சமீபத்தில் எங்கள் குழு லொக்கேஷன் பார்க்க போன போது வெஜிட்டேரியனே அப்படி இருந்தது என்று சிலாகித்துக் கொண்டிருக்க, இங்கேயிருந்து அடையார் வரை போக வேண்டுமே என்று சோம்பேறித்தனத்தில் போகாமல் இருந்தேன். சென்ற வாரம் ஷூட்டிங் ஓ.எம்.ஆரில் என்ற போது சரி ஒரு நடை போய்விட்டு வருவோம் என நண்பர் ஜொரோமை கூப்பிட்ட போது முடியாமல் போக, கோவளம் ஷூட் முடிந்து வரும் போது நல்ல பசி. சரி இன்றைக்கு போய் விட வேண்டியதுதான் என்று போய் சேர்தேன். உள்ளே நுழையும் போதே நான்கைந்து நபர்கள் வணக்கம் சொல்லி பழைய ஈரோடு குப்பண்ணாவில் வரவேற்பது போல வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள். உள்ளே சுழன்ற மசாலா மணம் அட்டகாசமாய் இருக்க, சாமித்துரை எனும் நபர் என்னிடம் வந்து ஆர்டர் கேட்க ஆரம்பித்தார். ஒரு இட்லி தருவீங்களா? என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்தார். பிறகு நான் இன்னார் இன்னார் என்று சொன்னதும். “சார்.. அப்ப நான் ரெகமெண்ட் செய்யுற அயிட்டங்களை ஒரு டேஸ்ட் பாருங்க” என்று சொல்லிவிட்டு கோழி ரசத்தை ஆர்டர் செய்தார்.
நல்ல மிளகு போட்ட கோழி ரசம் ஆயிரம் கொரானாவை துறத்திவிடும் போல. அத்தனை காரம், மணத்துடன், கோழி ரசத்துடன் அட்டகாமசாமாய் ஆரம்பித்தது.
அடுத்ததாய்.. நான் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த பிச்சிப் போட்டக் கோழியை எடுத்து வந்திருந்தார்கள். வழக்கமாய் சின்னச் சின்னப் பீசாய் இருக்கும் பிச்சிப் போட்டக் கோழியை இவர்கள் நான்கைந்து பெரிய துண்டுகளாகவும், இரண்டு எலும்புத் துண்டுகளோடு எடுத்துவர, நல்ல பெப்பர் தூக்கலாய் மசாலாவில் புரட்டப்பட்ட பிச்சிப்போட்ட கோழி. நல்ல ஜூஸியாய், காரமாய் எலும்புகளை உறிஞ்சும் போது மசாலாவோடு மிகச் சிறப்பானதாய் அமைந்தது.
அடுத்ததாய் அனுப்பிய அயிட்டம் வித்யாசமான அயிட்டம். தூள் பரோட்டா. அதென்னடா தூள் பரோட்டா என்று கேட்ட போது பரோட்டாவை பொரித்து, அதை தூளாக்கி, அதன் மேல் சிக்கன் கிரேவியையும், கலக்கியாய் முட்டையை அதன் மேல் ஊற்றிக் கொடுக்கிறார்கள். ஆஸமான காம்பினேஷன். நிச்சயம் ஷுயூர் ஹிட் ரகம். டோண்ட் மிஸ்
சீரகசம்பாவில் பிரியாணி இருப்பதாய் சொல்ல, தம்பி எனக்கு டேஸ்டுக்கு மட்டும் ஒரு ஸ்பூன் கொடு என்று கேட்டேன். நல்ல மணம் குணத்தோடான சின்ன பீஸுகளோடு ரெண்டு ஸ்பூன் கொடுத்தார்கள். நல்ல சுவை.மணம்.
ஒரு இட்லி கேட்ட இடத்தில் இரண்டு இட்லியோடும், ஒரு கப் மீன் குழம்போடும் தம்பி சாமித்துரை வந்தார். எதுக்கு தம்பி இரண்டு இட்லி என்று கேட்ட போது வேண்டியத சாப்பிடுங்க என்றார். இட்லிக்கு தொட்டுக் கொள்ள வேர்கடலை சட்னி, மற்றும் புதினா சட்னியும் வர, ஒரு இட்லியில் பாதியை அதற்கு தாரை வார்த்தேன். அட்டகாசமான சட்னியும், சுலப விள்ளல் இட்லியும் அட அட அட. சரி ஆனது ஆச்சு என்று மிச்சம் உள்ள அரை இட்லிக்கு மீன் குழம்பை ஊற்றிக் கொண்டேன். சின்ன வெங்காயம், பூண்டு எல்லாம் போட்டு, நன்கு தாளிக்கப்பட்ட விரால் மீன் குழம்பு. ஒரு சின்ன பீஸோடு இருக்க, முதலில் மீன் போன மாத்திரத்தில் கொஞ்சம் கூட வாடையில்லாத மீன் குழம்பும் மிச்ச துள்ளல் விள்ளல் இட்லியை பிணைந்து அடித்தேன். டிவைன். அப்புறம் என்ன மிச்ச ஒரு இட்லியையும் அதே மீன் குழம்போடு சுவாஹா செய்துவிட்டு மிச்சமிருந்த மீன் குழம்பை ஒரு ஸ்பூனில் ஊற்றி குடித்துவிட்டு கிளம்பினேன். மொத்தமாய் இத்தனைக்கும் சேர்த்து 400 ரூபாய் கிட்டத்தான் ஆனது.
மதியம் மீல்ஸ் வெஜ் தானாம். உடன் வேண்டுமானால் மட்டன், சிக்கன், மீன் குழம்பு வகைகள் வாங்கிக் கொள்ளலாமாம். எல்லாமே சல்லீசான விலைதான் எழுபது என்பது ரூபாய்க்குள்தான். நிச்சயம் அட்டகாசமான ஒர் கொங்கு சமையலை சுவைக்க ஈரோடு அம்மன் மெஸ்ஸுக்கு ஒரு நடை போய்ட்டு வந்திருங்க.
Erode Amman Mess
Address: NO-163 SMS Building,LB Road,Near Adayar Police Station,Adayar Landmark, behind Sony Showroom, Chennai, Tamil Nadu 600041