Thottal Thodarum

Mar 12, 2019

GHOUL - Web series

Ghoul
ஒரு காலத்தில் தமிழில் ஜெய்சங்கர் தொடர்ந்து ஒரே டைரக்டரின் படங்களில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பார். அந்த படம் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப் படாமல் தொடர்ந்து நடித்துக் கொடுப்பார். அதே போல ஆர்யா தொடர்ந்து விஷ்ணுவர்தனின் படங்களில் நடித்திருப்பார். அது போல ராதிகா ஆப்தே, அனுராக் கஷ்யப்பின் படங்களில் நடிப்பது. குறிப்பாய் நெட்ப்ளிக்ஸில் இவர்கள் படங்கள் வெளியாக ஆரம்பித்தபிறகு மீம்ஸ் போடுமளவுக்கு ராதிகா ஆப்தேவின் ஆக்ரமிப்பு.

சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸில் நடிப்பு மட்டுமில்லாமல் , கதை வசனத்திலும் இவரது பங்களீப்பு இருந்தது. ஒரு புதிய நெட்ப்ளிக்ஸ் படத்தில் ராதிகா ஆப்தேவே எல்லா கேரக்டர்களிலும் நடிப்பது போன்ற ஒரு விளம்பரத்தை ராதிகாவே வெளியிட்டிருந்தார். அது கிண்டலுக்காக வெளியிடப்பட்டது என்று நினைத்தால் நிஜமாகவே அப்படி ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது என்று சொல்கிறார் விக்ரமாதித்ய மோத்வானி.

இத்தனை களேபரங்கள், விமர்சனங்களுக்கு நடுவில் ராதிகா ஆப்தே ஒன்றும் திறமையில்லாதவர் இல்லை ஒவ்வொரு  ப்ராஜெக்டிலும் தன் திறமையை நிருபித்துக் கொண்டேதானிருக்கிறார். ஒரு சில இயக்குனர்களுக்கு சிலருடய நடிப்பும், திறமையும் மிக இயல்பாய் பிடித்துப் போய் தொடர்ந்து அவர்களுடன் பயணிப்பது சுலபமாய் இருக்கும். எனக்கு கூட என் முதல் பட ஹீரோ தமனோடு அடுத்தடுத்து பயணிப்பது மிக சுலபமாய் இருந்திருக்கிறது. அப்படி ஒரு டீமாய் பயணித்துக் கொண்டிருக்கும் அனுராக், மோத்வானி குழுவிலிருந்து ஒரு புதிய மினி வெப் சீரீஸ் தான் கவுல்.
எதிர்காலத்தில் நடக்கும் கதை. அரசை விமர்சிக்கும், எதிர் கருத்தை வைக்கும் யாரையும் சகிக்க முடியாத அரசு. அவர்களை தீவிரவாதியாய் முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைத்து மக்களை காப்பதாய் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் அரசில் ராணுவ அதிகாரியாய் பயிற்சி முடிந்து சேருகிறார். நாட்டு பற்று மிகவும் அதிகமுடையவர். அதன் காரணமாய் தடை செய்யப்பட்ட புத்த்கத்தை தன் தந்தை வைத்திருக்கிறார் என்பதை அறிந்து அவரை ராணுவத்தினரிடம் பிடித்து கொடுக்கும் அளவுக்கு நாட்டுப்பற்று.

ரெடெம்ஷன் செண்டர் எனும் இடத்தில் அவர்களை வைத்து விசாரிப்பார்கள். அப்படியான ஒர் முக்கிய தனி இடத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை அடைத்து வைத்து விசாரிக்கின்ற இடத்தில் வேலைக்கு சேருகிறார். அங்கே தர்ட் டிகிரி என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை எனும் அளவுக்கு படு கொடூரமான விசாரணை முறைகள். அவற்றை பின்பற்றி தீவிரவாத செயல்களை தடை செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு பெரும் தீவிரவாதியை, சமீபத்தில் பெரும் உயிர் சேதத்துக்கு காரணமானவனுமான அலி சையத்தை கைது செய்து கூட்டி வருகிறார்கள். அவனை விசாரிக்கும் பொறுப்பை ஏற்று அவனை பேச வைக்க முயல்கிறார்கள். அப்போதிலிருந்து அங்கு நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளும், அதன் தொடர்ச்சியும்  பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. இது தான் கவுலின் கதை. கவுல் எனும் அரேபிய சாத்தான். மனித உடல்களை தின்று வளரும் சாத்தான் என்று அரேபியகதைகளில் உலவும் விஷயம். அப்படியான சாத்தானை அழைத்தது யார்? எதற்காக? என்று முதல் எபிசோடுக்கு பிறகு நம்மை கட்டிப் போடுகிறது.

சில ஷாட்கள் நிஜமாகவே முதுகுத்தண்டை சில்லிட வைக்கிறது. ராதிகா ஆப்தேவின் நடிப்பு ஆரம்பக் காட்சிகள் லேசாய் ஒட்டாமல் இருந்தாலும் அவர் உள்ளே இருக்கும் கேள்விகளும், அதற்கான பதில்கள் கிடைக்க, கிடைக்க, விஷுவலாய் கிடைக்கும் அதிர்ச்சிகளும் அவரின் நடிப்பின் மீதான அபிப்ப்ராயத்தை மாற்றி விடுகிறது.


மூன்று எபிசோடுக்காக கொஞ்சமே கொஞ்சம் நீட்டிக்க பட்டிருப்பதாய் தோன்றினாலும், டெக்னிக்கலாய் அசத்தியிருக்கிறார்கள். அஹா இது போல எதுவுமே வந்ததில்லை என்பது போன்ற களம் இல்லை என்றாலும், ஒர் புதிய முயற்சி இந்த சீரீஸ் முழுவதும் இருக்கிறது. எந்த விதமான தீவிரவாத செயல்களையும் செய்யாமல் மாட்டிக் கொண்டவனின் கதை ஒன்றும். அவன் ஊமையாய் அலையும் இடங்களையும் பார்க்கும் போது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மாட்டிக் கொண்டு அல்லாடுகிறவர்கள் கண் முன் தோன்றி மறைகிறார்கள். சிரீஸ் முழுக்க ஆங்காங்கே சர்காசமாய் வரும் வசனங்கள் அரசுக்க் எதிராய் செயல்படும் விஷயங்கள் என்று சொல்லப்படும் விஷயங்கள் எல்லாம் பி.ஜே.பி அரசை மறைமுகமாய் எள்ளி நகையாடியிருப்பது போல தோன்றுகிறது.  பட். .விஷுவலாகவும், ஹாரர் கதை விரும்பிகளூக்கும் சுவாரஸ்யமான சீரீஸ் கவுல்.

Post a Comment

No comments: