பெட்ரோல் தாறு மாறாய் விலை ஏறிக் கொண்டிருந்த நேரம். பத்து நாட்களுக்கு மேல் காரை எடுக்கவில்லை. அவசரம் இல்லாமல் போக வேண்டிய வேலை இருந்ததால் காரை எடுக்கப் போனேன். காரின் ஆட்டோ லாக்கிங் சிஸ்டத்தில் இடது பக்கம் ஒர்க் ஆகவில்லை. என்னடா? என்று யோசித்து கொண்டே டாஷ்போர்டை திறந்த போது அதில் வைத்திருந்த பேப்பர்கள் எல்லாம் சுக்கல் சுக்கலாய் இருந்தது. எலி கடித்து ரெண்டொரு புழுக்கையையும் போட்டிருந்தது. காரினுள் எலியா? எப்படி? என்று யோசித்துக் கொண்டே காரிலிருந்து வெளியே வந்து ஒரு சுற்று காரை சுற்றிப் பார்த்தேன்.
வாட்ச்மேன் தெலுங்குக்காரர் “என்னா சார்?.”
“கார்ல எலி பூகுந்துருச்சுப் போல.. பேப்பரை எல்லாம் துண்டு துண்டா கடிச்சி வச்சிருக்கு” என்றேன்.
”ஆமா சார். ரேத்திரி பூரா குட்டிக் குட்டி எலிங்கு காரு மேல ஓடுதுங்க..இப்டிதான் என் வீட்டாண்ட ஒருத்தர் புது காரு. ஒரே நாத்தம் அடிக்குதேன்னு டிக்கிய தொறந்து பார்த்தா அழுகுன தக்காளி, முட்டை கோசு எல்லாம் போட்டு வச்சிருக்கு. வயரெல்லாக் கடிச்சி வச்சிருக்கு. பத்தாயிரம் ரூபாய் செலவு.” என்றார்.
ஒரு பக்க கதவு மட்டும் பிரச்சனை எனவே அதை சரி செய்ய ஜி.பி ரோடுக்கு போய் காட்டினேன். “ஒயரு மட்டும் போச்சுன்னா ஐநூறு ரூபா. மோட்டார் போச்சுன்னா.. 1500 என்றார். முதல் முறையாய் எனக்கு எலியைப் பற்றி கவலை வந்தது. திறந்து பார்த்து செக் செய்து “ஒயர் மட்டுமே” என்று சொல்லி “என்னா சார்.. எலி வந்திருக்குது. ரொம்ப டேஞ்சர் சார். அதுக்கு ஒரு மெடிசன் இருக்கு. அதை வாங்கி எலி உள்ளார பூருர வழியில கட்டி வச்சிரணும். அதுக்கு அப்புறம் வராது” என்றார்.
“அப்படியா விலை எவ்வளவு?”
“ஆயிரத்து எழுநூறு ரூபா சார்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு டப்பாவை எடுத்து வந்து காட்டினார். அதில் போடப்பட்டிருந்த எலியின் சைஸ் பார்த்த போது ‘கெத்க்’என இருந்தது. அத்தனாம் பெருசு. “டிஸ்கவுண்ட் எதுவும் கிடையாதா” என்றேன்.
“சார் விலை பாருங்க 3400. நான் டிஸ்கவுண்ட் ரேட் தான் சொன்னேன்” என்று சிரித்தார் கடைக்காரர்.
இத்தனாம் பெரிய டிஸ்கவுண்டை நான் இது வரை வாங்கியதேயில்லை. இருந்தாலும் ஒரு சின்ன எலிக்காக இவ்வளவு செலவு செய்வதா? என்று யோசித்து பொறவு வாங்கிக்கிறேன்’ என்று சொல்லி ஐநூறோட போகட்டும் ஆண்டவா” என்று வேண்டி வண்டியை கிளப்பினேன்.
ரத்திரி மீண்டும் வண்டியை கொண்டு வந்து விடும் போது ஒன்றுக்கு இரண்டு முறை நான் கார் வைக்கும் இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தேன். சிறிது நேரம் அங்கேயே சத்தமில்லாமல் இருந்துப் பார்த்தேன். எலி ஏதாவது வருகிறதா? என்று. ஒரு பெருச்சாளி என் காலருகே மிக சாவதானமாய் கடந்து போனது. பதறியடித்து எழுந்தேன். “சார்.. அது ஒண்ணியும் பண்ணாதுசார்.. வயசான எலி” என்று தைரியம் சொன்னார் தெலுங்கு வாட்ச்மேன். “உங்க வண்டில ஏறுறது சுண்டேலி சார். குட்டி குட்டி” என்று கையை குவித்து காட்டினார். அவர் காட்டிய சைஸில் எறும்புதான் இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றாலும், நம் வண்டியை பாதுக்காக்க இருக்கும் ஒரே ஆளை இழக்க விரும்பாமல். ஐம்பது ரூபாயை கொடுத்து, “எலி ஏதாச்சும் பக்கதுல வந்தா துறத்தி விடுங்க” என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அன்றைய இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலையில் போய் பார்த்தால் நிறைய எலிப் புழுக்கைகள் தெரிந்தது. ஒரு மாதிரி அசூசையானது. மீண்டும் க்ளீனிங். வண்டியை தெனம் எடுத்தா எலிக்கு பழக்கம் விட்டுப் போயிரும் என்றார் என் மனைவி. அன்றைக்குதான் மோடியை மிகவும் திட்டினேன். வேறு வழியில்லாமல் காரை எடுத்துக் கொண்டு போனேன். பார்க்கிற நண்பர்களிடமெல்லாம் ‘காருக்குள்ள எலி பூந்திருச்சு” என்று துக்கமாய் சொன்ன உடனேயே “இப்படித்தான் என் பிரண்ட் ஒருத்தர் காருல” என்று ஆளாளுக்கு எலி காருக்குள் பூகுந்ததை பற்றி கதை சொன்னார்கள். உடலெங்கும் வியர்வை பொங்க வைத்தது. இன்கம்மிங் அவுட்கோயிங் கால்களில் கூட நான் என் காரில் எலி புகுந்த கதை சொல்லாமல் விட்டதில்லை. மண்டை முழுக்க எலியே குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தது. கூகுளில் தேடிய போது அய்யாயிரத்துக்கு எல்லாம் மருந்து போட்டிருந்தார்கள். கீழே அதன் விமர்சனங்களை பார்த்த போது எலியால் பிரச்சனைக்குள்ளானவர்களில் நான் மட்டும் தனியானவன் அல்ல என்று புரிந்தது.
