சாரதியின் இறுதி ஊர்வலத்தில் பழைய கல்லூரி நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள். 30 வருட கல்லூரி நட்புகளின் சந்திப்புக்கான இடமாய் இல்லாவிட்டாலும், “நம்ம செட்டுல யார் யாரெல்லாம் உயிரோட இருக்காங்க?” என்று பாசிட்டிவாய் பேசிக் கொண்டு வந்தார்கள். கூட்டத்தில் ஒருவனைப் பார்த்த போது லேசாய் அடிவயிற்றில் கத்திக்குத்து. உடன் நடந்து வந்து கொண்டிருந்த மணியை அழைத்து “அவனைப் பார்த்தா நம்ம செட் சங்கரன் போல இல்லை?” என்று கேட்டேன். மணி அவனை உற்றுப் பார்த்தான். எனக்கு அவன் தான் என்று உறுதியாய் மனதில் மணி அடித்தது. வித்யாசமான முகம் அவனுடயது. சின்ன உடம்பில் கொஞ்சம் பெரிய தலை. அதை கொஞ்சம் கம்பரசர் கொண்டு நசுக்கியதைப் போல மண்டை நசுங்கி, மூக்கு மட்டும் பிரதானமாய் நீண்டு, நொடிக்கொருதரம் இடது தோளை ஒரு மாதிரி கரண்ட் ஷாக் அடித்தார்ப் போல விதிர்த்து கொள்ளும் பாடி லேங்குவேஜோடு, ப்ரொபைலில் பார்த்தால் கொஞ்சம் கருடனைப் போல தெரிவான். இத்தனை வருடம் கழித்து அவனைப் பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை. அதுவும் சாரதியின் இறுதி ஊர்வலத்தில். ஆனால் இந்தக்கதை சாரதியைப் பற்றி மட்டும் அல்ல.
வீட்டின்
காலிங் பெல் அடித்த சத்தம் கேட்டு மாடியிலிருந்து எட்டிப் பார்த்தேன். பிரகாஷ் நின்றிருந்தான்.
“என்னாடா? இந்நேரத்துல?” என்று கேட்டபடி பனியனோடு இறங்கி வந்தேன். என்னுடன் பாலிடெக்னிக்கில் எலக்ட்ரானிக்ஸ் படித்தவன்.
நான் மெக்கானிக்கல். எல்லோரும் ஒரே ஏரியா என்பதால் நெருக்கம் அதிகம்.
“மச்சி
நம்ம சங்கரன் ஆபீஸுல ஏதோ டிவி டெக்கெல்லாம் வாடகைக்கு வேணுமாம் பல்க் ஆர்டரு. உன்னை
கூட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றான்.
“எங்க
இருக்கான் அவன்?”
“மெயின்
ரோட்டுல அவங்க பாஸு எல்லாம் வந்திருக்காங்க. அவங்க கூட இருக்கான் உன் கடை கிட்ட. உன்னை
அழைச்சுட்டு வரச் சொன்னான்” என்றதும் “இரு சட்டை போட்டுட்டு வர்றேன்”
என்று வீட்டில் கூட ஏதும் சொல்லாமல் சட்டைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன்.
மெக்கானிக்கல்
இன்ஜினியரிங் படித்திருந்தாலும் ஏனோ எனக்கு எண்டர்டெயின்மெண்ட், டெக்னாலஜி ரீதியான
விஷயங்கள் தான் பிடித்திருக்க, அப்போதைய இன் திங்கான வீடியோ பார்லர் ஆரம்பித்திருந்தேன்.
என் வீட்டிலிருந்து ரெண்டு தெரு தள்ளித்தான் என் பார்லர். மூன்று மாதம் முன்பு அரியர்ஸ்
எழுத போன போது சங்கரனிடன் இப்படியான ஒரு பார்லர் வைத்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.
ஒரு வேளை கடை அட்ரஸ் மட்டும் கொடுத்திருந்தேனோ? என்று யோசனையோடு பிரகாஷுடன் நடந்து
சென்றேன். எப்போது சின்ன டிவிஎஸ் 50யில் வரும் பிரகாஷ் ஏன் நடந்து வந்தான்? என்று மனதில்
எழுந்த கேள்வியோடு அவன் பின்னே நடந்து போனேன். மெயின் ரோட்டில் என் பார்லரின் வாசலில்
ஒரு கருப்பு கண்ணாடி ஏற்றிய அம்பாஸிட்டர் கார்
நின்று கொண்டிருந்தது. கதவை திறந்து கொண்டு சங்கரன் வெளியே வந்து என்னிடம் கூட பேசாமல்
பிரகாஷிடம் ‘தேங்க்ஸ் மச்சி” என்றான். பிரகாஷ்
சொல்லிக் கொள்ளாமல் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் 50ஐ தள்ளி ஸ்டார்ட் பண்ணி,
என்னைப் பார்த்துக் கொண்டே கிட்டத்தட்ட ஓடினான் என்று சொல்ல வேண்டும். ஏனென்று யோசித்துக்
கொண்டிருக்கும் போதே, காரின் மற்ற கதவுகளைத் திறந்து இரண்டு ஆஜானுபாகுவான ஆட்கள் இறங்கி,
எனக்கு பக்கத்தில் நின்று கொண்டார்கள்.
“என்
பாஸு மச்சி. காருல உக்காரு என்ன வேணுங்கிறத சொல்லுறேன்” என்று சொன்ன மாத்திரத்தில்
என்னை வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு, கதவுகள் பட் பட்டென சாத்திக் கொண்டு வண்டி
விருட்டென கிளம்பியது. ஒரு கணம். கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது என்று எழுதினால் அது
ஒரு அபத்த வாக்கியமாய் தெரியும். ஆனால் அப்படித்தான் ஆனது.
சற்றே
தெளிந்து வண்டியில் யார்? யார்? இருக்கிறார்கள்
என்று பார்த்தேன். முன் வரிசையில் இரண்டு பேரும், டிரைவரும் அமர்ந்திருக்க, பின் வரிசையில்
நான், சங்கரன், எங்கள் இரண்டு பேர் பக்கத்திலும் ஆஜானுபாகர்கள். வண்டி சைதாப்பேட்டை
மார்கெட் ரோட்டின் ட்ராபிக்கில் சென்று கொண்டிருந்தது. எல்லோரும் அமைதியாய் இருந்தார்கள். மனதில் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு “யார் நீங்க? எங்க கூட்டிட்டு போறீங்க? சொல்லுங்க” என்று லேசான
அதட்டலுடன் கேட்டேன். முன் பக்கத்து ஆள் ஒருவன் என் பக்கமாய் திரும்பி என் முகத்தின்
எதிரே ஒரு கார்ட்டைக் காட்ட, அதில் சிபிசிஐடி என்று போட்டு ஏதோ பேர் போட்டிருந்தது.
உடலெல்லாம் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. “அலோ.. என்னை என் வீட்டுல கொண்டு போய் விடுங்க.
எங்க தாத்தா போலீஸ் தெரியுமா? நான் கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்” என்று ரூல்ஸ் பேச ஆரம்பித்தேன்.
நான் அப்போதே அப்படித்தான்.
“இரு
மச்சி சொல்வாங்க” என்றான் சங்கரன் பதட்டமில்லாமல்.
என்
கேள்விக்கு பதில் சொல்லாம்ல சைதாப்பேட்டை மர்கெட் ரோட்டிலிருந்து மேற்கு மாம்பலம் வழியாய்
வண்டி திரும்ப, “எப்படிடா? இதானே ரூட்டு?” என்று சங்கரனைப் பார்த்து மிரட்டலாய் முன்
சீட் சிபிசிஐடி கேட்க, “லெப்ட் போய் முதல் ரைட் சார். ரண்டாவது வீடு அவனுது” என்றன
சங்கரன்.
அவன்
சொன்னது சாரதியின் வீடு. அவனும் எலக்ட்ரானிக்ஸ் தான். வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி, வண்டியிலிருந்து
ஒருவர் மட்டும் இறங்கி உள்ளே போனவர், போன வேகத்தில் திரும்பி வந்து “அக்யூஸ்ட் எஸ்கேப்..
கேட்டா கோயிலுக்கு சாமி தூக்க போயிருக்கானு சொல்லுறாங்க. சாமி தூக்குறவன் பண்ணுற வேலையா
பண்ணியிருக்காங்க?. இங்க விஜிலென்ஸுக்கு ஒரு ஆளைப் போட்டுட்டு நாம போவோம்” என்று வண்டியிலிருந்த
ஒருவரை இறக்கிவிட்டு வண்டியை கிளப்பினார்கள்.
ஏதோ
சீரியஸ் விஷயம் என்று மட்டும் தோன்றியது. சாரதியின் அப்பாவும் அம்மாவும் கிளம்பிப்
போன வண்டியையும், வாசலில் நின்றிருந்த மப்டி போலீஸையும் மாறி மாறி பார்த்ததை வண்டியிலிருந்து
பார்த்து திரும்பினேன். நான் திரும்பும் வரை காத்திருந்த முன் சீட் சிபிசிஐடி “என்ன
முடிஞ்சுதா?. பார்த்தாச்சா? சரி சொல்லும் பணத்தை என்ன பண்ணே?“ என்றார்.
எனக்கு
கெதக்கென்று இருந்தது “என்ன பணம்?” என்று சங்கரனைப் பார்த்தேன்.
“அதான்
மச்சி நான் கொடுத்தேன் இல்ல அந்த பணம்” என்றான் சங்கரன்.
“டேய்..
நீ எப்ப? எங்க? எதுக்கு எனக்கு பணம் கொடுத்தே?” என்றேன் கோபத்தோடு
“அதான்
மாசா மாசம் வாங்கிட்ட இல்ல அதான் மச்சி. கொஞ்சம் ஆபீஸுல பிரச்சனையாயிருச்சு. அதான்”
என்று சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு தலை குனிந்தான்.
“டேய்.
நான் அரியர்ஸ் எழுத வந்த போது பார்த்தது. அதுக்கப்புறம் இப்பத்தான் உன்னைப் பாக்குறேன்.
பொய் சொல்லாதே” என்று கோபத்தோடு கத்தினேன்.
“டேய்..
