Thottal Thodarum

Feb 27, 2020

ஐ லவ் யூ மேன் - சுஜாதா


24 சலனங்களின் எண் புத்தகம் வெளியானதும், பரவலாய் சுஜாதாவின் கனவு தொழிற்சாலையை விடவும் சிறந்த நாவல் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதோ இன்னொரு சுஜாதா என்ற விமர்சனமும் வந்தது. இவருக்கே தனி சுவாரஸ்ய நடை இருக்க எதற்கு சுஜாதாவை ஆங்காங்கே பிரதியெடுக்கிறார் என்று கூட நண்பர் ஒருவர் விமர்சித்திருந்தார். இவனெல்லாம் சுஜாதாவா? சும்மா ஹம்பக். என்று இன்னொரு பக்கம் வசை பாடியும் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எதுவும் மண்டையில் ஏறவே இல்லை.

முதல் சிறுகதையான எங்கிருந்தோ வந்தாள் விகடனில் வெளியான போது ஆசிரியர் கண்ணன் படித்துவிட்டு பழைய சுஜாதா மாதிரி இருக்குனு சொன்னாரு என்று சொன்னார்கள். உண்மையோ இல்லையோ நூறடி பறந்தேன். இதோட எழுதவே வேண்டாம் என்று நினைத்தேன். அத்தனை உற்சாகத்துக்கான காரணம் சுஜாதா. சுஜாதாவை காப்பியடிக்கிறான் என்று என்னை குற்றம் சாட்டினால் வாய் நிறை பல்லாய் நன்றி சொல்லுவேன். அவரை காப்பியடிப்பது என்பது அத்தனை சுலபமான விஷயமா?. காப்பியடிப்பதாய் கனவு வேண்டுமானால் காணலாம்.

நான் எழுதுகிறேன். படிக்கிறேன். என் ரசனை மேம்பட்டிருக்கிறது இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் எண்ணங்களில் இளமையாய் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் சுஜாதா.

இன்றைய கணக்கிற்கு சுமார் 66 சிறுகதைகள், ஒரு குறுநாவல், மூன்று நாவல்கள், நான்கு திரைக்கதைகள், 4 படங்களுக்கு வசனம், மொத்தமாய் 18 புத்தகங்கள் அதுவும் 2010 லிருந்து 2019க்குள் எழுதியிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சுஜாதாவை வணங்காமல் இருக்க முடியாது. எனக்கான ஒரே இன்ஸ்பிரேஷன் சுஜாதா.

சமீபத்தில் நான் எழுதும் ஒர் திரைக்கதையில் ஒரே ஒரு சின்ன தகவலை ஒர் வசனம் மூலமாய், கதைக்கு சம்பந்தப்பட்ட ஆனால் காட்சிக்கு அவ்வளவாய் முக்கியமில்லாத ஒர் தகவலை நுழைத்தேன். அது தேவையா இல்லையா? என்று விவாதம் எழுந்த போது உதவி இயக்குனர் என்னத்துக்குடா இத்தனை சண்டை என்று அதை பற்றி உடனே தேடி கண்டு பிடித்து அதன் வீரியத்தைப் பற்றி சொல்ல, அது இருக்கட்டும் நாம பேச வேண்டிய விஷயம் தான் என்று ஒத்துக் கொண்டார்கள். இதற்கு காரணம் சுஜாதா. போகிற போக்கில் நான்கைந்து தகவல்களை ஆங்காங்கே சின்னதாய் நம்மிடம் சொல்லிவிட்டு, புரிஞ்சவன் பிஸ்தா என்கிற ரீதியில் போய்க் கொண்டேயிருப்பார். புரியணும்னா தேடணும். தேடுறவன் அடுத்தகட்டத்துக்கு நகர்வான்.

விமானத்தின் ரெண்டு இன்ஜின்களில் ஒன்றில் குண்டு பாய்ந்துவிட்டால் என்னவாகும் என்று ஒர் நாவலில் உறுத்தாமல் விளக்கியிருந்தார். அன்றைய தேதிக்கு நான் அதைப் பற்றி தேடி படித்த புத்தகங்கள் நிறைய. நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்ததற்கு காரணம் கூட அன்றைக்கு தேடியதால் தானோ என்னவோ?.

அவர் மூலமாய்த் தான் சுரதாவை, மனுஷ்யபுத்திரனை, நா. முத்துகுமாரை, அசோக மித்ரனை, கவிஞர் மீராவை, கவிதைகளை, ஹைக்கூக்களை, சில்வியா ப்ளாத்தை, பல ஆங்கில எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் என்று என் அறிவுத் தேடலுக்கான விதையை விதைத்தது சுஜாதா.

