Article 15
ஆயுஷ்மான்
குரானா. இந்தி திரையுலகில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஹீரோ. அதற்கு காரணம் இவர் தெரிந்தெடுக்கும்
கதைகள். இவரது முதல் படமே கொஞ்சம் களேபரமான கதைக்களம் கொண்டதுதான். விந்து தானம் செய்கிறவரின்
கதை. அதில் ஆரம்பித்து தொடர் வெற்றியில் இருக்கிற ஒர் நம்பிக்கைக்குறிய நாயகனாய் நான்கு
ஹிட்டுக்கு பிறகு வரும் படம். இந்த ஆர்டிக்கள் 15. ஜாதியை வைத்து பாகுபாடு காட்டி ஒதுக்கி
வைப்பது இந்திய அரசியல் அமைப்பின் படி குற்றம் என்றாலும் நம் நாட்டில் ஜாதி எப்படி
புரையோடியிருக்கிறது என்பதை 2014ல் பதூனில் நடந்த கற்பழிப்பு வழக்கை அடிப்படையாய் வைத்து
எடுக்கப்பட்ட மிகவும் தைரியமாய் சொல்லப்பட்டிருக்கும் கதை.
மூன்று
ரூபாய் கூலி அதிகம் கேட்டு போராட்டம் செய்ததற்காக இளம் பெண்கள் மூன்று பேர் கேங் ரேப்
செய்யப்பட்டு அதில் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள். இன்னொரு பெண்ணை காணவில்லை. அவர்களை
ஆணவக்கொலை செய்து தூக்கிலிட்டதாய் கேஸை ஜோடித்து அவர்களது பெற்றோர்கள் மீது கேஸ் போட்டு
முடிக்க பார்க்கிறார்கள். லண்டனின் படித்த அப்பாவின் ஆசைக்காக இந்தியாவில் பணி செய்ய
வந்து டெல்லியில் நோ சொன்னதினால் இந்த கிராமத்துக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு வருகிறார்
ஆயூஷ்மான் குரானா. அவர் வந்த மாத்திரத்தில் இந்த ஆணவக் கொலை கேஸ் வர, இது ஆணவ கொலையில்லை
என்று புரிந்து கொள்கிறார். ஒரிஜினல் குற்றவாளியை பிடிக்கப் போனால் ஏகப்பட்ட ஜாதி உள்
பிரச்சனைகள். அரசாங்க தலையீடுகள். உடன் வேலை செய்கிறவர்களிடையே இருக்கும் ஜாதீய பிரிவினைகள்.
தாழ்த்தப்பட்ட்வர்களின் மீது கட்டவழித்துவிடும் அதிகார துஷ்பிரயோகம். என எல்லாவற்றையும்
கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள்.
“வெளிநாட்டில்
இருக்கும் போது இந்தியா, தாஜ்மகால் என பெருமை பேசிட்டிருந்தேன். இங்க வந்து பார்க்கும்
போது பெருமை பட முடியலை”
”பகுஜனு
சொல்றாங்க. ஹரிஜன்னு சொல்றாங்க. ஆனா இந்த தேசத்தின் ஜன்ங்களா எங்களை எப்ப ஏத்துப்பாங்க”
“நியாயத்துக்காக
எப்போதும் கெஞ்சாதே”
”உங்களுக்கு
எல்லாம் ஒரு ஹீரோ தேவைப்படறான் இல்லை அதிதி?. இல்லை அயான் அவங்களுக்கு ஒரு ஹீரோ வருவான்னு
வெய்ட் பண்ணக்கூடாது”
“அவங்களையெல்லாம்
வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும் சார். இல்லாட்டி வேலை கெட்டிரும்”
”எது
அவங்க இடம்?”
“நாம
சொல்லி வைக்குற இடம்”
”மூணு
ரூபா அதிகம் கூலி கேட்டதுனால மூணு பெண்கள் கடத்தப்பட்டு கேங்க் ரேப் செய்யப்பட்டிருக்காங்க.
நீங்க குடிக்குற மினரல் வாட்டர்ல ரெண்டு சிப் வாங்க முடியும்’
இப்படியான
வசனங்களே சொல்லும் படத்தின் காத்திரத்தைப் பற்றி.