“ என்கிற அதட்டல் குரல் முன் சீட்டிலிருந்து
வர, “இல்லை சார். .இவன் பொய் சொல்லுறான். நான் இவனைப் பார்த்தே பல மாசம் ஆயிருச்சு”
என்றேன். இம்முறை என் குரலில் இருந்த மரியாதை எனக்கே புரிந்தது. விஷயம் பெரிது. எக்குத்தப்பாய்
மாட்டிவிட்டிருக்கிறான். இதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும். எப்படியாவது வீட்டிற்கு
போய் விட்டால் அப்பாவை வைத்து பார்த்துக் கொள்ளலாம். எப்படியாவது இவர்களிடமிருந்து
எஸ்கேப் ஆக வேண்டும் என்று மட்டும் மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது. நான் படித்த க்ரைம்
நாவல்கள் எல்லாம் நியாபகத்துக்கு வந்தது. பதட்டப்படாதே.. அமைதியாய் இரு என்று மனதிற்கு
சொல்லிக் கொண்டேன்.
“சார்..
கொஞ்சம் நான் சொல்லுறத கேளுங்க. அப்புறம் நீங்க கேக்குறதுக்கு எல்லாம் பதில் சொல்லுறேன்’
என்றதும், முன்பக்க சீட் கை ஓங்கி அடிக்க வர, நான் முகத்தை பின்பக்கம் சட்டென இழுத்துக்
கொள்ள, பக்கத்திலிருந்த சங்கரனின் வாயில் என் தலை இடித்து அவனது எடுப்பு பல்லில் அவனது
உதடு பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. “ங்கோத்தா.. என்று கத்தியபடி வாயில் கை வைத்து சங்கரன்
கத்த ஆரம்பிக்க, வண்டியை சடன் ப்ரேக் அடித்து நிறுத்தினார்கள்.
“டேய்..
அடிக்க கை ஓங்குனா எஸ்ஸாகுறியா..? என்று மீண்டும் அடிக்க கை ஓங்க. நான் ஏதோ தைரியத்தில்
அவர் கையை பிடித்து நிறுத்தி, என் இரண்டு கையையும் கூப்பி, “சார்.. தயவு செய்து நான்
சொல்லுறத முதல்ல கேளுங்க. அப்புறம் நீங்க கேளுங்க பதில் சொல்லுறேன். இல்லாட்டி என்
வீட்டுல என் அப்பாவை காண்டேக்ட் பண்ணி வரச் சொல்லுறேன். அவரு வரட்டும். இல்லை லாயர்
யாரையாச்சும் கூட்டிட்டு வரச் சொல்லுறேன் நீங்க கேளுங்க? நான் அவன் கிட்ட பணம் வாங்கினேன்னு
உங்களுக்கு என்ன அலிபி இருக்கு?” என்றேன்.
அலிபி
என்கிற வார்த்தையைக் கேட்டதும் முன் பக்கம் சிபிசிஐடி சட்டென ஆச்சர்ய ரியாக்ட் ஆகி,
”தபார்ரா” என்று சிரிக்க ஆரம்பித்தார்.
“இல்ல
சார். நான் சீரியசாத்தான் சொல்லுறேன்’ என்றதும் சிரிப்பை நிறுத்தி என்னை உற்றுப் பார்த்தார்.
என் பக்கத்திலிருந்த ஆஜானுபாகர்கள் என்னையே பார்ப்பது எனக்கு உறுத்தலாய் இருக்க, கிடைத்த
கேப்பை பயன்படுத்த எண்ணி.. “சார் இவன் எப்பெல்லாம் எனக்கு பணம் கொடுத்தான்னு கேளுங்க?’
என்றேன்.
சங்கரன்
அமைதியாய் இருக்க, முன் சீட் “டேய் சொல்றா கேக்குறானில்ல?” என்று அடிக்க கை ஓங்க. வாயில்
ரத்தமாய் சங்கரன் சிரித்தபடி, “மாசா மாசம். ஒரு லட்சம் சார்” என்றான். லட்சமென்றதும்
இதயம் வாய் வழியே வந்துவிடும் போல இருந்தது. ’டேய் லட்சமெல்லாம் நான் பார்த்ததேயில்லைடா..’ என்று
மனதில் சொல்லிக் கொண்டு, அதிர்ச்சியை முழுங்கியபடி, “சரி சார்.. எங்க வச்சி எனக்கு
பணம் கொடுப்பானு கேளுங்க” என்றேன்.
சிறிதும்
யோசிக்காமல் ‘சபையர் தியேட்டர் பேஸ்மெண்டுல ஒரு நார்த் இண்டியன் குஜராத்தி ரெஸ்ட்ராண்ட்
இருக்கும் இல்லை அங்க வந்துதான் சார் வாங்கிப்பான்.” என்றான்.
“சார்..
நான் அந்த ரெஸ்டாரண்டுக்கு எல்லாம் போனதேயில்லை. பொய் சொல்லுறான் சார்”
“இல்லை
சார்.. நான் இந்த மாசம் கூட கொடுத்திருக்கேன்”
“எப்படா
கொடுத்தே?” என்று கோபமாய் அவனைப் பார்த்து கேட்க,
“முந்தாநேத்து”
என்றான் சங்கரன்.
“இவன்
பொய் சொல்லுறான்னு என்னால ப்ருப் பண்ண முடியும் சார்” என்றேன் இப்போது என் குரலில்
அதீத நம்பிக்கை இருந்தது. எப்படி என்பது போல முன் சீட் சிபிசிஐடி பார்க்க, “ரெண்டு
நாளா நான் ஊருலேயே இல்லை. என் வீட்டுல ரிலேஷன்ஸ் வந்திருக்காங்க. அவங்களோட டூர் போய்ட்டோம்.
உங்களுக்கு ப்ரூப் வேணும்னா.. வீட்டுல அவங்க இருக்காங்க. அதுக்கும் மேல ப்ரூப் வேணும்னா..
