என பெரிய லிஸ்ட் போட்டுக் கொண்டேயிருக்கலாம். ஆனால் இவைகளைப் போல மண்ணின் கதைகளனில்லாமல், த்ரில்லர் வகை படங்களுக்கு அமெரிக்க படங்களை விட ஐரோப்பிய படங்களை தங்களது கதைகளாய் மாற்றி கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாய் பயணம் சார்ந்து, தேடுதல், பழிவாங்குதல், என பல வகைகளை தங்களுடயதாக்கியிருக்கிறார்கள். அப்படியான ஒரு படத்தை இந்த வாரம் பார்க்க நேரிட்டது.

அது வரதன் என்கிற பகத் பாஸில் நடித்த படம். அமல் நீரத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் கதை ஐரோப்பிய படங்களின் கதைகளை ஒத்திருக்கிறது. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவரின் பெரும்பாலான படங்கள் ஒளிப்பதிவுக்கு பேர் பெற்றதாகவும், மேக்கிங்கில் அழகுணர்வு மிக்கதாகவும் அமைந்திருக்கும். 5 சுந்தரிகள், அயோபிண்டே புஸ்தகம்,காம்ரேட் இன் அமெரிக்கா, போன்ற படங்கள் இப்படத்தில் 

துபாயிலிருந்து வேலைப் பிரச்சனை காரணமாய் கேரளாவுக்கு வருகிறார்கள் பகத்தும், ஐஸ்வர்யா லஷ்மியும். அவர்களுக்கான் எஸ்டேட் வீட்டில் வந்து செட்டிலாகிறார்கள். தனியான எஸ்டேட் வீடு. சுற்றிலும் அதீத அமைதி. ஆனால் ஏதோ ஒரு உருத்தல், ஐஸ்வர்யாவின் மனதில் ஈஷிக் கொண்டே இருக்கிறது.  அது அவளின் அழகை அடைய விரும்பும் அவளது பழைய ஸ்கூல் நண்பர்கள் முதற்க் கொண்டு ஊரில் பச்சோந்தியாய் அலையும் கிழவன் வரை.

கதையின் முதல் பாகம் வரை, கொஞ்சம் கொஞ்சமாய் மெதுவாய்ய்ய்ய்ய்ய் சம்பவங்கள் அரங்கேறுகிறது. ஒரு கட்டத்தில் சலிப்பேறி ஏதாச்சும் ஒண்ணை பண்ணித் தொலைங்கய்யா என்று புலம்பிவிடும் அளவிற்கு. கணவனிடம் முறையிடுகிறாள். அவன் சாத்வீகமாய் எல்லாம் முயற்சியும் செய்கிறான். இதன் நடுவில் பிரச்சனைக்குரிய குடும்பத்தில் இருக்கும் பள்ளிப் பெண்ணுக்கும், மாற்று ஜாதி ஏழை பள்ளிச் சிறுவனுக்குமிடையே ஆன காதல். அந்த பையன் இவர்கள் வீட்டில் அடைக்கலமாய் வந்தடைய.ப்ரச்சனை முற்றுகிறது. அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் நிஜமாகவே விஷுவலாய் அதகளம்தான். அப்படியொரு ஆக்‌ஷன் காட்சிகள். சமயோஜித புத்தியோடு அமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் பெரும் ஆசுவாசமாய் இருந்தாலும், மொத்த படத்தையும் பார்த்து முடித்துவிட்டு எழும் போது எதற்கு இப்படி நம்ப முடியாத அளவிற்கான  ஹீரோயிசம் என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் நாயகன் கதைப் படி சாதாரணன். வெளிநாட்டில் வாழ்ந்தவன். அதைத் தவிர வேறெந்த சிறப்பு பயிற்சியும் பெற்றவனில்லை எனும் பட்சத்தில் மலையாள படங்களில் இருக்கும் இயல்புத்தன்மை அடிப்பட்டுப் போய் வெறும் காட்சி அதிசயமாகி போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.


அற்புதமான காட்சிப்படுத்தல்கள். தேர்ந்த நடிப்பு. கதைக்கு ஏற்றாப் போலான இடங்கள். என மிக அழகாய் பொறுக்கியெடுத்திருக்கிறார்கள். திரைக்கதையைத் தவிர என்று சொல்ல வேண்டும். கொஞ்சமே கொஞ்சம் நம்பகத்தன்மையுடனான கேரக்டர்களை வரையறுத்திருந்தால் நிச்சயம் ஒர் அபாரமான சர்வைவல் திரில்லர் வகை படமாய் அமைந்திருக்கும். அப்படி அமைக்காது விட்டதால் பிரபல ஹாலிவுட் படமான “ஹோம் அலோன்’ படத்தில் வீட்டில் திருட வரும் திருடர்களை ஒர் சிறுவன் எப்படி தந்திரங்களை பயன்படுத்தி, லாஜிக் இல்லாவிட்டாலும் சுவார்ஸ்யத்திற்கு பஞ்சமில்லாத ஐடியாக்களினால் நம்மை ஈர்த்த விஷயம் தான் நியாபகம் வருகிறது. ஐரோப்பிய படங்களிலிருந்து அமெரிக்க படங்களுக்கான தாவலோ? இல்லை ஒரிஜினலின் சாயல் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியா? என்ற யோசனை தோன்றாமல் இல்லை. பல சமயங்களில் பல வெளிநாட்டுப் படங்கள் மலையாள சினிமாவுக்கு நல்ல சுவாரஸ்ய படங்களை தந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

Post a Comment

1 comment:

Name : Rajesh RV said...

The story looks like Stray Dogs
https://en.wikipedia.org/wiki/Straw_Dogs_(2011_film)