ஜாதியை
ஒழித்துவிட்டோம் என்று அரசியல் கட்சிகள் கூவினாலும் தேர்தல் காலங்களில் அவர்கள் ஜாதியை
வைத்து செய்யும் அரசியல் டகால்டிகளையும், பேச்சுகக்ளையும் தோலுரிக்கும் தைரியம். வடநாட்டில்
ஜாதி பாகுபாடு சமூதாயத்தை எத்தனை சீரழித்திருக்கிறது என்பதையும், ” இங்கே எல்லாம் அதது
சரியா போய்ட்டிருக்கு. அத மாத்துறேனு குழப்பாதீங்க” என்று சொல்லும் போது அயுஷ்மான்
குரானாவின் கண்களில் தெரியும் அடக்கப்பட்ட கோபம் தான் நமக்கும்.
ஸ்டேஷனில்
உள்ள அத்துனை போலீஸ்காரர்களையும் அவரவர் ஜாதி குறித்து கேட்கும் போது அதில் ஒருவர்
தலித். நீங்களும் காணாமல் போனவர்களின் ஜாதியும் ஒண்ணா என்று கேட்க, இல்லை அவர்கள் என்
ஜாதியைவிட கீழானவர்கள் என்று பெருமையாய் சொல்லுவதை காணக் சகிக்காமல் கத்துமிடம். கூட்டு
வண்புணர்வில் ஈடுபட்டது தன் பாதுகாவன் கூட என்று தெரியும் போது கிடைக்கும் அதிர்ச்சியை
விட அவனது சகோதரியை வீட்டு சமையலுக்கு வைத்திருக்க, அவளிடம் சகோதரனைப் பற்றி அவன் செய்த
காரியத்தைப் பற்றி சொல்லுமிடம். கற்பழிப்பு வழக்கில் மாட்டிய போலீஸ் அதிகாரி அவனது
ஜுனியர் தலித் போலீஸ்காரர் அழைத்துப் போக வரும் போதும் “கக்கூஸ் கழுவ வேண்டிய நீயெல்லாம்
போலீஸ் ட்ரஸ் போட்டுட்டு எனக்கு சமமா நிக்குற திமிரா?” என்று கேட்க அதற்கு அவர் கொடுக்கும்
தண்டனை சாட்டையடி. மொத்த தியேட்டரும் கைத்தட்டி கொண்டாடுமிடம்.
மிக
இயல்பான அண்டர் ப்ளே நடிப்பு ஆயூஷ்மான் குரானாவுடயது.
படத்தின்
பெரிய பலம் நடிகர்களும், அவர்களுக்கான பாத்திரத் தேர்வுகளும். பணிக்கர் கேரக்டரில்
நாசரின் ஹிந்தியும் ஆட்டிட்டியூடும் அட்டகாசம்.
படம் முழுக்க, க்ளாஸ் எடுக்காமல் புரட்சி பேசாமல் மெல்ல ஒரு புரட்சி விதையை
நட்டுக் கொண்டே போகிறார்கள் இந்த திரைக்கதை எழுத்தாளர்கள். அனுபவ் சின்ஹாவின் தேர்ந்த
இயக்கம் என அனைவரும் சேர்ந்து ஒர் சிறந்த படத்தை தந்திருக்கிறார்கள்.
இப்படத்தில்
ஜாதிய பாகுபாடைக் குறித்து கவலைப்படும் உயர்ஜாதி இளைஞனின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பதை
நம் தமிழக இணையர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி ஒழிப்பைப் பற்றி பேச தங்கள் ஜாதியிலிருந்து ஒருவர் சொன்னால் தான்
அது காவியமாய் கொண்டாடப்படும் என்று நினைப்பதும் கூட ஆர்ட்டிக்கள் 15 படி ஜாதி பாகுபாடு
பார்ப்பதாய் சட்டம் இயற்ற வேண்டும்
Post a Comment
1 comment:
அன்புள்ள கேபிள் சங்கர், வணக்கம். நீண்ட நட்களுக்குப் பிறகு தங்கள் தளத்திற்கு வருகிறேன். அனாயாசமாக எழுதியிருக்கிறீர்கள் இந்த விமர்சனத்தை. ஜாதி என்னும் ஆயுதத்தை வைத்துக்கொண்டு ஐம்பதாண்டுகளாக தேர்தல் வேட்டையாடிவரும் அரசியல்வாதிகளும் அவர்களின் அடிவருடிகளாகவே ஆகிவிட்ட அதிகார வர்க்கமும் இந்த நாட்டின் எதிர்காலத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள். இதை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தும் சக்தி சினிமாவுக்கு மட்டுமே உண்டு. ஆனால் அதற்கான பணமும் தைரியமும் கொண்ட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களா என்பதே கேள்வி.
- நியூ ஜெர்சியில் இருந்து.
Post a Comment