மவுண்ட்ரோட் போட்டோகினோல போட்டோவெல்லாம் பிரிண்ட் போடக் கொடுத்திருக்கேன். அதுல வேணா
பாருங்க”
“இல்லை
சார்.. போன வாரம் கொடுத்தேன். சாரி வீட்டுல போய் கொடுத்தேன். மறந்துட்டேன்” என்றான்
சங்கரன்.
என்
கண்களில் பல்பு எரிய “சார்.. நீங்க ஏன் பிரகாஷை என் வீட்டுக்கு அனுப்புனீங்க?” என்று
கேட்டதும் சிபிசிஐடி பதில் சொல்லாமல் பார்க்க,
“என்
வீடு இவனுக்கு தெரியாது. அப்படி தெரிஞ்சு இருந்தா இத்தனை பிரச்சனைல என்னை மாட்டி விடணும்னு முடிவானதுக்கு அப்புறம் ஏன்
வீடு தெரிஞ்ச ஆளைத் தேடணும். யோசிங்க?” என்று கேட்ட மாத்திரத்தில் சங்கரனின் முகத்தில்
பளீர் என்ற அறை விழுந்தது. இத்தனையும் ஓடுகிற
காரில் நடக்க, “ங்கொத்தா.. சின்னப்பையனெல்லாம் கேள்வி கேக்குறான். சொல்றா பணத்த என்ன
பண்ண?” என்று அவனை அடிக்க ஆரம்பித்தான். இது வரை பேசாமல் சிபிசிஐடியுடன் இருந்த முன்
சீட் ஆள், அவனை தடுத்து, “ஆபீஸுல போய் பேசிக்கலாம்” என்றான். அதன் பிறகு வண்டி அமைதியாகிவிட,
சங்கரன் மட்டும் “ப்ளீஸ் ஒத்துக்க மச்சி” என்று முனகலாய் கெஞ்சிக் கொண்டு வந்தான்.
வண்டி
இருட்டில் ஒரு மேம்பாலத்துக்கு கீழே பயணித்து ஒரு சின்ன ரோட்டில் நுழைந்தது. படபடவென
கதவுகள் திறந்து எங்கள் இருவரையும் காபந்தாய்
அழைத்து செல்ல, சுற்றும் முற்றும் பார்த்தேன். கல்யாண கார்ட்ஸ் அடிக்கும் கடை
பெயர்களாய் இருக்க, கோடம்பாக்கம் என்று அரையிருட்டு வெளிச்சத்தில் படித்து மனதில் வைத்துக்
கொண்டேன்.
குறுகலான
மாடிப்படியில் செலுத்தப்பட்டு, கதவை திறந்தால் ஏதோ ஒரு அலுவலகம் செட்டப்பாய் இருக்க,
வாசல் கதவின் அருகில் ஒரு அஜானுபாகன் காவல் காக்க, எங்கள் இருவரையும் ஹாலில் உட்கார
வைத்துவிட்டு, சிபிசிஐடியும், முன் சீட்டு ஆளும் ஒர் அறைக்குள் போனார்கள். சங்கரன் எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இல்லாமல்
என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளேயிருந்து
வெளியே வந்த சிபிசிஐடி ஆபீஸிலிருந்த போனிலிருந்து யாருக்கோ போன் செய்தான். முகம் மலர்ந்து
“சார்.. இன்னொரு அக்யூஸ்ட் வீட்டுக்கு வந்திருக்கான். ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.
நாம கிளம்புவோமா?”என்று கேட்க, “இவனை முடிச்சிட்டு போவோம்” என்றான் மற்றொருவன். எனக்கு சாரதியை நினைத்து பாவமாய் இருந்தது.
சங்கரனை
தனியே அழைத்துப் போய் ஏதோ பேசிவிட்டு, என்னையும், சங்கரனையும் அவர்கள் அமர்ந்த தனியறையில்
அமர வைத்து, போகும் போது “தம்பி நல்லா யோசிச்சு முடிவெடு அதான் எல்லாருக்கும் நல்லது”
என்றான் சிபிசிஐடி.
“அட
வாங்க செல்வம் சும்மா கெஞ்சிட்டு. அடிச்சு தோலை உரிச்சா எல்லாம் ஒத்துப்பாங்க” என்றான்
முன் சீட் மற்றொருவன். சிபிசிஐடியின் பெயர் செல்வம். ரைட். என்று குறித்துக் கொண்டேன்.
அறைக்குள் சிறிது நேரம் சங்கரனும் நானும் அமைதியாய் இருந்தோம். சங்கரன் டேபிள் மேலிருந்த
ஒரு பேப்பரை எடுத்து அதில் ஜனவரி, பிப்ரவரி என 12 மாதங்களை எழுதி, ஒவ்வொரு மாதமும்
ஒரு லட்சம் என போட்டு, மொத்தம் 12 லட்சம் சங்கரனிடமிருந்து பெற்றுக் கொண்டேன் என்று
எழுதி “மச்சி கையெழுத்து போட்டுரு மச்சி. ஒத்துக்க” என்றான் பதட்டமில்லாமல்.
“ங்கோத்தா..ங்கொம்மால..
உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியலை. எனக்கு இதுக்கு என்னடா சம்பந்தம்?. நான் ஏன்
ஒத்துக்கணும்? அதெல்லாம் முடியாது “ என்று
அங்கிருந்து கிளம்ப முயற்சிக்க, சங்கரனுக்கு எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்ததோ
தெரியவில்லை. அவன் கையில் இருந்த பேனாவை அப்படியே திருப்பி என்னை குத்த வர, நான் அதை
லாவகமாய் தடுத்து அவனை அடிக்கலாமா? என்று யோசித்து, அப்படி அடித்தால் பின்னால் ஏதாவது
பிரச்சனை வருமோ என்று யோசித்து அவனின் கைகளை பின்பக்கமாய் திருப்பி, இரண்டு கைகளையும் முடிக்கி வைத்து, அப்படியே வெளியே தள்ளிக் கொண்டு
போனேன்.
“சார்..
இவன் என்னை பேனாவால குத்த வர்றான். இனி இவனோட நான் ரூம்ல இருக்க மாட்டேன்” என்று கத்திக்
கொண்டே வெளியே வர, அவன் கையில் பேனாவோடு பிடித்திருந்த படியால் அதை கவனித்து அவனிடமிருந்து
பேனாவை பிடுங்கி அவன வேறொரு அறைக்குள் கொண்டு போய் உட்கார வைத்தார்கள்.
செந்திலுடன் மற்றொருவனும் என்னிடம் வந்து ஆளுக்கொரு சேரைப் போட்டு
எதிர் எதிரே உட்கார்ந்தார்கள். “ஐயம் பார்த்திபன்”
என்று மற்றொருவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “சங்கரன் என் கம்பெனில ஸ்டோர்ஸுல
வேலை செய்யுறம் ப்ராடெக்ட் ப்ரோக்யூர்மெண்டுல ஏதோ தில்லு முல்லு பண்ணி, ஸ்டாக் கணக்கு
சரியா காட்டிட்டி பாதியை வெளிய வித்து அதுல வந்த பணத்தை உங்க கிட்ட இன்வெஸ்ட்மெண்டா
கொடுத்திருக்கான். அவன் பணத்தை வச்சி நீங்க பிஸினெஸ் பண்ணத ஒத்துக்கங்க. இல்லாட்டி
உங்க கடைய இழுத்து மூட வைச்சிருவேன். உங்களையும் ஜெயில்ல தள்ளி அசிங்கப்படுத்திருவேன்.
ஒண்ணு ஒத்துக்கிட்டு அவன் உங்க கிட்ட கொடுத்த பணத்தை செட்டில் பண்ணுங்க. இல்லை ஜெயிலுக்கு
போறீங்களா? “ என்று நிறுத்தி நிதானமாய் பேசினான்.
வாங்காத
பணத்துக்கு நான் எதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்? அதும் செட்டில்மெண்டாய் என்றெல்லாம்
ஆயிரம் கேள்விகள் மனதில் ஓட, ”நான் ஜெயிலுக்கு போறேன்” என்றேன். இந்த பதிலை அவர்கள்
எதிர்பார்க்கவில்லை.
“தம்பி
நாளைக்கு பேப்பர் நியூஸுல உன் பேரைப் பார்த்தா உன் குடும்பம் தான் அசிங்கப்படும். தூக்குல
தொங்கிருவாங்க. ஐயர் பையன். இதெல்லாம் உன் குடும்பத்துக்கு தேவையா?” என்றான் செந்தில்.
”சாவட்டும்
சார். தன் புள்ளை இதைப் பண்ணுவானா மாட்டானானு தெரியாம, கேட்டும் தெரிஞ்சுக்காம செத்தா
நான் என்ன பண்ண? நான் பண்ணாததை ஒத்துக்க மாட்டேன். இனி ஏதாச்சும் என்கிட்ட பேசணும்னா
என் வீட்டுல போன் பண்ணி எங்கப்பாவ வரச் சொல்லுங்க. இல்லை. நான் ஏதும் பேச மாட்டேன்”
என்றே உறுதியாய். ஒரு கணம் இருவரும் என்னை தீர்க்கமாய் பார்த்துவிட்டு, “வாங்க கிளம்புவோம்” என்று மீண்டும் எல்லாரையும்
காரில் ஏற்றிக் கொண்டு வண்டி கிளம்பியது. தெருவில்
நடமாட்டமே இல்லை. மாலையில் என்னை வைத்துக் கொண்டு ஊர்வலம் கிளம்பியவர்கள் இன்னும் முடிக்கவேயில்லை.
“எங்க
சார் போறோம்?” என்று கேட்டதற்கு யாருமே பதில் சொல்லவில்லை.
கார்
அமைதியாய் ரெண்டு மூன்று குண்டு பல்புகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்த ஒரு காரிடாரின்
முன் போய் நின்றது. வாசலில் சாரதியின் அப்பா, அம்மா நின்று கொண்டிருந்தார்கள். வண்டியிலிருந்து
இறங்கிய செந்திலைப் பார்த்ததும் “சார்.. சொல்லச் சொல்ல கேட்காம கூட்டிண்டு வந்துட்டா
என் பையனை. எங்களையும் உள்ள விட மாட்டேன்குறா? ஸீ.. நான் ஒரு கவர்மெண்ட் சர்வண்ட்.
ஐ நோ தெ ரூல்ஸ்” என்றவரை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் என்னையும், சங்கரனையும் உள்ளே அழைத்து
சென்றான். ஓரத்தில் சாரதி மேல் சட்டையில்லாமல், அண்ட்ராயருடன் அழுது கொண்டிருந்தான்.