வழக்கமாய் காலையில் எடுக்கும் போது ரிவர்ஸ் எடுக்க வேண்டாம் என்று நேராக காரை விட்டிருப்பேன். இன்றைக்கு அதை மாற்றி விட்டால் எலி தடுமாற வாய்ப்பிருக்கிறது என்று ஒரு ஐடியா உதித்து. காரை மாற்றி விட்டேன். பக்கத்து கார் காரரின் வீட்டின் கதவை தட்டி “உங்க காருல எலி தொல்லை எதாச்சும் இருக்கா?” என்று கேட்டுவிட்டு வந்தேன். ‘இல்லையாம்” . என் காரை விட உசத்தியான கார். லக்சரி கார். அவர் காருக்குள் போகாமல் என் போன்ற ஏழை க்விட் காரை ஏன் எலி தேர்தெடுத்தது என்று மனம் வெதும்பிப் போனேன்.
அடுத்த நாள் காலையில் மீண்டும் காரை செக் செய்யப் போயிருந்தேன். வழக்கமாய் எலி கக்கா போகுமிடமெல்லாம் எதுவும் இல்லை. சக்ஸஸ். எலியை ஏமாற்றிவிட்டேன். என்று இறுமாந்திருந்த நேரம் மிக சில நிமிடங்களே. காரின் பின் சீட் கீழே நிறைய எலி கக்காக்கள். க்ளீனிங் என் கண்ணீரோடு.
ஜி.பி.ரோட்டில் சொன்ன மருந்தை வாங்கி வச்சிரலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். “சார்.. ரெண்டு நாளா எப்ப போன் பண்ணாலும் எலி எலின்னு இம்சை பண்ணிட்டேயிருந்தீங்க இல்லை. அதுக்கு ஒரு ரெமிடி நம்ம ப்ரெண்ட் யூஸ் பண்ணி சக்ஸஸ் ஆயிருக்கு” என்றார். மனதில் எலி பாஷாணத்தை வார்த்தார்.
“என்ன என்ன அது?’ என்றேன் ஆர்வத்துடன்.
”பொகையில சார். பொகையில பாக்கெட்ட வாங்கி எலி புழங்குற எடத்துல வச்சா எலி வராது” என்றார். பொகையில வாங்குறது எல்லாம் பெரிய மேட்டரா என்று நினைத்தது தவறு என்று புகையில வாங்க போகும் போதுதான் தெரிந்தது. பாம் உதிரி பொருட்களைக்கூட வாங்கிவிடலாம் போல புகையிலை வாங்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.
புகையிலை பொருட்களை அரசு தடை செய்திருக்கிறதாம். அதனால் விற்பதில்லை என்று கடையில் போய் கேட்ட மாத்திரத்தில் நிர்தாட்சண்யமாய் இல்லை என்றார்கள். வழக்கமாய் வாங்குகிறவர்கள் வந்து கேட்ட போது ஜாடையாய் கண் காட்டி எல்லாம் பேசினார்கள். அத்தனை கெடுபிடி. ஒரு வழியாய் நண்பர் ஒருவரின் இன்ப்ளூயன்ஸை வைத்து ரெண்டு பாக்கெட் பன்னீர் புகையிலை வாங்கி டாஷ்போர்டில் வைத்துவிட்டேன். தொடர்ந்து ரெண்டு நாள் கண்காணிப்பு வேறு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எலி கக்காக்கள் தெரிந்தது. அது காய்ந்திருக்கும் நிலையை வைத்து புதுசா பழசா? என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு எலிப் புழுக்கை ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டேன். மேலும் நான்கு புகையிலை பாக்கெட்டை வாங்கி எலி வரும் வழிக்கான எடங்களில் எல்லாம் கட்டி தொங்க விட்டு விட்டேன். எலி வருவதில்ல.
நேற்று நண்பர் ஒருவர் போன் செய்தார். ‘சார் வண்டிக்குள்ள எலி “ என்று புலம்ப ஆர்மபித்தார். “டோண்ட் ஒர்ரி. நான் ஹெல்ப் பண்ணுறேன்’ என்றேன். எலி மூர்த்தி சின்னதாய் இருந்தாலும் கீர்த்தி பெருசுதான்.
Post a Comment
1 comment:
சந்தேகம் ...
புகையிலை என்றால் இப்போது விற்கும் HANS மாதிரியான குட்க்காவா ?
Post a Comment