இந்தியில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வெப்சீரீஸுகளுக்கு மத்தியில் தமிழில் சொல்லிக் கொள்ளும் படியான வெப்சீரீஸ் என்றால் அது ஆட்டோ சங்கர் மட்டுமே. தொடர்ந்து பல தமிழ் வெப் சீரீஸ்கள் வந்தாலும் அவைகள் எல்லாமே டிவி சேனலில் காசு வாங்கிக் கொண்டு பணத்தை சுருட்டி எடுத்துக்கொடுத்தது போல் தான் இருக்கிறதே தவிர, வெப் சீரீஸுக்கான மேக்கிங், எழுத்து என எந்த மெனக்கெடலும் இல்லை. பெரிய நிறுவனங்கள். பெரிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் ஒன்றும் ஒப்பேற மாட்டேன் என்கிறது தமிழ் வெப் சீரீஸ் உலகம். அந்த வகையில் புதியதாய் வந்திருக்கும் இந்த இரு துருவம் வெப் சீரீஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
இன்ஸ்பெக்டர் விக்டரின் மனைவி காணாமல் போய் ஆறு மாதமாகிறது. அவனுக்கு ஒரே மகள். மனைவியை அவர் கொலை செய்துவிட்டு காணாமல் நடிக்கிறார் என்று துறை சார்ந்த விசாரணை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த பிரச்சனையால் அவரால் தன் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அந்நேரத்தில் நகரில் ஒர் கொலை நடை பெறுகிறது. அது தொடர் கொலையாய் மாறுகிறது. தொடர் கொலை செய்பவன் யார்? அவன் ஏன் இப்படி செய்கிறான்? அவனை பிடித்தார்களா? இல்லையா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த இரு துருவம்.
சுவாரஸ்யமான லைன் தான். அதை ஆரம்பித்த விதமும் சுவாரஸ்யம் தான். கொலைகாரன் வேண்டுமென்றே ஒர் தடயத்தை திருக்குறள் மூலமாய் விட்டுச் செல்வதும், அதை நோக்கி விசாரணையை நகர்த்துவதும் என கதை போகிறது. ஒவ்வொரு எபிசோடு ஆரம்பமும் முடிவும் அடுத்த எபிசோடை முழுவதும் பார்க்க வைக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் நடுவில் வரும் காட்சிகள். அதில் வரும் வசனங்கள் என பல அமெச்சூர் தனமாய் இருக்கிறது.
குறிப்பாய் உதவி ஆய்வாளராய் வரும் அப்துல் கேரக்டர் அபூர்வ சகோதர்கள் சிவாஜி போல எல்லாவற்றுக்கும் ஹீரோவை புகழ் பாடி சூப்பர் சார்.. சூப்பர் சார் என்பது காமெடி என்று நினைத்தார்களோ என்னவோ? ஒர்க்கவுட் ஆகவில்லை.
நந்தாவின் நடிப்பு என்று எதையும் ஸ்பெஷலாய் சொல்ல முடியாது. ஏனென்றால் இவருக்கென்றே வடிவமைத்த பாத்திரம். காதல் காட்சிகளில் கூட இறுகிய முகத்தில் சிரிப்பில்லாமல் நடித்துபழகும் இவருக்கு பொண்டாட்டியை தொலைத்துவிட்டு கொலைகாரனை தேடும் போலீஸ் ஆபீஸர். விடுவாரா? அதே இறுகிய முகத்துடனான ரியாக்ஷன். பட் இந்த கேரக்டருக்கு பழுதில்லை.
ஆங்காங்கே வரும் மாண்டேஜ் ஏரியல் ஷாட்கள் சுவாரஸ்யம். ஒளிப்பதிவாளர் ராஜாவின் ஒர்க் சிறப்பு. எழுதி இயக்கியவர் சரவணன். இம்மாதிரியான கொலைகாரனை தேடும் கதைகளில் கண்டுபிடிப்பது என்பது சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்க வேண்டும். இங்கே பல கண்டுபிடிப்புகள் இவர்கள் வசனங்கள் மூலமாகவே சொல்லப்படுவதும், மிகச் சாதாரணமாய் கொலைகாரன் கண்டுபிடிக்கப்படுவதும் பெரிய மைனஸ். புத்திசாலித்தனமான திரைக்கதையும் எழுத்தும் தேவையாய் இருக்கிற இடத்தில் எல்லாம் சறுக்கியிருக்கிறார்.
சோனி லிவ் எனும் இணைய தளத்தில் இந்த வெப் சீரீஸ் ஒளிபரப்பாகிறது. இப்போதைக்கு விளம்பரங்களோடு இலவசமாய். ஒன்றும் பெரிய மோசமில்லை எனும் லிஸ்ட்டில் நிச்சயம் வைக்கலாம்.