அவனுக்கு என்னைப் பார்த்ததில் சந்தோஷமா? துக்கமா? என்று வெளிப்படுத்த முடியாத ஒர் உணர்வினை
முகத்தில் காட்டி அழ ஆரம்பிக்க, நான் யாரையும் சட்டை செய்யாமல் “கவலைப்படாத மச்சி.
நான் பேசிட்டிருக்கேன்” என்றேன் பெரிய மனுஷத்தனமாய்.
“என்னய்யா
சொல்லுறான் இவன். எல்லாரும் ஐயரு பையனுங்களா இருக்கானுவ?. ஒயிட் காலர் க்ரைம் பண்ண
கூட்டம் சேர்ந்துட்டாங்களா?” என்றபடி சாரதியைப் பார்த்து “என்னடா நீ எத்தனை பணம் வாங்குன?”
என்றார்.
“சார்..
நான் இவனைப் பார்த்தே மாசமாவுது சார். எனக்கு ஒண்ணும் தெரியாது சார். நான் பம்மல்ல
பெருமாள் கோயில் சாமி தூக்க போயிருந்தேன் வீட்டு வாசல்ல சார் நின்னாரு. அப்படியே வண்டில
ஏத்து கூட்டிட்டு வந்துட்டாரு. எனக்கு எதுவும் தெரியாது சார். டே மகாபாவி.. நீ நல்லா
இருக்கமாட்டே. என் பெருமாள் உன்னை சும்மா விட மாட்டாரு” என்று சங்கரனைப் பார்த்து கத்த,
“முதல்ல உன்னை நாங்க விடறோமா? இல்லையானு பாரு” என்று செந்தில் கிண்டலடித்தபடி சாரதியிடம்
வந்து “சரி.. நீ காலேஜுல யாரையோ லவ் பண்றியாமே?” என்று சிரித்தபடி கேட்க, சாரதி முகமெல்லாம்
இன்னும் சிவந்து போய் “சார்.. அதெல்லாம் இல்லை சார்” என்று சங்கரனை முறைத்தான்.
“சார்..
எனக்கு என்ன சொல்ல போறீங்க? ஒண்ணு என் வீட்டுக்கு தகவல் அனுப்பிச்சு எங்கப்பாவை கூட்டிட்டு
வாங்க. இல்லை என்னை விடுங்க. நான் அவங்களைப் போய் கூட்டிட்டு வர்றேன்” என்று தைரியமாய்
பேசுவதைப் பார்த்து சாரதி கண்கள் விரித்து ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
சங்கரன் யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
“சார்.
தப்பா நினைக்காதீங்க. மூணு மாசம் முன்னாடி காலேஜுல அரியர் எழுத வந்த போது இவனைப் பார்த்ததுதான்.
அப்ப யார் யாரு எல்லாம் என்ன பண்ணுறோம்னு பேசிட்டிருந்தோம். அதை வச்சி யார் யார் எல்லாம்
பிஸினெஸ் பண்ணுறாங்களோ அவங்களை எல்லாம் சொல்லியிருக்கான். ஐயம் இன்னொசெண்ட் சார். பெருமாள்
சத்தியமா” என்று சாரதி அழுது கொண்டே சொன்னதைக் கேட்டு, திடீரென வெறி கொண்டவர் போல எழுந்து சங்கரனை போட்டு
மிதி மிதி என மிதித்தான் செந்தில்.
‘ங்கொத்தா
சொல்லுறா.. சின்னப்பசங்க எல்லாம் எனக்கு சொல்லிக் கொடுக்குறாப் போல வச்சிட்ட” என்று
சொல்லி சொல்லி அடித்தார். அடி தாங்க முடியாமல் “சார். நான் சொல்லிடறேன் சார் சொல்லிடறேன்.
இவங்க கிட்ட கொடுக்கலை. நான் யார் கிட்ட கொடுத்தேனு சொல்லிடறேன்” என்று அழுதபடி சொல்ல
“சொல்றா?” என்று அவன் சொல்லுவதற்காக காத்திருந்த செந்திலைப் பார்த்து, சற்றே யோசித்து
“ஹனீப்” என்றான்.
“அய்யோ
சார்.. பாவம் சார். அவனும் பிஸினெஸ் பண்ணுற பையன். அவங்கப்பா ஒரு டாக்டரு. இவன் பொய்
சொல்லுறான் சார்” என்றேன். மீண்டும் அவனை மிதி மிதி என மிதிக்க ஆரம்பிக்க, ஒவ்வொரு
அடிக்கும் ஒரு ஆள் பெயரி சொல்ல ஆரம்பித்தான் சங்கரன். ஓய்ந்து போய் மீண்டும் சீட்டில்
அமர்ந்தபடி, “நீ வீட்டுக்கு போ. நாளைக்கு உன் அப்பாவை கூட்டிட்டு வா. எதுக்கெடுத்தாலும்
என் அப்பாவை கூப்பிடு.. கூப்பிடுங்குறே. அவரு யாருனு நான் பாக்குறேன்” என்று நக்கலாய்
சொல்லி சாரதியையும் அனுப்பினான். சொல்லாமல் கொள்ளாமல் சாரதி கிளம்பிப் போனான். நான்
மட்டும் நின்றிருந்தேன். என்ன என்பது போல செந்தில் பார்க்க, “நான் எப்படி போறது சார்..
கையில காசில்லை. இது எந்த ஏரியானு தெரியலை?” என்றேன்.