இன்றைக்கு பிரபல இயக்குனர்களாய் இருக்கும் பல குறும்பட இயக்குனர்களின் முதல் படத்திற்கு நான் விமர்சனம் எழுதியிருக்கிறேன். வெளியிட்டு விழாக்களில் கலந்து கொண்டு வெளியிட்டிருக்கிறேன். பல குறும்பட இயக்குனர்களின் டார்லிங்காவும், அதே நேரத்தில் டெரராகவும் இருந்து கொண்டிருக்கிறேன். பத்திரிக்கைகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். என் சிறுகதைகளை அவர்களின் குறும்படங்களுக்காக எழுதிக் கொடுத்திருக்கிறேன். காரணம் சுஜாதா. புதியவர்களை, புதியனவைகளை, சிறந்தவகைக்களைக் கொண்டாடு.

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து கமலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது என் புத்தகங்களை கொடுத்தேன். என்னைப் பற்றிய சிறு குறிப்பு போல அறிமுகம் செய்தார்கள். தனியே மதியம் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்த கமலஹாசன் என்னைப் பற்றி மேலும் கேட்க, இயக்குனர். நல்ல ரைட்டர் சுஜாதா மாதிரி என்று சொல்ல சட்டென நிமிர்ந்து பார்த்து புத்தகங்களை ஒரு முறை பார்த்தாராம். இந்த பார்வை நான் எழுதியவற்றை படித்ததால் அல்ல, தலைவன் சுஜாதாவின் பெயரைக் கேட்டதினால். இன்றைக்கு கட்சி அலுவலகத்திற்குள் பல இளைஞர்கள் படிக்கும் புத்தகம் என் புத்தகமாய் இருக்கிறது குறிந்து சொல்லும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

உலகத்தில் எதிர்காலத்தில் ஐந்து நிமிஷம் எல்லோரு புகழின் உச்சியில் இருப்பார்கள் என்றார். டிக்டாக் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. சினிமா வியாபாரம் புத்தகம் எழுதும் போது 2010. அதில் இன்னும் பத்து வருடங்களில் சினிமாவை இண்டர்நெட்டின் மூலமாய்த்தான் பார்ப்பீர்கள் என்று எழுதியிருந்தேன். அன்றைக்கு இந்த ப்ராட்பேண்ட் கந்தாயங்களே இல்லாத நிலையில் ஹேஹே என்று சிரித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு மொபைலில் அமேசான் ப்ரைமையும், நெட்ப்ள்க்ஸையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாய் கிரிக்கெட் மேட்ச்கள். எல்லாவற்றையும் ஃபோர் சீ செய்து பார்க்க கற்றுக் கொடுத்தது சுஜாதா.
என்னடா சுஜாதாவைப் பற்றி எழுதறேன்னு சொல்லிட்டு, நான் அதை செய்தேன் இதை செய்தேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறானே என்று நினைக்கலாம். சுஜாதா நல்லா எழுதுவாரு. நல்லவரு வல்லவருனு புதுசா எழுத என்ன இருக்கு?. என்னைப் போன்றவர்கள் அவரின் இன்ஸ்பிரேஷனில் ஏதோ ஒரு சின்ன துளி சாதித்திருக்கிறேன் என்று உணர்வது தானே? சுஜாதாவின் வெற்றி. இது என் வெற்றியல்ல. இன்னொரு தலைமுறையை தயார்படுத்தியிருக்கும் சுஜாதாவின் வெற்றி.

எத்தனையோ முறை சந்திக்க வாய்ப்பிருந்தும் நான் அவரை சந்திக்க முற்படவேயில்லை. ஒரே ஒரு முறை ஒர் திருமண ரிஷப்ஷனில் பஃபே ப்ளேட் சகிதமாய், வணக்கம் சொல்லி, நான் உங்க ஃபேன் என்றிருக்கிறேன். அவரும் லட்சோப லட்ச ஃபேன்களுக்கு சிரித்தார்ப் போலவே எனக்கும் சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டார். அவர் மறைந்த போது என்னால் அவரை இறந்தவராய் பார்க்க மனமேயில்லை. வருத்தமும் இல்லை. காரணம் அவர் என்னைப் பொறுத்தவரை மறையவேயில்லை. சுஜாதா லவ் யூ மேன்.

கேபிள் சங்கர்