“ரொம்ப
கேள்வி கேக்குற? வேணும்னா இவனோட செல்லுல போட்டுறட்டுமா? போடா?” என்று கோபமாய் சொல்ல, என்ன பதில் சொல்வது என்று
தெரியாமல் அமைதியாய் வெளியே வந்தேன். ஆங்காங்கே ரெண்டொரு போலீஸ் வண்டிகள் வந்து போய்க்
கொண்டிருக்க, அது எக்மோர் கமிஷனர் ஆபீஸ் என்று போர்ட் பார்த்து புரிந்தது. எங்கே எப்படி
யாரிடம் கேட்டுப் போவது என்று புரியாமல் மெல்ல வெளியே வந்து ரவுண்டானாவில் நின்று என்ன
செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு ஆட்டோ வர, அதை தடுத்து நிறுத்தினேன்.
உள்ளே சாரதியும், அவன் பெற்றோரும் அமர்ந்திருக்க, என்ன என்பது போல அவர் பார்த்தார்.
“சார்..
உங்க பையனை ஜட்டியோட உக்கார வச்சிருந்தாங்க. நான் மட்டும் சொல்லலைன்னா அடிச்சே ஒத்துக்க
வச்சிருப்பாங்க. டே.. அவருக்குத்தான் தெரியாது. நான் உனக்காக பேசினேன் இல்லை. சொல்லாம
கொள்ளாம கிளம்பிட்ட.. என்னையும் வீட்டுல கொண்டு போய் விடு. காசை நான் காலையில தர்றேன்”
என்றேன். என் குரலில் ஒருவிதமான மிரட்டல் இருந்ததை நானே உணர்ந்தேன். “தள்ளிக்க” என்று
அதட்டலாய் சொல்ல, இரண்டு பேரும் ஆட்டோவில் ஒதுங்கிக் கொள்ள வண்டியில் ஏறி “கிளம்புங்கன்ணே”
என்று ஆட்டோ ட்ரைவரிடம் சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஏகப்பட்ட யோசனைகள்
மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. மேற்கு மாம்பலத்தில்
சாரதியின் வீட்டில் அவர்களை விட்டுவிட்டு, அவர்களிடமே ஆட்டோவுக்கான காசை வாங்கி கொடுத்துவிட்டு,
என் வீட்டு என்னை இறக்கிவிட சொன்னேன். ஏரியாவுக்குள் வண்டி நுழையும் போதே ஜெகஜோதியாய்
இருந்தது. வண்டியிலிருந்து நான் மெல்ல இறங்கி வீடு நோக்கி போக அம்மா, அப்பா எல்லோரும்
ரோட்டிலெயே என்னை அணைத்து ஏதும் பேசாமல் வீட்டிற்குள் கூட்டிப் போனார்கள்.
தண்ணீரைக்
குடித்து முடித்து மெல்ல நிமிர்ந்து அப்பாவிடம் நடந்தது அனைத்தையும் சொன்னேன். மெல்ல
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். “அப்ப நாளைக்கு கமிஷனர் ஆபீஸுக்கு போகணுமா?”
என்றார். “நிச்சயம் போகணும் அவனுக்கு உன்னை பார்த்தே தீரணுமாம்.” என்று கோபமாய் சொன்னேன்.
“விடு
ஒண்ணும் பிரச்சனையில்லை. உன்னைக் காணமேன்னு உன் ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு எல்லாம் போய்
பார்த்தேன்.”
“அவங்களுக்கு
எல்லாம் தெரிஞ்சு போச்சா?”
“இல்லை.
வீட்டு வாசல்ல யார் வீட்டுலயாவது வீடியோ பார்க்க க்ரூப் சேர்ந்திருக்கீங்களானு செக்
பண்ணேன். ஒண்ணும் காணம்?. நேர போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கேன் நம்பர்
வாங்கிட்டேன். நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று என் தலை கோதி “போய் படு” என்றார்.
அன்றைய
இரவு முழுவதும் தூக்கம் வரவேயில்லை. சங்கரன் ஏன் இப்படி செய்தான்? அவ்வளவு பணத்தை என்ன
செய்திருப்பான்? ஏன் அவனுடய அப்பா அம்மாவை அழைத்து வரவில்லை?. சம்பந்தமேயில்லை என்று
தெரிந்த பின்னும் எப்படி ஒத்துக்க என்று மிரட்ட முடியும்? அப்பா வீடியோ பார்க்க சேர்ந்திருக்கீங்களா
என்று போய் யாரையும் விசாரிக்காமல் தேடினேன் என்று சொன்னதை நினைத்து ஓரத்தில் சிரிப்பாகவும்
இருந்தது. பலான படம் பார்க்க சொல்லாமல் கொள்ளாமல் போய் செட்டில் ஆகிவிட்டேனோ என்கிற
சந்தேகத்தை தான் இப்படி நிவர்த்தி செய்திருக்கிறார். இவரைப் பார்க்க வேண்டும் என்று
வரச் சொன்ன செந்திலை நினைத்து கொஞ்சம் பாவமாய் கூட இருந்தது.
கமிஷனர்
ஆபீஸில் காலையிலேயே பரபரப்பாய் இருந்தது. சிபிசிஐடி
டிபார்ட்மெண்டினுள் செந்தில் உட்கார்ந்திருக்க அப்பாவுக்கு அவனை அடையாளம் காட்டினேன்.
என்னை வெளியே நிற்க சொல்லிவிட்டு, அப்பா நேராய் உள்ளே சென்றவர் செந்திலின் டேபிளை அடைந்து
“மிஸ்டர் செந்தில்?” என்று கேட்டார். அவன் கண்களாலேயே ஆமாம் என்று சொல்ல, “என் பையனைக் காணோம்னு நேத்து நைட்டு லோக்கல் ஸ்டேஷன்ல
கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கேன். இதான் அந்த நம்பர். ஒரு பையனை விசாரணை செய்ய கிட்டத்தட்ட
கடத்திட்டு போயிருக்கீங்க. அதுவும் வீட்டுக்கு வேற ஆளை விட்டு வெளிய வரவழைச்சு. சட்டப்படி
நீங்க வீட்டுக்கு வந்து நாங்க உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலைன்னா அப்படி கூட்டிட்டு
போறது ஓகே. பட்.. எந்தவிதமான ஒரு இன்பர்மேஷனும் இல்லாம் இப்படி கூட்டிட்டு போறதுக்கு
உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது?. சரி அப்படி கூட்டிட்டு போனீங்க இல்லை? திரும்ப
கொண்டு வந்து விட்டீங்களா? இல்லை திரும்ப வர பணமாவது கொடுத்துவிட்டீங்களா? நீங்க என்
பையனை எப்படி ஒரு கிரிமினலை ட்ரீட் பண்றது போல பண்ணலாம்?. என் பையன் இன்னும் வீட்டுக்கு
வரலை. லாரில அடிப்பட்டு ஆஸ்பிட்டல்ல இருக்கான். அதுக்கு காரணம் நீங்க?” என்று கடகடவென
பேச.. அப்பாவின் குரலில் இருந்த கண்டிப்பும்,
கமாண்டையும் பார்த்து “சார். கொஞ்சம் உக்காருங்க ப்ளீஸ். என்ன ஆச்சு? இன்னும் வரலையா
உங்க பையன்?” என்று குரலை தன்மையாய் பேசினதைப் பார்த்து வெளியே இருந்த எனக்கு சிரிப்பாய்த்தான்
இருந்தது.
என்
அப்பாவின் இன்ப்ளூயன்ஸை அன்றைக்குத்தான் நேரில் பார்த்தேன். கமிஷனர் ஆபீஸில் நிறைய
பேரை தெரிந்து வைத்திருந்தார். நிமிடங்களில் கமிஷனரிடமிருந்து கால் வந்து செந்தில்
முகம் தொங்கி வரும் போது என்னைப் பார்த்தபடி சென்ற அவரது முகத்தை பார்த்து எனக்கு சந்தோஷமாய்
இருந்தது. செந்தில் மன்னிப்பு கேட்டு எங்களை அனுப்பி வைக்க வெளியே வந்தார். “உங்க பையன்
எங்கேர்ந்து இவ்வளவு தைரியமா போலீஸ் கிட்ட பேசுறானு இப்ப புரியுது சார்.” என்றார். பார்த்திபனும் எங்களிடம் வந்து மன்னிப்பு கேட்க,
விஷயத்தை பெருசு பண்ண வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அப்பா சரி என்று தலையாட்டி
கிளம்பும் போது “ஆமா அந்த பையன் என்னதான் பண்ணான் அத்தனை பணத்தை? “ என்று கேட்டார்.
“வேறெங்கே?
வயசுக்கேத்த இடத்துலதான்“ என்று மையமாய் என்னைப் பார்த்து சொல்ல, அப்பா புரிந்தார்ப்
போல தலையாட்டியபடி என்னுடன் கிளம்பினார். அத்தனை லட்சம் ரூபாய்க்கு ஜிகுஜிக்கானா? என
ஒரு பக்கம் பொறாமை கூட சங்கரன் மேல் மண்டியது.
அதன்
பிறகு சங்கரனை பற்றி எந்த தகவலும் இல்லை. நண்பர்கள் அவன் வீட்டை அணுகிய போதும் அவனுக்கு
எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று அவன் அப்பா
சொன்னதாகவும் சொன்னார்கள். ஆனால் இந்த சம்பவம் தான் சட்டம் தெரிந்து நாம் கேள்வி
கேட்டால் போலீஸ் என்ன யாரையும் கேள்வி கேட்கலாம் என்கிற தைரியம் எனக்குள் வந்த நாள்
அதுதான். கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து அந்த சாரதியின் மரணத்தில் சங்கரனை சந்திப்பேன்
என்று நினைக்கவேயில்லை. முடிந்தவரை அவனை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டே வந்தேன். காரில்
ஏறுகையில் கதவை தடுத்து “அப்புறம் மச்சி. என்ன பண்ணுறே? டிவில எல்லாம் உன்னைப் பாக்குறேன்?”
என்று கை கொடுத்தான் சங்கரன்.
“வீட்டுல
சும்மா இருக்கேன். டிவில கூப்டா போய் பேசிட்டு வருவேன். தட்ஸால்” என்று காரைக் கிளப்பினேன்.
” நீ என்ன பண்ணுறேன்னு கேட்டிருக்கலாமோ? என்று ஒரு ஆதங்கம் என்னுள் இருக்கத்தான் செய்தது.
வீட்டில் மனைவியிடம் சொன்னேன். ரெண்டாவது ஏழரை இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு தேவையா
உங்களுக்கு?” என்றாள்.
2020 - விகடன்